13 செப்டம்பர் 2015

விசையினிலே தமிழ் விரைவில் வேண்டும்




கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரையில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
                              மகாகவி பாரதி

    கல்தோன்றி மண் தோன்றா காலத்தே, வாளொடு முன் தோன்றிய மூத்த குடி, தமிழ்க் குடி என்பர் நம் முன்னோர்.

       இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கிரேக்க, இலத்தீன், சமஸ்கிருத மொழிகள் இன்று வழக்கில் இல்லை. ஆயினும் அதற்கும் முன்னரே, இலட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நம் மொழி, நம் தமிழ் மொழி, நம் செம்மொழி இன்றும் பேச்சில், எழுத்தில், அச்சில் நிலைத்து நிற்கின்றது.


      நிலைத்து நிற்பது மட்டுமல்ல, வரி வடிவத்திலும், இலக்கண அமைப்பிலும் மாறாமல், அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்து, நீடித்து நிற்கும் மொழியாகவும் தம் மொழி விளங்கி வருகின்றது.

    களி மண் ஓட்டில், கற் பாறைகளில், பனை ஓலைகளில், ஏட்டில், அச்சில் என வளர்ந்து வந்த, நம் மொழி, நம் தமிழ் மொழி, இன்று கணினியிலும் கால் பதித்து, இணைய மொழியாகவும் உயர்ந்துள்ளது.

     கணினிப் பயன்பாட்டில், உலக மொழிகளில், தமிழ் மூன்றாம் இடத்தில் இருக்கின்றது என்கின்றனர். மெய்யோ, பொய்யோ ஆயினும், உலக மொழிகளில் தமிழ் தவிர்க்க இயலாத இடத்தினை, கணினியில் அடைந்துள்ளது என்பது மட்டும் மறைக்க இயலாத உண்மையாகும்.

      ஆனாலும் மென் பொருள் உருவாக்க முறைகளிலும், பயன்பாட்டு நிலைகளிலும்தான் எத்தனை எத்தனை வேறுபாடுகள், குழப்பங்கள்.

       நான் ஒரு கணித ஆசிரியர். கடந்த சில வருடங்களாக, இணையப் பயன்பாட்டில், காலடி எடுத்து வைத்து, நடை பயிலக் கற்று வருபவன்.

     என் இல்லத்திலும், என் பள்ளியில் அலுவல் சார்ந்த கணினி செயற்பாட்டிலும், நான் எதிர்கொண்டு வரும் இன்னல்கள் குறித்துப் பகிர்வதும், தீர்வு தாருங்கள் என கணினி வல்லுநர்களிடம் வேண்டுவதுமே எனது எழுத்தின் நோக்கமாகும்.

     கணினித் தமிழ் செயல்பாட்டின் அடைப்படை விசைப் பலகையாகும்.
     

தமிழர்களும், தமிழ் முற்றக் கற்றுணர்ந்த தமிழாசிரியர்களும், தமிழையும் கற்காமல், கணினியையும் அறியாமல், இரண்டையுமே எட்ட நின்றே நேசிக்கும் என் போன்ற கணித ஆசிரியர்களும் தடுமாறும் இடம் இந்த விசைப் பலகையே ஆகும்.

        ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு ஊரிலும், போகிற போக்கைப் பார்த்தால் ஒவ்வொரு தெருவிற்கும், ஒவ்வொரு வகையான விசைப் பலகைச் செயற்பாடுகள் கொடி கட்டிப் பறக்கின்றன.

    சில இடங்களில் தட்டச்சு முறைச் செயல்பாடு, சில இடங்களில் ஒலிக் குறிப்பு முறைச் செயல்பாடு. குழப்பம்தான் மிஞ்சுகிறது.

    தமிழ் நாட்டில் இலட்சக் கணக்கான கணினிகள் நுழைந்தும், ஒவ்வொரு அலுவலகத்திலும், ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு வீட்டிலும் கணினி நுழைந்தும், பயன் என்ன? இன்றும் ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய விசைப் பலகைதானே விலைக்குக் கிடைக்கின்றது.

      எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்கிறோம், கணினியில் இவ்வார்த்தைகளை, உரத்து முழங்குவதற்குக் கூட, ஆங்கில விசைப் பலகைதான் தேவைப் படுகிறது.

ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி
என்று முழங்குவான் பாரதி, கணினி விசைத் தமிழ் ஆயிரமாயிரம் இருந்தாலும், ஆங்கில விசைப் பலகை அன்றோ, நம் தமிழை இன்றும் ஆள்கிறது.
     

தமிழ் எழுத்துக்களைக் கொண்ட, கணினித் தமிழ் விசைப் பலகைகள் நம் இல்லங்களில் நுழையும் நாள் எந்நாளோ?

       தமிழில் விசைப் பலகைகள் உருவாகாதமைக்குக் காரணம், கணினி தமிழ் எழுத்துருவாக்கங்களில் நிலவும் வேறுபாடுகளும், சிக்கல்களுமே எனலாம்.

      அலுவலகப் பயன்பாட்டில், அனைத்து துறைகளிலும் இன்று கணினி வந்து விட்டது. ஆனாலும் ஒவ்வொரு துறையும், ஒவ்வொரு எழுத்துருவைப் பயன்படுத்துகிறது.

      துறைசார்ந்த செய்திகளைப் கணினியில் படிக்க முடிகின்றது. ஆனால் அச்சிட முயன்றால், விநோத குறியீடுகள் அச்சேறி, வெளி வந்து நம்மை பயமுறுத்துகின்றன.

      பல ஆண்டுகளுக்கு முன், கணினியில் சேமித்து வைத்த, செய்திகளை, கட்டுரைகளை இன்று படிக்க முடிவதில்லை. காரணம் அன்றைய எழுத்து இன்று கணினியில் இல்லை.


      இக்குறைகளை எல்லாம் என்று நாம் களையப் போகிறோம். இந்த பூமிப் பந்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரவியுள்ள, நம் தொப்புள் கொடி உறவுகள், அனைவரும் பயன் படுத்தும் வண்ணம், ஒரு பொதுவான, எளிமையான விசைப் பலகையினை என்று நாம் உருவாக்கப் போகிறோம்.

     கணினித் தமிழ் மென்பொருள் உருவாக்கத்தில் மேன்மை பெற்று விளங்கும், பன்னாட்டுத் தமிழறஞர்கள் ஒன்று கூடி, ஆய்ந்து, ஒற்றுமையாய் ஒரு முடிவெடுத்து, உலகப் பொதுமறையாம் திருக்குறளைப் போல், உலகத் பொதுக் கணினி தமிழ் எழுத்து முறையினை, உருவாக்கிட வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பமும் எதிர்பார்ப்பும் ஆகும்.

வெல்க தமிழ்.

------------------

நண்பர்களே,
வலைப்பதிவர் திருவிழா-2015
மற்றும்
தமிழ் இணையக் கல்விக்கழகம்
நடத்தும்
மின் தமிழ் இலக்கியப் போட்டிகள்-2015 க்காகவே எழுதப்பட்டது
இதற்கு முன் வெளியான படைப்பல்ல,


கணினியைத் தொட்ட நாள் முதல்
உள்ளத்தில் தேங்கியிருக்கும்
என் எண்ணம்
என் எதிர்பார்ப்பு
என் விருப்பம்
இது.