வானோங்கி
நிற்குது பார் தோழா
வாழ்வைப் பணயம் வைத்தோம்
உண்மை
உணர்வாரில்லை தோழா
உழைப்பை மதிப்பாரில்லை
பாவிகள்
வாழுகின்றார் தோழா
பாட்டாளி மாளுகின்றார்
ஆவி
துடிக்குதடா தோழா
ஆத்திரம் பொங்குதடா
பெரும்
பெரும் மாளிகைகளைக் கட்டியும், வானூர்தி செய்தும், கழனி உழுதும், உழைக்கும் தொழிலாளர்
வர்க்கம், அதன் பலனை அனுபவிக்க இயலாமல், மூன்று வேளை உணவிற்கும் வழியின்றி மாளும் அவலத்தைக்
கவிஞரின் வரிகளில் வாசிக்கும் பொழுதே, நமக்கும் ஆத்திரம் பொங்குகிறதல்லவா?
நிலத்தை
உழுத உழவன் பசியால்
நித்தம்
வருந்தி வாடுகிறான்
கொழுத்த
செல்வர் உணவை வீணாய்
குப்பை மீது எறிகிறார்
நாட்டைக்
காக்கும் வீரன் மனைவி
கூழுக் கேங்கி அழுகிறாள்
காட்டிக்
கொடுக்கும் கூட்டம் தினமும்
கறியும் சோறும் திங்குதே
வேதனையின்
வெளிப்பாடாய், நடைமுறை வாழ்க்கையில், நித்தம் நித்தம் நாம் காணும் உண்மை நிகழ்வுகளை,
எளிமையான வரிகளால் எத்துணை வலிமையாய் படம் பிடித்துக் காட்டுகிறார் பாருங்கள்.
வாளினைக்
கையில் எடடா தோழா
வையகம் உய்யும் வழிதனைச் செய்வோம்
நாளெல்லாம்
உழைத்து நலிகின்றான் ஏழை
நல்நிலை வழ்வோர் உணர்வதாய் இல்லை
ஆள்வோரும்
செல்வர்க்கே அடிமைகளானார்
அறிஞரும் வள்ளலின் அடிபணிகின்றார்
தோள்வலி
கொண்ட நற் சுதந்திர வீரா
துணிவுதான் இனி நம் வாழ்விக்கும்.
ஏதோ
இன்றைக்கு எழுதிய பாடல் போல் தோன்றுகிறதல்லவா? ஆனால் இக்கவிஞர் மறைந்தே, ஆண்டுகள்
23 கடந்துவிட்டன.
இதுமட்டுமல்ல, இன்றைக்கு 58 ஆண்டுகளுக்கு முன்னரே.
நமது இன்றைய நிலையினை அன்றே கண்டு, 1962 லேயே
முழங்கியவர் இவர்.
அஞ்சாமல்
பொய் சொல்லல்
அறமாகிக் போச்சு
அடுத்தவன்
உடைமை மேல்
ஆசைவந் தாச்சுது
பஞ்சமா
பாதகம்
செய்திடும் பேரையும்
பலர்கூடிப்
பாராட்டும்
காலமாய்ப்
போச்சுது
யாராலே?
இது யாராலே?
இது
நம்மாலே, இது நம்மாலே என வேதனையில் புலம்பிடத் தோன்றுகிறதல்லவா?
இவர் 1948 ஆம் ஆண்டில் இருந்து, தொடர்ச்சியாய்,
ஒன்று இரண்டல்ல, முழுதாய் 28 ஆண்டுகள், திரைப் படத்துறையில், பாடலாசிரியராய், உயர்ந்து
நின்று பெரும் புகழ் பெற்றவர்.
இன்று நாம் மெய்மறந்து கேட்கின்ற பல பாடல்களை
இயற்றியவர்.
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
சேதி தெரியுமா?
என்ற பாடலைக் கேட்டுக் கேட்டு மயங்கியிருப்பீர்கள்
அல்லவா? இது இவர் பாடல்தான்.
பொன்னான வாழ்வு மண்ணாகிப் போனால்
இதுவும் இவர் பாடல்தான்.
வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும்
ஏசும்,
வையகம் இதுதானடா?
இதுவும் இவர் பாடல்தான்.
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே
இதுவும் இவர் பாடல்தான்
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை
இதுவும் இவர் பாடல்தான்
உலவும் தென்றல் காற்றினிலே
இதுவும் இவர் பாடல்தான்
வாராய் நீ வாராய்
இதுவும் இவர் பாடலேதான்.
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.,
பாடல்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
தமிழ்த் திரைத் துறையில் உச்சத்தில் இருந்தபோது,
ஒரு நாள் திடீரென, இனி வேண்டாம் சினிமா என, திரை உலகைவிட்டே விலகிப் போய்விட்டார்.
இனி திரைப் படங்களுக்குப் பாடல்கள் எழுத மாட்டோன்,
எழுதவே மாட்டேன் எனப் பிடிவதமாய் விலகியே போய்விட்டார்.
எத்துணையோ பேர், எவ்வளவோ சமாதானம்
சொல்லிப் பார்த்தார்கள்.
உறுதியாய் மறுத்துவிட்டார்.
நண்பர்களே, இவர் திரைத் துறையில் இருந்து, காத
தூரம் விலகி ஓடியதற்குக் காரணம் என்ன தெரியுமா?
இரண்டு பாடல்கள்.
இரண்டே இரண்டு திரைப்படப் பாடல்கள்.
தேர்த் திருவிழா என்னும் திரைப் படத்தில் இடம்
பெற்ற,
ஏ குட்டி,
என்னா குட்டி
எகிறிப் போகும் கண்ணுக்குட்டி
என்னும்
பாடலைக் கேட்டதும் நொந்துதான் போனார்.
தொடர்ந்து, எங்கள் வீட்டுப் பிள்ளை
என்னும் திரைப் படத்தில் இடம் பெற்றிருந்த,
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
என்ற
இரட்டைப் பொருள் நிறைந்தப் பாடலைக் கேட்டு, மனம் வெந்துதான் போனார்.
இதோ, அவரே கூறுகிறார், தன்னைத் திரைத் துறையில்
இருந்து வெளியேற்றியப் பாடல் இதுதான் என்பதை
அவரே கூறுகிறார், கேளுங்கள்.
விரசமான
வார்த்தைகளால், தரம் தாழ்ந்துபோனப் பாடல்கள், நுழைந்துவிட்ட திரைத் துறையில், எனக்கென்ன
வேலை என வெளியே வந்துவிட்டார்.
கவிஞன் என்பவன் தாய் மாதிரி பத்தியம்
இருக்கனும். ரசிகனை அவன் பிள்ளை மாதிரி நேசிக்க வேண்டும். எதைக் கொடுக்கக் கூடாது,
எதைக் கொடுக்க வேண்டும் எனப் பொறுப்புடன் எழுத வேண்டும்.
எப்பேர்ப்பட்ட மனிதர் பார்த்தீர்களா.
இவர் கவிஞர் மட்டுமல்ல.
போராளி.
சமுதாயச் சீர்திருத்தம், இந்தி எதிர்ப்பு, தமிழக
எல்லை மீட்சி, புதிய தமிழக அமைப்பு, தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப் பயிற்சி மொழி, தமிழகப்
பெயர் அமைப்பு, தொழிலாளர் போராட்டம் எனப் பலப் போராட்டங் களங்களில் முன் நின்று, சிறை
சென்றவர்.
பள்ளிப்
படிப்பென்றால் இன்னதென்றே அறியாது, அடிமை இந்தியாவில், ஒரு பெட்டிக் கடை ஊழியராய்ச்
சேர்ந்து, மாத ஊதியம், ஆறு ரூபாய்க்காக, நாள்தோறும் பதினெட்டு மணி நேரம் உழைத்தவர்.
இன்பத் தமிழ் எங்கள் மொழி
என முழங்கியவர்
கவி கா.மு.ஷெரிப்.