04 அக்டோபர் 2015

புதுகையில் ஓர் அரை நாள்




தமிழனுக்கு வீழ்ச்சியில்லை, தமிழன் கீர்த்தி
தாழ்வதில்லை, தமிழ்நாடு தமிழ் மக்கள்
தமிழ் என்னும் பேருணர்ச்சி இந்நாள் போலே
தமிழ்நாட்டில் எந்நாளும் இருந்ததில்லை.
                                     பாவேந்தர் பாரதிதாசன்

    நண்பர்களே, எதிர்வரும் 11.10.2015 ஞாயிற்றுக் கிழமையன்று, புதுகையில், மையம் கொள்ளவிருக்கும், பதிவர் சந்திப்புத் திருவிழா என்னும் புயலானது, அண்மை நாட்களாக, உலகு முழுவதுமே மெல்ல மெல்ல, தன் அதிர்வலைகளைப் பரப்பி வருகின்றது.

     இணையம் என்னும் தோட்டத்தில் மலர்ந்திருக்கும் ஒவ்வொரு, தமிழ் வலைப் பூவுமே, புதுகை புதுகை என புதுகையினைத்தான், தன் நறுமணத்துடன் இணைத்து, தமிழ் மணமாய், வான் வெளியெங்கும் பரப்பி வருகின்றது.

     வலைப் பதிவர் சந்திப்பு என்னும் வலைப் பூவானது, தினம், தினம், புத்தம் புதுச் செய்திகளை வாரி இறைத்து, படிப்போரை, திக்கு முக்காடச் செய்து வருகின்றது.

கவிதை - ஓவியக் கண்காட்சி
பதிவர் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை
தமிழிசைப் பாடல்கள்
நூல் வெளியீடுகள்
உண்டென்று உரைத்தார்கள்.

அப்படியா, என்று கேட்டு முடிப்பதற்குள்
சிறந்த பதிவர்க்கு விருது
என்றார்கள்.

வியப்பால் விழிகள், விரிவதற்குள்
வலைப் பதிவர் கையேடு
வெளியிடப் போகிறோம் என்றார்கள்.

சற்றுப் பொறுங்கள்,
திகட்டத் திகட்ட
இனிப்புச் செய்திகளைக் குவித்த வண்ணம் இருக்கிறீர்களே,
பலரது உடலில் உள்ள சர்க்கரை
மனதிலும் ஏறிவிடப் போகிறது
சற்றுப் பொறுங்கள் என்றோம்.


ஒரு நிமிடம் அமைதி காத்தவர்கள்,
அடுத்த நிமிடம்,
ஐவகைப் போட்டிகள் உண்டு
பங்கு பெறுங்கள்
ரூ50,000 பரிசினை அள்ளிச் செல்லுங்கள் என்றார்கள்.

ஒன்றல்ல, இரண்டல்ல
முழுதாய் 260 கட்டுரைகள் குவிந்து விட்டன.
என்னைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கை அதிகம்தான்.

புதுகையில் இரண்டும்,
சென்னையில் இரண்டுமாய்
புதிதாய் மலந்து மணம் வீசும்
நான்கு இளம் தளிர்
வலைப் பூக்களைத் தவிர
மற்ற வலைப் பூக்கள் எல்லாம் மாணவர்களுடையது அல்ல.

மாறாக,
குடும்ப பாரம் சுமந்து,
வாழ்வியல் சோதனைகள், நடைமுறைச் சிக்கல்கள்
பொருளாதார நெருக்கடிகள்
உடன் இருந்தே குழி பறிக்கும் பகைமை உறவுகள்
என அனைத்தையும்
நித்தம் நித்தம்
எதிர் கொண்டு
போராடிப் போராடி
வாழ்க்கையையே பெரும் போராட்டமாய்
நாளும் ஒரு போர்க்களமாய்
போரிட்டுப் போரிட்டுக்
களைத்து,
சற்று ஓய்வெடுக்கலாமே
என்று
வலைப் பூ என்னும் தமிழ்த் தோட்டத்தில் நுழைந்து
நட்பு என்னும் நிழலில்,
சற்றே இளைப்பாற அமர்ந்தவர்களின்
கட்டுரைகளே மீதமிருப்பவை.

ஒவ்வொரு கட்டுரையும்
ஒவ்வொரு வலை நண்பரின்
வாழ்வியல் அனுபங்களைப் பறைசாற்றும்.

260 கட்டுரைகள் களத்தில்.

கட்டுரைப் போட்டிக்கான இறுதி நாள் முடிந்து விட்டதே என்று எண்ணினால், அடுத்த போட்டி அறிவிப்பு, அன்றே வருகிறது.

சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுங்கள்
நடுவர்களின் தீர்ப்புடன்,
உங்களது கருத்தும் ஒத்திருந்தால்
ரூ.10,000 பரிசு.

போட்டி நடத்துவார்கள் கேள்விப் பட்டிருக்கிறேன்.
போட்டிக்குப் போட்டி அறிவிக்கிறார்கள்.
போட்டா போட்டி என்பார்களே, அது இதுதான் போலிருக்கிறது.

     நண்பர்களே, தஞ்சைப் பதிவர் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களுக்கும் எனக்கும் ஓர் எண்ணம்.


கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்கள் தலைமையில் புதுகை நண்பர்களும், வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களும், கண் துஞ்சாமல், தளர்வறியாமல், சோர்வுறாமல் இந்த பாடு படுகிறார்களே, நம்மால் உதவத்தான் முடியவில்லை, ஒரு முறை நேரில் சென்று பார்த்துவிட்டாவது வரலாமே என்ற எண்ணம்.

     இன்று 4.10.2015 ஞாயிற்றுக் கிழமை, காலை 8.00 மணிக்கு முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களும், நானும் தஞ்சையில் இருந்து புறப்பட்டோம்.

     புதுகை சென்றோம்.

     நண்பர் செல்வா அவர்களின் அலுவலகத்திற்குச் சென்றோம். சகோதரிகள் திருமதி கீதா அவர்களும், திருமதி மாலதி அவர்களும் வந்திருந்தனர். சிறிது நேரத்திலேயே, கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்களும் வந்து விட்டார். கவிஞர் சோலச்சி அவர்களும் வந்து சேர்ந்தார்.

     மற்ற பதிவர்களைக் காண இயலவில்லை. ஆளுக்கொரு பணி. ஆளுக்கொரு திசையில், அசராமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

     கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களைக் காணச் சென்றோம். அங்கே நண்பர் மகா.சுந்தர் அவர்களும் இணைந்து கொண்டார்.

     ஞானாலயா ஆய்வு நூலகத்தைக் காண, தினமணி இதழின் ஆசிரியர் திரு வைத்தியநாதன் அவர்கள் வருகிறார். கவிஞரோ நாமும் செல்வோமே என்றார்.



ஞானாலயா சென்றோம். புதுகையின் தமிழறிஞர்கள் ஒன்று கூடியிருந்தனர். அனைவருக்கும் கவிஞர் ஐயா அவர்கள், அழைப்பிதழை வழங்கினார்.

     சிறிது நேரத்தில் ஒரு மகிழ்வுந்து வந்தது. தினமணி ஆசிரியர் திரு வைத்தியநாதன்.
    

ஞானாலயா திரு பா.கிருட்டிணமூர்த்தி அவர்கள் நூலாடை அணிவித்து வரவேற்க முயன்ற போது, அதனை அன்போடு மறுத்தவர், நான் அல்லவா தங்களுக்கு நூலாடை அணிவிக்க வேண்டும் என்று கூறி, தான் கொண்டு வந்த நூலாடையினை, ஞானாலயா கிருட்டினமூர்த்தி அவர்களுக்கு அணிவித்து மகிழ்ந்தார்.








கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்கள், வலைப் பதிவர் சந்திப்புத் திருவிழா அழைப்பிதழினை வழங்கவே, மகிழ்வோடு பெற்றுக் கொண்டார்.


ஞானாலயாவிலிருந்து புறப்பட்டு ஹோட்டல் அபிராமிக்கு வந்தோம். சுடச் சுட அருமையான காபி.

     அனைவருக்கும் வணக்கம் கூறி, விடைபெற்று, தஞ்சைப் பேருந்தில் ஏறினோம்.

     புதுகை சென்று நாங்கள் ஒன்றும் பணியாற்றவில்லை. ஆனாலும்,
தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
   சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு
என்று இருந்துவிடாமல், தங்களது சொந்தப் பணிகளை எல்லாம், புறந் தள்ளி வைத்துவிட்டு, சொந்தப் பணியினும் மேலாய், வலைப் பதிவர் சந்திப்பிற்காகப் பாடுபடுகிறார்களே, அவர்களை எல்லாம் சந்தித்ததில் ஓர் மகிழ்ச்சி, ஒர் நிறைவு.

     நண்பர்களே, நாள் நெருங்கிவிட்டது. புதுகைக்கு வர முன் ஏற்பாடுகளைச் செய்து விட்டீர்கள் அல்லவா? இல்லையேல், உடனே ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.


பு து கை யி ல்    ச ந் திப் போ ம்.