23 ஜனவரி 2026

கும்பகோணம் ஜாலியன் வாலாபாக்

 


     ஆண்டு 1942.

     ஆகஸ்ட் 16.

     போர்ட்டர் அரங்கிற்கு எதிரில் ஒரு பெரும் போராட்டம் .

     வெள்ளையனே வெளியேறு போராட்டம் .

     போராட்டம் உச்ச நிலையை அடைந்த போது , தொடங்கியது அந்த மழை .

     குண்டு மழை .

     போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை , ஆங்கிலேய அரசு கண்மூடித்தனமாக அணிவகுத்து நின்று சுட்டது .

     ஒருவர் , இருவர்அல்ல , 21 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர் .

     இறந்து போனவர்களின் உடல்களைக்கூட , ஆங்கிலேயர்கள் விட்டு வைக்கவில்லை .

     இறந்து போனவர்களின் உறவினர்கள் , இறந்தவர்களை கடைசியாய் ஒருமுறைக் கண்ணாரக் காண்பதற்கோ அவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கோ கூட வாய்ப்பு கொடுக்கவில்லை .

     ஒரு வண்டியில் , மூட்டைகளை ஏற்றுவதுபோல் , இறந்தவர்களின் உடல்களை , ஒன்றின்மேல் ஒன்றாகத் தூக்கிப் போட்டனர் .

     பின்னர் , நெடுந்தூரம் பயணித்து , கொள்ளிடக் கரை வரை சென்று , 21 உடல்களையும் , இந்திய விடுதலைக்காக உயிர் நீத்த , அந்த வீரத் தியாகிகளின் உடல்களை , கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் வீசி எறிந்தனர் .

     படிக்கும்போதே , நெஞ்சம் பதறுகிறது அல்லவா ?

     இந்தக் கொடூரம் , எங்கு அரங்கேறியது தெரியுமா ?

     தஞ்சை மாவட்டத்தில் .

     கும்பகோணத்தில் .

     காங்கேயன் குளத்திற்கு எதிரில் .

     காந்தி 1921 ஆம் ஆண்டு , இவ்விடத்தில் பேசியதால் , காந்தி பூங்கா எனப் பெயர் மாற்றம் பெற்றது , காந்தி பூங்காவிற்கு எதிரில் .

     வாழ்நாள் முழுவதும் , அகிம்சையை போதித்தவரின் பெயர் தாங்கி நின்ற எதிரில் , ஆங்கிலேயர்களின் கோரத் தாண்டவம் .

     ஆங்கிலேயர்களின் கோரத் தாண்டவத்தை பறைசாற்றியபடி , இன்றும் இங்கே நிற்கிறது ஒரு கல்வெட்டு .

     கும்பகோணம் ஜாலியன் வாலாபாக் .

     இத்துயர நிகழ்வு குறித்த ஆவணங்கள் சேகரிக்கப்பட வேண்டும் , உயிர் நீத்த தியாகிகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும் .

     இம்கொடும் பாதகத்தை அரங்கேற்றிய ஆங்கிலேய அதிகாரிகளின் பெயர்கள் , வரலாற்றில் கரும் புள்ளிகளாய் பதிவு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது , வற்புறுத்துகிறது , இந்த நூல் .

---

     தீண்டாமை ஒழியும்போது , ஜாதியும் தானே ஒழியும் என்றார் காந்தி .

     ஜாதி ஒழியாமல் தீண்டாமை ஒழியாது என்றார் அம்பேத்கர் .

     அம்பேத்கருக்கும் காந்திக்கும் ஜாதிய ஏற்றத் தாழ்வுகளை போக்குவதிலும் , தீண்டாமையை எதிர்த்து செயல்படுத்துவதிலும் ஒரே குறிக்கோள்தான் .

     ஆனால் , அவைகளை நடைமுறைப் படுத்துவதில் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டார்கள் .

     இருவருக்கும் இலட்சியம் ஒன்று .

     பாதை வேறு .

     பின் வேறுபாடுகளும் , முரண்பாடுகளும் எப்படி வந்தன ?

     அவர்கள் வேறுபட்டது எங்கே ?

     விடையளிக்கிறது இந்த நூல் .

---

     காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியபோது , பகத் சிங் , அந்த இயக்கத்தில் , தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டார் .

     ஆனால் , 1922 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் நாள் , சௌரி சௌரா சம்பவத்தினால் , காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபோது , பகத் சிங் , காந்தியின் மீதான நம்பிக்கையை இழந்தார் .

     ஒத்துழையாமை இயக்கம் தோல்வியுற்றால் , அதற்கு மாற்றாக , வேறு வழியில் போராட்டத்தைத் தொடங்க வேண்டுமே தவிர , இப்படிப் பாதியில் நிறுத்துவது தவறு . என்ற பகத் சிங் கருதினார் .

     இருவருடைய நோக்கமும் இந்திய விடுதலைதான் .

     ஆனால் வழிமுறைகள் வேறு வேறாக மாறிப் போன .

     பின் என்னவாயிற்று ?

     பகத் சிங் தூக்கு மேடையில் நின்றபோது , காந்தி அதனைத் தடுத்திட முயற்சி எடுத்தாரா ? இல்லையா ?

     விடையளிக்கிறது இந்த நூல் .

---

     இந்தியாவிற்குச் சுதந்திரம் வேண்டும் .

     அந்த சுதந்திரத்தை காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை , அகிம்சை முறையில்தான் , அகிம்சை வழியில்தான் பெற வேண்டும் என்று காந்தி கருதினார் .

     இந்தியாவிற்குச் சுதந்திரம் வேண்டும் .

     அதுவும் உடனடியாக வேண்டும் .

     இதனை அடைவதற்கு , எந்த வழிமுறையும் ஏற்றதுதான் என்று நேதாஜி கருதினார் .

     காந்தியும் , நேதாஜியும் தங்களுக்குள் ஒற்றுமையே இல்லாமல் , எதிரெதிர் திசையில்தான் இருந்தார்களா ?

    விடையளிக்கிறது இந்த நூல் ?

---

      தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் , கப்பலோட்டிய தமிழன் வ . . சிதம்பரனார் அவர்களுக்காக , காந்தியிடம் கொடுத்தனுப்பிய பணத்தை , . . சிதம்பரனார் அவர்களிடம் கொடுக்காமல் , காந்தி ஏமாற்றி விட்டாரா ?

     விரிவாய் விடையளிக்கிறது இந்த நூல் .

---

     காந்தி .

     காந்தியின் மதம் எது ?

     காந்தியின் ஆன்மிகம் என்பதுதான் என்ன ?

     இதென்ன கேள்வி என்கிறீர்களா ?

     இதற்கும் பதில் கூறுகிறது இந்த நூல் .

     சக மனிதரின்மேல் இருக்கும் கருணையே காந்தியின் மதம் .

     வேதாந்தம் அல்ல , காந்தியின் மதம் .

     எல்லா சமூகமும் சண்டை சச்சரவுகளை விடுத்து , அனைவரும் ஒன்றாகச் செயல்பட மதம் பயன்பட வேண்டும் என்று எண்ணித்தான் காந்தி செயல்பட்டார் .

     இறை நம்பிக்கை என்பது , நெற்றியில் திருநீறு அணிந்து ஆலயங்களுக்குச் சென்று வணங்குவது , சிலுவை அணிந்து தேவாலயம் சென்று வழிபடுவது , தொப்பி அணிந்து பள்ளிவாசல் சென்று தொழுவது மட்டும் அல்ல .

     தன்னலம் துறந்து , பொதுநலன் நாடுபவனே ஆன்மிகவாதி .

     இதுதான் காந்தியின் ஆன்மிகம் .

     இப்படி காந்தியின் மதத்தையும் , ஆன்மிகத்தையும் இன்னும் விரிவாய் விவரித்துக் கொண்டே செல்கிறது இந்த நூல் .

---

     காந்தியடிகளைப் பற்றிய நூல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கின்றன . உலகின் பல்வேறு நாடுகளில் , பல்வேறு மொழிகளில் , ஏதோ ஒரு மூலிகையிலிருந்து நூல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன .

     காந்தி பிறந்து 156 ஆண்டுகள் ஆனாலும் , அவர் இறந்து 7 ஆண்டுகள் கடந்த பிறகு , இன்றும் ஆய்வாளர்களின் முக்கிய ஆளுமையாக காந்தியே தொடர்கிறார் .

     இந்தியாவிலும் பல்வேறு மொழிகளில் காந்தியச் சிந்தனைகளைத் தாங்கிய நூல்கள் புத்தம் புதிதாய் , வேர்விட்டு முளைத்துக் கொண்டே இருக்கின்றன .

     ஆனாலும் , இந்த நூலைப் போல் ஓர் ஆய்வு நூல் , தமிழில் வெளிவந்ததே இல்லை என்றுதான் கூற வேண்டும் .

     வாராது வந்த மாமணியாய் வெளிவந்திருக்கிறது இந்த நூல் .

     காந்தியின் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் , விமர்சனங்களுக்கும் ,  காந்தியின் வழக்கறிஞராக நின்று , தகர்க்க இயலாத தகுந்த தரவுகளை முன்வைத்து வாதாடி , காந்தி மீது வீசப்பட்டக் கரைகளை எல்லாம் களைந்து , நீக்கி , முழுதாய் துடைத்தெறிந்து நம்மை நெகிழ வைக்கிறது இந்த நூல் . 

காந்தியத் தடம்

     இந்நூலின் ஆசிரியர் ஒரு காந்தியவாதி .

     தென்னாப்பிரிக்காவின் , பீட்டர் மாரிட்ஸ்பர்க் புகைவண்டி நிலையத்தில் , புகைவண்டியின் , முதல் வகுப்புப் பெட்டியில் இருந்து காந்தி , தள்ளிவிடப்பட்ட நாள் 1893 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் நாள் .

     இந்நிகழ்வின் 130 ஆவது ஆண்டு நினைவு நாளின்போது , அதே ஜுன் மாதத்தில் , அதே 7 ஆம் தேதி , காந்தி தள்ளிவிடப்பட்ட அதே இரவு நேரத்தில் , தொடர் வண்டியில் இருந்து காந்தி கீழே விழுந்த , அதே , அதே இடத்தில் நின்று , நெஞ்சம் விம்மியவர்தான் , இந்த நூலின் ஆசிரியர் .

    










தஞ்சாவூர் , பூண்டி புட்பம் கல்லூரியில் , வணிகவியல் துறைப் பேராசிரியராக 36 ஆண்டுகள் பணியாற்றியவர் .

     வணிகவியல் துறைப் பேராசிரியர் எப்படி காந்தியவாதியாக முற்றாய் மாறிப்போனார் என்னும் கேள்வி எழுகிறதல்லவா ?

     பல காரணங்கள் இருக்கலாம் .

     ஆனாலும் முக்கியமாய் நம் கண்முன் , ஒரு காரணம் தெள்ளத் தெளிவாய் தெரிகிறது .

     பூண்டி புட்பம் கல்லூரியின் தாளாளரும் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் , காங்கிரஸ் இயக்கத்தின் மாநிலத் தலைவர்களுள் ஒருவராய் விளங்கியவரும் , காந்தியக் கொள்கைகளில் முழுவதுமாய் மூழ்கிய , மூத்த , பழுத்த காந்தியவாதியாய் விளங்கிய ,

பூண்டி கி . துளசி ஐயா வாண்டையார் அவர்களின்

தனிச் செயலாளராய் , 26 ஆண்டுகள் உடனிருந்து பணியாற்றியது , நிச்சயம் ஒரு காரணமாக , முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும் என்பது புரிகிறது .

காந்தியத் தடம்

இவர் , தனது இந்த நூலினைக் கூட ,

பூண்டி கி . துளசி ஐயா வாண்டையார் அவர்களுக்குத்தான்

படையலிட்டிருக்கிறார் .


எனக்கு எல்லாமா இருந்துச்சு

என் வாழ்க்கையே என் செய்தி

என்று எனக்கு , உணர்த்தி வழிகாட்டிய

பெருமகன் , காந்திய நெறியாளர்

பூண்டி கி . துளசி ஐயா வாண்டையார்

அவர்களுக்கு

இந்நூல்

சமர்ப்பணம்

என மனமகிழ்வோடு படையல் இட்டிருக்கிறார் .

இவர் ,

தென்னாப்பிரிக்காவில்

காந்தியத் தடத்தின் வழிப் பயணித்த போது ,

மகாத்மா காந்தியின் பெயர்

இலா காந்தி அவர்களால்

பாராட்டப்பெற்றவர் .

இவர்தான் ,


பேராசிரியர் கோ . விஜயராமலிங்கம் .

இவரது நூல்



காந்தியத் தடம்

காந்தியத் தடத்தில் பயணிப்போம் வாருங்கள் .

 

 

காந்தியத் தடம் ,

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ( பி ) லிட் .,

விலை ரூ .255

 

நூலாசிரியரின் அலைபேசி எண் .

94 43 13 73 57