06 மே 2016

வைகறை





பிறந்த சிசு பயணிக்கும்
ஆட்டோவிற்கும்
ப்ரீசர் பாக்ஸ் கொண்டு செல்லும்
டாட்டா ஏசுக்கும்
நடுவே
சென்று கொண்டிருக்கிறது
எனது வாகனம் …..

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்வை இத்துனை எளிமையாய், இத்துனை வலிமையாய் காட்சிப் படுத்தி, கவிதை வரிகளில் அடக்கிய, அந்த இளம் கவிக்கு, அப்பொழுது தெரிந்திருக்கவில்லை, இன்னும் சில நாட்களில், தனக்கும் ஒரு ப்ரீசர் பாக்ஸ் தேவைப்படப் போகிறது, என்பது தெரிந்திருக்கவில்லை.


   வாழ்வு என்பது எத்தனைக் கொடுமையானது என்பதை, இந்த நண்பரின் பிரிவு உணர்த்திவிட்டுப் போயிருக்கிறது.

    சிறு சிறு வரிகளில் பெரும் பெரும் அவலங்களை உணர்த்திய கவி இவர்.

குளு குளு அறையில்
நீ வாங்கிக் குடிக்கும்
குளிர் பானங்களினடியே
செத்துக் கிடக்கிறான் இள நீர் வியாபாரி

     இந்த அவசர உலகில், அடுத்த வீட்டில் இருப்பவறைக் கூட அறியாமல், உறவுகளின் மேன்மை உணராமல், பணம் நாடி ஓடும் கூட்டத்தைச் சாடுவதிலும், தன் கோபத்தை வெளிப் படுத்திய கவி இவர்.

மதிற்சுவர் எழுப்பிய
செங்கல் தீவுக்குள் வாழ்பவனே
வங்கிப் புத்தகப் பக்கங்களிலும்,
கணினி மேசைக்கடியிலும்
கைபேசி தொடுதிரைகளுக்குள்ளும்
உதிர்ந்து கிடக்கிறதுன் சாம்பல்.

அதையொரு கலசத்தில் சேகரித்து
நீயே கரைத்துக் கொள்
ஏதாவதொரு ஆற்றில்.

ஆயிரம் வேலையிருக்கக் கூடும்
அப்போது உன் மகனுக்கும்.

    மனித வாழ்வின் அவலங்களை வீறு கொண்டு எழுந்து, கவி வரிகளில் பகிர்ந்து கொண்ட இக்கவி, தன் நிழல் போல் சேர்ந்தே பயணித்த வயிற்று வலியினைத் தன் சக நண்பர்களிடமும் பகிராமல், மருத்துவரிடமும் சொல்லாமல், பறந்து போனதுதான் கொடுமையிலும் கொடுமை.

      சுய மருத்துவம் எத்துனை பயங்கரமானது என்பதற்குத் தானே சாட்சியாகி கரைந்து போயிருக்கிறார் இவர்.

      கணையக் கோளாரை, அல்சர் என அலட்சியப் படுத்தியதால், ஓர் மகன் தன் தந்தையையும், ஓர் சகோதரி தன் அன்புக் கணவரையும், தமிழுலகு ஓர் அற்புதக் கவியையும் இழந்து தவித்துக் கொண்டிருக்கிறது.
    

ஓரிரு முறைதான் இவரைச் சந்தித்திருக்கிறேன். கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்களின் இல்லத்திலும், வலைப் பதிவர் மாநாட்டின் போதும்தான் இவரைச் சந்தித்திருக்கிறேன்.

     இருவரும் பகிர்ந்து கொண்டது ஒரு சில வார்த்தைகளாகத்தான் இருக்கும்.

     அந்த ஒருசில வார்த்தைகளிலேயே, உள்ளத்தை வென்று நண்பராகிப் போனவர்.


கவிஞர் வைகறை

வைகறை என்றாலே அதிகாலைப் பொழுதல்லவா

    அதிகாலைக் கதிரொளியாய், தன் கவி வரிகளைப் பாய்ச்சியவர், உதயத்திற்கு முன்னே, அஸ்தமனமாகிப் போனதை மனம் நம்பத்தான் மறுக்கிறது.

ஏன்? ஏன்? நண்பரே
அதற்குள் விடைபெற்றுக் கொண்டீர்.

   எழுதுகோலைத் திறந்து கவிமழை பொழிந்தவர், தன் வாய் திறந்து, தன் உடலின் நிலையினை, நண்பர்களோடு பகிர்திருப்பாரேயானால், ஈடு செய்ய இயலா, இழப்பினைத் தவிர்த்திருக்கலாம் அல்லவா.

   கவிஞர் வைகறையின் பிரிவு, நமக்கு ஒரு பாடத்தை உணர்த்திவிட்டுப் போயிருக்கிறது.

     கவிதையினை மட்டுமல்ல, வாழ்வின் சுக, துக்கங்களையும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்வோம்.

     இன்னும் ஒரு சில ஆண்டுகளில் மாபெரும் கவிஞனாய் வளர்ந்து, தமிழுலகு போற்றும் கவியாய் உயர வேண்டியவரை, ஒர் கணையம் நம்மிடமிருந்து பிரித்து விட்டதுதான் சோதனை.











கடந்த 4.5.2016 புதன் கிழமை மாலை,
புதுக்கோட்டை ஆக்ஸ்போடு உணவகக் கல்லூரியில்
கவிஞர் வைகறைக்கு
ஓர் அஞ்சலிக் கூட்டம்.

கனத்த மனதுடன் கலந்து கொண்டேன்.

     கவிஞர் வைகறையின் அன்பு மனைவிக்கும், ஆருயிர் மகனுக்கும் உதவிட, புதுகையின் வீதி அமைப்பினர், பெரு முயற்சி எடுத்து வருகின்றனர்.

நண்பருக்கு உதவுதல் நம் கடமையன்றோ.
நாமும் பங்கு பெறுவோம் நண்பர்களே
விவரங்கள் அறிய இதோ இணைப்பு.
தென்றல்
தென்றல்
எனது எண்ணங்கள்
நிதி வழங்க


வைகறை நம்மை விட்டுப் பிரிந்திருக்கலாம்.
ஆனால்  வைகறையின் எழுத்துக்கள்

என்றென்றும் நம்முடனே பாதுகாப்பாய் வாழட்டும்.