அங்கம் புழுதிபட அரிவாளில் நெய்பூசி
பங்கம் படவிரண்டு கால்பரப்பி – சங்கதனைக்
கீர் கீர் என அறுக்கும் நக்கீரனோ என்
கவியை
ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?
சங்கறுப்பது எங்கள் குலம்
சங்கரனார்க்கு ஏது குலம்? – சங்கை
அரிந்துண்டு வாழ்வோம்
அரனே உம் போல்
இரந்துண்டு வாழ்வதில்லை.
மதுரைப் பாண்டியனின் அரசவையில் ஒரு சொற்போர்.
திருவிளையாடலில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
அவர்கள் சிவனாகவும், ஏ.பி.நாகராஜன் அவர்கள் நக்கீரனாகவும், அழகுத் தமிழை சிம்மக் குரலாலும்,
வெண்கலக் குரலாலும், அழுத்தம் திருத்தமாய் உரத்து முழங்கும் அற்புதக் காட்சி.
இன்று நினைத்தாலும் உடலெங்கும் மெய்சிலிர்த்துப்
போகும்.
ஆனால் இந்த உரையாடலின் முழு பொருள், அர்த்தம்
பலரும் அறியாதது.
சங்குகளை அறுத்தல்.
நக்கீரரின் குலத் தொழில்.
கடற்கரையில் கிடைக்கும் சங்குகளை அறுத்து வளையல்
செய்வது, மோதிரம் செய்வது, அழகுமிக்க ஆபரணங்கள் செய்வதுதான் நக்கீரரின் குலத் தொழில்.
அதனால்தான், உடம்பு முழுவதும் அழுக்கேற, சங்குகளைப்
பொறுக்கி எடுத்து, அறுக்கும் பொழுது, சங்கின் துகள்கள் சிதறாமல் இருப்பதற்காக, அரிவாளில்
நெய் தடவி, கால்கள் இரண்டையும் பரப்பி அமர்ந்து, கீர் கீர் என சங்கினை அறுக்கும் நக்கீரனோ
என் பாடலில் குற்றம் கண்டது என கோபம் கொப்பளிக்கக் கேட்பார் சிவன்.
சங்கு அறுப்பது எங்கள் குலம்தான்.
ஆனால் சிவனே உனக்கு என்ன குலம் இருக்கிறது.
சங்கினை அறுத்து, உழைத்து, உண்போமே தவிர, அந்த
சங்கினை பிச்சைப் பாத்திரமாக்கி, உன் போல் நாங்கள், இரந்து உண்டு வாழ்வதில்லை என சாந்தமாய் பதிலுரைப்பார் நக்கீரர்.
பாண்டியர்களின் துறைமுகம் கொற்கை.
கொற்கை.
கொற்கையில், அண்மையில் மேற்கொள்ளப்பெற்ற, அகழாய்வில்
ஒரு தொழிற்சாலை கண்டுபிடிக்கப் பட்டது.
சங்கு அறுக்கும் தொழிற்சாலை.
---
தமிழ் வளர்த்த முதல் சங்கம், கடற்கோளால் முற்றாய்
அழிந்தபின், பரதவர்கள் மட்டுமே பயன்படுத்திய துறைமுகமாக விளங்கியது கொற்கை.
கொற்கை.
கொற்கை பாண்டியர்களின் தலைநகராக மட்டுமல்ல, கப்பல்
படைத் தளமாகவும் இருந்திருக்கிறது.
பொருநை.
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பெறும் ஆறு.
இன்று இதன் பெயர் தாமிரபரணி.
இந்த தாமிரபரணி, கொற்கைக்கு வடக்கே, பாய்ந்து
சென்றதாகக் கூறுகின்றன நம் இலக்கியங்கள்.
ஆனால், இன்றோ, தாமிரபரணியின் வடகரையில் இருக்கிறது
கொற்கை.
தாமிரபரணி தன் போக்கை, மாற்றிக் கொண்டதன் விளைவு
இது.
கொற்கை விறற்போர் பாண்டியன், மறப்போர் பாண்டியன்,
வெற்றிவேல் செழியன், தலையானங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் போன்ற மன்னர்களின்
ஆளுகைக்கு உட்பட்டிருந்த நகரம்தான் கொற்கை.
இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில், ஏரல் வட்டத்தில்
இருக்கிறது.
கொற்கை.
இத்தாலி நாட்டின், வெனீஸ் நகரைச் சார்ந்த, பயணியான,
மார்க்கோ போலோ, காயல், அதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இருக்கும்,
பழைய காயல், பெரிய துறைமுகமாக விளங்கியதாக தன் பயணக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், 12 ஆம் நூற்றாண்டு வரையிலும், அதற்கு
முன்னரும், பழைய காயல், கொற்கை இருந்துள்ளதை அறிய முடிகிறது.
பின்னர்தான் அழிந்துள்ளது-
இந்த கொற்கையை, காலத்தால் அழிந்துபோன இந்த கொற்கையை,
வெளிநாட்டு, அறிஞரான கால்டுவெல் அவர்கள்தான், தூத்துக்குடி மாவட்டத்தில் அகழாய்வு
செய்து, வெளி உலகிற்கு அடையாளம் காட்டிய முதல் மனிதராவார்.
1968-69 ஆம் ஆண்டில்தான், தமிழ் நாட்டு அரசின்
சார்பில், தொல்லியல் துறை தொடங்கப் படுகிறது.
தமிழ் நாட்டு தொல்லியல் துறையின் முதல் ஆய்வு,
அகழாய்வு.
கொற்கை.
இரண்டு அடி ஆழத்தில் செங்கல் கட்டுமானங்கள் கண்டுபிடிக்கப்
பட்டன.
செங்கல் கட்டுமானத்திற்குள் இரண்டு அடுக்கு கொள்கலன்கள்
கிடைத்தன.
இந்த அகழாய்வில், கொற்கை நகரம், 2,800 ஆண்டுகள்
பழமையானது என்பது உறுதியானது.
இவ்விடத்தில் துறைமுகம் இருந்ததும், கொற்கை பாண்டியர்களின்
தலைநகராய் விளங்கியதும், தகுந்த ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டு அறிவிக்கப் பட்டது.
அறிவித்ததோடு, அந்த அகழாய்வு நின்று போனது.
ஐம்பத்தி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், கொற்கையில்
மீண்டும் அகழாய்வுப் பணிகள் தொடங்கின.
மொத்தம் 12 குழிகள்.
10 மீட்டர் அகலம், 10 மீட்டர் நீளமுள்ள 12 குழிகள்.
சதுர வடிவில் குழிகள் ஏற்படுத்தப்படும் பொழுதுதான்,
ஒரு குழிக்கும், அடுத்த குழிக்குமான தொடர்பை, காலத்தை கணிக்க இயலும்.
12 குழிகளிலும் செங்கல் கட்டுமானங்கள்.
ஒரு குழியில் கரிமப் பகுப்பாய்வு செய்தபொழுது,
அப்பகுப்பாய்வு காட்டிய காலம் கி.மு.785.
2800 ஆண்டுகளுக்கும் முற்பட்டது.
குழிகளின் மண் அமைப்பை ஆராய்ந்த பொழுது, மூன்று
வகையான மண் அடுக்குகள் கண்டுபிடிக்கப் பட்டன.
முதல் அடுக்கு.
இடைக்கால பாண்டியர்களுடைய துறைமுகப் பகுதி.
இரண்டாவது அடுக்கு.
வரலாற்றின் தொடக்க காலம்.
அரசு அமைப்புகள் தோன்றிய காலம்.
மூன்றாவது அடுக்கு.
தண்ணீரில் மூழ்கி இருந்தது.
இதனால், பகுப்பாய்வு செய்து, காலத்தை கணிக்க
இயலா நிலை.
இந்த அகழாய்வில்,
இலங்கை பானை ஓடுகள்.
மேற்கத்திய நாடுகளின் கருப்பு நிற பானை ஓடுகள்.
எகிப்து பானை ஓடுகள்.
சீனப் பானை ஓடுகள்.
கண்ணாடி வளையல்கள்.
செப்பு வளையங்கள்.
வடி கட்டும் குழாய்.
பல ஓடுகளில் குறியீடுகள்.
எழுத்திற்கு முந்தைய குறியீடுகள்.
ரோம் நாட்டில் இருந்து எண்ணெய் வஸ்துவை கொண்டு வந்த பானையின் ஓடுகள்.
இப்பானைகள் கூம்பு வடிவில் உயரமாக இருக்கும்.
கப்பலின் அடியில், துளையிட்டு, அத்துளைகளில்
நிறுத்தி வைத்திருப்பார்கள்.
இது கப்பலின் சமநிலையைக் காக்கவும், எண்ணெயை
சேதாரமின்றி கொண்டு வரவும் பயன்படும்.
ஒரு குழியில் 9 அடுக்குகளைக் கொண்ட துளையிடப்பட்ட
பானை வடிவக் குழாய்.
ஒவ்வொன்றும் 20 செ.மீ விட்டம்.
27 செ.மீ., உயரம்.
2 செ.மீ., தடிமன்.
ஒவ்வொன்றின் அடிப்பகுதியிலும், 1 செ.மீ., விட்டமுள்ள
துளை.
இதற்கும் கீழே, காலத்தால் முந்தைய கருப்பு சிவப்பு
பானை ஓடுகள்.
இதற்கும் கீழே கன்னி மண்.
கொற்கையில் அமைந்துள்ள ஒரு வீட்டில், கழிவறை அமைப்பதற்காகக் குழி தோண்டியபோது, உள்ளிருந்து எட்டிப் பார்த்தது ஒரு கட்டுமானம்.
கட்டுமானத்திற்கும் கீழே ஒரு கொள்கலன்.
முதுமக்கள் தாழி போன்ற பெரிய கொள்கலன்.
ஆனால் முதுமக்கள் தாழி அல்ல.
இதற்கும் கீழே, கி.மு.இரண்டாம் நூற்றாண்டிற்கும்
முற்பட்டப் பானை ஓடுகள்.
இதற்கும் கீழே, மேலும் ஒரு கொள்கலன்.
இக்கொள்கலனின் இருபுறமும், குச்சி நடு குழிகள்.
இருபுறமும் குச்சிகளை நட்டு, காய்ச்சி வடிப்பதற்குப்
பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இதற்கும்
கீழே கரித் துண்டுகள்.
எரித்ததற்கான சான்றாய் சிதறிக் கிடந்தன.
கொற்கை.
கொள்கை அகழாய்வில் கண்டுபிடிக்கப் பட்ட மற்றுமொரு
முக்கியக் கண்டுபிடிப்பு.
ஒரு தொழிற்சாலை.
சங்கு அறுக்கும் தொழிற்சாலை.
சங்கினை அறுத்ததற்கானச் சான்றுகள்.
முழு சங்கு,
சங்கின் மேற்பகுதி நீக்கப்பட்டு, தனித்து நிற்கும்
சங்கின் முதுகுத் தண்டு.
சங்கின் நடுவில் அறுத்து செய்யப்பெற்ற வளையல்கள்.
சங்கின் முனைப் பகுதியை அறுத்து செய்யப்பெற்ற
மோதிரங்கள்.
கிராணைட் கல்லால் ஆன உரை கல்.
மேலும் கெண்டி மூக்கு வடிவ பானை.
முனிவர்கள் கையில் வைத்திருக்கும் கமண்டலம் வடிவிலான
பானை.
தேவைக்குத் தகுந்தவாறு, நீரை ஊற்றப் பயன்படும்,
பேணா நுழையும் அளவிற்கான, சிறு துளையுடன் கூடிய கெண்டி மூக்கு பானை.
சங்கினை அறுக்கும் பொழுது, உண்டாகும் வெப்பத்தைத்
தணிக்க, தண்ணீர் ஊற்றப் பயன்படுத்தப் பட்ட கெண்டி மூக்கு பானை.
அள்ள அள்ள குறையாத சோழிகள்.
பாண்டியாட்டம் ஆடப் பயன்படும் சில்லு காய்கள்.
சதுரங்க விளையாட்டு காய்கள்.
சுடுமண் உருவங்கள்.
குதிரை,
தலை, கை, கால் இல்லாத உருவங்கள்.
விளையாட்டுப் பொருளாகவோ, வழிபாட்டுப் பொருளாகவோ
இருந்திருக்கலாம்.
20 செ.மீ., தடிமன் உள்ள சுக்கான் பாறைகள்.
சிப்பிகள் நிறைந்த சுக்கான் பாறைகள்.
இதுதான் கொற்கை.
கொற்கை.
---
ஏடகம்
ஞாயிறு
முற்றம்.
8.1.2023 ஞாயிறு
மாலை
நடைபெற்றப்
பொழிவில்,
ஒலி, ஒளி காட்சிகளுடன்
கொற்கை அகழாய்வை
கண்முன் கொண்டுவந்து
நிறுத்தினார்
திரு த.தங்கதுரை
அவர்கள்.
இவர் யார்
தெரியுமா?
தொல்லியல்
துறை அலுவலர்
மண்டல உதவி
இயக்குநர்.
கொற்கை
அகழாய்வு
நடைபெற்று
வருகிறது.
தஞ்சை, மனவளக்கலை
அறக்கட்டளை
துணைத் தலைவர்
தலைமையில்
நடைபெற்ற
இப்பொழிவிற்கு
வந்திருந்தோரை,
ஊரணிபுரம்,
நல்தவன் மெட்ரிகுலேசன் பள்ளியின்
எட்டாம் வகுப்பு
மாணவி,
ஆம்
எட்டாம் வகுப்பு
மாணவி
வரவேற்றார்.
தஞ்சாவூர்,
மருதுபாண்டியர் கலை அறிவியல் கல்லூரி
இளங்கலை தமிழ்,
மூன்றாம் ஆண்டு மாணவி
நன்றி கூற
பொழிவு இனிது
நிறைவுற்றது.
தஞ்சாவூர்,
அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
உதவிப் பேராசிரியர்
தமிழ்த் துறைத்
தலைவர்
விழா நிகழ்வுகளை
சுவைபடத் தொகுத்து
வழங்கினார்.
கொற்கை
அகழாய்வுக்
காட்சிகளை
கண்முன்
ஓடவிட்டு,
சிவனையும்,
நக்கீரரையும்
துணைக்கு
அழைத்து வந்து,
ஏடக அன்பர்களின்
உள்ளங்களை
கீர் கீர்
எனக் கீறி – தமிழர்களின்
தொன்மையை,
பெருமையை
ஆழ விதைக்க
பெரிதினும்
முயன்று - வென்ற
ஏடக நிறுவுநர்,
தலைவர்
வாழ்த்துவோம்,
போற்றுவோம்.