இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்
என்ற வாசகம், என் கல்லறையில் இடம்பெற வேண்டும்.
என்னை அடக்கம் செய்யும் பொழுது, நான் மொழிபெயர்த்த
திருக்குறளையும், திருவாசகத்தையும் என்னுடன் வைக்க வேண்டும்.
எனது கல்லறைக்குச் செலவிடும் தொகையில், ஒரு சிறு பகுதியாவது, தமிழ் மக்களின் நன்கொடையால் அமைய வேண்டும்.
இவர் முதுமையில், தளர்ச்சியடைந்திருந்த காலத்தில், இம்மூன்று விருப்பங்களைத்தான், தனது கடைசி ஆசையாகத் தன் நண்பரிடம் கூறினார்.
இவர்தான்
ஜி.யு.போப்
கனடாவில் பிறந்து, கிறித்துவ மத போதகராகத் தமிழ்
நாட்டிற்குக் கப்பல் வழிப் பயணித்தபோதே, தன் எட்டு மாத கப்பல் பயணத்தின்போதே, தமிழைக்
கற்று, தமிழோடு தமிழகக் கடற்கரையில் கால் பதித்தார்.
தூத்துக்குடிக்கு அருகே உள்ள சாயர்புரத்தில்
தங்கியிருந்தபோது, ஆரியங்காவுப் பிள்ளை
அவர்களிடமும், இராமானுசக் கவிராயரிடமும்
தமிழ் கற்றார்.
1851 ஆம் ஆண்டு தஞ்சைக்கு வந்தவர், எட்டு ஆண்டுகள்
தஞ்சையிலேயே தங்கி சமயப் பணியாற்றி இருக்கிறார்.
தஞ்சையில்தான்
புறநானூறு, நன்னூல், திருவாசகம் மற்றும் நாலடியார் போன்ற நூல்களைக் கற்றிருக்கிறார்.
தஞ்சையில் தமிழையும், இந்நூல்களையும் இவருக்குக்
கற்றுக் கொடுத்தவர் யார் தெரியுமா?
திருவாவடுதுறை
ஆதீன வித்துவான்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின்
முதல்
மாணவர்,
திருவாவடுதுறை
ஆதீனம்
சீர் வளர் சீர் சுப்ரமணிய தேசிகரிடமும்,
யாழ்ப்பாணம்,
நல்லூர் ஆறுமுக நாவலரிடமும்
தமிழ்
கற்றவர்,
தென்னாட்டிலேயே,
முதன் முதலாக ஆங்கிலம் கற்பித்தக் கல்லூரி என்னும் பெருமையினைப் பெற்ற, 1784 ஆம் ஆண்டு,
சுவார்ட்ஸ் பாதிரியார் அவர்களால் தொடங்கப்
பெற்ற,
செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரியில்
தமிழ்ப் பேராசிரியராய் பணியாற்றியவர்,
கரந்தையைச் சார்ந்தவர்,
கரந்தை மண்ணின் மைந்தர்
பேராசிரியர் மு.ஐயாசாமி
பிள்ளை
இவர்
ஜி.யு.போப்
அவர்களுக்கு
மட்டுமல்ல,
ரெவரெண்ட் பெரீவெல்
டாக்டர் மார்ஷ்
ரெவரெண்ட் W.H.பிளேக்
முதலிய
ஆங்கிலப் பெருமக்களுக்கும்
தமிழ்
கற்றுக் கொடுத்திருக்கிறார்.
வியப்பாக
இருக்கிறதல்லவா?
இத்தகு பெருமை வாய்ந்த
தமிழ்ப் பெருமகனாரின்
திருமகனாரைத்
தங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க விரும்புகிறேன்
வாருங்கள் கரந்தைக்கு.
இவர் 1876 ஆம் ஆண்டு ஜுலைத் திங்கள் 17 ஆம் நாள்
பிறந்தவர்.
தன் தந்தை, தமிழ்ப் பேராசிரியராய் பணியாற்றிய,
அதே, செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரியில் பி.ஏ., பட்டம் பெற்று, சென்னை சட்டக் கல்லூரியில்
சட்டம் பயின்றவர்.
இருப்பினும் வழக்கறிஞர் தொழிலில் ஆர்வம் காட்டாமல்,
பொதுப் பணியில் முழுமூச்சாய் இறங்கியவர்.
நீதிக் கட்சியில் தன்னை முழுமையாய் இணைத்துக்
கொண்டு சீரியப் பணியாற்றியவர்.
1904 ஆம் ஆண்டு முதல், நகராண்மைக் கழக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெற்று, ஒன்றல்ல, இரண்டல்ல,
முழுதாய் நாற்பது ஆண்டுகள் பணியாற்றியவர்.
மூன்று முறை நகராண்மைக் கழகத்தின் துணைத் தலைவராகவும், ஒரு முறை அதன் தலைவராகவும்
பணியாற்றியவர்.
தஞ்சை நாட்டாண்மைக்
கழக உறுப்பினராகப் பன்னிரெண்டு ஆண்டுகள் பணியாற்றியவர்.
நாட்டாண்மைக் கழகத்திலும், இருமுறை துணைத் தலைவராகப் பணியாற்றி இருக்கிறார்.
ஒரு முறை நாட்டாண்மைக் கழகத்தில் இருந்து, மாநாட்டாண்மைக் கழக உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்
பெற்றுப் பணியாற்றி இருக்கிறார்.
ஒன்பது ஆண்டுகள், மாநாட்டாண்மைக் கல்விக் கழகத் தலைவராகவும் கல்விப் பணியாற்றி இருக்கிறார்.
சென்னைப் பல்கலைக் கழகத்திலும், அண்ணாமலைப் பல்கலைக்
கழகத்திலும் பேரவை உறுப்பினராகப் பணியாற்றி
இருக்கிறார்.
நீதிக் கட்சியின் பல மாநாடுகளை முன்னின்று நடத்தி
இருக்கிறார்.
கூட்டுறவு இயக்கத்தில் இணைந்து பெரும் பணியாற்றி
இருக்கிறார்.
இதுமட்டுமல்ல, கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர், தமிழவேள் உமாமகேசுவரனாருடன் இணைந்து, கரந்தையில்
கூட்டுறவு வங்கித் தொடங்கிட முழு முதற் காரணமாய் இருந்தவர் இவர்தான்
வங்கி தொடங்க வேண்டும் என்றால், இடம் வேண்டுமல்லவா?
நீதிக் கட்சியின் தூண்களுள் ஒருவராக விளங்கிய
இவர், கரந்தையின் பிரதான சாலையில் இருந்த, தனக்குச் சொந்தமான இடத்தைத் தானே முன்வந்து,
தானமாக வழங்கினார்.
கூட்டுறவு வங்கி என்றால், அந்த வங்கிக்கு
ஒரு பெயர் வைக்க வேண்டும் அல்லவா?
வங்கியின் பெயர் பற்றி, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்
தலைவர் தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் அவர்களுடன் ஆலோசித்தபோது, உமாமகேசுவரனாரார் அவர்களின்
உள்ளத்தில் உதித்த முதல் பெயர் திராவிடம்
என்பதாகும்.
நீதிக்கட்சி தொடங்கப் பெற்றதும், பாடுபட்டதும்
பார்ப்பணர் அல்லதார் வளர்ச்சிக்காக என்பதை அனைவரும் அறிவர்.
எனவே திராவிடக்
கருத்தாக்கம் உயர்ந்து நின்ற காலகட்டம்
அது.
மேலும் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவராய் விளங்கிய
தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் அவர்கள், நீராருங்
கடலுத்த எனத் தொடங்கும் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலை, தமிழ்த்
தாய் வாழ்த்தாக அறிமுகப் படுத்தி, தமிழ் நாடு தோறும் முழங்கிக் கொண்டிருந்த காலம் அது.
நீராரும் கடலுடுத்த எனும் பாடலின் இனிமையும்,
பொருளும் மட்டுமல்ல, அப்பாடலில் வரும் திராவிட
நற்திருநாடும் என்னும் வார்த்தையும் உமாமகேசுவரனாரின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்திருந்தது.
திராவிட நல் திருநாடு.
நீதிக் கட்சியின் குறிக்கோளே திராவிடத் திருநாடுதானே.
எனவே, 1919 ஆம் ஆண்டு, தாங்கள் தொடங்கிய, கூட்டுறவு
வங்கிக்கு, கருந்தட்டான்குடி திராவிட கூட்டுறவு
நகர வங்கி எனப் பெயரிட்டனர்.
தமிழகத்தில் தொடங்கபெற்ற கூட்டுறவு வங்கிகளிலேயே,
திராவிட என்னும் சொல்லாக்கத்தை தன் பெயரில் உள்ளடக்கிய, ஒரே வங்கி இதுதான்.
இக்கூட்டுறவு வங்கியின் முதல் தலைவரும் இவர்தான்.
இதுமட்டுமல்ல, தமிழவேள் உமாமகேசுவரனாருடன் இணைந்து, தஞ்சை கூட்டுறவு அச்சகம், தஞ்சை கூட்டுறவு மத்திய
வங்கி, தஞ்சை நில அடமான வங்கி, கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனம் முதலான கூட்டுறவு
அமைப்புகள் தோன்றவும் காரணமாய் இருந்திருக்கிறார்.
மேலும் தஞ்சை நிலவள வங்கியின் தலைவராகவும், நிக்கல்சன்
நகர வங்கியின் நிர்வாகக்குழு உறுப்பினராகவும் பணியாற்றி இருக்கிறார்.
இவ்வாறு வாழ்நாளெல்லாம், பொதுவாழ்வில் ஈடுபட்டு,
தன்னலம் துறந்து, வாழ்ந்தவர், 1935 ஆம் ஆண்டு, தன் சொந்த செலவில், தன் சொந்த இடத்தில்,
ஒரு தொடக்கப் பள்ளி ஒன்றினையும் நிறுவி, கரந்தை வாழ் மக்களுக்கு இலவசக் கல்வியையும்
வழங்கினார்.
இவர், கரந்தைத் தமிழ்ச் சங்கம் தோன்றிய நாள்
தொடங்கி, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.
1937 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் ராஜாஜி
அவர்கள், தமிழகப் பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாயக் கல்வி மொழியாக அறிமுகப் படுத்த
எண்ணியுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் கொந்தளிக்கத் தொடங்கியது.
கரந்தைத் தமிழ்ச் சங்கம் வீறு கொண்டு எழுந்து,
27.8.1937 அன்று முதல் இந்தி மொழி மறுப்புக் கூட்டத்தையும், இந்தி எதிர்ப்புத் தீர்மானத்தையும்
நிறைவேற்றியது.
தமிழகத்தில் நடைபெறும் கிளர்ச்சிகளையும், கரந்தைத்
தமிழ்ச் சங்கம சங்கத் தீர்மானங்களையும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்தப் பேராட்டங்களையும்,
கண்டு கொள்ளாத இராஜாஜி அவர்கள் 21.4.1938 அன்று சென்னையில் மாகாணத்தின் 125 பள்ளிகளில்
கட்டாய இந்தி பயிற்றுவிப்பதற்கான அரசு ஆணையினை வெளியிட்டார்.
கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமாமகேசுவரனார்
அவர்கள், வெகுண்டு எழுந்து, மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, இந்தி எதிர்ப்புப்
பிரச்சாரத்தினைத் தீவிரப் படுத்த முடிவு செய்தார்.
திருச்சியில் இருந்து புறப்பட்டு, சென்னை கோட்டை
நோக்கி மாபெரும் பேரணி ஒன்றினை நடத்திட முடிவு செய்தபோது, அப்பேரணிக்குத் தலைமை தாங்கிட,
உமாமகேசுவரனார் தேர்ந்தெடுத்தது, இவரைத்தான்.
இவரின் தலைமையில், தமிழர் பெரும்படை ஒன்று, உலகமே
கண்டு வியக்குமாறு 1.8.1938 ஆம் நாளன்று திருச்சியில் இருந்து புறப்பட்டு, இந்தி எதிர்ப்பு
முழக்கங்களை முழங்கியவாறும், தமிழுணர்வை உட்டியவராறும், 47 நாட்கள் இடைவிடாது நடந்து,
304 ஊர்களைக் கடந்து, 11.9.1938 அன்று சென்னையைச் சென்றடைந்தது.
தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும், தன்
வாழ்நாள் முழுவதையும் செலவிட்டு வாழ்ந்த இம் மனிதர், இம் மாமனிதர், தன் 75 ஆம் அகவையில்,
5.9.1951 ஆம் நாள் அன்று, படுக்கையில் வீழாமல், நோய் நொடியைத் தழுவாமல், திடுமென்று
மறைந்தபோது, தஞ்சையே திடுக்கிட்டுப் போனது.
திடீரென மறைந்தாலும், அதற்கு முன்னரே, உலகுக்கு
நான் விடுக்கும் இறுதிச் செய்தி என்னும் தலைப்பில் ஐந்து பக்க அறிக்கையினை இவர் தயாரித்து
வைத்திருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இவரது இறுதிச் செய்தி அனைவரையும் கலங்க அடித்துவிட்டது.
எனக்கு
சாதி, மத, வேறுபாடு கிடையாது.
எம் மதமும் எனக்கு உடன்பாடே.
பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லை.
பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் என்ற கொள்கையை
உடையவன்.
மெய்கண்டார் அருளிச் செய்த சிவஞான போதம் எனக்குப்
பிடித்தமானது.
திருக்குறள் என்னுடைய தமிழ்மறை.
தேவாரம், திருவாசகம் எனக்கு விருப்பமானவை.
தமிழ் நாடு மிகப் பழமையானது. தமிழ்மொழி எல்லா
மொழிகளிலும் சிறந்தது.
தமிழ் நாடகம் மிகவும் மகிழ்ச்சி தரத்தக்கது.
தமிழிசை, நாடகக் கல்லூரிகள் நிறுவப்பெற்று மேற்படி கலைகைள் முன்னேற வேண்டும்.
முத்தமிழுக்கும் நான் செய்த தொண்டினைப் பாராட்டி,
நாடகப் பேராசிரியர் உயர்திரு இராவ் பகதூர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் தலைமையில்
நடந்த நாடக மாநாட்டில், எனக்கு முத்தமிழ்ப் புரவலர் என்ற பட்டம் அளிக்கப் பெற்றது.
சிற்பமும் ஓவியமும் வளர்க்கப்பட வேண்டும்,
பொது நலத் தொண்டில் ஈடுபட்டு வேலை செய்ய இளைஞர்கள்
பயிற்சி பெற வேண்டும்.
தமிழ்ச் சங்கப் புலவர் கல்லூரியை தமிழ்ப் பல்கலைக்
கழகமாக்க வேண்டும். இலக்கணம், இலக்கியம், இசை , நாடகம், தமிழ்ச் சித்த மருத்துவம்,
சிற்பம், ஓவியம், சைவவித்தாந்தம், வைணவ சித்தாந்தம், தென்னிந்திய சரித்திர ஆராய்ச்சி,
கல்வெட்டுக்கள், கைத் தொழில, வாணிகம் முதலிய பல துறைகளிலும் வேலை செய்ய வேண்டும்,
அதற்கு வேண்டிய பொருளுதவி அரசினரும், மடங்களும்,
பெரு நிலக்கிழர்களும், மாவட்டக் கழகமும், நகராண்மைக் கழகம் முதலிய பெருநிதி படைத்தவர்களும்,
பொது மக்களும் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு முழுமைக்கும் மேற்படி பல்கலைக் கழகம்
வேலை செய்ய வேண்டும்.
கட்டாய இலவசக் கல்வி உயர்தரப் பள்ளி யவரையிலாவது
அளிக்கப்பட வேண்டும்.
உயர்தரப் பள்ளிக் கல்வி எட்டு ஆண்டுகளில் முடிய
வேண்டும்.
கல்லூரிப் படிப்பு 4 அல்லது 5 ஆண்டுகளில் முடிய
வேண்டும்.
பிறகு எந்த வேலைக்கும் அவன் தகுதியுடையவனாக இருக்க
வேண்டும்.
எல்லாக் கல்வியும் தமிழ் மொழியிற் போதிக்கலாம்.
இன்றியமையாத தமிழ் நூல்கள் போதிக்கப்பட வேண்டும்.
தமிழ்நா தனி நாடாகப் பிரிந்து, முழு அரசுரிமை
நமக்குக் கிடைத்தால் ஒழிய, மேலே குறிப்பிட்டவை நிறைவேறா.
நமது நாட்டுப் பொருளாதார நிலையும், மக்களின்
வாழ்க்கை நிலையும் உயர வேண்டும்.
எந்த உத்தியோகத்தினருக்கும் ரூ.1000 க்கு மேற்பட்ட
திங்கள் ஊதியம் இருக்கக் கூடாது.
பாட்டாளி மக்களுக்கு நல்ல ஊதியம் கொடுக்க வேண்டும்.
ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு பாராட்டக் கூடாது.
கள்ள மார்க்கெட்டு ஒழிய வேண்டும்.
விவசாயிகளக்கு அரசினர் உதவியளித்து, விளைவைப்
பெருக்க வேண்டும்.
கைத் தொழிலைப் பெருக்க வேண்டும்.
எல்லோருக்கும் உணவு, உடை, வீடு வேலை முதலிய நலங்கள்
எளிமையில் கிடைக்க வேண்டும்.
யாரும் சோம்லாக இருக்கக் கூடாது.
பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்.
மூட நம்பிக்கைகள் ஒழிய வேண்டும்.
அனாதை விடுதிகளும், திக்கற்ற மாணவரில்லங்களும்
பல இடங்கிளில் நிறுவப்பட வேண்டும்.
ஏழைகளுக்குத் தொழிற் சாலைகள் ஏற்பட வேண்டும்.
பிச்சை எடுப்பது நிறுத்தப்பட வேண்டும்.
ஒரு நாட்டான், மற்றொரு நாட்டானை சுரண்டக் கூடாது.
சுரண்டல், நட்ட மூலமாகத் தடுக்கப்பட வேண்டும்.
சாதி, மதி பேதமுள்ள வரையில் ஒவ்வொரு வகுப்பிற்கும்,
மக்கள் தொகைகு ஏற்றவாறு உரிமை வழங்க வேண்டும்.
இதுவும் சட்டமூலம் செய்யப்பட வேண்டும்.
அப்போதுதான் அமைதி நிலைபெறும்.
தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்போக்கு வகுப்பினருக்கும்
சட்டப்படி சலுகைகள் காட்டப்பட வேண்டும்.
என் கல்வித் தந்தை
ரெவரெண்ட் W.H.பிளேக்
என் அரசியல் தந்தை
டாக்டர் டி.எம். நாயர்
என் சமூக சீர்திருத்தத் தந்தை
பெரியார் ஈ.வெ.ராமசாமி.
படிக்கப் படிக்க மனம் நெகிழ்ந்து போகிறது அல்லவா.
இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்திருக்கிறார், மற்றவர்களுக்காகச் சிந்தித்திருக்கிறார்.
அனைவரும் சாதி, மத பேதமின்றி வாழ, ஏழ்மை களைய விரும்பியிருக்கிறார், என்பதை நினைக்கும்போதே,
மனம், இவர்தான் மனிதர், இவர்தான் மனிதர், மாமனிதர் என ஆனந்தக் கூத்தாடுகிறது.
ஆனாலும், வேதனை என்ன தெரியுமா?
இவ்வறிகைகையின் இறுதியில், இதனையும் தாண்டி, இறுதிச் செய்தியாக, தனது எதிர்பார்ப்பாக, ஏக்கமாக
இவர், ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறார்.
நான் நடத்திவரும்
தொடக்கப் பள்ளி நிர்வாகம்
ஒழுங்காக நடைபெற வேண்டும்
என்பது எனது பேரவா.
இவரால் தொடங்கப் பெற்று, இவர் காலத்திற்குப்
பிறகு, இவர் பெயரையே, தன் பெயராகக் கொண்டு, தரம் உயர்ந்து, அரசு உதவிபெறும் பள்ளியாக,
ஐ.குமாரசாமி நடுநிலைப் பள்ளி
என்னும்
பெயருடன் கல்விப் பணியாற்றி வந்தப் பள்ளி இன்று
இல்லை.
ஏதேதோ காரணங்கள் சொல்கிறார்கள்.
காரணம் எதுவாக இருந்தாலும், பள்ளி இன்று இல்லை
என்பதுதான் உண்மை., பெரும் வேதனை.
இவர்தான்
ஐ.குமாரசாமி பிள்ளை.