எண்சாண் உயரத்திற்கும் பனையின்
மீதேறி
பஞ்சாட்கரம் என்னும்பாரிய நல்லினைப்
பாய்ந்தெடுத்து
தஞ்சாவூராளும் மகராசன் பாதந்தனைப்
பணிந்தால்
எஞ்சா குணங்குடி வாய்க்குமே.
இப்பாடலை எழுதிய அறிஞர் வாழ்ந்த மண்ணில், தன்
தடத்தினையும் பதிக்க வேண்டும், அம்மண்ணைக் கையால் எடுத்து வணங்கி மகிழவேண்டும் என்ற
ஆவல் அந்த இளைஞருக்கு.
திருச்சியில் இருந்து புறப்பட்டு, காரைக்குடி
சென்று, அங்கிருந்து தேவகோட்டை சென்றார்.
தான் செல்ல வேண்டிய ஊரின் பெயரைக் கூறி வழிகேட்ட
பொழுது, யாருக்கும் தெரியவில்லை.
ஒருவர் மட்டும் கூறினார்
தொண்டி செல்லும் பேருந்தில் ஏறி, கண்ணன்குடி,
மங்கலக்குடி தாண்டி இறங்குங்கள் என்றார்.
இறங்கினார்
ஒரே ஒரு பெட்டிக் கடை
கடைக்காரரிடம் கேட்டார்
எதற்கு இவ்வூருக்குச் செல்ல வேண்டும் என்றார்.
அம்மண்ணை வணங்குவதற்கு
வாருங்கள் என்று அவரே அழைத்தும் சென்றார்
முட்கள் நிறைந்த காட்டின் வழி ஒரு பயணம்.
நான்கே நான்கு வீடுகள்
இதுதான்
நீங்கள் தேடி வந்த ஊர்.
குணங்குடி
நிராமயக்கண்ணி
மனோன்மணிக் கண்ணி
அகத்தீசர் சதகம்
நன்தீசர் சதகம்
ஆனந்தக் களிப்பு
முதலான எண்ணற்ற இலக்கியங்களைப் படைத்தவர் பிறந்த
மண்.
இவர் ஒரு சூபி
சூபி.
----
இஸ்லாம்
அரபு நாட்டில், நபிகள் நாயகம் தோன்றி, இஸ்லாம்
மார்க்கத்தைப் பூரணத்துவம் செய்து, 1450 ஆண்டுகள் கடந்து விட்டன.
மெல்ல, மெல்ல உலகு முழுவதும் இஸ்லாம் பரவத் தொடங்கியது.
இந்தியாவில் நுழைந்து, தமிழகத்தில் காலடி பதித்து,
இன்றைக்கு 1400 வருடங்கள் ஆகின்றன.
ஆம், இஸ்லாம் தோன்றிய முதல் ஐம்பது ஆண்டுகளிலிலேயே,
தமிழகத்தில் அதன் வேர் ஆழப் பதிந்துவிட்டது.
திருச்சியில், புனித சிலுவைக் கல்லூரி இருக்கும்,
சிங்காரத் தோப்பு பகுதியில், ஒரு தொடர் வண்டி நிலையம் உள்ளது.
இதற்கு எதிரில் ஒரு பள்ளி வாசல்.
இப்பள்ளி வாசலில் ஒரு கல்வெட்டு
இக்கல்வெட்டு, இப்பள்ளிவாசலின் அகவையைப் பகருகிறது.
பள்ளி வாசலின் வயதென்ன தெரியுமா?
1400 ஆண்டுகள்
வியப்பாக இருக்கிறது அல்லவா
ஆனால் உண்மை.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்கள்தான்
தமிழ் நாட்டில் அதிகம்.
மேலை நாட்டில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் குறைவு.
மேலை நாட்டில் இருந்து வந்த, இஸ்லாமியர் மூலம்,
நம் நாட்டினர், அவர்களுடைய கொள்கைகளைக் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டனர்.
அரபு மொழியைக் கற்றுக் கொண்டனர்.
முதலில் அரபு மொழியை வழிபாட்டு மொழியாகத்தான்
கற்றுக் கொண்டனர்.
பின்னர் அரபு, பேச்சு மொழியாயிற்று.
இலக்கியங்கள் தோன்றத் தொடங்கின.
தங்களுடைய எண்ணங்களை, கருத்துக்களை எல்லாம்,
எடுத்துரைப்பதற்காக, இலங்கியங்களைப் படைத்தனர்.
எந்த மொழியில் படைத்தனர் தெரியுமா?
அரபுத் தமிழில்
என்ன? அரபுத் தமிழா?
ஆம், அரபுத் தமிழில்தான்.
தமிழ் இலக்கியங்களை, அரபு எழுத்துக்களைப் பயன்படுத்தி
எழுதத் தொடங்கினர்.
இன்று நாம் அலைபேசியில், தமிழ் வார்த்தைகளை,
ஆங்கில எழுத்துக்களில் எழுதி, குறுஞ்செய்தி அனுப்புகிறோம் அல்லவா?, அதுபோலத்தான்.
தமிழ் வார்த்தைகள்
அரபு எழுத்துக்கள்
முதல் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் தோன்றியது
எப்பொழுது தெரியுமா?
கி.பி.11 ஆம் நூற்றாண்டில்
மதுரை, இராமநாதபுரம் சாலையில் எதிர்படும் சிற்றூர்
இராஜகம்பீரன்.
இவ்வூரில்தான் முதல் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்
தோன்றியது
வர்ஷத்த
மாலை
மாலை சிற்றிலக்கிய வகையினைச் சார்ந்த இலக்கியம்.
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில், இஸ்லாமிய
தமிழ்த் துறை என்ற ஒரு தனித் துறையே இருக்கிறது.
இத்துறையின் முதல் தலைவராய்ப் பொறுப்பேற்றவர்,
இலங்கையினைச் சார்ந்த ஒயிட்ஸ்.
இவர்தான், முதன்முதலில், பெருமுயற்சி எடுத்து,
இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களைத் தொகுத்தார், முறைப்படி அட்டவணைப்படுத்தினார்.
ஒயிட்ஸ் இஸ்லாமியத்தின் உ.வே.சா
இஸ்லாமியத்
தமிழ்த் தாத்தா
உ.வே.சாமிநாதய்யர் எப்படி நடையாய் நடந்து, அலையாய்
அலைந்து, தமிழ் இலக்கியங்களை, ஓலைச் சுவடிகளில் பதுங்கி இருந்த, தமிழ் இலக்கியங்களை,
அச்சேற்றி, வெளிக் கொணர்ந்து, காத்தாரோ, அதனையே, அப்பணியினையே, இஸ்லாமியத்திற்காக மேற்கொண்டவர்
ஒயிட்ஸ்
அலையாய் அலைந்தார்
நடையாய் நடந்தார்
இஸ்லாமியத் தமிழ் இலங்கியங்களை ஒவ்வொன்றாய்,,
தேடிக் கண்டுபிடித்துத் தொகுத்தார்.
மொத்தம் எவ்வளவு தெரியுமா?
சொன்னால் நம்ப மாட்டீர்கள்
2800 க்கும் மேற்பட்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களைத்
திரட்டி அட்டவணைப்படுத்தினார்.
இஸ்லாமியத் தமிழ்த் தாத்தா
ஆனால், இவருக்குப் பின் இதனைத் தொடரத்தான் ஆளில்லை.
தமிழ் இலக்கிய வடிவங்கள், அத்துணையிலும், இஸ்லாமியர்
தங்கள் பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர்.
இதுமட்டுமல்ல
இன்னும் ஒரு படி மேலே போய், தமிழிலக்கியங்களில்,
இல்லாத, வடிவங்களையம் உருவாக்கிச் சாதனைப் படைத்துள்ளனர்.
கிஷா
நாமா
முனா ஜாத்து
மஷாலா
படைப் போர்
தமிழ் சிற்றிலக்கியங்களில் காணக் கிடைக்காத,
இந்த ஐந்து வகை சிற்றிலக்கியங்கள், இஸ்லாமிய இலக்கியத்தில் இருக்கின்றன.
கிஷா என்றால், இஸ்லாம் மார்க்கத்தை உயர்த்திய
அறிஞர்களின் கதை.
நாமா என்றாலும் ஒருவகை கதை இலக்கியம்தான்
முனா ஜாத்து என்றால் ரகசிய உரையாடல். இறைவனுக்கும்,
இறைவனிடம் வேண்டுபவனுக்கும் இடையே, நடக்கும் உரையாடல், ரகசிய உரையாடல்.
மஷாலா என்றால், வினா விடை அமைப்பாகும். மஷ் என்றால்
வினா, அலா என்றால் விடை. இஸ்லாமிய மார்க்கம்
தொடர்பான வினா விடை சிற்றிலக்கியம்.
நூறு கேள்விகளும், அதற்கான பதில்களும் உள்ள இலக்கியம்
எனில், அதன் பெயர் 100 மஷாலா, ஆயிரம் எனில் 1000 மஷாலா.
படைப்போர், இஸ்லாமியர்களின் போர்ச் செய்திகளைப்
பகரும் இலக்கியமாகும்.
நண்பர்களே தமிழில் அச்சு வாகனம் ஏறிய முதல்
காப்பியம் எது தெரியுமா?
சிலப்பதிகாரமோ, சீவக சிந்தாமணியோ அல்ல
சீறாப் புராணம்
இஸ்லாமியக் காப்பியம்
உமறுப்புலவரின் சீறாப் புராணம்.
இஸ்லாமிய இலக்கியத்தின் இன்னொரு முகம் எது தெரியுமா?
சூபி இலக்கியங்கள்.
சூபி என்றால் என்ன?
சூபித்துவம் என்றால் என்ன?
தமிழ் இலக்கியங்களில் சித்தர் பாடல்களைப் படித்திருக்கிறோம்
அல்லவா.
பதினெண் சித்தர்கள்
திருமூலர், இடைக்காடர், தன்வந்திரி, கோரக்கர்
என்று படித்திருக்கிறோமல்லவா?
பதினெண் சித்தர்களைத் தாண்டியும் சித்தர்களின்
பட்டியல் வெகுவாய் நீளும்.
இதைப் போலவே, இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களைப்
படைத்த, இஸ்லாமியச் சித்தர்கள், சூபிக்கள் என அழைக்கப் பட்டனர்.
நானும் இல்லை
நீயும் இல்லை
இருப்பது இறைவன் மட்டுமே
நானும் இறைவுன்
நீயும் இறைவன்
உன்னில் இறைப் பண்புகளை உருவாக்கிக்
கொள்
சுருக்கமாய் இதுதான் சூபித்துவம்.
குணங்குடி மஸ்தான் சாகிபு
நற்றலை பீர் முகமது
திருநெல்வேலி காலங்கடி மச்சரேகை
சித்தர்
என
ஆண் சூபிக்களின் பட்டியல் நீளும்.
ஆண்கள்
மட்டுமல்ல
தென்காசி ரசூல் பீவி
கீழக்கரை ஆசிய உம்மா
என்று
ஆண் சூபிக்களுக்கு இணையாகப், பெண் சூபிக்களின் வரிசையும் நீண்டு கொண்டேதான் செல்கிறது.
என்சாண் உயரத்திற்கும் பனையின்
மீதேறி
பஞ்சாட்கரம் என்னும்பாரிய நல்லினைப்
பாய்ந்தெடுத்து
தஞ்சாவூராளும் மகராசன் பாதந்தனைப்
பணிந்தால்
எஞ்சா குணங்குடி வாய்க்குமே
சூபி குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல் வரிகள்
இவை.
தமிழ் பக்தி இலக்கியத்திற்கே சொந்தமான, பஞ்சாட்கரம்
என்னும் சொல்லை, தன் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் பயன்படுத்தியிருக்கிறார் பார்த்தீர்களா?
குணங்குடியாரின் பாடல்களைப் படிப்பீர்களேயானால்,
நமசிவாய, பஞ்சாட்சரம், பஞ்சாட்கரம், தட்சிணாமூர்த்தி, அம்பிகை, மனோன்மணி என்னும் சொற்கள்
விரவிக் கிடப்பதைக் காணலாம்.
பிற சமயக் காழ்ப்புணர்ச்சி எள்ளளவும் இல்லை,
இல்லை, இல்லவே இல்லை என்பதுதான் இஸ்லாமிய இலக்கியங்களின் தனித்தன்மை.
---
ஏடகம்
ஞாயிறு முற்றம் சொற்பொழிவு
நாள் 21.4.2019, மாலை 6,30 மணி
முனைவர் உ.அலிபாவா,
களத் தலைவர், இந்திய மொழிகள் பள்ளி
பேராசிரியர் மற்றும் தலைவர்,
தமிழியல் துறை,
பாரதிதாசன் பல்கலைக் கழகம்.
சுமார் ஒரு மணிநேரம், மடை திறந்த வெள்ளம்போல்,
இவரது பொழிவு அரங்கையே முழுவதுமாய் மூழ்கடித்து, மூச்சுத் திணறத்தான் வைத்துவிட்டது.
வயது குறைந்தவர்தான், ஆனாலும், தன் நேசிப்புத்
தன்மையாலும், வாசிப்புத் திறத்தாலும், வார்த்தை வளத்தாலும், அரங்கையே கட்டித்தான் போட்டுவிட்டார்.
இவர் தன் பேச்சில், ஏடகம் அமைப்பின் பெருமையை,
ஏடகம் நிறுவுநரின் உள்ளத்து உணர்வின் அருமையை, அனைவரும் உணரும் வகையில் குறிப்பிட்டார்.
திங்கள்தோறும், தஞ்சாவூர் ஜவுளி செட்டித் தெரு,
விநாயகர் கோயில், வளாகத்தில் நடைபெறும் பொழிவில், பௌத்தம் பற்றியும், இஸ்லாம் பற்றியும்
அறிஞர்களை அழைத்துப் பேச வைப்பது, மத நல்லிணக்கத்தின் சீரிய அடையாளமாகும் எனப் பாராட்டினார்.
தமிழ் என்பது ஒரு பிரிவினருக்கு மட்டும் சொந்தமானதல்ல.
அது எல்லோருக்கும் சொந்தமானது
சைவர்களாக இருந்தாலும் சரி
வைணவர்களாக
இருந்தாலும் சரி
பௌத்தர்களாக இருந்தாலும் சரி
சமணர்களாக இருந்தாலும் சரி
கிறித்துவர்களாக இருந்தாலும் சரி
இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி
தமிழ் எல்லோருக்கும் பொதுவானது
உங்கள் மொழி தமிழ்
எங்கள் மொழி தமிழ்
நம் மொழி தமிழ் என்று முழங்கினார்.
இவரது பொழிவு, இஸ்லாம் பற்றிய ஒரு புரிதலை, அரங்கில்
குழுமியிருந்தோரிடம் ஏற்படுத்தியது.
மேலும் இவ்விழாவின்போது, தஞ்சாவூர் நகரில், கடந்த
இரு நூறு ஆண்டுகளாக, வாசனை திரவியங்களைத் தயாரித்து வணிகம் செய்யும், குடும்பத்தைச்
சார்ந்தப் பெரியவர் திருமிகு கௌஸ் அவர்களுக்கு
சிறப்பு செய்யப்பெற்றது.
பாபநாசம் வட்டாரக் கல்வி அலுவலர்
திருமதி
க.செல்வகுமாரி அவர்கள்,
தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு வந்திருந்தோரை,
கரந்தை ஜினாலயம் அறங்காவலர்
திரு ச.அப்பாண்டைராஜ் அவர்கள்
வரவேற்றார்.
ஏடகம் அமைப்பின் பொறுப்பாளர்,
தஞ்சாவூர் உமா ஆர்ட்ஸ் உரிமையாளர்
திரு உ.செந்தில்குமார் அவர்கள்
நன்றி கூற, விழா இனிது நிறைவுற்றது.
விழா நிகழ்வுகளை, ஏடகப் பொருளாளர்
திருமதி கோ.ஜெயலட்சுமி அவர்கள்
சுவைபடத் தொகுத்து வழங்கினார்.
மாதந்தோனும்
மதம், இனம், மொழி கடந்தப்
பொழிவுகளை அரங்கேற்றி,
விநாயகர் ஆலய வளாகத்தை
சமய நல்லிணக்கத் தளமாகப்
போற்றி வரும்
ஏடகம் நிறுவுநர்
திரு
மணி.மாறன் அவர்களின்
உணர்வும், உழைப்பும்
போற்றுதலுக்கு உரியது.
போற்றுவோம், வாழ்த்துவோம்.