தஞ்சாவூர்
சீனிவாசபுரம்
இராஜராஜன் நகர்
தஞ்சாவூர் பெரிய கோயிலை ஒட்டியுள்ளப் பகுதி
சீனிவாசபுரம் ஆகும்.
இந்த சீனிவாசபுரத்திற்கு அருகில், புத்தம் புதிதாய்
தோன்றிய நகர் இராஜராஜன் நகர்.
வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைத்துக்
கொண்டிருந்த காலம்.
இந்நகரில், புதிதாய் ஒரு வீடு கட்ட, அஸ்திவாரம்
தோண்டுவதற்கானப் பணிகள் தொடங்கியிருந்தன.
அஸ்திவாரத்தின் ஆழம் பத்து அடியை நெருங்கியபோது,
பெரும் கருங்கல் ஒன்று இடைமறித்துத் தடுத்தது.
நீண்ட கல்லாகத் தெரியவே, கல்லின் திசையில் மண்ணை
அகற்றியபோது, பணியாளர்கள் திடுக்கிட்டுத்தான் போனார்கள்.
காரணம், அது வெறும் கருங்கல் அல்ல.
அது ஒரு கற்தூண்
எழுத்துக்களைத் தன் உடல் முழுவதும் சுமந்த கற்றூண்.
இருபது அடி நீளம்
தூணின் ஒவ்வொரு பக்கமும் நான்கு அடி அகலம் இருக்கும்.
இடத்தின் உரிமையாளர் முதலில் திகைத்துத்தான்
போனார்
சில நொடிகளில் திகைப்பு அச்சமாய் மாறியது
நமது இடத்தில் கல்வெட்டு கிடைத்திருக்கிறது என்ற
செய்தி வெளியில் பரவினால், அரசு இடத்தைப் கைப்பற்றிவிடுமோ, தன்னால் வீடு கட்ட இயலாமல்
போய்விடுமோ என்னும் அச்சம் எழுந்தது.
எனவே கல் உடைப்பவர்களை அழைத்து, நீண்ட கற்றூணை,
எழுபது துண்டுகளாக உடைத்துவிட்டார்.
அஸ்திவாரம் எழுப்ப இந்தக் கற்களையேப் பயன்படுத்திக்
கொள்ளலாமே என்ற எண்ணம் அவருக்கு.
ஆயினும் பணியாளர்கள் மூலம் செய்தி வெகு வேகமாய்
பரவி, இந்து நாளிதழின் நிருபர் திரு வி,கணபதி
அவர்களையும், வரலாற்று ஆய்வாளர் முனைவர் குடவாயில்
பாலசுப்பிரமணியன் அவர்களையும் சென்றடைந்தது.
இருவரும் இணைந்து, மாவட்ட ஆட்சியரின்
துணையோடு, உடைந்த கல்துண்டுகளைக் கைப்பற்றினர்.
தமிழக அரசின் தொல்லியல் துறையினரும், இந்தியத்
தொல்லியல் துறையினரும், உடைந்த துண்டுகளை இணைந்து, கல்வெட்டுச் செய்தியினை நகலெடுத்தனர்.
மொத்தம் 12 பாடல்கள்
கிரந்தத் தமிழ் எழுத்துக்களில் 12 வடமொழிப் பாடல்கள்
இராஜராஜனின் பெரும் புகழ் பாடும் பாடல்கள்
இதுநாள் வரை இதுபோன்றப் பாடல்கள் கிடைத்ததேயில்லை
இலக்கண அமைதியோடு, அலங்காரங்கள் அமையப் பெற்றப்
பாடல்கள்.
இதுவரை கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளின் செய்திகள்
அனைத்தும், திருக்கோயில்கள் மற்றும் அரசு நடவடிக்கைகளைப் பறைசாற்றுவதாகும்.
ஆனால் இக்கல்வெட்டு, முழுக்க முழுக்க இராஜராஜ
சோழனின் புகழை மட்டுமே பாடும் கல்வெட்டாகும்.
இராஜராஜ
காவியம்
இப்பாடல்களுள், ஒரு பாடலின் தமிழாக்கத்தைப் பாருங்கள்.
சிறந்த
அறிவாளியான மும்முடிச் சோழனே, உன்னுடன் கடும் போரில் விருப்பம் கொண்ட, நல்ல மரபில்
வந்த எதிரிகள், தற்போது அச்சம் தெளிந்து, தலை நிமிர்ந்து நிற்கின்றனர்.
---
நண்பர்களே, கடந்த மாதம், ஏடகம் நிகழ்த்திய ஞாயிறு
முற்றம் சொற்பொழிவில்,
அய்யம்பேட்டை ந.செல்வராஜ் அவர்கள்,
சோழரும் அரண்மனையும்
என்னும்
தலைப்பில் ஆற்றிய பொழிவில்தான், இந்தக் கூடுதல் தகவலை, இலவச இணைப்பாக வழங்கினார்.
இதுமட்டுமல்ல, இந்தக் கல்வெட்டு,
இராஜராஜன் புகழை மட்டுமே பாடுவதையும், கடும் போரில் விருப்பம் கொண்ட எதிரிகள், தற்பொழுது
அச்சம் தெளிந்து தலை நிமிர்ந்து நிற்கின்றனர் என்று உரைப்பதையும், தன் ஆய்வுப் பார்வையால்
விழுங்கி, இது நாள் வரை யாரும் கண்டறியாத, யாரும் சொல்லாத கருத்தை முன் மொழிந்தார்.
இராஜராஜன் புகழை மட்டுமே பாடுவதால், இக்கல்வெட்டு,
இராஜராஜன் காலத்திற்குப் பிந்தையது.
இராஜராஜ சோழன் உயிரோடு இருக்கும் வரை, அவன் எதிரிகள்
அச்சம் தெளிய வாய்ப்பே இல்லை என்பதால், எதிரிகள் அச்சம் தெளிந்து நிற்கின்றனர் என்ற
வரிகள், இக்கல்வெட்டு, இராஜராஜன் காலத்திற்குப் பிந்தையது என்ற கருத்தை, மேலும் உறுதிபடுத்துகின்றன
என்றார்.
இராஜராஜன் காலத்திற்குப் பிந்தைய
கல்வெட்டு எனில், நிச்சயமாக, இந்தக் கல்வெட்டு இருந்த இடத்தில்தான், இராஜராஜனின் பள்ளிப்படை
இருந்திருக்க வேண்டும் என முழங்கினார்.
பள்ளிப்
படை
இராஜராஜனின் சமாதி.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், கற்பனையில்
கூட நினைத்துப் பார்க்க இயலாத வகையில், வானுயர்ந்த கற்றளியை எழுப்பிய,
அபயகுல சேகரன், அரிதுர்க்
கலங்கன், அருண்மொழி,
அழகிய சோழன், இரணமுக பீமன், இரவிகுல மாணிக்கன்,
இரவிவம்ச சிகாமணி, இராஜ கண்டியன், இராஜ சர்வஞ்ஞன்,
இராஜாச்ரயன், இராஜகேவரி வர்மன், இராஜ மார்த்தாண்டன்,
இராஜேந்திர சிம்மன், இராஜ விநோதன், உத்தம சோழன்,
உலகளந்தான், உய்ய கொண்டான், கேராந்தகன்,
சண்ட பராக்ரமன், சத்ரு புஜங்கன், சிங்களாந்தகன்,
சிவபாத சேகரன், சோழ குலசுந்தரன், சோழ மார்த்தாண்டன்
சோழேந்திர சிம்மன், திருமுறைகண்ட சோழன், தெலிங்க குலகாலன்
நிகரிலி சோழன், நித்ய விநோதகன், பண்டித சோழன்,
பாண்டிய குலாசனன், மும்முடிச் சோழன், மூர்த்த விக்கரமாபரணன்
ஜனநாதன், ஜெயங்கொண்ட சோழன், சத்திரிய சிகாமணி
எனப் பலப் பலவாறு போற்றப்பட்ட,
மாமன்னன் இராஜராஜ சோழனுக்கு,
தன் தந்தைக்கு,
முதலாம் ராஜேந்திரச் சோழன்,
நிச்சயமாய், வெகு நிச்சயமாய்,
தஞ்சை பெரிய கோயிலுக்கு அருகிலேதான்
பள்ளிப் படையை எழுப்பி இருப்பான்
எனவே, கற்றூண் கண்டுபிடிக்கப் பட்ட இடத்தில்தான்
இராஜராஜன் பள்ளிப்படை இருந்திருக்க வேண்டும்
என உறுதிபட உரைத்தார்.
நண்பர்களே, இந்தக் கல் தூண், தஞ்சாவூர் இராஜராஜன் மணிமண்டபத்தின், அடித்தளத்தில் அமைந்திருக்கும், இராஜராஜசோழன் அகழ் வைப்பகத்தில், காட்சிக்கு
வைக்கப்பட்டுள்ளதாக அறிந்து, கடந்த 2.9.2018 ஞாயிற்றுக் கிழமையன்று, சென்று பார்த்தேன்.
வியந்துதான் போனேன்.
எழுபது துண்டுகளில், எழுத்துக்களைச் சுமந்த சுமார் 28 துண்டுகள் மட்டுமே இவ்விடத்தில் இருக்கின்றன.
எழுபது துண்டுகளையும், அடுக்கிவைத்தால் எத்துணை
பெரியதாக, எத்துணை உயரமாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன்.
அப்படியானால்,
இத்துணை அகல, இத்துணைப் பெரிய கற்றூணால் தாங்கப்பெற்றிருந்த, இராஜராஜனின் பள்ளிப்படை
எத்துணை பெரியதாக இருக்க வேண்டும்.
எத்துணை உயரமாக, எத்துணை கம்பீரமாக காட்சியளித்திருக்க
வேண்டும் என்று எண்ணிப் பார்த்தேன்.
பெருமூச்சுதான் வெளி வந்தது.
இந்தக் கற்றூண் கண்டுபிடிக்கப்பட்டு இருபத்து
ஒன்பது வருடங்கள் கடந்து ஓடி விட்டன.
ஆனால், கற்றூண் கிடைத்தப் பகுதியில் ஆய்வு எதுவும்
இதுநாள் வரை தொடங்கப்படவே இல்லை என்பதுதான் வேதனை.
அகழாய்வு செய்வார்களா?
உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் உண்மையைத் தட்டியெழுப்பி
வெளிக்கொணர்வார்களா?
தஞ்சை மட்டுமல்ல, தமிழகம் மட்டுமல்ல, தமிழ்கூறும்
நல்லுலகே, காத்துக் கொண்டிருக்கிறது.
வாழ்க மாமன்னன் இராஜராஜன்.