பத்து முதல் அதிக பட்டசமாய் 15 அடி அகலமே உள்ள
மலைப் பாதை.
வளைந்து, வளைந்து மெல் நோக்கிச் செல்லும் பாதை.
வழியெங்கும் சிறியதும், பெரியதுமான கற்கள், பாறைகள்.
நடந்து செல்வது என்பதே சற்று கடினமான செயல்தான்.
வழுக்கும் கற்கள்.
நாம் சாதாரணமாய் பயணிக்கும் இரு சக்கர வாகனத்திலோ
அல்லது மகிழவுந்திலோ இப்பாதையில் பயணிப்பது என்பது இயலாத காரியம்.
இரு சக்கர வாகனம், நிச்சயம் நம்மைக் கீழே தள்ளி
விட்டுத், தள்ளி நின்று சிரிக்கும்.
சாதாரண, நான்கு சக்கர வாகனமோ, வழியிலேயே அச்சு
முறிந்து, வலி தாங்காமல், அழத் தொடங்கிவிடும்.
ஜீப்
வாடகை ஜீப் மட்டுமே, மூச்சைப் பிடித்துக் கொண்டு,
தள்ளாடித் தள்ளாடி மலையேறுகிறது.
வழியெங்கும் கற்பாறைகள்
இடது புறம் சாய்ந்த ஜீப், நாம் சுதாரிப்பதற்குள்,
வலது புறம் வேகமாய் சாய்கிறது.
வலப்புறம கைகளை வலுவாய் ஊன்றினால், திடீரென்று,
பள்ளத்திற்குள் இறங்கி, நம்மை முன்னே தள்ளுகிறது.
கொஞ்சம் அசந்தாலும், நம் மூக்கு உடைபட்டு,
உதிரம் நிச்சயமாய் வெளியே வந்து, எட்டிப் பார்க்கும்.
பேசும்போது கூட கவனமாய் பேச வேண்டியிருக்கிறது
திடீரென பள்ளத்தில் வண்டி இறங்கும்போதும்,
தொடர்ந்து குலுங்கிக் குலுங்கியேச் செல்லும் போதும், நம்மையறியாமல், நமது நாக்கினை,
நமது பற்களே, பதம் பார்த்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஆட்டம் என்றால் அப்படி ஒரு ஆட்டம், குலுக்கல்
என்றால் அப்படி ஒரு குலுக்கல்.
உடல் களைத்துத்தான் போய்விட்டது.
ஒரு நிமிடம், ஒரு நொடி, இருக்கையில் நிம்மதியாய்
அமர முடியவில்லை.
முன்னும், பின்னும், இடதும், வலதுமாய் விழுகிறோம்.
ஆங்காங்கே நீர் நிரம்பியோடும், சிற்றாறுகள்
குறுக்கிடுகின்றன.
தண்ணீரில் வேகமாய் இறங்கி, குலுங்கிக் கரையேறுகிறது
வண்டி.
ஊட்டி, கொடைக்கானல் என உயரமான, பல மலைகளில்
மகிழ்வுந்தில் பயணிக்கும் போது கிடைக்காத, ஒரு புது அனுபவம், இம் மலையில் நிச்சயமாய்
கிடைக்கும்.
மலைப் பாதையில் பயணிக்க வேண்டிய தொலைவு அதிகமில்லை,
ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர்கள்தான்,.
பயணிக்கும் நேரம் அதிக பட்சம் ஒரு மணி நேரம்.
ஆனாலும் மறக்க இயலாத பயணமாய் இப்பயணம் அமையும்.
குண்டாறு.
---
கடந்த இருபது வருடங்களாக, நானும் எனது ஆசிரிய
நண்பர்களும், ஆண்டுக்கு ஒரு முறை, குற்றாலத்திற்குச் செல்வதை வழக்கமாய் வைத்திருக்கிறோம்.
நானும், நண்பர்கள் திருவாளர்கள் ஜி.குமார்,
எஸ்.சரவணன், ஜி.விஜயக்குமார், டி.பாபு, எஸ்.சக்திவேல், வழக்கறிஞர் திரு ஜெயச்சந்திரன்
ஆகிய எழுவர், கடந்த 30.6.2017 வெள்ளிக் கிழமை இரவு, தஞ்சையில் இருந்து, ஒரு டெம்போ
டிராவலர் வண்டியில் புறப்பட்டோம்.
சனிக் கிழமை அதிகாலை குற்றாலம்.
பாண்டுரங்க விலாஸ்
குற்றாலத்தில் எங்களது வசந்த மாளிகை
தஞ்சையினைச் சார்ந்த அன்பர் ஒருவர், குற்றாலத்தின்
மையப் பகுதியில், குற்றாலத்தின் மெயின் அருவிக்கு எதிரில், ஐம்பது அறைகளை வாடகைக்கு
விட்டு வருகிறார்.
அறையென்பது கூட தவறு,
சிறு சிறு வீடுகள்.
முதல் நாள் அலைபேசியில் அழைத்து தெரிவித்து
விட்டால், அடுத்த நாள் காலை, எங்களின வரவினை எதிர்பார்த்துத், தங்குமிடம் தயாராய் காத்திருக்கும்.
பாண்டுரங்க
விலாஸ் ( 94426 23825)
சொன்னால் நம்ப மாட்டீர்கள்,
குற்றாலத்தில் யோகா செய்தோம் என்றால் நம்புவீர்களா?
மறுநாள் அதிகாலையிலேயே மூலிகை வனத்திற்குச்
சென்று திகட்டத் திகட்டக் குளித்தோம்.
குண்டாறு
குற்றாலத்திற்கு அடுத்துள்ள, செங்கோட்டைக்கு
அருகிலேயே, குண்டாறு நீர்த் தேக்கம்.
மலையின் மேலே, ஒன்றல்ல இரண்டல்ல, ஒன்பது அருவிகள்
இருக்கின்றன,
ஒன்பது அருவிகளுள், லக்கி அருவி எனப் பெயர்
பெற்ற ஒரு அருவி மட்டுமே, பொதுவான அருவியாகும்.
மற்ற எட்டு அருவிகளும் தனியாருக்குச் சொந்தமானவை.
முதலில் வியப்பாகத்தான் இருந்தது.
அருவி எப்படித் தனியாருக்குச் சொந்தமாக இருக்க
முடியும் என்று புரியவில்லை.
மலையில் தனியாருக்குச் சொந்தமான பல்வேறு எஸ்டேட்டுகள்
உள்ளன.
இந்த எஸ்டேட்டுகளில் இருக்கும் அருவிகள் அவர்களுக்கே
சொந்தமாம்.,
இந்த அருவிகளில் குளிக்க வேண்டுமானால், கட்டணம்
செலுத்தியாக வேண்டும்.
இந்த அருவிகளுள் ஒன்றினைக் காணத்தான் எங்களது,
இந்த மலைப் பயணம்.
பொதுவான அருவி. கட்டணம் கிடையாது.
பயணம் தொடர்ந்தது.
கருங்கற் பாறைகளில் முட்டி மோதி, சளைக்காமல்
ஜீப் மேலே, மேலே பயணித்தது.
இதோ தனியாருக்குச் சொந்தமான அருவியின் நுழை
வாயில்.
சுற்றுச் சுவருடன் கூடிய நுழைவாயில்.
கீழ் நோக்கிச் செல்லும் படிகள், எங்களை இறங்கு
இறங்கு என்றது.
மெல்ல இறங்கினோம்
மனதைக் கவரும் சூழல்
அருவியின் உயரம், பதினைந்து அடிதான் இருக்கும்.
நீர் வழிந்தோடுகிறது
பத்துபேர்தான் குளித்துக் கொண்டிருந்தனர்.
குடும்பத்தோடு குளித்து மகிழ ஏற்ற அருவி.
எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் குளித்து மகிழலாம்.
தள்ளு முள்ளு என்பதே கிடையாது.
பல நிமிடங்கள், நின்று அருவியை ரசித்தோம்.
பெரும் பாறையினை உறுதியாய் பற்றி உயர்ந்து நிற்கும் மரங்கள் நம்மை வியப்பில் ஆழத்துகின்றன.
இந்த அருவிக்கு எதிரிலேயே மேலும் ஒரு சிற்றருவி.
குற்றாலம் செல்பவர்கள், அவசியம் ஒரு முறையேனும்,
குண்டாறு அருவியைக் காணவேண்டும்.
மலைப் பயணம் நிச்சயம், மகிழ்வினை வாரி வழங்கும்.
இரவுக்குள் தஞ்சை திரும்பியாக வேண்டும்.
நாளை பள்ளிக்குச் சென்றாக வேண்டும் என்ற நினைவு
வரவே, ஜீப்பிற்குத் திரும்பினோம்.
குண்டாறு அருவி.
நிச்சயம் புத்துணர்ச்சியையும், பெரு மகிழ்வினையும்
வழங்கும்.
நண்பர்களே, அடுத்த முறை குற்றாலத்திற்குச்
செல்லும்போது, நீங்களும், குண்டாறு அருவியில் குளித்துத்தான் பாருங்களேன்.