27 ஜூன் 2013

கரந்தை - மலர் 14


------- கடந்த வாரம் -----
திரிப்பாதிரிப் புலியூர் ஞானியாரடிகள், தன் உரையில், இத்தகைய பெருமையும், இனிமையும் உடைய தமிழை உயர்தனிச் செம்மொழி என்ற நிலையில் அரசியலார் போற்றாதிருப்பது கவலத் தக்கதாகும் என்று தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.

சிலப்பதிகாரம், மணிமேகலை நாடகங்கள்

     தமிழ் மொழியானது இயல், இசை, நாடகம் என்னும் மூன்று கூறுகளை உடையது. முத்தமிழ் என்று போற்றப்படும் தமிழில், பழமையான இயற்றமிழ் நூல்கள் கிடைத்த அளவிற்கு, இசைத் தமிழ் நூல்களும், நாடகத் தமிழ் நூல்களும் கிடைத்தபாடில்லை. இக்குறையினைப் போக்க பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் மனோன்மணீயம் நாடகத்தையும், பரிதிமாற் கலைஞர் அவர்கள், மானவிஜயம் என்னும் நாடகத்தையும், மறைமலை அடிகள் அவர்கள் சாகுந்தலம் என்னும் நாடகத்தையும் எழுதி நாடகத் துறைக்கு வித்திட்டார்கள்.
 
பரிதிமாற் கலைஞர் - சுந்தரம் பிள்ளை - மறைமலை அடிகள்
     சங்கத் தலைவர் உமாமகேசுவரனார் அவர்கள் சிலப்பதிகாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதனால்தான் தமிழ்ப் பெருமன்றம் அமைத்த வேளையில், தமிழ்ப் பெருமன்ற மேடையினைக் கூட, சிலப்பதிகாரத்தில் மாதவி நடனமாடிய மேடையின் அளவினை ஒத்த வகையில் அமைத்துப் பெருமிதம் அடைந்தார்.
 
வேங்கடாசலம் பிள்ளை
     உமாமகேசுவரனாரின் விருப்பத்திற்கு இணங்க கவிஞர் அரங்க வேங்கடாசலம் பிள்ளை அவர்கள், சிலப்பதிகாரத்தை நாடகமாக்கி வழங்கினார்.  சிலப்பதிகாரத்தில் குடுகுடுப்பைக் காரன் பாத்திரத்தை புதிதாய் உருவாக்கி, சுவையூட்டியதோடு, அப்படைப்பின் வாயிலாகவே, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு எழுச்சியையும், புத்துணர்ச்சியையும் ஊட்டினார். சிலப்பதிகார நாடகத்தில், குடுகுடுப்பைக் காரன், எதிர்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளை முன்கூட்டியே கூறுவது போல், ஒரு காட்சியினை அமைத்தார். இனி குடுகுடுப்பைக் காரன் கூறுவதைக் கேளுங்கள்,


    ஓ, ஓடிவாடி, ஓடிவாடி உதிரக் காட்டேரி, இரத்தக் காட்டேரி, உண்மையைச் சொல்லடி, ஒளிக்காமற் சொல்லடி, மறைக்காமற் சொல்லடி, இந்த சங்கத்துக்கு அதிட்டம் வருகுது, அதிட்டம் வருகுது, வந்திட்டுது, வந்திட்டுது. இந்தச் சங்கத்துக்கு அதிட்டம் வந்திட்டுது. பணம் வருகுது, பணம் வருகுது, ஆயிரக் கணக்கா, இலட்சக் கணக்கா பணம் வருகுது. பணம் வருகுது, பணம் வருகுது. இந்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், விழித்துக் கொண்டாங்கள், விழித்துக் கொண்டாங்கள். இனிமேல் ஊர் ஊராய் போவாங்கள், கொடுத்ததை வாங்குவாங்கள், காற்காசு வாங்குவாங்கள், ஒரு பிடி அரிசி வாங்குவாங்கள், எதைக் கொடுத்தாலும் இன்பமாய் வாங்குவாங்கள். ஓ அதிட்டம் வந்திட்டுது. காசு பணம் ஆகுது, பணம் பத்து ஆகுது, பத்து நூறு ஆகுது, நூறு ஆயிரம் ஆகுது, ஆயிரம் இலட்சம் ஆகுது. இந்த நாட்டிலே இருக்கிற பணக்காரரு, நிலக்காரரு, சொந்தக்காரரு, சுகக்காரரு,, பெரிய வக்கீல்மாரு, உத்தியோகத்தரு,  பெரிய பெரிய மடத்துக்காரரு, இவர்களாலே ஒரு காசுமில்லை, ஒரு தூசுமில்லை. இவர்கள் பணம் தாசிக்காகுது, வேசிக்காகுது, கோர்ட்டுக்காகுது - அது பாவச் சொத்து. அந்த பாவச் சொத்து, எப்படியாவது போகட்டும். இந்த சங்கத்துக்கு வேண்டாம். அதிலேயும் நல்லவங்க இருக்காங்க, அவங்க கொடுக்குறாங்க, கொடுப்பாங்க.

    இப்பகுதி, நாடகத்தைப் பார்க்கும் இளைஞர்களுக்குச் சுவையூட்டுவதற்காக எழுதப்பட்டது என்று கூறுவார் கவிஞர். ஆயினும் அது மட்டுமே உண்மையன்று. தமிழ் நாட்டுச் செல்வர்கள், தம்முடைய காசு, பணத்தை தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுத்தாமல், தாசிக்கும், வேசிக்கும் செலவிடுவதைச் சுட்டிக் காட்டிச் சாடுகிறார். உண்மையான தமிழ் ஆர்வமுடைய ஏழை, எளியவர்களிடம் நிதி திரட்ட வேண்டும். அதனைக் கொண்டு, சங்கத்தை ஒரு பெரிய பல்கலைக் கழகமாக வளர்க்கின்ற முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று சங்க  உறுப்பினர்களுக்கு எழுச்சியினையும், கடமை உணர்ச்சியினையும் ஊட்டவே இப்பகுதி எழுதப் பெற்றுள்ளது.

     கவிஞர் அரங்க. வேங்கடாசலம் பிள்ளை அவர்களின் இச்சிலப்பதிகார நாடகமானது, பதினான்காம் ஆண்டு விழாவில், செந்தமிழ்க் கைத்தொழில் கல்லூரி மாணவர்களால், நாடகமாக நடிக்கப் பட்டது.

     இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான, சிலப்பதிகாரத்தை நாடகமாய் எழுதி அரங்கேற்றியதைத் தொடர்ந்து, இன்னொரு காப்பியமாகிய மணிமேகலையையும் நாடக வடிவில் எழுதினார். இந்நாடகமானது தனியொரு நூலாக, சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழக வெளியீடாக வெளிவந்துள்ளது.

தமிழ்ப் பல்கலைக் கழக முயற்சிகள்

     ஆந்திரர் தங்கள் மொழிக்கெனத் தனிப் பல்கலைக் கழகம் கண்டாற்போல, வங்காளிகள் தங்கள் மொழிக்கெனத் தனிப் பல்கலைக் கழகம் பெற்றார்போல, உசுமானியர் தங்கள் மொழிக்கென உசுமானியப் பல்கலைக் கழகம் கண்டாற் போலத், தமிழரும் தங்கள் மொழிக்கென ஒரு தனிப் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்து நடத்த வேண்டும் என்று முதன் முதலில் முழங்கியவர், கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் உமாமகேசுவரனார் அவர்களேயாவார்.

      உமாமகேசுவரனார் உள்ளத்து முகிழ்த்தெழுந்த, தமிழ்ப் பல்கலைக் கழக ஆசையினை, தமிழர்தம் தேவையினை நிறைவேற்றும் முகத்தான், கரந்தைத் தமிழ்ச் சங்க ஆண்டு விழாக்களில் தீர்மானங்கள் பலவற்றை நிறைவேற்றி, அரசியலாருக்கு அனுப்பி வற்புறுத்தினார். அரசியலார் இத் தீர்மானத்தை நிறைவேற்ற முயலாமை கண்டு வருந்தி, இனியும் வாளாவிருத்தல் கூடாதென்று எண்ணி, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும், திருவனந்தபுரத்திலும் மேலும் இலங்கையிலும் உள்ள தமிழறிஞர்களைக் கொண்டு, மாவட்ட வாரியாக பல குழுக்களை அமைத்து, அவ்வப்பகுதி மக்களின் ஆதரவினைப் பெற்று அரசியலாரை வற்புறுத்தவும் ஏற்பாடுகளைச் செய்தார்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பத்தாம் ஆண்டு விழா, 4.9.1921 மற்றும் 5.9.1921 ஆகிய தேதிகளில், கரந்தை கந்தப்ப செட்டியார் அவர்கள் அற நிலையத்தில், சங்கத்தின் காப்பாளர்களுள் ஒருவராகிய, கீழையூர் சிவ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ் மொழிக்கென ஒரு தனிப் பல்கலைக் கழகம் இருக்க வேண்டுவது இன்றியமையாதென்று இக் கூட்டத்தார் துணிபுற்று, இம் முயற்சியில் ஈடுபட வேண்டுமென, தமிழ் மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்வதுடன், இதனை மேற்கொண்டு செய்விக்க வேண்டுமென அரசியலாரையும் வேண்டிக் கொள்கிறார்கள் எனும் தீர்மானம் உமாமகேசுவரனார் அவர்களால் நிறைவேற்றப்பட்டது.


     
இத்தீர்மானமே, தமிழுக்குத் தனியே ஓர் பல்கலைக் கழகம் வேண்டுமென, தமிழ்கூறும் நல்லுலகில் இயற்றப்பட்ட முதல்  தீர்மானமாகும்.

.... வருகைக்கு நன்றி நண்பர்களே, மீண்டும் சந்திப்போமா

                      --------------------------------------------------------------- 



ஹரணியின்

நத்தையோட்டுத் தண்ணீர்

     இன்று (27.6.2013)  வியாழக் கிழமை காலை 11.30 மணியளவில், ஆசிரியர் ஓய்வு அறையில் அமர்ந்திருந்தேன். ஜெயக்குமார். குரல் கேட்டு நிமிர்ந்தேன். எதிரே ஹரணி. வாருங்கள் வாருங்கள், அமருங்கள் என மகிழ்வோடு வரவேற்றேன். ஒரு நிமிடம் வாருங்கள் என வெளியே அழைத்துச் சென்றார். தனது இரு சக்கர வாகனத்தில் இருந்து, நூலொன்றினை எடுத்து வழங்கினார். மகிழ்வோடு பெற்றுக் கொண்டேன்.


     
ஹரணி. தமிழ்  கூறும் நல்லுலகில் அனைவரும் அறிந்த பெயர். வலைப் பூ வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர். ஹரணி அவர்கள் குறித்து எனக்கு ஒரு தனித்த பெருமை உண்டு. அவரும் கரந்தை. நானும் கரந்தை. சிறு வயது முதலே அவருடன் நல்ல பழக்கமுண்டு.

     ஹரணி அவர்கள் பற்றி பலரும் அறியாத செய்தி ஒன்றுண்டு. இவர் கல்லூரிப் படிப்பை, இளங்கலைப் படிப்பை அறிவியலில் தொடங்கி, ஆய்வுப் படிப்பைத் தமிழில முடித்தவர்.

     தமிழை நேசிப்பவர்கள் பலருண்டு. ஆனால் இவரோ தமிழை சுவாசிப்பவர்.
வாசிக்காத நாட்களெல்லாம், சுவாசிக்காத நாட்கள்
என்னும் உயரிய, உன்னத கொள்கையினை உடைவர்.

     ஹரணி அவர்களின் இல்லம் இருப்பதோ கரந்தையில். பணியாற்றுவதோ அண்ணாமலையில். நாள்தோறும் 200 கி.மீ பயணிப்பவர். பேரூந்தில் பயணித்த நாட்களை நெஞ்சில் நிறுத்தி பேரூந்து என்னும் புதினத்தைப் படைத்தவர். தற்பொழுது தொடர் வண்டியில் பயணிப்பவர். தொடர் வண்டிப் பயணத்தில், நாள்தோறும் குறைந்த்து 200 பக்கங்களையாவது படிப்பவர். இப்பழக்கத்தினை இன்று வரையில் தொடர்பவர். விரைவில் தொடர் வண்டி என்னும் புதினத்தைப் படைத்தாலும் படைப்பார்.

      படைப்பிலக்கியத் துறையில் கதை, கவிதை, நாடகம், சிறுவர் இலக்கியம், மொழி பெயர்ப்பு, ஆங்கிலக் கவிதைகள், பெண்ணியம் என்னும் நிலைகளில், தனது படைப்புத் திறனை வெளிப்படுத்திவரும், பன்முக ஆளுமை உடையவர்.

நத்தையோட்டுத் தண்ணீர்
ஹரணி அவர்களின் கைவண்ணத்தில ஓர் புதிய படைப்பு. புதுமைப் படைப்பு.

     நூலின் மூன்றாவது பக்கத்திலேயே, நம்மை முழுவதுமாய் நூலுக்குள் ஈர்த்து விடுகிறார்.

       சூழல்களாலும் ...
       இயலாமையாலும் ...
       மனம் புழுங்கும்
       சத்திய
       உள்ளங்களுக்கு....
       இச்சிறு நூல்

     14 கட்டுரைகள். ஒவ்வொன்றும் நம்மை பெருமூச்சு விட வைக்கும். ஆம் உண்மைதான்.

    நல்ல வாழ்க்கை வாழ்வது என்பது
    நல்ல புத்தகங்களை வாசிப்பது போல

    வாசிப்பு என்பது ஒரு கலை
    வாசிப்பு என்பது ஒரு தவம்
    வாசிப்பு என்பது ஒரு பரவசம்
    வாசிப்பு என்பது ஓர் உணர்வு
என தொடர்ந்து எழுதி, நம்மையும் அந்தச் சுழலுக்குள் இழுத்து விடுகிறார்.

நட்பை விமர்சனம் செய்வது நட்பாகாது
என்ற ஒரு வரியே, இவர் அனுபவம் என்னும் ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தவர் என்பதை நமக்குப் புரிய வைக்கிறது.

     கடிதம் ஓர் வாழ்வின் உன்னத அடையாளம்
     கடிதம் எழுதுதல் ஒரு கலை
     நாம் தொலைத்தவற்றுள் இதுவும் ஒன்றல்ல
     இதுதான் ஒன்று
சம்மட்டி கொண்டு நம்மைத் தாக்குகின்றன் இவரின் எழுத்துக்கள். வளர்ச்சி என்னும் பெயரில் நாம் இழந்தது அதிகம். எதை எதை இழந்தோம் என்பதையே அறியாமல், உணராமல் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

     ஓடி பிடித்து விளையாடல்
     சடுகுடு
     திருடன் போலிஸ்
     கிச்சு கிச்சு தாம்பாளம்
     சில்லு செதுக்கல்
     கிட்டிப் புள் விளையாட்டு
     பளிங்கு உருட்டல்
இப்படி பல விளையாட்டுக்களை, இருள் சூழும் வரை, தெருவிலே நின்று விளையாடினோமே நினைவிருக்கிறதா? ஆனால் இன்று நம் பிள்ளைகளுக்கு, இவ்விளையாட்டுக்களின் பெயராவது தெரியுமா?

நாம் குழந்தைகளை ஏமாற்றுகிறோம்
நாம் குழந்தைகளுக்கு எதுவும் கற்றுக் கொடுப்பதில்லை
தேவையில்லை என நாமாகவே தன்னிச்சையான முடிவு எடுக்கிறோம்
என நம்மைச் சாடுகிறார். உண்மை சுடுகிறது.

     கூட்டுக் குடும்பம் என்கிற அற்புதத்தைப் போட்டு உடைத்து விட்டார்களே. அது சுக்கு சுக்கலாகிவிட்டதே
என இவர் வருந்துவதைப் படிக்கும் பொழுது, நமது மனதில் வலி, மெல்ல மெல்ல கூடுகிறது.

     அவர்கள் எங்கே இருக்கிறார்கள்... எப்படியிருக்கிறார்கள்... இருக்கிறார்களா? புகழுடம்பு எய்திவிட்டார்களா? தெரியாது. ஆனாலும அவர்கள் இன்றைக்கும், அன்றைக்கு பார்த்த்து போலவே மனத்தில் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். அழியாப் பிம்பமாய், அதே ஆசிரியர்களாக. மிடுக்குடன்
என ஹரணி அவர்கள், தனக்குப் பாடம் கற்பித்த ஆசிரியர்களைப் பற்றிக் கூற, கூற, நாமும் நமது இளமைக் கால, பள்ளிக் கால நினைவலைகளில் மூழ்கி மூச்சுத் திணறுவதை உணர முடிகிறது.

நத்தையோட்டுத் தண்ணீர்
இந்த நத்தையோட்டில் தேங்கியிருப்பது வெறும் தண்ணீரல்ல. தெளிந்த அனுபவம். அந்த அனுபவம் புகட்டிய பாடம். அந்தப் பாடத்தால் விளைந்த உயர் ஞானம்.

     ஆழ்கடலில் மட்டுமல்ல, இந்த நத்தையோட்டுத் தண்ணீரில் மூழ்கினால் கூட நல் முத்தெடுக்கலாம்.
வாருங்கள். வாசித்துப் பாருங்கள்.

ஹரணி அவர்களின்
அலைபேசி 9442398953
மின்னஞ்சல் uthraperumal@gmail.com

நூல் வெளியீடு
கே.ஜி.பப்ளிகேஷன்ஸ்,
31, பூக்குளம் புது நகர்,
கரந்தை,
தஞ்சாவூர் – 613 002