தனித்தனியே செய்துவிட்டு
மொத்தமாகத் தீர்த்துக் கொள்ளப்
போதுமான அளவு
புண்ணிய ஸ்தலங்கள் இருப்பதால்
எங்கள்
பாரத புத்திரர்கள்
தூசு படாமல்
தூய்மையாகவே இருக்கிறார்கள்
1983 ஆம் ஆண்டு, தஞ்சாவூர் மன்னர்
சரபோசி அரசினர் கல்லூரியில், இளங்கலை பயின்ற பொழுது, எங்களுக்குத் துணைப் பாடமாக இருந்தது,
கவிஞர் மு.மேத்தா அவர்களின் கண்ணீர்ப் பூக்கள் என்னும் கவிதை நூலாகும்.
புதுக் கவிதை
புதுக் கவிதை என்னும் இந்த வார்த்தையே என்னைச்
சுண்டி இழுத்தது. துணைப் பாடம் என்னும் நிலையினைக் கடந்து, ஒருவித ஈர்ப்பு, இந்த நூலின்
மீது ஏற்பட்டது.
விழுந்து, விழுந்து படித்தேன்
படித்துப் படித்து ரசித்தேன்
ஏடெடுத்து ஐந்து வரிகளை, ஒன்றன் கீழ் ஒன்றாக
எழுதி, கவிதையினை, புதுக் கவிதையினைப் படைத்துவிட்ட மகிழ்ச்சியில் திளைத்தேன்.
இன்று நினைத்தாலும், மனதில் ஒருவித மகிழ்ச்சி
ஏற்படத்தான் செய்கிறது. அந்நாட்களும், அந்நாளைய நினைவுகளும், மனதில் உடனே வந்து ஒட்டிக்
கொள்கின்றன.
கல்லூரிப் பருவம்
கவலைகள் ஏதுமற்ற உன்னதப் பருவம்.
இக்கால கட்டத்தில், கவிதை சார்ந்த விழிப்புணர்வை,
அறிமுகத்தை, கவிதையின் எளிமையை, வலிமையாய் உணர்வுகளைக் கடத்துகின்ற அதன் தன்மையை, மாணவ,
மாணவியரின் உள்ளத்தில், விதையாய் விதைத்துவிட்டால், தமிழுணர்வு செழிக்குமல்லவா, கவியுணர்வு தழைக்குமல்லவா.
இதனை மிகச் சரியாகச் செய்து வருகிறார் இவர்.
மாணவ, மாணவிகளை கவிதை வாசிக்க வைக்கிறார்.
படிக்கும் காலத்திலேயே, மேடையேறி, கவி வாசிக்கத்
தளம் போட்டுத் தருகிறார் இவர்.
திரு தி.அமிர்த கணேசன்
அகன்
புதுச்சேரி, ஒரு துளிக் கவிதை
அமைப்பின் நிறுவுநர்
நண்பர்களே, திருமணம் ஆகி பல்லாண்டுகள் ஆகியும்,
மக்கட்பேறு இல்லாதவர்கள், ஒரு குழந்தையினைத் தத்தெடுத்து, தங்கள் மழலையால் சீராட்டி,
தாலாட்டி மகிழ்வதை நாம் அறிவோம்.
ஆனால் இவரோ, குழந்தையாய் மாறி, கவி மழலையாய்
மாறி, தந்தையாய், ஒரு மகாகவியைத் தத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஏழு வயதில்
நான் இழந்த தாயைப்
பதினெட்டு வயதில்
கரந்தையில் பெற்றேன்
எனக்
கரந்தையைத், தன் தாயாய் போற்றிவரும், கவிஞரைத், தன் தந்தையாய் தத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்.
நொடிக்கு நூறு முறை, அப்பா, அப்பா எனத் தமிழொழுக இவர் அழைப்பதைக்
காணும்போதே, நம் மனதில், மகிழ்ச்சி வெள்ளம் ஊற்றெடுத்து ஓடுகிறது.
கவிஞர் ஈரோடு தமிழன்பன்
அவர்களைத்தான்
இவர், தன் தந்தையாய் வரித்துக் கொண்டிருக்கிறார்.
தன் தந்தையின் கவிதைகளை, பள்ளி, கல்லூரி மாணவர்களை
மேடையேற்றி, வாசிக்க வைத்து, அவர்களுக்குள் கவி உணர்வை ஊட்டி வருகிறார்.
கடந்த 11.12.2017 திங்கட் கிழமை காலை, 10.00
மணியளவில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், தமிழ்ப்பெரு மன்றத்தில்,
ஒரு துளிக் கவிதை, புதுச்சேரி
ஈரோடு தமிழன்பன் வாசகர் வட்டம்,
அமெரிக்கா
இணைந்து நடத்திய
மகாகவி ஈரோடு தமிழன்பன் –
1000
மகாகவியின் 1000 கவிதைகள்
தொடர் வாசிப்பு
நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்த, திரு தி.அமிர்த
கணேசன் அவர்கள், தன் தந்தை, பயின்ற கல்லூரி என்பதால், கவிஞரையும் உடன் அழைத்து வந்திருந்தார்.
சற்றேரக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு
முன், மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள், சென்னிமலை
செகதீசனாய் தமிழ்ப் பயின்ற கல்லூரி, கரந்தைப் புலவர் கல்லூரி.
கரந்தைத் தமிழ்ச் சங்கத் துணைத்
தலைவர் திரு இரா.சுந்தர வதனம் அவர்கள்
நிகழ்விற்குத் தலைமையேற்க, கல்லூரி முதல்வர் முனைவர்
இரா.இராசாமணி அவர்களும், கரந்தையின் முன்னாள் மாணவர்களான புலவர் இரா.கலியபெருமாள் அவர்களும், புலவர் ம.கந்தசாமி அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
கல்லூரிப் பேராசிரியர் கவிக்கோ ஆறு.காளிதாசு அவர்கள் மேடை நிகழ்வுகளைத்
தொகுத்து வழங்கினார்.
கலைக் கல்லூரி ஒருங்கிணைப்பளர், ஆங்கிலத் துறைப்
பேராசிரியர், முனைவர் கோ.சண்முகம் அவர்கள்,
விழாவிற்குரிய ஏற்பாடுகளைச் சிறப்புற செய்திருந்தார்.
நூறு மாணவ. மாணவியர், ஆளுக்குப் பத்துக் கவிதைகள்,
ஆயிரம் கவிதைகள் மேடையில் அரங்கேறின.
மாணவ, மாணவியர் ஒவ்வொருவரும், ஏற்ற, இறக்கத்துடன்,
உணர்வுப் பூர்வமாய் கவிதைகளை வாசித்து நிகழ்விற்கு மெருகூட்டினர்.
இடையிடையே திரு தி.அமிர்த கணேசன்
அவர்கள் குறுக்கிட்டு, வாசிக்கப்படும் கவிதை, உருப் பெற்ற வரலாற்றை, உணர்வுடன் எடுத்துரைக்க,
கவிதை வாசிப்பு விழா களை கட்டியது.
மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாய், வாசிப்புத்
திருவிழா நடைபெற்றது. ஆயினும் மூன்றே நிமிடங்களில் விழா நிறைவுற்ற உணர்வு.
கல்லூரி மாணவ, மாணவியரிடையே இவ்விழா, ஒரு மாற்றத்தை,
ஒரு எழுச்சியை உண்டாக்கி இருப்பதை உணர முடிந்தது.
ஒரு துளிக் கவிதை
அமைப்பின் நிறுவுநர்
திரு தி.அமிர்த கணேசன்
அவர்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும்.
தமிழகமெங்கும் மாணவ, மாணவியரை
மேடையேற்றி, கவிபாட வைக்கும், இவரின் முயற்சி வெல்ல வாழ்த்துவோம், போற்றுவோம்.
புத்தரும் பெரியாரும்
என்
அறிவு நரம்புகளில்
மகாவீரரும் இராமாநுசரும்
என்
இரத்த அணுக்களில்.
என்னைக்
கோடி அலைகளாக்கிக்
கங்கைக்கும் காவிரிக்கும்
பங்கிட்டுக் கொடுப்பேன்.
உறிஞ்சப்படுபவன்
ஒரிசாவில் இருந்தாலும்
உள்ளூரில் இருந்தாலும் அவன் என்
தோழன்.
அபகரிக்கப்பட்ட வைகறைக்காக
ஆர்த் தெழுபவன்
ஆப்பிரிக்காவில் இருந்தால் என்ன?
ஈழத்தில் இருந்தால் என்ன?
அவன் என் வர்க்கம்.
- ஈரோடு
தமிழன்பன்