05 மார்ச் 2017

உத்தமதானபுரம்



   சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், தஞ்சை சமஸ்தானத்தை ஆண்ட அரசருக்கு ஒரு ஆசை.

    முடிந்த அளவிற்கு நாடு முழுவதையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை.

     பரிவாரங்களுடன் புறப்பட்டார்.

     இயற்கைக் காட்சிகளைக் கண்ணாரக் கண்டு ரசித்தார்.

     புனிதத் தலங்களை எல்லாம் தரிசித்தார்.

     மனதில் மகிழ்வுடனும், தெய்வங்களை வழிபட்ட மன  நிறைவுடனும், தஞ்சைக்குத் திரும்பும் வழியில், சிறிது ஓய்வெடுக்க, ஓரிடத்தில் கூடாரம் அமைத்துத் தங்கினார்.

     மரங்கள் அடர்ந்த சூழல். குளிர் தென்றல் காற்று வீசும் காலம்.


     மனம் மகிழ்ந்த அரசர், வெற்றிலைப் பாக்கினை எடுத்து, அளவோடு சுண்ணாம்பும் சேர்த்து, மெதுவாய் மென்று சுவைக்கத் தொடங்கினார்.

     மன்னரின் வருகை அறிந்து, அக்கம் பக்கத்துப் பெரிய மனிதர்கள் எல்லாம், ஒருவர் பின் ஒருவராக வந்து மரியாதை செலுத்தினர்.

     உள்ளூர் பெயரியவர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோதுதான், அன்று ஏகாதசி என்பது மன்னருக்குத் தெரிய வந்தது.

     இன்று ஏகாதசியா?

   மன்னர் அதிர்ந்து போனார்.

   ஏகாதசியன்று மதியம் ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருப்பவர் மன்னர்.

    தஞ்சை அரண்மனையாக இருந்தால், ஒவ்வொரு நாள் காலையிலும், அரண்மனைச் சோதிடர், அன்றைய திதி, நட்சத்திரம் என்று ஒவ்வொன்றாக பஞ்சாங்கத்தில் இருந்து வாசித்துக் கூறுவார்.

     இப்பயணத்தின்போது சோதிடர் வராததால், ஏகாதசியை அறியாமல் இருந்துவிட்டார் மன்னர்.

    விரதத்திற்கு பங்கம் வந்துவிட்டதே.

    தெய்வ குற்றம் நேர்ந்துவிட்டதே

    இப்பாவத்தை எப்படிப் போக்குவோன்

    மன்னர் கலங்கித்தான் போனார்.

    ஊர் பெரியவர்களையும், வயது முதிர்ந்த அந்தணர்களையும் அழைத்தார்.

    ஏகாதசி விரத பங்கம் நேர்ந்துவிட்டது.

    மாபெரும் பாவம் செய்துவிட்டேன்.

    இதிலிருந்து மீள வழி கூறுங்கள் என மன்றாடினார்.

    ஒரு அக்கிரகாரத்தை உருவாக்கி, வீடுகளைக் கட்டி, வீடுகளோடு நிலங்களையும், அந்தணர்களுக்குத் தானம் செய்வீர்களேயானால், இந்தப் பாவம் விலகும், நன்மை பிறக்கும் என்றனர் அந்தணர்கள்.

    இவ்வளவுதானா? இதோ இந்த இடத்திலேயே, ஒரு அக்கிரகாரத்தை உருவாக்குகிறேன்.

   48 வீடுகள் கட்டப் பெற்றன. 24 கிணறுகள் வெட்டப் பெற்றன.

   சுற்றுப்புற பகுதிகளில் இருந்து 48 அந்தணர் குடும்பங்களை அழைத்து வரச் செய்து, வீடுகளைத் தானமாக வழங்கினார்.

   ஒவ்வொரு குடும்பத்திற்கும் 12 மா நன்செய் நிலங்களையும், புன் செய் நிலங்களையும் தானமாக வழங்கினார்.

    48 குடும்பங்கள் வாழ்வு பெற்றன.

    மன்னரின் பாவம் மறைந்து போயிற்று.

    உத்தமமான தானமாக, இந்தத் தானம் வழங்கப் பெற்றமையால், புதிதாய் தோன்றிய இப்பகுதி, உத்தமதான புரம் என அழைக்கப்படலாயிற்று.

    பிற்காலத்தில் இந்த 48 குடும்பங்களில் ஒரு குடும்பத்தில் இருந்துதான், அந்த தமிழன்னையின் தவப் புதல்வர் தோன்றினார்.

    ஆழிப் பேரலைகள் அடுக்கடுக்காய் சீறி எழுந்து, ஒரு முறையல்ல, இரு முறை, எண்ணிலடங்காத் தமிழ்ப் பனுவல்களை, உலகின் எம் மொழியும் பெற்றிடாத, ஈடு இணையற்ற இலக்கியங்களை கொள்ளை கொண்டு போன போனதும், மக்களின் அறியாமையினால், ஏடுகளை கறையான் அரித்துத் தின்று ஏப்பம் விட்டதும், ஏடுகளில் உள்ள எழுத்தின் பெருமையறியாத மாக்கள் பலர், போகி என்னும் பெயரில் நெருப்பில் இட்டுச் சாம்பலாக்கியதும், ஆற்றில் மிதக்க விட்டு அழித்ததும், தமிழ் மொழியின் வேதனை மிகு வரலாறாகும்.

     ஒரு மன்னர், ஒரே ஒரு வேளை, வெற்றிலைப் பாக்குச் சுவைத்ததால் உதயம் பெற்ற, இவ்வூரில், உத்தமதான புரத்தில் தோன்றிய, ஒரு மனிதர், ஒரு மாமனிதர், தமிழ் நாடெங்கும் நடையாய் நடந்து, அலையாய் அலைந்து, மிச்சம் இருந்த ஏடுகளை எல்லாம், தாய் போல் மீட்டு, ஏட்டில் இருந்ததை எல்லாம் அச்சில் ஏற்றி, உலகை வலம் வரச் செய்த பெருமைக்கு உரியவர்.


தமிழ்த் தாத்தா
மகாமகோபாத்யாய
உ.வே.சாமிநாதய்யர்.

---
   
      கடந்த 17.12.2016 சனிக் கிழமை காலை, 11.00 மணியளவில், தமிழ்த் தாத்தா அவர்கள், மழலையாய் பிறந்த, குழந்தையாய் தவழ்ந்த மண்ணில், சிறுவனாய் தத்தித் தத்தி நடைபயின்ற மண்ணில், புண்ணிய மண்ணில், உடலும் உள்ளமும் சிலிர்க்க நின்று கொண்டிருக்கிறோம்.

    நானும் எனது நண்பர் திரு க.பால்ராஜ் அவர்களும்.


இதோ தமிழ்த் தாத்தா வாழ்ந்த இல்லம்.

    புத்தம் புதிய கட்டிடம்.

    தரைத் தளத்தில் நினைவு இல்லம். முதல் தளத்தில் அரசு நூலகம்.

    கட்டிடத்தைக் கண்டவுடன், மனதில் முதன் முதலில் வேதனைதான் வந்து அமர்ந்தது.

    உ.வே.சா அவர்கள் வாழ்ந்த இல்லத்தை, அவர் வாழ்ந்த காலத்தில் இருந்தது போலவே அல்லவா பாதுகாத்திருக்க வேண்டும், அப்படியே அல்லவா பழுது நீக்கிப் பழைய உருவிலேயே அல்லவா புதுப்பித்திருக்க வேண்டும்.

    அப்பொழுதுதானே, அவ்வீட்டின் பழமையும், உ.வே.சா வாழ்ந்த சூழுலும், வளர்ந்த விதமும் பார்ப்போர் உள்ளத்தில் பதிவும்.

    உள்ளத்தில் வருத்தம் பெருகிய போதிலும், இம் மண், தமிழ்த் தாத்தா காலடி பட்ட மண், இக்காற்று தமிழ்த் தாத்தா சுவாசித்த காற்று என்ற எண்ணம் நெஞ்சத்தை நெகிழ்வுறச் செய்தது.

    தமிழ்க் காற்றைச் சுவாசித்தபடி, கனவில் நடப்பது போல் நடந்தோம்.

    உ.வே.சா இல்லத்தின் கதவு பூட்டியிருந்தது.

    ஆனால் முதல் தளத்தின் கதவு திறந்திருந்தது.

     மெல்லப் படிகளில் ஏறினோம்.

     முதல் தளத்தில் அரசு நூலகம்.

     நூலகரைத் தவிர யாருமில்லை.

     நூலகரை அணுகினோம்.

     அய்யா, நாங்கள் உ.வே.சா அவர்களின் இல்லத்தைக் காண வேண்டும் என்ற பெரு ஆவலில் வந்தோம். ஆனால் பூட்டியிருக்கிறதே என்றோம்.

     நூலகர் சிரித்த முகத்துடன் பதிலளித்தார்.

     கவலை வேண்டாம். என்னிடம் சாவி இருக்கிறது. தங்களைப் போன்று வருவோர்களுக்காக, நானே சாவியைப் பெற்று வைத்திருக்கிறேன். நீங்களே திறந்து பாருங்கள் என்றார்.

     சொர்க்கத்தின் திறவுகோலையே பெற்றார்போல் உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி.
    

திறவுகோலைப் பெற்றுக் கொண்டு, கீழிறங்கி, கதவுகளைத் திறந்து உள் நுழைந்தோம்.

     ஒரு நீண்ட பெரிய அரங்கு.

     அரங்கின் இறுதியில் சுவற்றினை ஒட்டியவாறு, கரங்களில் சுவடிகளை ஏந்தியபடி உ.வே.சா அவர்களின் திரு உருவம்.

      




மெல்ல நெருங்கி அவர் முகத்தையே உற்றுப் பார்க்கிறோம்.

       அறிவுக் களை ததும்பும் முகம்.

       தமிழைப் பொழியும் கண்கள்.

       திடீரென்று கண் விழித்து, நம்மைப் பார்த்து, பழமையானச் சுவடிகள் ஏதேனும் கொணடு வந்திருக்கிறீர்களா? என்று கேட்டாலும் கேட்பார், என்று நம்மை நம்பவைக்கும் அளவிற்கு நேர்த்தியான வடிவமைப்பு.

       உடலும் உள்ளமும் சிலிர்க்க, தமித்தாயின் தலைமகனின் முகத்தினையே பார்த்தபடி நிற்கின்றோம்.


      






தமிழ்த் தாத்தா பதிப்பித்த நூல்கள், பழமையான படங்கள்., நம்மை அவர் வாழ்ந்த காலத்திற்கே, கரம் பற்றி அழைத்துச் செல்கின்றன.

        நேரம் கரைவதே தெரியாமல், நின்று கொண்டிருக்கிறோம்.

        மெல்ல சுய நினைவு வரவே, உ.வே.சா நினைவு இல்லத்தின் கதவுகளைத் தாழிட்டு, திறவுகோலை, நூலகரிடம் ஒப்படைத்து விட்டு, மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து விட்டுப் புறப்பட்டோம்.

       


திரு நடராசன்.

        உத்தமதானபுரம் அரசு நூலகத்தின் நூலகர்.

        சிரித்த முகத்துடன், திறவுகாலை வழங்கி, மனம் திறந்து பேசியது கேட்ட கேள்விகளுக்கு எல்லாம், முகம் கோணாது, புன்னகையுடன் பதிலளித்தது, வியப்பைத்தான் வாரி வழங்கியது.

        தமிழ்த் தாத்தா நினைவு இல்லத்திற்குப், பொருத்தமான, போற்றுதலுக்கு உரிய நூலகர்.