------ கடந்த வாரம் ------
ஏழூர்
திருவிழாவானது சிறக்கப் பல்லாற்றானும் பாடுபட்ட பெருமைக்கு உரியவர் உமாமகேசுவரனார்
அவர்களாவார்
-------------------------
இராதாகிருட்டினன் மறைவு
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய
பெருமையினைப் பெற்றமையால், சங்கம் நிறுவிய துங்கன் எனப் போற்றப் பெற்றவர்
இராதாகிருட்டினன். தன் முயற்சியால் தோன்றிய கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் எவ்விதப்
பதவியினையும் ஏற்காமல், அடிப்படை உறுப்பினராய் இருந்து பெருந்தொண்டாற்றிய
பெருமைக்கு உரியவர் இவர். சங்கம் வளர உறுப்பினர்களின் எண்ணிக்கையினை
அதிகப்படுத்துவதுதான் முதற் படி என்பதை உணர்ந்த இராதாகிருட்டினன், தான் பணியாற்றிய
தனுக்கோடி அலுவலகத்தில் தன்னுடன் பணியாற்றும் சக அலுவலர்களையும், தனுக்கோடியின்
வணிகர்களையும், ஒப்பந்தக் காரர்களையும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில்
உறுப்பினர்களாக்கினார்.
தன் மனைவி செண்பக வள்ளி அம்மாள் அவர்களையும், 1916 ஆம் ஆண்டிலேயே,
கரந்தைத் தமிழ்ச் சங்க உறுப்பினராக்கினார். இராதா கிருட்டினனின் மனைவி செண்பக
வள்ளி அம்மாள் அவர்கள்தான், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினர்
என்ற பெருமையினைப் பெற்றவராவார.
இத்தகு பெருமை வாய்ந்த சங்கம் நிறுவிய துங்கன் இராதாகிருட்டினன், அவர்கள்,
27.2.1918 அன்று தனது 33 ஆம் வயதில் அகால மரணமடைந்து, அனைவரையும் மீளாத் துயரில்
ஆழ்த்திச் சென்றார்.
என்றிளைய பருவத்தே
எழுந்துநின் னட்பம்மா
அன்றுமுதல் யாமெய்துஞ்
சீரெல்லாம் அதன்பயனே
நன்றுதரும் நண்பாவோ நண்பாவோ
நண்பாவோ
ஒன்றுளத்து நினையன்றெம்
மூக்கமதே யிழந்தனமே
வள்ளுவர்தம் திருநாளே
நின்னாளா மாண்புற்றோய்
ஒள்ளியசீர் நின்மக்கள்
உன்புகழை ஏந்துவரால்
நள்ளிய நின்காதலியை,
நம்முன்னை நண்பர்களை
விள்ளரிய
துயரடக்கிப் பொறுமைகொள வேண்டுதுமே
என்று அரங்க. வேங்கடாசலம் பிள்ளை
அவர்களும்,
மதிவலி யானே
பதிநலம் பேணினை
நவிறொறு நூனயம்
போலத் தவிரா
வின்பு சுரக்க வியைந்த
கேண்மையி
னட்டனை மன்னே முன்னே யெம்மொடு
விட்டனை யினியாம்
விழுமங் கூர
இனையை யாகலின்
இராதா கிருட்டின
ஒளியு மிருளும்
போல
அளியகண் டேமிவ்
வகனில வாழ்க்கையே
என்று பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார்
அவர்களும்,
சீரார் கரந்தைத்
திருப்பதியி லங்குரித்த
பேரா ரிராதா
கிருட்டினப்பேர் பெற்றவனே
ஏராரு நின்புகழை
யிவ்வுலகி லேநிறுத்தி
நீரார் சடைமுடியோன்
நீள்கழல்சென் றுற்றனையே
தீந்தமிழி லாங்கிலத்திற்
றேர்ச்சிபெறு நுண்ணறிவாய்
ஏய்ந்த கரந்தை
யெழிலார் தமிழ்ச்சங்கம்
வாய்ந்த புகழ்பரவ
மன்னுவித்தா யக்கழகம்
பாய்ந்து பெருகுவதைப்
பாராது சென்றனையே
என்று கூடலூர் வே. இராமாசாமி வன்னியர்
அவர்களும் கையறு நிலைச் செய்யுட்களைப் இயற்றி இராதாகிருட்டினன் பிரிவு தாளாது
துயருற்றனர்.
இராதாகிருட்டினன் கழகம்
சங்கம் நிறுவிய
துங்கன் இராதாகிருட்டினன் அவர்களின் நினைவினைப் போற்றும் வகையில், கரந்தைத்
தமிழ்ச் சங்கச் செந்தமிழ்க் கைத்தொழில கலாசாலையில், அதன் தலைமையாசிரியரும்,
இராதாகிருட்டினனின் ஆருயிர் நண்பருமான கவிஞர் அரங்க.வேங்கடாசலம் பிள்ளை அவர்களால்,
இராதாகிருட்டினன் கழகம் தோற்றுவிக்கப் பட்டது.
தமிழ் மொழியில் மாணவர்கள் தேர்ச்சியுறுவது போல், ஆங்கிலத்திலும் நன்கு
தேர்ச்சி பெற வேண்டும் என்னும் நோக்கத்தின் அடிப்படையில், இக் கழகத்தின் சார்பில்,
ஒவ்வொரு திங்கட் கிழமையும், ஒரு கூட்டம் கூட்டப் பெற்றறு, இக்கூட்டத்தில், கட்டுரை
வரைதல், பேசப் பழகுதல், செய்யுள் இசைத்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பெற்றன.
இராதாகிருட்டினன் படத் திறப்பு
இராதாகிருட்டினப்
பிள்ளையின் மறைவினைத் தொடர்ந்து, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஏழாம் ஆண்டு
விழாவானது ஒத்திவைக்கப் பட்டது.
எனவே 1919 ஆம் ஆண்டில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஏழு மற்றும் எட்டாம்
ஆண்டு விழாக்கள் சேர்ந்து, 24.5.1919 மற்றும் 25.5.1919 ஆகிய இரு நாட்கள்
கொண்டாடப் பெற்றன.
முதல் நாள் விழாவின் போது 24.5.1919 இல், கரந்தைத் தமிழ்ச் சங்கம் கண்டு,
தண்டமிழ்த் தொண்டின் வழிதுறை காட்டிய பெருந்திருவாளர் இராதாகிருட்டினனின்
நண்பர்களால், சங்கத்திற்கு உதவப்பெற்ற, இராதாகிருட்டினனது, திருஉருவப் படம்,
உயர்திரு ஞானியார் சுவாமிகளால் திறந்து வைக்கப் பெற்றது.
தமிழ் ஓர் உயர் தனிச் செம்மொழியே
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், 24.5.1919 மற்றும் 25.5.1919 ஆகிய
இரு நாட்களில் கொண்டாடப் பெற்ற, ஏழு மற்றும் எட்டாம் ஆண்டு விழாவின் போது வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் ஓர் உயர் தனிச் செம்மொழியே என்னும் தீர்மானம்
இயற்றப் பெற்றது.
தமிழ் மொழியானது தொன்மையும், சீர்மையும், செம்மையும் வாய்ந்து
விளங்குகின்ற ஓர் உயர் தனிச் செம்மொழியென உறுதிபட, பல திறத்தாராலும் ஏற்றுக்
கொள்ளப்படுவதால், சென்னைப் பல்கலைக் கழகத்தார், தாம் இதுகாறும் கொண்டிருந்த
கொள்கையை மாற்றி, தமிழ் உயர் தனிச் செம்மொழியே என்பதை ஒப்புக் கொண்டு, இத்
தென்னாட்டுப் பல்கலைக் கழகத்தில், அதற்கு முறைப்படி முதலிடமும், உரிமைகளும்
கொடுக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள் என்ற தீர்மானம் இயற்றப்பட்டது. இத்
தீர்மானமானது, சங்க உறுப்பினர்களான, திரு டி.எஸ்.சபாபதி பிள்ளை அவர்களால்
முன்மொழியப்பட்டு, திரு எம். அப்பாவு முதலியார் அவர்களால் வழி மொழியப்
பட்டது.
இத்தீர்மானமே தமிழ்
மொழியை உயர் தனிச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமென்று, அமைப்பு ரீதியாக
இயற்றப்பெற்ற முதல் தீர்மானமாகும். இத் தீர்மானமானது, சென்னைப் பல்கலைக் கழகத்
தலைவர் அவர்களுக்கும், துணைத் தலைவர் அவர்களுக்கும், சென்னை ஆட்சி அமைச்சர்
அவர்களுக்கும் முறைப்படி அனுப்பப் பட்டது.
1919 ஆம் ஆண்டு உமாமகேசுவரனார் கையெழுத்திட்டு அரசுக்கு அனுப்பிய கடிதம் |
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஒன்பதாம் ஆண்டு விழாவானது, 21.8.1920 அன்று
திருவாளர் எஸ். சோமசுந்தர பாரதியார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவின் போது, எவ்வளனும் இனிது வாய்ந்துள்ள தமிழ் மொழியை, உயர் தனிச்
செம்மொழி வரிசையில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று பலமுறையும், சென்னைப் பல்கலைக்
கழகத்தாரை வற்புறுத்தியும். அவர்கள் இன்னும்
அவ்வாறு செய்யாமலும், கட்டாயப் பாடமாக ஏற்படுத்தாமலும் இருப்பது பிசகென்று
அறிவிப்பதோடு, இனியாவது அவர்கள், தமிழை உயர்தனிச் செம்மொழியாகக் கொள்வதுடன்,
கட்டாய முறையாகவும், கூடியவரை கல்லூரிகளில் கலை பயில் கருவி மொழியாகவும் கொண்டு,
தங்கள் முதற் கடமையை செலுத்தும்படி அவர்களை இப்பொருங்கூட்டத்தார் கேட்டுக்
கொள்கிறார்கள் என்னும் தீர்மானம் இயற்றப் பட்டது. இத் தீர்மானத்தினை
திருவாளர் வி.ஏ. சகராயப் பிள்ளை அவர்கள் முன் மொழிய, திருவாளர் ஐ.குமாரசாமி
பிள்ளை அவர்கள் வழி மொழிந்தார்.
1921 ஆம் ஆண்டில்
சென்னை மாகாண ஆட்சித் தலைவர் அவர்கள் தஞ்சாவூருக்கு வருகை தந்தபோது, செந்தமிழ் மொழியினை,
உயர்தனிச் செம்மொழியாக அறிவிப்பது தொடர்பாகக் , கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்
சார்பாக, திருவாளர் ராவ் பகதூர் வீ.அ. வாண்டையார் அவர்கள் தலைமையில், ஒரு
குழுவினர் சென்று சந்தித்து, தங்கள் கோரிக்கைகளை நேரில் எடுத்துரைத்தனர்.
கரந்தைத் தமிழ்ச்
சங்ககத்தின் பதினோராவது ஆண்டு விழாவானது, 18.11.1922 மற்றும் 19.11.1922 ஆகிய
தேதிகளில், திருவாளர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் தலைமையில்
நடைபெற்றது. இவ்விழாவின்போது, விசுவபாரதிக் குடையார் தமிழை உயர்தனிச்
செம்மொழியாகச் சம்மதித்து, அதனை அவர்கள் பாட வரிசையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்தியாவின்
தொன்மை வரலாறு எழுதுவோர்க்குத் தென் இந்திய வரலாறு இல்லையாயின், முற்றுப்
பெறாததாலும், வேண்டிய செய்திகள் சங்கத் தமிழ் நூல்களில் மட்டும்
கிடைக்குமாதலாலும், உலகத்து நாகரீகமுற்ற நாடுகளில் தமிழ் நூல், தமிழ் அறிவுப்
பரப்பை மிகுவிக்க வேண்டுமென்றும், அவர்களை இப்பெருங்கூட்டாத்தார் கேட்டுக்
கொள்கிறார்கள் எனும் தீர்மானம் இயற்றப் பட்டது.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பன்னிரண்டாம் ஆண்டு விழா, 22.9.1923 மற்றும்
23.9.1923 ஆகிய தேதிகளில் தமிழ் வள்ளல் சா.ராம.மு.சித. பெத்தாச்சி செட்டியார்
அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் போது, உலகத்து உயர் தனிச் செம்மொழிகளில், முதல்
மொழியென கருதுப் படுவதற்கு உரித்தான எல்லா இலக்கணமும் தமிழ் மொழி உடையதாக
இருப்பதால், அதனை அத்தகைய மொழியாக ஆட்சியாளர்கள் கருதி, ஐ.சி.எஸ்., பட்டத்திற்கு
அதனை ஒரு பாடமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று, இந்திய அரசியலாரை இப்பெருங்
கூட்டத்தார் கேட்டுக் கொள்கிறார்கள் எனும் தீர்மானம் இயற்றப் பட்டது.
இதே விழாவில் மீண்டும், மிகவும் பழைமையான காலந்தொட்டு, நாகரிகம்
அடைந்துள்ள நாடுகளில், தமிழ் நாடும் ஒன்றாகலானும், இலக்கியச் செழிப்பிலும், தத்துவ
அறிவின் உயர்விலும், பண்டைய நாகரிகத்தின் பயனுடைமையிலும், உலகத்து பழைமையான
மொழிகளில் எவ்வகையிலும் குறைவுபடாது, அழியா நிலைமை எய்தியுளதாய் தமிழ் மொழி
சிறப்பெய்தி வரலானும், இந்திய நாட்டின் தொன்மை வரலாற்றை வரைவோர்க்குத்,
தென்னிந்திய வரலாறு இல்லையாயின் மிகவும் முடைப் படுவாராகையாலும், அவ்வாறு
முடைபடாதிருத்தற்கு வேண்டிய செய்திகள், சங்கத் தமிழ் நூல்களில் மட்டுமே கிடைக்கக்
கூடுமாதலாலும், விசுவபாரதிக்கு உடையார், தமிழை உயர் தனிச் செம்மொழியாகக் கொண்டு,
தற்காலத்து நாகரிகமடைந்த எல்லா நாடுகளிலும் தமிழ் நூலையும், தமிழறிவுப் பரப்பையும்
மிகுவிக்க வேண்டுமென்று அவர்களை இப்பெருங் கூட்டத்தார் கேட்டுக் கொள்கின்றனர்
எனும் தீர்மானம் இயற்றப்பட்டது.
கரந்தைத் தமிழ்ச்
சங்கத்தின் வெள்ளி விழாவானது, 1938 அம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15,16 மற்றும் 17 ஆகிய
தேதிகளில் நடைபெற்றது. வெள்ளி விழாவிற்குத் தலைமையேற்ற, திரிப்பாதிரிப்
புலியூர் ஞானியாரடிகள், தன் உரையில், இத்தகைய பெருமையும், இனிமையும் உடைய
தமிழை, உயர்தனிச் செம்மொழி என்ற நிலையில் அரசியலார் போற்றாதிருப்பது கவலத்
தக்கதாகும் என்று தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.
.... வருகைக்கு நன்றி நண்பர்களே மீண்டும்
சந்திப்போமா