09 மார்ச் 2023

இசைத் தமிழ்க் கலைஞர்கள்

 


     இசைத் தமிழ்.

     இசைத் தமிழின் ஆய்வுப் பரப்பானது, பெரிதினும் பெரிது.

     நிலத்தினும்  பெரிது.

     நீரினும் ஆழமானது.

     வானத்தினும் அகன்றது.

வடவேங்கடம், தென்குமரிக்கு இடைப்பட்ட தமிழகத்தில், எண்ணற்ற இசைக் கலைஞர்கள், பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, இசைத் தமிழுக்குப் பெருந்தொண்டு புரிந்திருக்கிறார்கள்.

     ஈழத் தமிழர்கள் இன்று உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர். இவர்கள் மூலமாக, தமிழிசையும், தமிழிசைக் கருவிகளும் உலகம் முழுவதும் பரவியும், கற்கப்பட்டும், இசைக்கப்பட்டும் வருகின்றன.

     தமிழ்நாட்டில் இருந்து, அயல் நாடுகளுக்குச் சென்றத் தமிழர்களாலும் தமிழிசைப் பரவி வருகிறது.

     தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம், சுவாமி விபுலானந்த அடிகளாரின் யாழ் நூல், வரகுண பாண்டியனின் பாணர் கைவழி என்னும் இசைத் தமிழ் நூல், பேராசிரியர் சாம்பமூர்த்தியாரும், இசைமேதை சங்கர சிவனாரும் எழுதிச் சேர்த்த இசையாய்வு, அறிஞர் கு.கோதண்ட்பாணி பிள்ளையின் பழந்தமிழிசை, இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் தமிழிசைக் கலைக் களஞ்சியம், பேராசிரியர் க.வெள்ளைவாரணனாரின் இசைத் தமிழ், சாத்தான் குளம் அ.இராகவனின் இசையும் யாழும்,  முனைவர் எஸ்.இராமநாதனாரின் சிலப்பதிகாரத்து இசைத் தமிழ், மு.அருணாசலம் அவர்களின் இசைத் தமிழ் வரலாறு, அறிஞர் நா.மம்மதுவின் தமிழிசைப் பேரகராதி, அரிமளம் சு.பத்மநாபன் அவர்களின் இசைத் தமிழ் கலைச் சொல் அகராதி முதலான இசைத் தமிழ் ஆய்வு நூல்கள் தமிழிசையை ஆவணப்படுத்தி தமிழிசைக்கு ஏற்றம் தந்த படைப்புகளாகும்.

     அண்ணாமலை அரசர் தமிழிசை இயக்கம் கண்டு, பல தமிழிசை மாநாடுகளை நடத்தி தமிழிசையில் ஏற்படுத்திய எழுச்சியும், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் சிலப்பதிகாரத்து இசைப் பாடல்களையும், சங்கப் பனுவல்களில் கிடந்த பண்முறைகளையும், திருமுறைகளையும், ஆழ்வார் பாசுரங்களையும், சித்தர் பாடல்களையும் ஊர் தோறும் சென்று, படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவர் மத்தியிலும பரப்பி தமிழிசைக்கு ஏற்றம் கொடுத்ததும், மறக்கவியலா வரலாற்று நிகழ்வுகளாகும்.

     ஆனால், இசைத் தமிழுக்கு உழைத்த அறிஞர்களைப் பட்டியலிட்டு ஆவணப்படுத்தவும், எதிர்காலத் தலைமுறையினருக்கு, இம்மா மனிதர்களைக் கொண்டு சேர்க்கவும், ஏதேனும் முயற்சி நடந்துள்ளதா என்று தேடிப் பார்த்தால், வேதனைதான் மிஞ்சும்.

     ஒரே ஒரு அறிஞர், ஒரே ஒரு மாமனிதர், ஒரே ஒரு இசைத் தமிழ் அறிஞர் மட்டும்தான், இம்முயற்சியினை மேற்கொண்டு, அவர் காலத்து இசைத் தமிழ் அறிஞர்களைத் தன் நூலில் பட்டியலிட்டுப் பாதுகாத்துள்ளார்.

1917 ஆம் ஆண்டு

இசைத் தமிழ் அறிஞர்

ஆபிரகாம் பண்டிதர்

தனது

கருணாமிர்த சாகரம்

நூலில்.

தனக்குக் கிடைத்த அறிஞர்களின் விவரங்களைத்

தன் நூலில் தொகுத்துப் பாதுகாத்துள்ளார்.

     ஆபிரகாம் பண்டிதருக்குப் பிறகு, நூறு ஆண்டுகள் கடந்த நிலையில், இதுபோன்ற முயற்சியில், ஒருவர் கூட இறங்கவே இல்லை என்பதுதான் வேதனையான உண்மையாகும்.

     இக்குறையினைப் போக்க, தற்பொழுது ஒருவர் துணிந்து களமிறங்கியுள்ளார்.

     தமிழிசைக்குப் பங்களித்த கலைஞர்களின் பட்டியலைத் தனியொரு மனிதராகக் களமிறங்கித் தொகுத்து, அப்பட்டியலினைத் தனியொரு நூலாக்கி இருக்கிறார்.

     இசைத் தமிழ் அறிஞர்களை அகர வரிசையில் தொகுத்திருக்கிறார்.

     அ முதல் ஹ, ஹி, ஹே, ஹை வரை 213 பக்கங்களில், 5764 இசைத் தமிழ்க் கலைஞர்களைப் பட்டியலிட்டுள்ளார்.

     பார்க்கப் பார்க்க, பக்கங்களைப் புரட்டப் புரட்ட மலைப்புதான் வருகிறது.

     எப்படி? இப்படி? எவரும் சிந்திக்காததைச் சிந்தித்து, சாதித்திருக்கிறார் என்பதை எண்ணும்போது வியப்புதான் கூடுகிறது.

     இதுமட்டுமல்ல,

     தஞ்சைப் பெரியக் கோயிலுக்குத் திருப்பதியம் செய்தவர்கள் என 50 பேர்,

     ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் வழியாக அறியப்பெறும் இசைத் தமிழ் அறிஞர்கள் 562 பேர்,

     ஓதுவார்கள், திருமுறைப் புரவலர்கள் என 450 பேர்,

     தஞ்சாவூர் பி.எம்.சுந்தரம் அவர்களின் மங்கல இசை மன்னர் நூலில் உள்ளபடி நாகசுரக் கலைஞர்கள் 79 பேர், தவில் இசைக் கலைஞர்கள் 46 பேர் என இசைக் கலைஞர்களைப் பட்டியலிடுகிறார்.

     இதற்கும் மேலாக, தமிழிசைக் கருவிகளில், இதுவரை நாமறிந்த, இன்றும் இருக்கும் கருவிகளின் பெயர்கள் என 229 கருவிகளின் பட்டியலைப் படிக்கின்றபோது, எழும் வியப்பிற்கு அளவே இல்லை. உள்ளம் நெகிழ்ந்து போகிறது.

     நம்மிடம் இத்துணை இசைக் கருவிகள் இருக்கின்றனவா? அவற்றைக் கண்ணாரக் காண வேண்டுமே? அவற்றில் இருந்து எழும் இசையைக் செவியார, மனம் குளிரக் கேட்க வேண்டுமே என்னும் ஒரு பெரு ஏக்கம் மனதுள் எழுகிறது.

இந்நூல், ஒரு தனிமனித முயற்சி என்பதை மனம் நம்ப மறுக்கிறது,

ஏனெனில், ஒரு இமாலய முயற்சியை மேற்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார் ஆசிரியர்.


இசைத் தமிழ்க் கலைஞர்கள்

நோக்கீட்டு நூல்

இந்திய அரசின்,

செம்மொழி இளம் அறிஞர் விருது

தமிழ்நாட்டு அரசின்

தூய தமிழ் ஊடக விருது

சிக்காகோ தமிழ்ச் சங்கத்தின்

பொன்விழா விருது

முதலான பல விருதுகளைப் பெற்றவர்.


முனைவர் மு.இளங்கோவன்

அவர்களின்

வாழ்நாள் சாதனைப் படைப்பு

இந்நூல்.

ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு நூலகத்திலும்

இருக்க வேண்டிய

பல்வேறு ஆய்வுகளுக்கு

வழிகாட்டக் கூடிய

அற்புத நூல்

 

இசைத்தமிழ் அறிஞர்கள்

நோக்கீட்டு நூல்

வயல்வெளிப் பதிப்பகம்,

இடைக்கட்டு, உள்கோட்டை(அஞ்சல்)

கங்கைகொண்ட சோழபுரம்.

விலை ரூ.350

தொடர்பிற்கு

முனைவர் மு.இளங்கோவன்

94420 29053

muetamil@gmail.com