13 ஜூன் 2021

பரமேசுவர மங்கலம்


     1400 ஆண்டுகளுக்கும் முன்.

     அம்மன்னனின் உள்ளத்தே ஓர் எண்ணம் எழுந்தது.

     பெருகி வரும் மக்கள் தொகையினைக் கருத்தில் கொண்டு, புத்தம் புதிதாய் ஒரு நகரை உருவாக்கிட வேண்டும் என்ற சிந்தனை மலர்ந்தது.

    

உத்தரகாணிகா மகா சேசன் தத்தன் என்பவரை அழைத்துப் பொறுப்பை ஒப்படைத்தார்.

     தத்தன் பணியில் இறங்கினார்.

     விவசாய உற்பத்திக்கு ஏற்ற மண் வளம், நிரந்தர நீர் மேலாண்மைத் திட்டம், தண்ணீர் பகிர்மான அலகுகள், மழை நீர் சேகரிப்பு, கட்டுமானத்திற்கு எற்ற திடமான, தரமான மண் வளப் பகுதி, கோயில், மண்டபம், பொது இடுகாடு இவற்றோடு, வணிகப் பெருமக்கள், கருவிகள் தயாரிப்போர், அறிவுசார் பெருமக்கள் ஆகியோருக்கான வசதிகள் முதலியவற்றைக் கருத்தில் கொண்டு, புதிய நகரத்திற்கான இடத்தினைத் தேர்வு செய்தார்.

     6300 குழி நிலப்பரப்பு தேர்வு செய்யப்பெற்றது.

     அதாவது 98.44 ஏக்கர்.

     முதன் முதலாக ஒரு பெரும் ஏரி வெட்டப் பட்டது.

     மழைக் காலங்களில், இந்த ஏரி, தானே நிரம்பிவிடும்.

     மற்ற காலங்களிலும் தண்ணீர் வேண்டுமல்லவா?

     ஆண்டு முழுவதும் நீர் நிரம்பியோடும், பாலாற்றில் இருந்து, இந்த ஏரிக்கு ஒரு கால்வாய் வெட்டப் பட்டது.

     பெரும்பிடுகு கால்வாய்.

     ஏரியும், கால்வாயும் வெட்டும் பணி நிறைவுற்றவுடன், முதல் கட்டுமானமாக ஒரு கோயில் எழுப்பப் பெற்றது.

     அடுத்து ஊரின் நடுவில் ஒரு பெரு மண்டபம்.

     இதுவே இந்நகரின் ஊடக மையம்.

     பாரதம் வாசிக்க, நீதிக் கதைகள் சொல்ல, அரசரின் ஆணைகளை முழங்க, சட்ட திட்டங்களை தெரிவிக்க, விழாக்கள் நடத்த என ஒரு மண்டபம்.

     வணிகர்கள், பொற்கொல்லர்கள், அறிவுசார் பெருமக்கள், கருவி தயாரிப்போர், மருத்துவர்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும், நகரின் முக்கியப் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டது.

     சூளை மேட்டுப் பட்டி என்னும் ஒரு பகுதி உருவாக்கப்பட்டது.

     கட்டுமானப் பணிகளுக்கு உரிய செங்கல் கற்களை உற்பத்தி செய்ய, தரமான மண் வளம் உடைய பகுதி, சூளை மேட்டுப் பகுதி என அறிவிக்கப் பட்டது.

     மக்கள் தங்கள் வீடுகளுக்குத் தேவையான செங்கல் கற்களை, கட்டணம் ஏதுமின்றி, இவ்விடத்தில் தயாரித்துக் கொள்ள அனுமதி வழங்கப் பட்டது.

     பாலாற்றில் இருந்து, பெரும் பிடுகு வாய்க்கால் வழி பயணித்து ஏரியை வந்தடையும் தண்ணீரைப் பகிர்ந்து, பயன்படுத்திக்  கொள்வதற்கான உரிமை, விவசாயிகளுக்கே தரப்பட்டது.

     இதனால், தண்ணீர் தாவாக்கள் தவிர்க்கப் பட்டன.

     ஆறாயிரம் ஆண்டுகளுக்கும் முன், இந்தியாவின் வடமேற்குப் பெருவெளியில், திட்டமிட்டு உருவாக்கப் பெற்ற, பொலிவுறு நகரங்களான, ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ போன்றே இவ்வூர் வடிவமைக்கப் பட்டது.

     காற்றோட்ட வசதி.

     குளியல் அறைகள்.

     நீர் மேலாண்மை.

     கழிவூ நீர் மேலாண்மை.

     ஒவ்வோர் இல்லத்தில் இருந்தும், வெளிவரும்  கழிவு நீர், திறந்த வெளி வடிகால் வழி  வெளிவந்து, மூடிய கழிவு நீர் வாய்க்கால்களில் நுழைந்து, ஊருக்கும் வெகு தொலைவு வரை ஓடி, ஓரிடத்தில் வெளிவந்து, அவ்விடத்தில் பெரும் காடுகளை வளர்க்கும் வகையிலான நீர் மேலாண்மை.

     ஊரின் எவ்விடத்தும் நீர் சற்றும் தேங்கி நிற்காத வகையிலான நீர் மேலாண்மை.

     நீர் நிற்காததால், கொசுக்கள் வாழ, வசதியற்ற சூழல்.

     மொத்தத்தில் கொசுக்கள் அற்ற நகரம்.

     சுகாதாரமான நகரம்.

     இவை யாவற்றிற்கும் அடிப்படை, மக்களின் முழு ஒத்துழைப்பு.

     வியப்பாக இருக்கிறதல்லவா?

     இவ்வூர், இந்நகர் எங்கிருக்கிறது தெரியுமா?

     இன்றும் இருக்கிறது.

     தமிழ் நாட்டில், அரக்கோணத்திற்கு அருகில்.

     இந்நகரினை உருவாக்கிட உத்தரவிட்ட மன்னர், கி.பி.550 முதல் கி.பி.560 வரை, பத்தாண்டுகள், காஞ்சியை ஆண்டு மன்னர்.

இவர்,

மகேந்திரப் பல்லவனின் கொள்ளுப் பெயரன்.

மாமல்லன் நரசிம்மப் பல்லவனின் பெயரன்.

இரண்டாம் மகேந்திர வர்மனின் மகன்.

முதலாம் பரமேசுவரன்.

இவரால் உருவாக்கப் பெற்ற பொலிவுறு நகர்

பரமேசுவர மங்கலம்.

இவ்வூரின் நடுப் பகுதியில் இருக்கும் ஏரி,

பரமேசுவர மங்கலத் தடாகம்.

     பரமேசுவர மங்கலத்தின் உருவாக்கம், அமைப்பு போன்ற செய்திகளைத் தாங்கியவாறு, இன்றும் உயிர்ப்போடு நிலைத்து, நிமிர்ந்து நிற்கிறது ஒரு செப்பேட்டுத் தொகுதி.

     கூரம் செப்பேடுகள்.

     7 ஏடுகள்.

     14 பக்கங்கள்.

     10 பக்கங்களில் சமசுகிருதம்.

     4 பக்கங்களில் தமிழ்.

     பரமேசுவர மங்கலம்.

     1470 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பெற்ற ஒரு பொலிவுறு நகர்.

     Smar City.

---

     இந்தியாவின் முதல் பொலிவுறு நகரங்கள் மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா.

     சங்ககாலத் தமிழர்களின் பொலிவுறு நகர் மதுரை.

     தாமரை மலரின் வடிவத்தைக் கொண்ட மதுரை நகரின் தெருக்கள், ஆறுகளைப் போல், நீண்டும், அகன்றும் இருந்ததை, ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெரு, என முழங்குகிறது பரிபாடல்.

     ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட தஞ்சையும், சிதம்பரமும் இன்றும் நிலைத்து நிற்கின்றன.

     இதே போல், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, வீர நாராயணப் பேரேரியைச் சுற்றிலும் உள்ள 64 ஊர்கள், இன்றும் இருக்கத்தான் செய்கின்றன.

---

கடந்த 13.6.2021 ஞாயிற்றுக் கிழமையன்று,

ஏடகம் அமைப்பின்,

ஞாயிறு முற்றம்

சார்பில்,

தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி

வரலாற்றுத் துறை, உதவிப் பேராசிரியர்

முனைவர் ஜெ.ஆர். சிவராம கிருஷ்ணா அவர்களின்,

நாடு, கர் கண்ட பழந்தமிழர்

என்னும்

தலைப்பிலானப் பொழிவில்,

பரமேசுவர மங்கலத்தை

மனக் கண்ணில், கண்டு மகிழ்ந்தேன், நெகிழ்ந்தேன்.

 

திங்கள்தோறும்

தெவிட்டாதப்

பொழிவுகளைத் தந்து

முன்னைத் தமிழர்களின்

பெருமைகளைப்

பாங்காய்

பார் முழுவதும் பரப்பும்

ஏடக நிறுவுநர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களைப்

போற்றுவோம், வாழ்த்துவோம்.

 ---

நண்பர்களே, வணக்கம்.

     அமேசான் தளத்தில், எனது, மேலும் இரண்டு நூல்கள் இணைந்துள்ளன. இவ்விரு நூல்களையும் 14.6.2021 திங்கள் கிழமை பிற்பகல் முதல் 16.6.2021 பிற்பகல் வரை, கட்டணம் ஏதுமின்றி, தரவிறக்கம் செய்து வாசித்து மகிழலாம்.

     வாசித்துத்தான் பாருங்களேன்.




வலைச் சித்தருக்கு ஜெ

 

என்றென்றும் பேரன்புடன்,

கரந்தை ஜெயக்குமார்.

 

 

28 கருத்துகள்:

  1. சோழ ராஜ்ஜியங்ளிலும், பாண்டிய, பல்லவ ராஜ்ஜியங்களிலும் அவர்கள் கைக்கொண்டிருந்த நீர்மேலாண்மை திட்டங்களை நாம் கெடுத்தோமே தவிர, அதை விட பிரகாசிக்கும் அளவு ஒன்றும் இன்றும் செய்யவில்லை.  

    பதிலளிநீக்கு
  2. அரிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி.
    மின்நூல்களுக்கு வாழ்த்துகள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  3. மிகவும் அருமையான கருத்துரை, சொற்பொழிவின் சிறப்பினை கண்ணாடி போல் காட்டி நிற்கிறது உங்கள் பதிவு.மகிழ்ச்சி நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நல்ல பயனுள்ள தகவல். பதிவு செய்யும் செயல் அருமை. வாழ்க நும் பணி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான தகவல்கள்... நன்றி ஐயா...

    ஏடகம் நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    மின்னூலில் அசத்துகிறீர்கள் ஐயா... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வழி காட்டலால்தான் மின் நூல் பக்கமே வந்தேன்
      நன்றி ஐயா

      நீக்கு
  6. //பரமேசுவர மங்கலத்தின் உருவாக்கம், அமைப்பு போன்ற செய்திகளைத் தாங்கியவாறு, இன்றும் உயிர்ப்போடு நிலைத்து, நிமிர்ந்து நிற்கிறது ஒரு செப்பேட்டுத் தொகுதி.//
    அருமையான தகவல் அடங்கிய சிறப்பான பதிவு.
    நிறைய வியப்பான செய்திகள் .
    ஏடகம் வாயிலாக பல செய்திகளை நீங்கள் எங்களுக்கு தருவதற்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. சொற்பொழிவைவிடஉங்கள் எழுத்து நன்றாக இருக்கும்போல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வார்த்தைகள் மகிழ்வினைத் தருகின்றன
      நன்றி ஐயா

      நீக்கு
  8. உண்மை தான். கேட்ட சொற்பொழிவை விட உங்கள் எழுத்து நடை படிக்க படிக்க ஆர்வமாய் இருக்கிறது நண்பரே

    பதிலளிநீக்கு
  9. அரிய தகவல்கள். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  10. மிக அருமையான தகவல். எப்படி அழகாக நீர் மேலாண்மை செய்திருக்கிறார்கள்!

    //விவசாய உற்பத்திக்கு ஏற்ற மண் வளம், நிரந்தர நீர் மேலாண்மைத் திட்டம், தண்ணீர் பகிர்மான அலகுகள், மழை நீர் சேகரிப்பு, கட்டுமானத்திற்கு எற்ற திடமான, தரமான மண் வளப் பகுதி, கோயில், மண்டபம், பொது இடுகாடு இவற்றோடு, வணிகப் பெருமக்கள், கருவிகள் தயாரிப்போர், அறிவுசார் பெருமக்கள் ஆகியோருக்கான வசதிகள் முதலியவற்றைக் கருத்தில் கொண்டு, புதிய நகரத்திற்கான இடத்தினைத் தேர்வு செய்தார்.//

    இதுதான் இதில் மிக மிக முக்கியம். ஆனால் இப்போது முதலில் எல்லாம் நிர்மாணித்துவிட்டு அதற்கு அப்புறம் தான் தண்ணீர் எங்கே , வடிகால் எங்கே வைப்பது என்று யோசித்து செய்யாமலேயே போவதால்தான் வெள்ளம், வறட்சி என்று நாம் துன்பப்பட்டுவருகிறோ.

    இன்றைய வளர்ச்சி அத்தனையையும் சீரழித்திருக்கிறது எனலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. சிறப்பான செயல்களைச் செய்த அந்தக் கால அரசன்/அரசு! தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    மின்னூல்கள் - வாழ்த்துகள் - அடுத்த மின்னூல் அமேசானில் 50-ஆவது! அதற்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. வழக்கம்போல் கட்டுரை மிக அருமை. மின்னூல் ஆக்கமும் நன்று.

    பதிலளிநீக்கு
  13. மிக்க நன்றி ஐயா. எவ்வளவு அரும்பாடுபட்டு மனித வலுவுடன் இவ்வாறான நகரங்களைப் கட்டியிருக்கின்றார்கள். அவை நிச்சயமாக போற்றிப் பாதுகாக்க வேண்டியவை.

    பதிலளிநீக்கு
  14. எளிமையான இனிமையான தமிழில் வரலாற்றுத் தகவல்கள் பல. வாழ்த்துகள்.

    உடுவை.எஸ்.தில்லைநடராசா
    இலங்கை-கொழும்பு

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு