நீங்கள் துணிச்சல் மிகுந்த கலைஞரா?
உங்கள் படைப்புகளைப் பத்திரிக்கைகள், புத்தக
நிலையங்கள், பண்டித, புலவ, வித்வசிரோன்மணிகள் மறுக்கின்றனரா?
இதோ குயுக்தம் வெளியிடக் காத்திருக்கிறது.
எதை வேண்டுமானாலும் எழுதுங்கள்.
யாருடைய எழுத்தும், எந்தப் புரட்சியையும், எந்தக் காலத்திலும் செய்ததில்லை.
செய்வோம், நாம்.
மறுப்பவர்களை, மறுப்பதே அடுத்த கட்டத்திற்கு
நம்மை கொண்டு செல்லும்.
மறுப்போம்.
எதிர்ப்போம்.
எந்தத் தலையாட்டி மாடுகளுக்கும், நாம் துணை அல்ல.
குயுக்தமாய் தவறு செய்வதில்லை.
ஜெயிப்போம்.
1960 ஆம் ஆண்டு வாக்கில், குயுக்தம் என்னும்
பெயரில், ஒரு இதழினைத் தொடங்க முடிவு செய்தபோது, அந்த இதழுக்கான அறிவிப்பை, இவர், இவ்வாறுதான்
வெளியிட்டார்.
இதழ் அச்சேறியபோது, அவ்விதழின் முகப்பு அட்டையிலேயே,
தெள்ளத் தெளிவாய் குறிப்பிட்டார்.
மறுக்கப்பட்ட
படைப்புகளுக்கான, தமிழின் ஒரே படைப்புத் தளம் இது.
தம்மைப் பெரிதும் கவர்ந்த, இலங்கை எழுத்தாளர்களுக்கும்,
தமிழ் நாட்டு எழுத்தாளர்களுக்கும் இடையே ஒரு பாலமாய் செயல்பட எண்ணி, அதற்காகவே ஒரு
இதழினைத் தொடங்கினார்.
பாலம்.
இதழின் பெயரே பாலம்தான்.
சொன்னால் நம்பமாட்டீர்கள், எழுத்து ஆளுமைகளின்
கடிதங்களை மட்டுமே சுமந்துவர, ஒரு இதழினைத் தொடங்கினார்.
சாளரம்.
கடித இலக்கிய ஏடு.
இது ஒரு சிறகு முளைத்த இலக்கிய இதழ்.
எழுதுங்கள்.
அனுப்புங்கள், கடிதங்களை
என, தன் குயுக்தம் இதழில், இவர், இப்படித்தான்
விளம்பரம் செய்தார்.
இவைமட்டுமல்ல, வைகை, தஞ்சை முரசு, என
பல பத்திரிக்கைகளை நடத்தினார்.
சொந்தப் பணத்தைச் செலவிட்டு நடத்தினார்.
அனைத்து இதழ்களுமே சில வெளியீடுகளோடு காணாமல்
போய்விட்டன.
அசரவில்லை.
தஞ்சையில் ஜி.எம்.எல்.ஸ்கிரீன் எனும்
பெயரில் அச்சகத்தைத் தொடங்கினார்.
கி.ரா., அம்பை, க.நா.சு., கே.டேனியல், சி.எம்.முத்து என பல படைப்பாளிகளின் படைப்புகளைக் கேட்டு
வாங்கி நூலாக்கி வெளியிட்டார்.
இவரது பதிப்புப் பணி பற்றி, இவர்தம் மனைவி கூறுவதைக் கேளுங்கள்.
எங்கிட்ட கொஞ்சம் பொய் சொல்லுவார்.
ஒரு ருபாய் கூட அவர் கையில் நிக்காது.
யாராவது பணம் கேட்டால் அல்லது புத்தகம் போடனும்னா,
முக்கியமான செலவுன்னு பொய் சொல்லிப் பணம் வாங்குவார்.
சி.எம்.முத்துவோட கறிச்சோறு நாவலை அச்சுக்குக்
கொடுத்திருக்கிறார்.
அச்சகத்தில் இருந்து எடுக்க பணமில்லை.
என்னோட வளையல வாங்கிட்டுப் போய் அடகு வச்சுட்டார்.
புத்தகத்த வித்துட்டு, அதன் மூலம் திரும்பித்
தர்றேன்னார்.
கொஞ்ச நாள் கழிச்சு, புத்தகம் சரியா விக்கல,
நாமளே நகையைத் திருப்பிடுவோம்னு எங்கிட்ட பணம் வாங்கிட்டுப் போனார்.
அந்தப் பணத்தையும், ஏதோ ஒரு இலக்கிய வேலைக்குச்
செலவு பண்ணிட்டார்.
வீடு கட்டும்போது, முப்பதாயிரம் கொடுத்தேன்.
ரெண்டு வண்டி மணல்தான் வந்துச்சு.
வேற வேலை எதுவும் நடக்கல.
கொஞ்ச நாள்ல, க.நா.சு.,வோட பித்தப்பூ புத்தகக்
கட்டு வந்து இறங்குது.
இவர் பதிப்பகம் நடத்தி, இதழ்கள் நடத்தி மட்டும்,
தன் பொருளை இழக்கவில்லை.
மெஸ் நடத்தியும் இழந்தார்.
யுவர் மெஸ்.
மூலச் சூட்டுக்கான பிரண்டை ஊறுகாய்.
நெஞ்சு சளி நீக்கும் தூதுவளை ரசம்.
குடல் சுத்தம் செய்யும், மணத்த தக்காளிச் சாறு.
பத்தியக் குழம்புகள்.
பிரண்டை வத்தக் குழம்பு.
உலகப் புகழ் பெற்ற, சுண்டியா எனும் கோளாமீன்
ஊறுகாய்.
சுத்தமான, ருசிகரமான, இலக்கிய ரசிகர்களுக்கு
எட்டாத ருசிகளும், சுவைகளும் என வியப்படைய வைத்தது யுவர் மெஸ்.
க.நா.சு., எம்.வி.வெங்கட்ராம், ந.பிச்சமூர்த்தி,
கரிச்சான் குஞ்சு, தி.ஜானகிராமன், ஜி.நாகராஜன், வெங்கட் சாமிநாதன் என பெரும்படையே,
யுவர் மெஸ்ஸின் மொட்டை மாடியில் அமர்ந்து இலக்கியத்தில் மூழ்கும்.
இலக்கியவாதிகளுக்கு யுவர் மெஸ்ஸில் என்றுமே விருந்து
இலவசம்தான்.
விளைவு, யுவர் மெஸ் கடனில் மூழ்கிக் கரைந்து
போனது.
இதழ்கள், பதிப்பகம், மெஸ் என இவர் தொட்டதெல்லாம்
இவரை நட்டத்தில்தான் தள்ளியது.
இதுகுறித்து இவரே பின்னாளில் வருந்தினார்.
வாழ்க்கையில் ஒரு தொழிலில் இருந்து, அதிலேயே
கவனம் செலுத்தி லாபம் சம்பாதித்துச் சிறுக கட்டிப் பெருக வாழத் தெரியாதவன் நான்.
ஒரு வேலையையும் உருப்படியாகச் செய்யாமல், ஊர்பட்ட
தொழில்களைக் கற்றுக்கொண்டு, எதிலும் ஆழமாக அறிந்துகொள்ளாமல், கடைசியில் அனுபவங்களைப்
பெறுவதும் தருவதுமான நீரோட்டத்தில் கலந்து போன என் சுய சரிதை லாபகரமான தன்மையானது அல்ல.
இந்திய மரபு கதை சொல்லுகிற மரபு.
பிற்காலத்தில், இம்மரபு சொல்லில் இருந்து எழுத்துக்களாக
மாறி இலக்கியச் சிறுகதைகளாக புத்தகங்களில் இடம் பிடிக்கத் தொடங்கியது.
இவருக்கு, இந்த கதை சொல்லி மரபை மீட்டெடுக்க
வேண்டும் என்ற தணியாத தாகம்.
1980 களில் கதை சொல்லிகள் என்ற இயக்கத்தையே
தொடங்கினார்.
கோயில்களின் வெளிப் பிரகாரங்கள், மேடைகள், பள்ளி,
கல்லூரிகள், மாற்றுத் திறனாளிகளுக்கானப் பள்ளிகள், பெரிய கோயில் வாசல், இராஜராஜன் சிலைக்கு
அடியில் என ஆயிரக் கணக்கான கதைகள் சொல்லப் பட்டன.
ஒரு நாள் தஞ்சை தேவாலயத்திற்கு எதிரே இருந்த,
பெரிய ஆலமரத்தின் கீழ், நண்பர்கள் பலரும், கூடி இலக்கியம் பேசிக் கொண்டிருந்தபோது,
ஒருவர், நாம் அடிக்கடி இப்படிச் கூடிப் பேசுகிறோமே, இதனையே ஒரு அமைப்பாக்கி, அந்த
அமைப்பிற்கு ஒரு பெயர் வைத்தால் என்ன? என்றார்.
யோசிப்போம் என்றார் இவர்.
இப்பவே, சும்மா சட்டெனச் சொல்லுங்க என
அவசரப் படுத்தினார் இவரது நண்பர்.
நண்பரின் வார்த்தைகளைக் கேட்ட இவரது மகம் மலர்ந்தது.
சும்மா.
அமைப்பின் பெயரையே, சும்மா என்று வைத்துவிட்டார்.
சும்மா இலக்கியக் கும்பல்.
வியப்பாக இருக்கிறதல்லவா?
இவர் யார் தெரியுமா?
இவர் வீட்டில், கடையில், புத்தகம் இல்லாத இடமே
கிடையாது.
படுக்கை அறை, குளியல் அறை, கழிவறை முதற்கொண்டு
புத்தகங்கள் அமர்ந்திருக்கும்.
வீட்டில் நடக்கும்போது கூட, மேல் கை இடுக்கில்
புத்தகம் வைத்திருப்பார்.
பதினைந்து வயதில் இருந்தே, இவருக்கு இப்படி ஒரு
வாசிப்பு வெறி.
அது, சுதேசமித்ரன் வார இதழில், மோகமுள்
தொடராக வந்து கொண்டிருந்த காலம்.
காலை மூன்றரை மணிக்கே எழுந்து, மிதிவண்டியை எடுத்துக்
கொண்டு, இரயில் நிலையத்திற்குக் கிளம்பிவிடுவார்.
சில வாரங்களில், முதல் நாள் இரவே, இரயில் நிலையத்திற்குச்
சென்று தங்கிவிடுவதும் உண்டு.
காலை நான்கு மணிக்கு போட் மெயில் வரும்.
போட் மெயிலில் சுதேசமித்ரன் வரும்.
முதல் ஆளாக வாங்கி, இரயில் நிலையத்திலேயே அமர்ந்து,
அந்த தொடரை, தொடரும் வரை வாசித்துவிட்டுதான் வீட்டிற்குப் புறப்படுவார்.
ஒருமுறை இவர் இப்படி வாசித்துக் கொண்டிருக்கும்போது,
தி.ஜானகிராமனே அந்த இரயிலில் வந்து இறங்கினார்.
ஒரு பதினைந்து வயது சிறுவன், தன்னையும் மறந்து,
தன் கதையினைப் படித்துக் கொண்டிருப்பதைக் கண்டு வியந்தார்.
அருகில் சென்று, வீட்ல போயி படிக்கக் கூடாதா?
என்றார்.
தி.ஜானகிராமனை, இச்சிறுவன் அடையாளம் கண்டு கொண்டார்.
அதுவரைக்கும் பொறுக்க முடியாது சார்
அற்புதமா எழுதுறீங்க சார் என தி.ஜா வைப் பாராட்டினார்.
புகழ்ந்து கொண்டே, பேருந்து நிற்கும் இடம் வரை
வந்து, தி.ஜா.,வைப் பேருந்தில் எற்றி விடுகிறார்.
அநியாயத்துக்குக் கெட்டுப் போயிருக்கிறீர்கள்.
அப்படி ஒன்றும் பிரமாதமான நாவலை நான் எழுதிவிடவில்லை என்று கூறிப் புறப்படுகிறார் தி.ஜா.,
இந்நிகழ்வினை, இவரே, தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கட்டுரையின் தலைப்பு என்ன தெரியுமா?
தஞ்சாவூர் பைத்யம்.
இவர், தன் ஏழாவது வயதிலேய எழுதத் தொடங்கிவிட்டார்.
ஆனாலும், இவர் தன் எழுத்துக்களை, என்றுமே முன்னிறுத்தியது
இல்லை.
தனக்குப் பிடித்த எழுத்தாளர்களை முன்னிறுத்துவதையே,
தன் கடமையாகக் கருதி இறுதி வரை செயலாற்றினார்.
இவர் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், மராட்டி,
தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்கம், உருது, பிரஞ்ச், ஜெர்மன் எனப் பன்மொழிப் புலமை
பெற்றவர்.
தஞ்சாவூர் கண்ணாடிச் சித்திரக்கலை, சிற்பக்கலை,
கர்நாடக இசை குறித்து எல்லாம் நன்கு கற்று அறிந்தவர்.
மீன் பிரியாணி, இறால் பிரியாணி சுவையாய் சமைப்பார்.
உருண்டை குழம்பு பிரமாதமாக வைப்பார்.
இவ்வாறு சமைக்கும் பொழுது, பெரிய டிபன் கேரியரில்
எடுத்துச் சென்று நண்பர்களுக்கொல்லாம் கொடுத்து மகிழ்வார்.
இவரது வீடு
தமிழ்க்
குடில்
இவரது வீட்டு
நூலகம்
பரிமாற்
கலைஞர் நூலகம்.
இவர், தனக்குத் திருமணம் ஆன சில நாட்களிலேயே,
மனைவியிடம் இப்படிக் கூறினார்.
எனது ஆயுட்காலம் குறுகியது.
நான் சீக்கிரம் செத்துவிடுவேன்.
எனக்குப் பின், எனது கனவுகளை, எனது விருப்பங்களை
நீதான் நிறைவேற்ற வேண்டும்.
சொல்லியவாறு, 57 வது வயதிலேயே மறைந்து போனார்.
கனவு காண்பதென் வாழ்க்கை
வாழ்வதல்ல.
இப்படித்தான் இவர் வாழ்ந்தார்.
ஆனாலும், தன் எழுத்துக்களால், இன்றும் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்.
நாளையும் வாழ்வார்.
என்றென்றும் வாழ்வார்.
கரமுண்டார்
வீடு
கள்ளம்
மீனின்
சிறகுகள்
மிஷன் தெரு
க.நா.சுப்ரமண்யம்
என்றோ எழுதிய
கனவு
தஞ்சை நாடோடிக்
கதைகள்
தஞ்சை ப்ரகாஷ்
சிறுகதைகள்
தஞ்சை ப்ரகாஷ்
கட்டுரைகள்.
ஆம், இவர்தான்
பிறக்கவில்லை என் வாரிசு
வேண்டவில்லை என்போல்
இன்னொருவன்
-
தஞ்சை
ப்ரகாஷ்.