20 ஏப்ரல் 2016

காளையார் கோயில்



ஆண்டு 1772. ஜுன் மாதம் 26 ஆம் நாள்.

         காளையார் கோயில். காளேசன் ஆலயம்.

         அதிகாலை நேரம். பட்டு வேட்டி பளபளக்க மன்னர். அருகிலேயே இளைய ராணி. கோயிலுக்கு வெளியே, கட்டுக்கு அடங்காத கூட்டம். இறைவனைத் தரிசிக்க வந்திருக்கும், மன்னரைத் தரிசிக்க.

     இறைவனுக்கு கற்பூர ஆராதனை காட்டப் படுகிறது. மன்னர் இரு கரம் குவித்து, கண்களை மூடி, ஆண்டவனை மனதார வணங்கிக் கொண்டிருக்கிறார்.

     திடீரென்று ஆலயத்திற்கு வெளியில், ஓர் பலத்த வெடிச் சத்தம். மக்களின் கூக்குரல். துப்பாக்கிக் குண்டுகளின் தொடர் முழக்கம்.

     விழி மூடி, இறைவனை மனதார வணங்கிக் கொண்டிருந்த மன்னரின் கண்கள், வியப்புடன் வாயிலை நோக்குகின்றன. இறைவனை நோக்கிக் குவிந்திருந்த கரங்கள் கீழிறங்குகின்றன. வலது கை, இடையில் இருந்த வாளை உருவுகிறது.

     உருவிய வாளுடன், நெஞ்சம் நிமிர்த்தி, சிங்கம் போல், கோயிலுக்கு வெளியே வருகிறார் மன்னர். அவரைப் பின் தொடர்ந்து இளையராணியும் வருகிறார்.

     கோயிலுக்கு வெளியே, ஆங்கிலேயர்களின் வெறிக் கூட்ட்ம் ஒன்று, பொது மக்களை, காக்கைக் குருவிகளைச் சுடுவது போல், சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறது.

     மன்னர் உருவிய வாளுடன், வேங்கையென, வெள்ளையரை நோக்கிப் பாய்கிறார். மன்னரின் வாள் சுழன்ற திசையெல்லாம், ஆங்கிலேயர்களின் தலைகள் அறுபட்டு, தரையில் விழுந்து உருண்டோடுகின்றன. மன்னரின் மெய்க் காவல் படையினர் ஒரு பக்கம் சுழன்று, சுழன்று தாக்க, காளையார் கோயில் மக்களும், கையில் கிடைத்த பொருள்களை எல்லாம் எடுத்து, ஆங்கிலேயர்களைத் தாக்கத் தொடங்கினர்.

     நேரே நின்று போராடி, மன்னரை வீழ்த்த முடியாது என்பது மெல்ல மெல்ல உறைக்கிறது, அந்த ஆங்கிலேயத் தளபதி பான் ஜோருக்கு.

       மெல்ல மெல்ல பின்வாங்கி, யாரும் அறியா வண்ணம் ஒரு பெரும் மரத்தின் பின் மறைகிறான். மரத்தின் பின் ஒளிந்தபடியே, திருட்டுத்தனமாய், துப்பாக்கியை நீட்டி, மன்னரைக் குறி பார்க்கிறான். ஆள் காட்டி விரல், விசையினை அழுத்துகிறது. அடுத்த நொடி, துப்பாக்கியில் இருந்து, குண்டு சீறிப் பாய்கிறது.

     வீரப் போரிடும் மன்னரைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த இளைய ராணி, அப்பொழுதுதான் கவனித்தார்.

மரத்தின் பின்னால் இருந்து, ஒரு துப்பாக்கி,

மன்னரையல்லவா குறி பார்க்கிறது.

மன்னா...

    ஒரு நொடி, ஒரே ஒரு நொடி கூட, தாமதிக்காமல், துப்பாக்கியில் இருந்து, புறப்பட்ட குண்டு, மன்னரைத் தொடும் முன், பாய்ந்து சென்று, மன்னரை மார்போடு கட்டித் தழுவுகிறார். சீறி வந்த குண்டு, இளைய ராணியின் முதுகைத் துளையிட, மன்னரைத் தழுவியபடியே, சரிகிறார்.

      மன்னரைக் காப்பாற்றி விட்டோம், காப்பாற்றி விட்டோம், அது போதும் என்ற நிம்மதி கண்களில் தெரிய, மெல்ல மெல்ல சரிகிறார்.

கவுரி....

      மன்னர் இளைய ராணியைத் தாங்கிப் பிடிக்கிறார். கோபத்தில் சிவந்திருந்த கண்கள், குண்டு வந்த திசையினைத் தேடுகின்றன.

      பான் ஜோரின் துப்பாக்கியில் இருந்து, சீறி வந்த மற்றொரு குண்டு, மன்னரின் மார்பைத் துளைக்கிறது.

     மன்னரும், இளைய ராணியும், ஒருவரை ஒருவர் தழுவிய படியே, மண்ணில் சாய்கின்றனர். இருவரின் இரத்தமும, ஒன்றிணைந்து, கோயிலின் திசையில் இறைவனைத் தேடி ஓடுகிறது.

     இந்திய வரலாற்றில், ஆங்கிலேயர்களை வீறு கொண்டு எதிர்த்து, களம் கண்டு போரிட்டு, மரணத்தைத் தழுவிய  முதல் மன்னர் இவர்தான்.


சிவகங்கைச் சீமையின்
மன்னர்
முத்து வடுக நாதர்.

------

      

சித்திரைத் திங்கள் முதல் நாள்.

      ஏப்ரல் திங்கள் 14 ஆம் நாள் வியாழக் கிழமை.

      மன்னர் முத்து வடுக நாதர் மற்றும் இளைய ராணி கௌரி நாச்சியார்,  குருதி வழிந்தோடிய மண்ணில், குருதி வழிந்தோடி, பூமியை நனைத்த அதே இடத்தில், மெய்சிலிர்க்க நின்றோம்.

      நண்பர்கள் திரு வெ.சரவணன், திரு க.பால்ராஜ், திரு பி.சேகர், திரு பா.கண்ணன் மற்றும் நான் என ஐவர், குருதி வழிந்தோடிய தடம் தெரிகிறதா? என தரையினைப் பார்த்தவாறே பேச்சின்றி நின்றோம்.

     அப்பழுக்கற்ற வீரம்

      தன்னலமறியா தியாகம்

     சுதந்திரத் தாகம்.

     எந்த மரத்தின் பின் ஒளிந்து நின்று, நயவஞ்சகமாய் மன்னரைக் கொன்றிருப்பான், அந்த ஆங்கிலேயத் தளபதி என நாற்புறமும் பார்த்தோம்.

     கால ஓட்டத்தில் அந்த மரம் கரைந்து போயிருக்க வேண்டும்.

    எங்கு பார்த்தாலும் கடைகள், கட்டிடங்கள், தார்ச் சாலைகள்.

    மன்னரின் மூச்சு நின்ற இடத்தில், எங்களின் மூச்சு, வெகு வேகமாய் வெளி வந்து உள்ளே போகிறது.

      மனக் கண்ணில், மன்னர் வீரப் போர் புரிந்த காட்சி, திரைப் படம் போல் ஓடிக் கொண்டே இருக்கிறது.

       பல நிமிடங்கள் கடந்த நிலையில், மெதுவாய் இயல்பு நிலைக்குத் திரும்பி, அருகில் இருந்த கடைக்குச் சென்று, கடைக்காரரிடம் கேட்டோம்,

       மன்னரின் சமாதி எங்கிருக்கிறது?

    கோயிலுக்கு நேர் எதிரே செல்லும் சாலையில் சென்று, வலது புறம் திரும்பிச் செல்லுங்கள் என்றார்.

     மண்ணைக் காக்க உயிர் துறந்த, வீர மன்னரின் உடல், மண்ணுக்குள் உறங்கும் இடம் தேடிச் சென்றோம்.

    சில நிமிடப் பயணம்தான்.

    இதோ, மன்னர் முத்து வடுகநாதர், கௌரி நாச்சியார் மீளாத் துயில் கொள்ளும் புனித இடம்.

      மன்னரின் சமாதியை நெருங்க நெருங்க, ஓர் துற் நாற்றம் வேகமாய் காற்றில் கலந்து, பறந்து வந்து மூக்கை பிடிக்க வைத்தது.

     திகைத்துத்தான் போய்விட்டோம்.

    மன்னா, மண்ணின் மானம் காக்க, உயிர் துறந்த மன்னா, உனக்கா இந்த நிலை.

     






தன் உடலின் குருதி அனைத்தும் மண்ணில் பரவ, வீர மரணம் எய்திய
மன்னர் முத்துவடுக நாதர்
கல்லறையின் முன்
கழிவு நீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடும் காட்சி
கண்டு துடித்துத்தான் போய்விட்டோம்.

     மன்னா, உனக்கா இந்த இழி நிலை.

     நண்பர்களே, சுதந்திர தாகம் கொண்டு, உயிர் நீத்த முதல் மன்னரின் கல்லறை, போற்றுவார் இன்றியும், புரப்பார் இன்றியும் சொடி கொடிகள் மண்டிக் கிடக்கும் காட்சி இதயத்தைப் பிளப்பதாக இருக்கிறது.


      நமக்காக வாழ்ந்த, நமக்காகப் போராடிய, நமக்காக வீர மரணம் எய்திய தன்னலமற்ற மன்னருக்கு, நாம் காட்டும் நன்றிக் கடன் இதுதானா?