எழுத்துலகில் , அற்புத உணர்வுலகில் , ஈடு இணையில்லாத நட்புலகில் , யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் கணியன் பூங்குன்றனாரின் அகன்று விரிந்த பார்வையினை உண்மையாக்கி , பரந்து விரிந்த இப் பூஉலகினையே ஒரு குடை நிழலின் கீழ் கொண்டு வந்த , வலைப் பூ என்னும் இணைய உலகில் நுழைந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன .
தட்டுத் தடுமாறி , தளிர் நடைபோட்ட எழுத்துக்களோடு , உள் நுழைந்த என்னை , வலைப் பூ உலகமே இருகரம் நீட்டி வரவேற்றது ,
உச்சி முகர்ந்து மகிழ்ந்தது .
எழுது , எழுது என அன்போடு முதுகில் தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்தியது .
வலைப் பூவில் காலடி எடுத்து வைக்க ,
காரணமாக இருந்த ,
பௌத்த ஆய்வாளர்
முனைவர் பா . ஜம்புலிங்கம் அவர்களையும் ,
பார்த்ததை எல்லாம் எழுது ,
படித்ததை எல்லாம் எழுது , உணர்ந்ததை எல்லாம் எழுது , அனுபவித்ததை எல்லாம் எழுது , மகிழ்வினை எழுது , துயரினை எழுது , வலியினை எழுது , எழுது , எழுது என வழிகாட்டிய
கவிஞர் , எழுத்தாளர் ஹரணி என்று அழைக்கப்படும்
பேராசிரியர் முனைவர் க . அன்பழகன் அவர்களையும்
நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன் .
இன்று உலகெங்கும் நட்புறவுகள் .
கடந்த 15 ஆண்டுகளாக என் எழுத்துக்கள் ,
பதிவுகளைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் ,
தமிழ் உறவுகளுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தையால் ,
சிறு வார்த்தையால் , குறும் வார்த்தையால் , மூன்றே மூன்று எழுத்துக்களால் , நன்றி சொல்ல இயலாது என்பதை நான் நன்கு அறிவேன் .
இருப்பினும் நன்றி என்ற உள்ளார்ந்த உணர்வினைத் தவிர , நெஞ்சமெல்லாம் ததும்பிக் கொண்டிருக்கும் , எல்லையில்லா அன்பினைத் தவிர , சொல்வதற்கும் , கொடுப்பதற்கும் என்னிடம் ஏதுமில்லை .
கடந்த 2011 ஆம் ஆண்டு , ஆகஸ்ட் திங்கள் 23 ஆம் நாள் , வலைப் பூவில் பதிந்த முதல் பதிவினை நினைத்துப் பார்க்கிறேன் .
உமாமகச
தமிழ் முனியே
ஆயிதி
முதல் வணக்கம் .
உனை எழுதும்
பித்தன் எனக்கு
சொல்லெடுத்துத் தருவாய்
தனித் தமிழ் அருள்வாய் .
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவராய் , ஒப்பிலா தலைவராய் அமர்ந்து , முப்பதாண்டுகள் அரும்பணியாற்றிய
தமிழவேள் உமாமகேசுவரனாரை வணங்குகிறேன் .
சங்கம் நிறுவிய துங்கன் இராதாகிருட்டினன்
கரந்தைக் கவியரசு அரங்க.வேங்கடாசலம்
இரகுநாத இராசாளியார்
கூடலூர் இராமசாமி வன்னியர்
சிவ.குப்புசாமி பிள்ளை முதலான என் நெஞ்சுக்கு நெருக்கமான, சங்கச் சான்றோர்களை வணங்குகிறேன்.
சங்க வளாகத்தில், சிறு கல்லாய் இருந்து, கணபதியாய் மலர்ந்து, சங்கத்தைக் காத்துவரும் சங்க
கணபதியை வணங்குகிறேன்.
கரந்தை
மண்
கந்தக
மண்
தமிழுணர்வு
வெப்பமாகத்
தகிக்கின்ற
மண்
தமிழவேள்
உமாமகேசுவரனார்
தமிழ்
வேள்வி நடத்திய பூமி அது.
இந்தக்
கரந்தைத்
தமிழ்ச் சங்க
மண்ணில்
ஒரு
சிட்டிகை
உப்புக்கு
பதிலாக
உணவில்
சேர்த்துக் கொண்டால்
சொரணை
செத்தவர்களும்
பிழைத்துக்
கொள்ளலாம்
என்று எழுதுவார்
மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள்.
ஆம்,
உண்மைதான்
கணித ஆசிரியரான என்னையே, ஏடெடுத்து எழுத வைத்த பெருமை கரந்தைத்
தமிழ்ச் சங்கத்தையே சாரும்.
கரந்தை மண்ணை வணங்குகிறேன்.
மனம் மகிழ்கிறது.
நெஞ்சம் விம்முகிறது.
காரணம்
பத்து இலட்சம்.
கடந்த 15 ஆண்டுகளாக, என் வலைப் பூவிற்கு வருகை தந்து
வாசித்து வாழ்த்திய,
நல் உள்ளங்களின்
எண்ணிக்கை சிறுகச் சிறுக சேர்ந்து, மெல்ல, மெல்ல உயர்ந்து, இன்று பத்து இலட்சத்தை எட்டிப்
பிடித்திருக்கிறது.
உங்களின்
மாறா அன்பு.
உங்களின்
பொற்கரங்களில்,
என் இதயத்தை
வைத்துக் கூறுகிறேன்,
என்றும்
வேண்டும் இந்த அன்பு.



