15 ஜூலை 2016

கர்மவீரர்


எதற்காகச் சுதந்திரம் வாங்கினோம்?  எல்லோரும் வாழ. எப்படி வாழனும்? ஆடு, மாடுகள் மாதிரி உயிரோடு இருந்தால் போதுமா? மனிதர்களாக வாழனும். அதற்குப் படிப்பு வேணும். பட்டினியாக இருந்தால் படிப்பு வருமா? வராது. ஏழைகளுக்கெல்லாம் பள்ளிக் கூடங்களிலேயே சாப்பாடு போடனும். அப்பதான் படிப்பு ஏறும். இதுவே முதல் வேலை. முக்கியமான வேலையும் கூட.


அன்னதானம் நமக்குப் புதியதல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்குப் போட்டோம். இப்போது பள்ளிக் கூடத்தைத் தேடிப் போய் போடச் சொல்கிறோம். அப்படிச் செய்தால் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுக்கும் புண்ணியம் இரண்டும் சேரும். இதை உணர்ந்து இப்பகுதியில் பல ஊர்க்காரர்கள் தாங்களாகவே பகல் உணவுத் திட்டத்தை நடத்த ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள். இவர்களைப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

என் மனதில், எல்லோர்க்கும் கல்விக் கண்ணைத் திறப்பதைவிட முக்கியமான வேலை இப்போதைக்கு இல்லை. எனவே எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஊர் ஊராக வந்து பகல் உணவுத் திட்டத்துக்காகப் பிச்சையெடுக்க சித்தமாக இருக்கிறேன்.

படிக்கப் படிக்க நெஞ்சம் நெகிழ்கிறது அல்லவா?

இப்படியும் ஒரு மனிதர் இருந்திருக்கிறார்,

இப்படியும் ஒரு முதல்வர் இருந்திருக்கிறார்

நம்மை, நம் சந்ததிகளைப் படிக்க வைப்பதற்காகப் பிச்சை எடுக்கக் கூட தயாராக ஒரு முதல்வர் இருந்திருக்கிறார்.

கை எடுத்து வணங்கத் தோன்றுகிறதல்லவா?

இவரைப் பார்த்துத்தான் சிலர் கேட்டார்கள்

இவர் படித்திருக்கிறாரா? மழைக்காகவாவது கல்லூரிக்குள் ஒதுங்கினாரா என்று கேட்டார்கள்.

காமராசர் கல்லூரியில் படித்தாரா? கல்லூரிக்குள் மழைக்காகவாவது ஒதுங்கினாரா, என்று கேட்கிறார்கள். நான் கல்லூரியில் படிச்சேன்னோ, கல்லூரிக்குள் கால் வச்சேன்னோ எப்போது சொன்னேன்? நாம்தான் படிக்காத பாமரன்னு உலகத்திற்கே தெரியுமே. நான் படிச்சதில்லேன்னு பச்சையாச் சொல்றேன். அதுக்கப்புறமும் காமராஜர் படிச்சாரான்னு நீ ஏன் வீணாகக் கேக்கிற?

நான் கல்லூரியில் படிக்கல. கல்லூரி வாசல்ல கால் வைக்கல. வாஸ்தவம். அதனால்தான் நான் படிக்காத கல்லூரியில் நம்ம பிள்ளைகள் எல்லாம் படிக்கட்டும்னு பாடு பட்டேன். எனக்கு கிடைக்காத கல்வி எல்லாருக்கும் கிடைக்கனும்னுதான் ஊர் ஊரா பள்ளிக் கூடம் கட்டினேன்.

எப்பேர்ப்பட்ட மனிதர்.

இவரில்லாமல் இருந்திருப்பாரேயானால், இன்று நம் நிலை.

நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறதல்லவா?

இவரைப் போற்றாமல், நாம் யாரைப் போற்றப் போகிறோம்.

இவரை வணங்காமல், நாம் யாரை வணங்கப் போகிறோம்.

ஜுலை 15 கர்மவீரர் காமராசரின் பிறந்த நாள்

கல்வி வளர்ச்சி நாள்.
     
1959ஆம்   ஆண்டு எம் பள்ளிக் கட்டிடத்தை கர்மவீரர் திறந்து வைக்கும் காட்சி

கர்மவீரரால் திறந்து வைக்கப்பெற்ற எம் பள்ளிக் கட்டிடம்
அருணாசல நிலையம்
நான் ஆசிரியராகப் பணியாற்றும் உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், காமராசர் பிறந்த நாள் விழாவானது, கல்வி வளர்ச்சி நாள் விழாவாகச் சிறப்பாகச் கொண்டாடப் பெற்றது.

       பள்ளித் தலைமையாசிரியர் திரு வெ.சரணவன் அவர்கள் கர்மவீரரின் சாதனைகளை, அவர்தம் கல்வித் தொண்டுகளை, தன்னலமற்ற சேவையினை மாணவர்கள் அனைவரும் உணரும் வண்ணம் எடுத்துரைத்தார்.




பள்ளி ஆசிரிய ஆசிரியர்களும் கல்விக் கண் திறந்த கர்மவீரர் பற்றிப் பெருமையுடன் பேசினர். நானும் பேசினேன்.

      ஒவ்வொரு வகுப்பிலும், காமராசர் பற்றிய பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என பள்ளியே, நாள் முழுதும், காமராசரின் பெயரினை உச்சரித்த வண்ணம் இருந்தது.

       எனது வகுப்பிலும் பேச்சுப் போட்டியும், கட்டுரைப் போட்டியும் நடத்தினேன்.

      பேச்சுப் போட்டியிலும் கட்டுரைப் போட்டியிலும் வெற்றி பெற்ற என் வகுப்பு மாணவியருக்கு, நண்பரும் பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன் அவர்கள், எனது வகுப்பிற்கே வருகை தந்து, பரிசில்களை வழங்கி, மாணவியரை வாழ்த்தினார்.

     
















முதுலை ஆசிரியர் திரு ஜி.விஜயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவியரை வாழ்த்தினார்.

தங்கமே….. தண்பொதிகைச் சாரலே… தண்ணிலவே
சிங்கமே…. என்றழைத்துச் சீராட்டுந் தாய்தவிரச்
சொந்தமென்று ஏதுமில்லை, துணையிருக்க மங்கையில்லை
தூயமணி மண்டபங்கள் தோட்டங்கள் ஏதுமில்லை
ஆண்டிகையில் ஓடிருக்கும் அதுவும் உனக்கில்லையே
                                   கவியரசு கண்ணதாசன்.

தனக்கென வாழமல் நமக்கென வாழ்ந்த
கர்மவீரரைப்
போற்றுவோம், வாழ்த்துவோம்
வணங்குவோம்