07 ஜூலை 2021

ஆறாவது விரல்

 


     வாணியம்பாடி முத்தமிழ் மன்ற விழா.

     முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு விருதும், பரிசாய் ஒரு தொகையும் வழங்கப் பெற்றது.

     விருதைப் பெற்றுக் கொண்டவர், தொகையை முத்தமிழ் மன்றத்திற்கே மீண்டும் வழங்கினார்.

     இதை காணிக்கை என்று சொல்ல மாட்டேன்.

     ஏனென்றால், எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை.

     வாணியம்பாடி முத்தமிழ் மன்றம் இப்பகுதியில், இக்கவிஞர் அவர்களால், ஒரு அரசாட்சியே நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

     எனவே, அதற்கு நான் கப்பம் கட்டிவிட்டுப் போகிறேன் என்றார்.

    

கலைஞரையே கப்பம் கட்ட வைத்தக் கவிஞர் இவர்.

கட்டுரை என்பது விளக்கக் கூடியது

கவிதை என்பது உணர்த்தக் கூடியது

நீ மழையைப் பற்றி எழுதாதே

மழையாக மாறிவிடு

     கவிஞர் கவிதைக்குக் கொடுத்த விளக்கம் இது.

     இவர் கவிதையாகவே மாறிப் போனவர்.

ரேகை பார்ப்பவனிடம்

கையை நீட்டிக் கொண்டிருக்கிறாரயே

காசு கொடுத்து – நீ ஏன்

பிச்சைக் காரனைப் போல் நிற்கிறாய்.

 

ரேகையை நம்புவதைவிட

கையை நம்பு

உழைக்கத் தொடங்கினால்-உனக்கு

வாழ்க்கை வசப்படும்.

திரும்பும் திசையெல்லாம்

கிழக்காக மாறி – உன் வாழ்க்கையில்

ஒளிச் சேர்க்கை நிகழும்.

     இவர் தன் விரல்களில், ஒரு விரலாகப் பேணாவை நினைத்தவர்.

     பேணா இவரது ஆறாவது விரல்.

     ஆறாவது விரலாக இருக்கிற, பேணாவை ஏந்தக் கூடிய எழுத்தாளன், ஒருபோதும் பணத்திற்கு அடிமைப் பட்டுவிடக் கூடாது.

     அவனுடைய பார்வையும், பயணமும், ஏழை எளியவர்களை முன்னிறுத்தியே அமைய வேண்டும் என்பதை இலக்காய் வகுத்துச் செயல் பட்டவர்.

எழுதுகோல்

ஏழை வெள்ளைத் தாளைப்

பார்த்தால் – தலை குணிகிற பேணா

பணமிருக்கிற

சட்டைப் பையை நோக்கிப்

போகிறபோது

தலை நிமிர்த்திக் கொள்கிறது.

     இவர் படிக்கும் காலத்திலேயே கவிதையில் கதாநாயகராய் வலம் வந்தவர்.

     உருது, பாரசிகம், ஆங்கிலம் என்று உலகக் கவிதைகளைப் படிக்கும் காலத்திலேயே சுவைத்து மகிழ்ந்தவர்.

     மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்.

     இவர், தியாகராசர் கல்லூரித் தமிழ்ப் பண்ணையில் விளைந்த  பயிர்.

அது வித்தை நிலம்

விளை நெல் எல்லாம்

விலை நெல்லாய்ப் போகாமல்

உலை நெல்லாய் ஆகாமல்

விதை நெல்லாகவே ஆக்கக் கூடிய

ஒரு விளைச்சல் நிலம்

மதுரை தியாகராசர் கல்லூரி

     இவர் காலத்தில், இக்கல்லூரியில் ஒரு புதுமுறை நடைமுறைக்கு வந்தது.

     புதிய மாணவர்களை, முதிய மாணவர்கள், ஆளுக்கொரு நூல் கொடுத்து, கவி நூல் கொடுத்து வரவேற்கும் முறை அமலுக்கு வந்தது.

     மாலை நேரங்களில், தன் நண்பர்களை, தண்ணீர் காணாத வைகை ஆற்றின், வெண் மணற் பரப்பில், தங்கள் பிள்ளைக் கவிதைகள், தங்கள் பிஞ்சு விரல்கால் எழுதி மகிழ வைத்தவர்.

எனக்கு மலர்களைப் பிடிக்காது

முள்ளைத்தான் பிடிக்கும் – அதுதான்

தொட்டவுடன்

இரத்த பாசத்தைக் காட்டுகிறது.

     மரபுக் கவிதையும், புதுக் கவிதையும், இவரது ஆறாவது விரல் வழித் தாளிறங்க, எப்போதும் தயாராய் கத்திருக்கும்.

     மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்தவர், வாணியம்படி இசுலாமியக் கல்லூரியில், பேராசிரியராய் நுழைந்துத் துறைத் தலைவராய் உயர்ந்தார்.

     கல்லூரியில் இலக்கிய அமைப்பு ஒன்றைத் தொடங்கினார்.

     கல்லூரியில் மட்டுமல்ல, ஊர் முழுவதும் தமிழ் அமைப்புகளை உருவாக்கி, அந்தந்தப் பகுதிகளில், தமிழ்ப் பணிச் சிறக்க ஊற்றுக் கண்ணாய் இருந்தார்.

     இவர் வகுப்பில் மாணவர்கள் மட்டுமல்ல, பிற துறைப் பேராசிரியர்களும் கடைசி வரிசையில் அமர்ந்து, இவரது செழுந் தமிழில் நெகிழ்ந்து போனார்கள்.

     நவராத்திரி நமக்குத் தெரியும்.

     கவி ராத்திரி?

     திங்கள் தோறும், முழு நிலவு நாளில், விடிய  விடிய, விருதுக் கவிஞர்களை அழைத்து வந்து, தன் மாணவக் கவிஞர்களை கவியமுது படைக்கச் செய்து விருந்து படைத்தவர் இவர்.

     இவரால் அடையாளம் காணப்பெற்று, பயிற்சி அளிக்கப் பெற்று, கூர்மை படுத்தப் பெற்ற, எண்ணற்ற பழைய மாணவர்கள், இன்று, தாங்கள் இருக்கின்ற இடங்களில் எல்லாம் மின்னிக் கொண்டிருக்கிறார்கள்.

     கவியரங்கங்களை மக்கள் இயக்கமாக, முத்தமிழ் அறிஞர் மாற்றிய பொழுது, கவியரங்கங்களை மிகச் சிறப்பாக, மக்கள் கவனம் ஈர்க்கக் கூடிய வகையில், மிகச் சுவையான ஒன்றாக ரசவாதம் செய்து மாற்றியவர்.

     அடுத்தவர் கருத்துக்களைத் தன் கருத்துபோல், அசல் தன்மையின்றிப் பேசுபவர்களை, எழுதுபவர்களை, வாடகை வாயர்கள் என்று எள்ளி நகையாடியவர்.

     இவர் வழி, என்றுமே தனி வழி.

செக்குமாடு போல

சுத்திச் செல்வது – என்

சிந்தனை முறைக்குத் தீது.

 

ரத்தம் கொட்டக் கொட்ட

கல்லும் முள்ளும் தைத்தாலும்

என் பாதம் தேடும் பாதைகளோடுதான்

நான் பயணப் படுகிறேன்.

 

அடுத்தவர் போட்ட பாதைகளில்

 நான் பயணம் செல்வதில்லை.

என் பயணம்

என் பாதையில்தான் நிகழும்.

     இவர் பாதையும் பயணமும் மட்டுமல்ல, இவர் பார்வையும் வேறுதான்.

எனக்கு நிலவைப் பிடிக்காது

மின் மினியைத்தான் பிடிக்கும்.

 

எனக்கு வெண் நிலவைப் பிடிக்காது

காரணம் – அது அதன்

அசல் ஒளியில்லை.

சூரியன் போட்ட

ஒளிப் பிச்சையை ஏற்று

இரவல் வெளிச்சத்தில்

ஒளிர்கிறது.

 

பிறையாகத்தான்

தோன்றுகிறது நிலவு.

பிறை என்ன தெரியுமா?

அது ஒரு வெளிச்சத் திருவோடு.

 

எனக்கு நிலவைப் பிடிக்காது

மின்மினியைத்தான் பிடிக்கும்.

ஏன் தெரியுமா?

 

மின்மினிக்கு ஒளி

ஒரு சிறு துளி.

 

அது தன் சுய ஒளியில்

தன் ஒளியில்

வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது.

     திரையரங்கங்கள் பற்றி இவர் எழுதிய கவிதை, இன்றைய இளைஞர்கள் அவசியம் படித்து, சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.

மக்கள்

இருட்டிலே

அமர்ந்திருக்கிறார்கள்.

 

நட்சத்திரங்கள்

திரையில்

மின்னிக் கொண்டிருக்கிறார்கள்.

 

மக்கள்

இருட்டிலே இருக்கிற வரைதான் – இந்த

நட்சத்திரங்கள்

மின்னுவார்கள்.

     தமிழின் விரிந்த பரப்பில், இவர் தொட்டு எழுதாதத் துறையே இல்லை.

     அதுமட்டுமல்ல, விரிந்த வாசிப்புப் பழக்கம் உடையவர்.

     இரவில், வாணியம்பாடியில், இறுதியாய் அனைக்கப் படக்கூடிய விளக்கு  இவரின் வீட்டு விளக்காகத்தான் இருக்கும்.

     மனதில் அச்சம் என்பதை அறியாதவர்.

     1976 ஆம் ஆண்டில், நெருக்கடி நிலை காலத்தில், சேலம், கம்பன் கழகத்தில், ஒரு கவியரங்கக் கூட்டம்.

     முன் வரிசையில், காவல் துறையினர், ஒலிப் பதிவுக் கருவியோடு தயாராய் அமர்ந்திருந்தனர்.

     இவரது கவியரங்கத் தலைப்பு அகலிகை.

     அகலிகையின் வாழ்வு பாழ் பட்டுப் போனதற்குக் காரணம் இந்திரன் என்பதால்,

இந்திரா

உன்னால்தானே – இந்த

நெருக்கடி நிலை

என்று தன் கவிதையைத் தொடங்கினார்.

     அரங்கம் அதிர்ந்து போனது.

நீ கல்லாய் போ – என்று

சொன்னான் அல்லவா கணவன்.

அது உனக்குச் சாபமல்ல

வரம்.

 

அந்நியன் தொட்டான்

சீரழித்தான் – என்று

நொந்து நொந்து

அல்லல் பட்டு

கண்ணீர் விட்டு – ஒவ்வொரு

நொடியும் எரிந்து – நீ

சாம்பலாகியிருப்பாய்.

 

நல்ல வேளை – உன் கணவன்

நீ கல்லாய் போ எனச் சாபமிட்டான்.

     கவிஞரின் பார்வை, நாம் நினத்தும் பார்க்காதப் பார்வையல்லவா.

     பரதன் வைத்த பாத அணி

     இந்தத் தலைப்பில் ஒரு கவியரங்கம்.

இந்திரன் வந்து தழுவியது

அவளைக் கெடுத்துவிட்டுக்

கோழையாய் நழுவியது – அதை

ராமனின்

காலடித் துகள்தானே

கழுவியது.

 

இங்கே

சிம்மாசனம் இராமனுடையது – அது

கொஞ்ச காலம் பரதனுக்கு என்று

சொன்ன காரணத்தால்

சிம்மாசனத்தின் கற்பிலே

அழுக்கு வந்து விட்டது – அதைக்

கழுவுவதற்காக – ராமனுடைய

காலணி

சிம்மாசனத்தில் வைக்கப்பட்டது.

     பிறப்பால் மனிதர்களுக்குள் ஏற்படும் ஏற்றத்  தாழ்வுகளை எதிர்த்துக் குரல் கொடுக்க, எந்தத் தளத்திலும், இவர் கவிதை, தயங்கியதே இல்லை.

பொங்கல் பானை

ஏற்றி விட்டீர்களா?

அடுப்பை

மூட்டி விட்டீர்களா?

அந்தப் பொங்கல் பானையில் – நீங்கள்

தண்ணீர் போடுங்கள்

பாலைப் போடுங்கள்

ஏலம் போடுங்கள்

லவங்கம் போடுங்கள்

சர்க்கரைப் போடுங்கள்

முந்திரி போடுங்கள்

ஏலக்காய் போடுங்கள்

திராட்சை போடுங்கள்

தயவு செய்து

ஜாதிக் காய் போட்டு விடாதீர்கள்.

பொங்கல் கெட்டுவிடும்.

     மக்கள் வறுமையில் வாடுவது கண்டு, இவரது ஆறாவது விரலாக இருக்கக் கூடிய எழுதுகோல் எழுதியது.

வெறும் புள்ளிகள்

இணைந்ததுதான் கோடு.

பெரும் புள்ளிகளால் ஆனதுதான்

வறுமைக் கோடு.

     கவிதையைப் பற்றிப் பேசுவதையும், கவிதையைப் பற்றி எழுதுவதையும், கவிதையைப் பற்றிச் சிந்திப்பதையுமே, தன் வாழ்வு முழுக்கச் செய்தவர்.

     தன் இறுதிக் காலத்தில், இறுதி நேரத்தில், மருத்துவமனையில் இருந்தபோது கூட எழுதினார்.

     தன் இறுதி மூச்சு உள்ளவரை எழுதினார்.

தொடர் வண்டி புறப்பட்டு விட்டது.

பயணம் செய்தேன்.

நான் இறங்க வேண்டிய

இடம் வந்து விட்டது – நான்

இறங்கிப் போகிறேன் – ஆனால்

பயணம் தொடர்கிறது.

 

வீட்டிலே இருக்கிற

எல்லா விளக்குகளையும்

அனைத்து விட்டேன் – இப்பொழுது

என் நிழல் கூட

என்னோடு இல்லை.

     இப்படியும் ஒரு கவிஞரா என்று வியப்பாக இருக்கிது அல்லவா?

     கடவுள் நம்பிக்கை இல்லாத முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் கூட, இவர்தம் இறுதி நாளில், இப்படித்தான் எழுதினார்.

வெற்றிகள் பல பெற்று

நான் வருகையில் – இறைவன்

என் முன்னர் தோன்றி

வெகுமானம் – உனக்கெது வேண்டும்

எனக் கேட்டால்

அப்துல் ரகுமானைக்

கேட்பேன் என்றார்.

 

ஆம், இவர்தான்


கவிக்கோ அப்துல் ரகுமான்.

-----

 

நன்றி

மக்கள் சிந்தனைப் பேரவை.

 

 (மக்கள் சிந்தனைப் பேரவையின், சிந்தனை அரங்கம் சொற்பொழிவில், கடந்த ஆண்டு, 5.8.2020 புதன் கிழமையன்று, பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் அவர்கள் ஆறாவது விரல் என்னும் தலைப்பில், இணைய வழி நிகழ்த்திய உரையின், சுருங்கிய எழுத்து வடிவம்)