03 மார்ச் 2025

பெரியாரும், உமாமகேசரும்

 


     தமிழின் இழந்த பெருமைகளை மீட்கவும், எப்பொழுதெல்லாம் தமிழர் மொழி, நாகரிகக் கலைகள் குலைக்கப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம், தமிழ் மக்களைத் தூண்டியுய்த்துப் பழம் பெருமைகளைக் காப்பதற்காக,


மீட்டெடுப்பதற்காகப் பெருமைமிகு கரந்தைத் திணையின் பெயரினையே, தன் பெயராகக் கொண்டு, காரணப் பெயராகக் கொண்டு, 1911 ஆம் ஆண்டு தோன்றிய தமிழ்ச் சங்கமாம், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவராய் அமர்ந்து, முப்பதாண்டுகள் ஒப்பிலாப் பணியாற்றியவர் தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் அவர்களாவார்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் தோற்றம் பெற்று மூன்றாண்டுகளைக் கடந்த நிலையில், 1914 ஆம் ஆண்டில், தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களின் உள்ளத்தில் ஓர் ஆசை எழுந்தது.

     திங்களிதழ் ஒன்றினைத் தொடங்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது.

     தமிழ் ஆய்வுக் கட்டுரைகளையும், சங்கச் செய்திகளையும், தமிழுலகிற்கு அறிவிக்கத், தெரிவிக்கத் திங்களிதழ் ஒன்றினைத் தொடங்க வேண்டும் என்னும் ஆவல் எழுந்தது.

     நிதிப்பற்றாக்குறை பெரும் தடையாய் எழுந்து வழி மறித்து நின்றது.

     1919 ஆம் ஆண்டில், தொடங்கப் பெறாமலே, நெஞ்சிலேயே நிலைத்து நிற்கின்ற இதழுக்கு, தமிழ்ப் பொழில் என்று பெயரும் சூட்டினார்.

     பதினோரு வருடப் போராட்டத்திற்குப் பின், 1925 ஆம் ஆண்டு, தமிழ்ப் பொழில் அச்சு வாகனம் ஏறியது.

     தமிழ்ப் பொழில் இதழினைத் தொடர்ந்து கவனித்து வந்த, தந்தை பெரியார், 1926 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 24 ஆம் நாள் வெளிவந்த, தனது குடியரசு இதழில் ஒரு வேண்டுகோளினை முன்வைக்கிறார்.

    


தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினின்றும் தமிழ்ப் பொழில் என்னும் பெயரில் ஒரு திங்கள் வெளியீடு, தமிழறிஞர் திருவாளர் ஆர்.வேங்கடாசலம் பிள்ளையவர்களை ஆசிரியராகக் கொண்டு, ஓராண்டு வெளிப்போந்து நற்பயன் அளித்தமை நேயர்களுணர்ந்திருக்கலாம்.

     என்றும் இடையறாது உரிய காலங்களில் வெளிவரற்குரிய சில முன் ஏற்பாடுகள் செய்தற் பொருட்டுப் பொழில் சிறிது காலந்தாழ்த்து வெளிவரும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆசிரியர்க்குள்ள அலுவல் மிகுதியால் சிறிய கால அளவு, கொஞ்சம் பெரிதாக நீண்டது.

     முன் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்கின்றன. நிற்க.

     தமிழ்ப் பொழிலின் முன்னேற்றங்கருதி உழைக்க, ஆங்கிலமும், தமிழும் கற்றுவல்ல அறிஞராகிய திருவாளர்கள் நீ.கந்தசாமி பிள்ளையவர்கள், எம்.ஆர்.ஏ.எஸ்., அரசர் மடம் பள்ளிக்கூடத் தமிழாசிரியர் சாமி.சிதம்பர உடையாரவர்கள் ஆகிய இருவரும் முன்வந்துள்ளார்கள்.

     இருவருள் முன்னவர் உதவி ஆசிரியர், பின்னவர் உடனின்று துணை செய்தலேயன்று, வெளியிடங்கட்குச் சென்று பொழிலிற்கு அன்பர்களைத் திரட்டும் உதவியாளர் ஆவார்.

     திருவாளர் உடையாரவர்கள் தாம் எய்தி வந்த ஊதியத்தினையும் விட்டுவிட்டுத் (தமது சுருங்கிய செலவுகளை மட்டும் பெற்றுக்கொண்டு) தொண்டு செய்ய முன்வந்திருப்பது மிகப்பாராட்டற்பாலது.

     செந்தமிழ்ச் செல்வர்கள், ஊதியம் கருதாது தமிழ்த் தொண்டோன்றே கருதித், தனித் தீந்தமிழில் வெளிவரும் பொழிலைப் புரந்து, தமிழ்த்தாயைப் போற்றி வருமாறு வேண்டுகிறோம். (குடியரசு, 24.10.1926)

     இச்செய்தி பலருக்கும் வியப்பளிக்கலாம்.

     பெரியாருக்கும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குமான உறவைவிட, பெரியாருக்கும், உமாமகேசுவரனாருக்குமான உறவு, தொடர்பு, நட்பு என்பது, கரந்தைத் தமிழ்ச் சங்கத் தோற்றத்திற்கும் முந்தைய காலத்தில் இருந்தே நீடித்து வந்த உறவாகும்.

     உமாமகேசுவரனாரோ பழுத்த ஆன்மீகவாதி.

     பெரியாரோ தீவிர நாத்திகவாதி.

     இவர்கள் இருவருக்கும் எப்படி நட்பு என்ற கேள்வி எழுகிறதல்லவா?

     பெரியாரும், உமாமகேசுவரனாரும் குழந்தைப் பருவம் முதல் நட்போடு பழகியவர்கள்.

     நம்ப முடியவில்லை அல்லவா?

     ஆனாலும், இதுதான் உண்மை.

     இதனைப் பெரியாரே எழுதுகிறார்.

     குடியரசு இதழில் எழுதுகிறார்.

     எழுதி இருக்கிறார்.

     1929 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் நாள், தஞ்சையை அடுத்த, காவிரிக்கரை நகராம், திருவையாற்றில் ஒரு விழா.

     பனகல் வாசகசாலைத் திறப்பு விழா.

     உமாமகேசுவரனார் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மட்டுமல்ல.

     நீதிக் கட்சியின் தஞ்சை மாவட்டத் தூண்களுள் முக்கியமானவர்.

     நீதிக் கட்சியின் சார்பில், தேர்தலில் நின்று, வென்று, வட்டக் கழகத் தலைவராய் 12 ஆண்டுகள் பணியாற்றியவர்.

     பனகல் வாசக சாலைத் திறப்பு விழாவில், உமாமகேசுவரனாரும் பங்கேற்கிறார்.

     சொற்பொழிவாற்றுகிறார்.

     மூன்று நாட்கள் கடந்த நிலையில், 4.3.1929 அன்று, சுதேசமித்திரன் இதழில், உமாமகேசுவரனார் பேசிய பேச்சு அச்சாகி வெளிவருகிறது.

     சுதேசமித்திரனை வாசித்தவர்கள் அதிர்ந்து போனார்கள்.

     உமாமகேசுவரனார் திகைத்துப் போனார்.

     உமாமகேசுவரனார் பேசாததை எல்லாம், பேசியதாக வெளியிட்டிருந்தது சுதேசமித்திரன்.

     குடியரசையும், திராவிடனையும் படித்துப் பிள்ளைகள் கெட்டுப்போகக் கூடாது. இந்த ஊருக்கு சுயமரியாதை இயக்கத்தார் வந்தால், அவர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது.

     இதுமட்டுமல்ல, இன்னும் பல விபரீதமான செய்திகளைப் பேசியதாக வெளியிட்டது.

     தான் பேசாத விசயங்களை மட்டுமல்ல, மனதால் என்றுமே நினைத்துக்கூட பார்க்காத விசயங்களை எல்லாம் சுதேசமித்திரன், தான் பேசியதாக வெளியிட்டதற்கு, உமாமகேசுவரனார் மறுப்பையும், தன் கண்டனத்தையும் பதிவு செய்தார்.

     இந்நிகழ்வினைப் பற்றிப் பெரியார், 1929 ஆம் ஆணடு, மார்ச் மாதம் 31 ஆம் நாள் வெளிவந்த, குடியரசு இதழில் விரிவாகவே எழுதினார்.

     உமாமகேசுவரனாருக்கும், தனக்கும் உள்ள நட்பை ஊரறிய, உலகறிய உரத்து முழங்கினார்.

    


திரு உமாமகேசுவரம் பிள்ளையவர்களிடம், நமக்கு குழந்தைப் பருவம் முதல் பழக்கமுண்டு. அவர் சுபாவத்தில் தன்னை அடிக்கடி தாழ்த்திப் பேசிக் கொள்ளுகின்ற பெருமையான குணமுடையவர்.

     மற்றவர்களிடம், உண்மையிலேயே குற்றம் கண்டுபிடித்தாலும், அதையும் தன்னைத் தாழ்த்திப் பேசிக்கொள்வதன் மூலமே, வெளிப்படுத்தும் கண்டிக்கும் ஆற்றலுடையவர்.

     நாமறிந்தவரை, அவர் அன்னியரை இகழ்ந்தோ, தாழ்த்தியோ பேசி, நாம் கேட்டதில்லை.

     இதைப் பற்றி நாம் ஏன், இவ்வளவு எழுத நேரிட்டது என்பதைப் பற்றிச் சிலர் ஐயுறக்கூடும். (அதாவது பிள்ளையவர்கள் இனியாவது குற்றம் கூறாமலிக்க வேண்டி, நாம் அவரைப் புகழ்வதாகச் சிலர் கருதக்கூடும்)

     உண்மையில் நாம், அதைப்பற்றி (பிள்ளையவர்கள் வசவைப் பற்றி) கவலை கொள்ளவில்லை.

     முதலாவது பிள்ளைக்கு வையத் தெரியாது.

     அப்படி மீறி, எங்காவது இரவல் வாங்கிக் கொண்டு வைதாலும், எத்தனையோ பேரின் வசவை, நித்தியமும் சகஸ்ர நாமமாகக் கொள்ளும் நமக்கு, பிள்ளையவர்களின் வசவு அதிக பாரமாய்ப் போய்விடாது.

     மற்றபடி என்னவென்றால், திரு பிள்ளையவர்கள், மித்திரன் கூற்றை மறுத்தெழுதிய தனிக் குறிப்பில் கண்டுள்ள, விசயமும், நமக்கும் பிள்ளைக்கும் பொதுவாழ்வு சம்பந்தமாக மாத்திரமல்லாமல், குடும்ப சம்மந்தமாகவும், பெரியோர்கள் காலம் முதல் 30, 40 வருஷமாக உள்ள நெருக்கமான பழக்கமும், மித்திரனின் பொய் நிருபத்தைக் கண்டு, எம் இருவர்களுடையவும், பல நண்பர்களுக்குள் அபிப்பிராய பேதம் நிகழ்ந்ததாகத் தெரிய வந்ததாலும், இக்குறிப்பு எழுத வேண்டியதாயிற்று.

     தந்தை பெரியார் அவர்களின் குடும்பம் வணிகக் குடும்பம் என்பதை அனைவரும் அறிவோம்.

     தமிழவேள் உமாமகேசுவரனாரும் வணிகக் குடும்பத்தைச் சார்ந்தவர்தான்.

     எனவே இரு குடும்பங்களும், வணிகரீதியில் தொடர்பில் இருந்த குடும்பங்களாகும்.

     வணிகத்தைக் கடந்த நட்பில் இணைந்திருந்த குடும்பங்களாகும்.

     1941 ஆம் ஆண்டு, வடபுலப் பயணம் மேற்கொண்ட தமிழவேள் த.வே.உமாமமேகசுவரனார், அயோத்திக்கு அருகில் உள்ள பைசாபாத் என்னும் சிற்றூரில், இவ்வுலக வாழ்வு துறந்து, சரயு நதிக்கரையில், தீயில் வெந்து, சாம்பலாய் எழுந்து, தமிழோடு கலந்தார்.


தமிழவேள் அவர்களோடு, வடபுலப் பயணம் மேற்கொண்டு, தமிழவேள் அவர்களின் திடீர் மறைவைக் கண்டு கதறி அழுது, தமிழவேள் அவர்களுக்கு இறுதிக் கடனாற்றிய, சங்க அன்பர் திரு அ.கணபதியா பிள்ளை அவர்கள், கரந்தையினை அடையும்முன், அவர் எழுதியக் கடிதம் கரந்தையினை வந்தடைந்தது.

     இக்கடிதத்தைப் படித்துப் பார்த்தாலே தெள்ளத் தெளிவாகத் தெரியும், கணபதியா பிள்ளை அவர்கள், உமாமகேசுவரனாரைப் பற்றியப் பெரியாரின் கருத்துகளைத்தான் வழிமொழிந்துள்ளார் என்பதும் புரியும்.

    


தமக்கெனச் சிறப்பேதும் வேண்டாத் தம் உண்மைக் கருத்தினாலேதான், நண்பர், உற்றார், உறவினர், சங்கச் செல்வர்கள் எல்லாரையும் விட்டு, இங்கு அயோத்தியில், யாரும், தம் பெருமையறியாதபடி, தனித்த முத்தி தேடிக்கொண்டார்கள் போலும்.

     தமிழவேளின்  பிரிவு அறிந்து, பெரியாரும் கலங்கித்தான் போனார்.

    


என் அன்பரும், நெடுநாள் உற்ற துணைவருமாயிருந்த, காலஞ்சென்ற உமாமகேசுவரரைக் குறித்து, இத்தமிழ்நாடு, ஈடு செய்ய முடியாத பெரு நஷ்டத்தையடைந்ததாகக் கூறலாம்.

    


ஆத்திகவாதியின் பிரிவு கண்டு கலங்கிய நாத்திகவாதி பெரியார்.

     நாத்திகவாதியின் நட்பை கற்பைப் போல் காத்த ஆத்திகவாதி உமாமகேசுவரனார்.


ஆத்திகமும், நாத்திகமும்

அன்பால், நட்பால்

இணைந்த

வரலாறுதான்

பெரியார், உமாமகேசர் வரலாறு.

பெரியோர்களைப்

போற்றுவோம்

வணங்குவோம்