சிரிக்க வேண்டியவர்கள்
செத்துப் போனதும்
எரிக்க வேண்டியவர்கள்
உயிரோடிருப்பதும்
கும்பகோணம்
பள்ளியில் குழந்தைகள் எரிந்து சாம்பலாகிய கொடுமையினைக் கண்டபிறகு, மனம் வெந்து, மழை
கூடப் பொய்யெனத்தானே பெய்யும்.
படுக்கையில்
விழுந்தவுடன்
பதறியபடி
பார்க்க வந்தார்கள்
கடன்
தந்தவர்கள்
மனிதத்திற்கு
மதிப்பில்லாமல் போய்விட்ட, இக்காலத்தில், மழை மட்டும், மனமுவந்தா பெய்யும், பொய்யெனத்தானே
பெய்யும்.
அதிக மதிப்பெண் எடுக்க
அம்பாளுக்கு தினசரி
நெய் விளக்குப் போடும்
அம்மா.
நண்பனின் மகனைவிட
நல்ல மதிப்பெண் எடுக்க
முருகனிடம் போய்
மொட்டை போடும்
அப்பா.
மாணவனாகும்
பயிற்சியில் வாகை சூடவைத்து, மனிதனாகும் முயற்சினை தோற்கடிக்கும் கல்வி முறை இருக்கும்வரை,
மழை கூட பொய்யெனத்தானே பெய்யும்.
வளர்த்ததை
யெல்லாம்
அழிப்பது
எப்படியென
ஆராய்ச்சி
செய்து
சாதியைக்
கண்டோம்.
சாதிக்கும்
தலைவர்கள்
இல்லாத
தேசத்தில்
சாதிக்குத்
தலைவர்கள்
ஏராளம்.
கப்பலோட்டியத்
தமிழனையும், கல்விக் கண் திறந்த கர்மவீரர் காமராசரையும் கூட விட்டு வைக்காமல், சாதிக்குள்
அடைத்துவிட்ட சமூகத்தில், மழை மட்டும் மனம் மகிழ்ந்தா பெய்யும், பொய்யெனத்தானே பெய்யும்.
மிருகங்களோடு
பழகினான்
மனிதன்.
மிருகங்களிடத்தில்
மனித நேயமும்,
மனிதர்களிடத்தில்
மிருகத்தனங்களும்
வந்துவிட்டன.
இயந்திரங்களோடு
பழகினான்
மனிதன்.
இயந்திரங்களிடத்தில்
மனித ஆற்றலும்
மனிதர்களிடத்தில்
இயந்திரத் தனங்களும்
வந்துவிட்டன.
………….
…………..
மனிதன்
பழகவேயில்லை
இன்னொரு
மனிதருடன்.
அடுத்த
வீட்டு மனிதர்கள்கூட, அந்நிய தேசத்து மனிதர்களாய் மாறிவிட்ட, இப்பூமியில், மேகம் நட்போடு
மழையாய் பெய்யுமா என்ன, பொய்யெனத்தானே பெய்யும்.
நோயாளிகளை
பார்க்கப்
போகிறவர்கள்
எதையாவது
வாங்கிக்
கொண்டு போகாதீர்கள்
முடிந்தால்
அன்பையும்
அமைதியையும்.
நட்புகளிடத்தும்,
உறவினர்களிடத்தும் அன்பாக பழகாத, தேவைக்குப் பழகும் மக்கள் இருக்கும் வரை, மழையென்ன
அன்புடனா பெய்யும், பொய்யெனத்தானே பெய்யும்.
துயரங்களால்
துரோகங்களால்
இழப்புகளால்
இம்சைகளால்
உடைந்து பொய்விடுகிறோம்
ஒவ்வொருவரும்.
நம்பிக்கைகளால்
ஒட்டிக் கொள்கிறோம்
ஒவ்வொரு முறையும்.
ஆடைகள் என்பதெல்லாம்
தழும்புகளை
மறைக்கத்தான்.
துரோகங்களும்,
இம்சைகளும் நிரம்பி வழியும் வரை, பூமியை வந்தடையும் மழை, பொய்யெனத்தானே பெய்யும்.
மெய்யென மழை பொழிந்த காலம், கரைந்து போய்,
மழை கூட பொய்யெனப் பெய்வதை, தன் உன்னத கவி வரிகளால், ஆதங்க உணர்வுகளால், நூலாக்கிப்
படைத்திருக்கிறார் இக்கவிஞர்.
இவர் அரிதாரம் பூசாத அழகியத் தமிழுக்குச் சொந்தக்காரர்.
சமூக உணர்வை, சிந்தனைச் செறிவை, மனித நேயத்தைத்
தன் அழகுத் தமிழால், கவி மழையாக்கிப் பொழிய வைக்கும், வித்தை தெரிந்த வித்தகர்.
உயர்ந்த உள்ளமும். உள்ளம் முழுதும் ஈரமும் கொண்ட
உன்னத மனிதர்.
இவரது கவி நூல்
பொய்யெனப் பெய்யும் மழை
வெப்பம் இல்லாத குளிர்ப்பேச்சும்
– நிலா
வெளிச்சம் தெறிக்கும் பார்வையதும்
ஒப்பனை இல்லாத பூஞ்சிரிப்பும்
– தமிழ்
ஊறித் ததும்பும் கவித்துவமும்
செப்பம் நிறைந்த சிந்தனையும் –
உளி
செதுக்கிய சிற்பச் சொல்லமைப்பும்
முப்பழம் தோற்கும் கற்பனையும்
– தங்கம்
மூர்த்திக்கு வாய்த்த நேர்த்திகளாம்
என
முழங்குவர் கவிச்சுடர், கவிதைப் பித்தன்.
ஆம், இவர்தான்
கவிஞர் தங்கம் மூர்த்தி.