கழுவா மணிக்கலசக்
காஞ்சிசூழ் நாட்டில்
புழுவாய் பிறந்தாலும்
போதாம், வழுவாமல்
சந்திரராய் சூரியராய்
தானவராய் வானவராய்
இந்திரராய் வீற்றிருக்கலாம்.
குறிஞ்சியும், முல்லையும், கொஞ்சம் மருதமும்
சூழ்ந்த இந்நாட்டில் புழுவாய் பிறந்தாலும் பெருமையே.
புழுவாய் பிறந்தாலும் வாழ்க்கையை வழுவாமல் வாழ்ந்தால்,
சந்திரராய், சூரியராய், இந்திரராய் வாழலாம் உயரலாம் என்றுரைக்கிறது, பழநி அக்கசாலை மடத்துச் செப்பேடு.
இந்நாடு, கொங்கு நாடு.
கொங்கு மலைநாடு
குளிர்ந்த நதி பன்னிரெண்டும்
சங்கரனார் தெய்வத்
தலம் ஏழும் – பங்கயம்சேர்
வஞ்சிநகர் நாலும்
வலிமையால் ஆண்டருளும்
கஞ்சமலர்க் கையுடை
யோன் காண்
என கொங்கு நாட்டின் தொன்மையை, வலிமையை அனுப்பப்பட்டிச் செப்பேடு எடுத்து இயம்புகிறது.
நடுகல்.
நாட்டினை, நாட்டின் செல்வத்தை, நாட்டின் ஆநிரைகளைக்
காத்தவருக்கு, நடுகல் எடுத்துச் சிறப்பிப்பது தமிழர் பண்பாடு.
தென்னிந்தியாவிலேயே, பாடலோடு பொறிக்கப்பெற்ற
நடுகல் இருப்பது கொங்கு நாட்டில்தான்.
வாய்த்த புகழ் மங்கலத்து
வந்தெதிர்த்த மாற்றலரைச்
சாய்த்த மருள் வென்ற
சயம் பெருகச் சீர்த்த புகழ்
நிக்குவனம் கற்பொறிக்கப்பட்டான்
கரைய குலச்
சொக்கலேந்த லேவுலகிற்
காண்.
இக்கற் பொறி ரட்சிப்பான்
பாதம் என் தலைமேலே.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், பழமங்கலம்
என்னும் ஊரில் அமைந்திருக்கும் நடுகல், சொக்கலேந்தல் என்கிற கரையர் குல வேடனுக்காக
எழுப்பப் பெற்றதாகும்.
இந்நடுகல்லில் இருந்து பழமங்கலம் என்று, இன்று
அழைக்கப்படும் இவ்வூரின் அன்றையப் பெயர், புகழ் மங்கலம் என்பதனை அறிய முடிகிறது.
மேலும் நடுகல்லுக்கு கற்பொறி என்றொரு பெயரும் பயன்பாட்டில் இருந்ததையும் உணர முடிகிறது.
இக்கற்பொறி ரட்சிப்பான் பாதம் என் தலைமேலே என்னும்
இறுதி வரி, இந்நடுகல்லுக்கு, நம் முன்னோர் கொடுத்த முக்கியத்துவத்தையும் பறை சாற்றுகிறது.
மனத்தால் வகுக்கவும்
எட்டாத
கோயில் வகுக்க முன்னின்று
எனைத்தான் பணி கொண்ட
நாதன்
தென்காசியை என்றும்
மண்மேல்
நினைத்து ஆதரம் செய்து
தங்காவல் பூண்ட நிருபர்பதம்
தனைத் தாழ்ந்த இறைஞ்சித்
தலைமீது யானுந் தரித்தானே
தென்காசிக் கோயிலைக் கட்டத் தொடங்கியவர் அரிகேசரி
பராக்கிரமப் பாண்டியன்.
கட்டி முடித்தவர் குலசேகரப் பாண்டியன்.
கோயில் திருப்பணியை நிறைவு செய்த குலசேகரப் பாண்டியன்,
இனிவரும் காலம் யாவினும், கோயில் திருப்பணியைத் தொடர்ந்து செய்வோரின் பாதத்தினைத் தலையில்
தாங்குவேன் என கல்வெட்டில் பொறித்து வைத்தார்.
கோயிலைக் காப்பவரையும், நடுகல்லைக் காப்பவரையும்,
ஒரே தட்டில் வைத்துப் போற்றிய மண், கொங்கு மண்.
மேலும், கோயில் திருப்பணியில் கலந்து கொண்டு,
பணி செய்தவர்களுக்குக் கொடுத்த உணவினைக் கூடக், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம்,
பழைய கோட்டை என்னும் ஊருக்கு அடுத்துள்ள, ஆனூரம்மன் கோயில் மண்டபக் கல்வெட்டில், பாடலாய்
பொறித்து வைத்திருக்கிறார்கள்.
உயர்புகழ் ஆனூர் வாழ்
உத்தமி மண்டபம் கட்ட
உவந்து வந்து பயிர
குலப் பெரியோர்கள்
பணம் மட்டும்தான்
கொடுத்தார்
பணியாளர்க்கு வயிர்
நிறையச் சோறும்
வாய்க்கு வெற்றிலைப்
பாக்கும்
வாங்கித் தந்து,
தயிரோடு மூவேளை இட்ட
தர்மம் இது.
மூன்று வேளையும் தயிரோடு சோறும், வெற்றிலைப்
பாக்கும் தந்து போற்றி இருக்கிறார்கள் என்பதை, சிற்பி சோமசுந்தரத்தின் இப்பாடல் வெளிச்சம்
போட்டுக் காட்டுகிறது.
இதுமட்டுமல்ல, அன்றைய அரசர்கள், சொன்ன சொல்லைக்
காத்தார்கள். வாய்மை போற்றினார்கள் என்பதனையும் ஒரு கல்வெட்டு உரத்து முழங்குகிறது.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியை ஆண்ட அரசர்
கட்டி முதலி என்பவரைப் போற்றுகிறது இப்பாடல்.
செங்கதிர் பன்னிரெண்டு
ஈசர் பதினொன்று
திக்கும் பத்து
கங்கையும் ஒன்பது
வெற்பெட்டு
எழுகடல்
கார்த்திகை ஆறு
ஐங்கணை
நான்மறை
முச்சுடர்
சாதி அவையிரண்டு
மங்கை வரோதையன்
கட்டி முதலி தன்
வார்த்தை ஒன்றே.
இப்பாடல் அரசரின் மாறாத வார்த்தையினை மட்டுமல்ல,
அன்று சாதிகள் இரண்டே இரண்டுதான் இருந்தன என்பதனையும் ஒரு சேர எடுத்துரைக்கிறது இப்பாடல்.
எற்றான் மறக்கேன்
எழுமைக்கும் எம்பெருமானையே
உற்றாய்என் றுன்னையே
உள்குகின்றேன் உணர்ந்துள்ளத்தால்
பற்றா டரவா புக்கொளியூர்
அவி னாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி
யேபர மேட்டியே
புக்குளியூர் என்னும் ஊரில் வாழும் இறைவன் அவிநாசியைப்
போற்றுகிறது சுந்தரரின் இப்பாடல்.
ஆனால் காலப்போக்கில், புக்குளியூர் என்பது மறைந்து,
அவிநாசி என்னும் இறைவனின் பெயரே, ஊரின் பெயராய் மாறி இன்றும் வழக்கில் இருப்பது விந்தையேயாகும்.
ஆதி கருவூர் அணிவெஞ்சை
மாக்கறைசை
நீதி அவிநாசி நீள்நணா
– மேதினியின்
தஞ்சமாம் செங்குன்றூர்
தண் முருகன் பூண்டிமை
நெஞ்சமே நித்தம் நினை
என்ற
பாடல், கொங்கு நாட்டின் ஏழு தலங்களின் பெயரையும்
வரிசையிட்டுக் கூறுகிறது, இப்பாடலில் குறிப்பிடப்படும் நீள் நணா என்னும் தலம்தான், இன்று பவானி என்று உருமாறி அழைக்கப்படுகிறது.
கொங்கு நாடு.
நாடு என்றால், நாட்டின் செழிப்பிற்கு வணிகம்
முதன்மையல்லவா.
சோழ, சேர, பாண்டிய நாட்டிற்கும், கொங்கு நாட்டிற்கும்
இடையிலான வணிகத்தை, கொங்கு நாட்டு வணிகப் பெருவழிக் கல்வெட்டு உணர்த்துகிறது.
கோயத்தூரின், தெற்கு மாவட்டத்து ஊர், சுண்டைக்காய்
முத்தூர்.
இங்கு ஒரு பாறை உண்டு.
காற்றாடும் பாறை என்று பெயர்.
காற்றாடும் பாறைக்கு அருகில் ஒரு மலைப் பாதை.
முப்பதடி அகலம் உள்ள ஒரு மலைப் பாதை.
திருநிழுலு மன்னுயிருஞ்
சிறந்தமைப்ப
ஒரு நிழல் வெண்டிடங்கள்
போலோங்கி – ஒரு நிழல் போல்
வாழியர் கோச்சோழன்
வளங்காவிரி நாடன்
கோழியர் கோக்கண்டன்.
---
கொங்கு நாட்டில் பிறந்தவன் நான்.
காஞ்சியாறு என்ற சங்க காலப் பெயர் பெற்ற, நொய்யல்
ஆற்றின் கரையில் பிறந்தவன் நான்.
புழுவாய் பிறந்தாலே பெருமை எனப் போற்றப்படும்,
கொங்கு நாட்டில், மானிடப் பிறவியாய் பிறக்கும் பேரு பெற்றவன் நான், என இவர் கொங்கு
பற்றி, இணைய வழி நெகிழ்ந்து பேசப் பேச, கணினி முன் மகிழ்ந்து அமர்ந்திருந்தேன்.
ஏடகம்
ஞாயிறு முற்றம் சொற்பொழிவு
கடந்த 14.6.2020 ஞாயிறன்று மாலை,
கொங்கு நாட்டு கல்வெட்டுப் பாடல்கள்
என்னும் தலைப்பில்,
திருப்பூர்,
வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வ மையச்
செயலாளர்
புலவர் வே.சுந்தரகணேசன் அவர்களின்,
அற்புதப் பொழிவு
இணைய வழி தவழ்ந்து வந்து,
மாலை நேரத்தைப் பயனுள்ளதாக்கியது.
கொரோனா
உலகையே முடக்கினாலும்,
ஞாயிறு முற்றப் பொழிவு
கிளர்ந்தெழுந்து
அகிலம் சுற்றவும்
தமிழின் பெருமை போற்றவும்,
அயராது உழைக்கும்
ஏடகம் நிறுவுநர்
முனைவர் மணி.மாறன்
அவர்களைப்
போற்றுவோம்
வாழ்த்துவோம்.