07 நவம்பர் 2013

நெஞ்சில் நின்ற திருமணம்

நாம் பிறந்தது, நாம் வளர்ந்தது தமிழ் நாடு – தமிழா
நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு

நாமறிவோம் உலகத்தில்நம் பண்பாடு – தமிழா
நாம்தமிழர் நம்திறத்துக் கெவர்ஈடு?

மூவேந்தர் முறைசெய்தது நம் தமிழ்நாடு – தாய்
முலைப் பாலொடு வீரம் உண்டது செந்தமிழ் நாடு

நாவலரும் காவலரும் ஆண்டதி ந்நாடு – நிமிர்ந்து
நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு
-          பாவேந்தர் பாரதிதாசன்

     நண்பர்களே, நாம் அனைவரும் மாதந்தோறும், வாரந்தோறும், உறவினர் இல்லத் திருமணம், நண்பர் இல்லத் திருமணம் என, ஆயிரக் கணக்கானத் திருமணங்களுக்குச் சென்று வாழ்த்தி மகிழ்வுற்றிருப்போம்.

     திருமண மேடையில், மணமக்கள் அமர்ந்திருக்க, திருமண விழா நிகழ்வுகள் மேடையில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அதே வேளையில், நாமெல்லாம் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் மகிழ்வாய் பேசிக்கொண்டிருப்போம்.

     கெட்டி மேளச் சத்தம் கேட்டவுடன், சுதாரித்துக் கொண்டு, அட்சதையினை, மணமக்களை நோக்கித் தூவுவோம். வாழ்த்துவோம்.

     நண்பர்களே, இதற்குக் காரணம் என்ன? சிந்தித்துப் பார்த்தால், இரண்டு காரணங்கள், உடனே மனதில் பளிச்சிடுகின்றன. திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில்தானே, நமக்கு, நமது உறவுகளை, நண்பர்களைக் காண, பேசி மகிழ வாய்ப்பு கிடைக்கிறது. இது முதல் காரணம்.

     நண்பர்களே, மேடையில் நடைபெறும் நிகழ்வுகளுக்கான விளக்கங்கள், காரண காரியங்கள், நமக்குப் புரியாததும், நமது தாய் மொழியில், திருமணங்கள் நடத்தப் பெறாததுமே இரண்டாவது காரணம் என எண்ணுகின்றேன். சரிதானே நண்பர்களே.

     நண்பர்களே, நமது தாய் மொழியான, தமிழ் மொழியில், முழுவதுமாய் தமிழ் முறையினையேப் பின்பற்றி, ஒரு திருமணம் நடைபெற்றால் எப்படி இருக்கும்?. அத்தகைய ஒரு திருமணத்தைக் காணுகின்ற, கண்டு மகிழ்கின்ற, உணர்ந்து நெகிழ்கின்ற ஒரு வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

     நண்பர்களே, யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம், என நண்பர்களான உங்களுடன், இம் மகிழ்வினைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர, வேறு என்ன வேலை எனக்கு இருக்கிறது?

     வாருங்கள் நண்பர்களே, வாருங்கள். தமிழ் முறைப்படி நடைபெற்ற திருமணத்தைக் காண வாருங்கள், இதோ திருமண அரங்கு, இதோ இருக்கை, அமருங்கள்.

     எனது பெரியம்மாவின் மகள் தமிழ்ச் செல்வி, இவரின் கணவர் புலவர் திருநாவுக்கரசு. இவர் தஞ்சை, வழுத்தூர், சௌகத் இஸ்லாம் மேனிலைப் பள்ளியில் பத்தாண்டுகளுக்கு மேல் தமிழாசிரியராய் பணியாற்றி, சிங்கப்பூர் சென்று, அங்கு இருபதாண்டுகள் தமிழாசிரியராய்ப் பணியாற்றியவர், மிகச் சிறந்த இலக்கியவாதி, எழுத்தாளர், கவிஞர், ஓவியர், இவை எல்லாவற்றையும் விட, தமிழுணர்வாளர் என்பதில் பெருமை கொள்பவர்.

     இவரது மகன் மற்றும் மகளின் பெயரே, இவரின் தமிழுள்ளத்தைப் பறைசாற்றும். மகன் பாவேந்தன், மகள் அன்னம். பாவேந்தன் மருத்துவர். ஹோமியோபதி மருத்துவர். ஹோமியோபதியில் முதுநிலைப் பட்டம் பயின்றவர்.

     பாவேந்தனுக்கும், செல்வி.சபீதா என்பாருக்கும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சபீதா, பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவரது தந்தை திரு தர்மராசு.

     இவர், தஞ்சை,அய்யம்பேட்டைக்கு அருகில் உள்ள மாகாளி புரத்தில் வசிப்பவர். பெருநிலக் கிழார். இவர் வயலை மட்டும் ஆழ உழுபவரல்ல, தமிழையும் ஆழமாய் நேசிப்பவர், சுவாசிப்பவர்.

     திரு திருநாவுக்கரசர் அவர்களுக்கு, இத் திருமணத்தினை, தமிழ் முறைப்படி, தக்கவரைக் கொண்டு நடத்திட வேண்டும் என்ற பேரார்வம். பெண் வீட்டாரும் மகிழ்வுடன் சம்மதித்தனர்.

     இத்திருமணத்தினை நடத்தி வைத்திட யாரை அழைப்பது என்று எண்ணியபோது, மனதில் தோன்றிய முதல் பெயருக்கும், உருவத்திற்கும் சொந்தக்காரர் புலவர் இரா. இளங்குமரனார்.

     விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப் புத்தூர் அருகே உள்ள வாழவந்தாள் புரம் கிராமத்தில், ராமு, வாழவந்தாள் தம்பதியினரின் மகனாய் தோன்றியவர். தமிழாசிரியராய் பணியாற்றி, ஓய்வு பெற்று, தமிழ்ப் பணிக்கு என்று தம்மையே முழுமையாய் தத்துக் கொடுத்தவர்.

     திருச்சி, அல்லூரில், திருவள்ளுவர் தவச்சாலையினை நிறுவி, வள்ளுவமாய் வாழ்ந்து வரும், அகவை 83 நிறைவுற்ற இளைஞர். திருக்குறளுக்குக் கோயில் எழுப்பியவர். 500 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். 5000 ற்கும் மேற்பட்ட திருமணங்களை, தமிழகத்தில் மட்டுமன்றி, இந்தியாவில் மட்டுமன்றி,  தமிழர்கள் இப்புவிப் பந்தின், எந்தெந்த நாடுகளில் எல்லாம் வாழ்கிறார்களோ, அந்தந்த நாடுகளுக்கு எல்லாம் பறந்து சென்று, தமிழ்த் திருமணங்களை நடத்தி, தமிழின் பெருமையினை உலகுக்கு உணர்த்தி வருபவர்.

    எனவே, தமிழ்க் கடல், உலகப் பெருந் தமிழர், முதுமுனைவர், இரா.இளங்குமரனார் அவர்களைக் கொண்டே, பாவேந்தன் சபீதா திருமணத்தை நடத்துவது என சம்பந்திகள் இருவரும் முடிவு செய்தனர்.

     புலவர் இரா.இளங்குமரனார் அவர்களை நான் நன்கறிவேன். கரந்தைத் தமிழ்ச சங்க விழாக்களுக்காக, பலமுறை அவரை, கரந்தைக்கு அழைத்து வந்திருக்கிறேன். இதன் காரணமாக, பெரியவர் இளங்குமரனார் அவர்களுடன் பலகும் நல் வாய்ப்பினையும் பெற்றவன் நான்.

     இருப்பினும் புலவர் கந்தசாமி அவர்களைத் தொடர்பு கொண்டேன். ஓய்வு பெற்றத் தமிழாசிரியர்,. தமிழுக்கென்றே வாழும் தகைமையாளர். அய்யா இளங்குமரனார் அவர்களுடன் தொடர்ந்து, தொடர்பில் இருப்பவர். எனவே புலவர் கந்தசாமி அய்யா அவர்கள் மூலமாகவே, தமிழ்க் கடல் இளங்குமரனார் அவர்களைத் தொடர்பு கொண்டு, திருமணத்தினை நடத்தி வைத்திட ஒப்புதல் பெற்றோம்.

     பாவேந்தனின் தந்தையார் திரு திருநாவுக்கரசு, சபீதாவின் தந்தையார் திரு தர்மராசு, ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு பாலு மற்றும் நான் ஆகிய நால்வரும் இருமுறை அல்லூர் சென்று, உலகப் பெருந்தமிழரைச் சந்தித்தோம்.

     ஜுன் மாதம் 12 திருமண நாள். கும்பகோணம் அசூர் பிரிவுச் சாலையில் உள்ள டி.எஸ்.மகால்.

      காலை மணி 8.45. ஒரு இண்டிகா கார் உள்ளே நுழைகிறது. புலவர் இரா.இளங்குமரனார் வந்துவிட்டார். திருமண நேரம் காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள். ஆனாலும் மணமக்கள் வீட்டார், தனது வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கக் கூடாது, என்ற உயரிய எண்ணத்தினால், முன்னதாகவே வந்து விட்டார். இவர்தான் இளங்குமரனார்.

     மணமக்களின் விட்டார் வரிசையாக நின்று, கரம் கூப்பி வணங்கி வரவேற்றனர். மலர்ந்த முகத்துடன் வரவேற்பை ஏற்றவாறு, அரங்கினுள் நுழைந்து அமர்கின்றார்.

     உறவினர்களும் நண்பர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இரண்டாயிரம் பேர் அமரக்கூடிய திருமண மண்டபம. நிரம்பி வழிந்தது. மண்டபத்திற்கு வெளியிலும், அமைக்கப்  பட்டிருந்த பந்தலில் நூற்றுக் கணக்கானோர் அமர்ந்திருக்க, எங்கள் குடும்பத்தின் மூத்தோர், உறவிற்குப் பெருமை சேர்த்து வரும் திருமிகு ஜி. ரெங்கசாமி மூப்பனார், திருமிகு ஜி.சந்திரசேகர மூப்பனார், திருமிகு எஸ்.சுதாகர் மூப்பனார்,  திருமிகு எஸ். சுரேஷ் மூப்பனார் முதலியோர் வருகை தந்து, முதல் வரிசையில் அமர்கின்றனர்.

     காலை 10.45 மணிக்கு திருமண விழா தொடங்கியது. மேடையில் மண மக்கள் அமர்ந்திருக்க, அவர்களுக்கு அருகே, ஐந்தடி உயரத்தில் திருவள்ளுவர் படம்.

     உறவினர்களே, நண்பர்களே இத் திருமண விழாவினை, உலகப் பெருந் தமிழர், தமிழ்க் கடல் இளங்குமரனார் அய்யா அவர்கள் நடத்தி வைப்பார்கள் என்று ஒலிப் பெருக்கியின் முன் நின்று நான் அறிவித்தேன். இளங்குமரனார் அய்யா இருக்கும் மேடையில், ஒலிப் பெருக்கியின் முன் நின்று, தமிழ்க் கடலின் பெயரினை உச்சரிக்கக் கிடைத்த வாய்ப்பினை எண்ணி மெய்சிலிர்த்தேன்.


     அடுத்ததாக மணமகன் மருத்துவர் பாவேந்தனின் தந்தையார் வரவேற்வுரை ஆற்றினார். தமிழ்க் கடல் இளங்குமரனார் அய்யா அவர்கள் ஒலிப் பெருக்கியின் முன் வருகிறார்.


அன்புடையோரே வணக்கம்.

      வைத்துள்  வாழ்வாங்கு  வாழ்பவன்  வானுறையும்
      தெய்வத்துள் வைக்கப்  படும்

என்ற குறளினை வள்ளுவர் இல்வாழ்விலே கூறினார். காரணம் என்ன தெரியுமா? மண்ணுலகிலேயே, விண்ணுலக இன்பத்தைக் காணலாம் என்பதால்.

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை

என உரைத்தவர் திருவள்ளுவர்,

பெண்ணிற் பெருந்தக்க யாவுள?

என அறத்துப் பாலில் வினா எழுப்பி,

பெண்ணே பெருமையுடைத்து

எனப் பொருட் பாலில் விடை கூறி,

பெண்ணிற் பெருந்தக்கது இல்

என இன்பத்துப் பாலில் உறுதியளித்தவரும் திருவள்ளுவரே.

     வாழ்க்கையில் அவனுக்கு அவள் துணையும், அவளுக்கு அவன் துணையும் ஆதல் வேண்டும் என வாழ்க்கைத் துணை நலம் உரைத்தவர் திருவள்ளுவர்.

     இல் வாழ்க்கை இனிய வாழ்க்கை, இல்லாமை என்பது இல்லாத வாழ்க்கை என்பதை நிலைநாட்டுபவள் இல்லாளே, என்றவரும் அவர்தான். எனவே மணமக்கள் இப்பொழுது திருவள்ளுவருக்கு மலர் தூவி வணங்குவார்கள் எனக் கூறினார்.

       மணமக்கள் இருவரும் தங்களது இருக்கையில் இருந்து எழுந்து, திருவள்ளுவரின் பாதக் கமலங்களில் மலர் தூவி, இரு கரம் கூப்பி வணங்கினர்.



      அடுத்ததாக மணமக்களின் பெற்றோர் மேடைக்கு அழைக்கப் பெற்றனர். மணமகன் தனது தாய்க்கும், தந்தைக்கும் மாலை அணிவித்து, பாதம் பணிந்து வாழ்த்துப் பெற்றார். மணமகளும் அவ்வாறே, தனது தாய்க்கும், தந்தைக்கும் மாலை அணிவித்து, பாதம் பணிந்து வாழ்த்துப் பெற்றார். பெற்றோர் நால்வரும், தமது மக்கள் பெரு வாழ்வு வாழ வாழ்த்தினர்.

     வாழ்க்கை எதுவென்றால், பலரும் பலவகையாகக் கூறுவர், ஆனால் தமிழ்ச் சான்றோர் கூறுவர்,
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை

என்று, இவ்விழா இரு மனங்கள் இணையும் விழா, இரு குடும்பங்கள் இணையும் விழா, இரு உறவுகள் இணையும் விழா, இதோ மேடையில் மணமக்கள் இருவர், மணமகனின் பெற்றோர் இருவர், மணமகளின் பெற்றோர் இருவர் என அறுவர் நின்கின்றனர். இதுதான் ஆறு முகம். ஆறு முகமும் ஒரு முகமாய் இணையும் விழா,

      பெற்றோர் மங்கல நாண் எடுத்துத் தர, இக்குடும்பத்தின் மூத்த உறவினர் பெருந்தகை அய்யா ஜி.ரெங்கசாமி மூப்பனார் அதைப் பெற்று, மணமகனிடம் தர, மணமகன், மணமகளின் கழுத்தில் மங்கல நாண்  சூட்டுவார் என்றார்.

       மணமக்களின் பெற்றோர் மங்கல நாணை வணங்கி, தங்களின் பிள்ளைகள் நிறை வாழ்வு வாழ வாழ்த்தி, குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பெருந்தகை ஜி. ரெங்கசாமி மூப்பனார் அவர்களிடம் வழங்க, அவரும் வாழ்த்தியபடி மணமகனிடம் வழங்கினார்.

     முழுவம், முரசம் முதலிய மங்கல இசை முழங்க, பாவேந்தன் சபீதாவிற்கு மங்கல நாண் அணிவித்தார். மங்கல நாண் சூட்டி, பாவேந்தன் சபீதாவிற்கு மாலை அணிவிக்க, சபீதா பவேந்தனுக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து மணமக்கள் இருவரும் இடம் மாறி அமர்ந்தனர்







     சென்ற நிமிடம் வரை இவர் வேறு. அவர் வேறு. ஆனால் இந்நிமிடம் முதல் இருவரும்  வேறுவேறல்ல. இருவரும் ஒன்றானவர்கள். வாழ்க்கைத் துணை நலமாய் இணைந்தவர்கள். பாவேந்தன் தனது இடத்தை சபீதாவிற்கும், சபீதா தனது இடத்தைப் பாவேந்தனுக்கும் அளித்தார். இன்று முதல் எனதெல்லாம் உனது, உனதெல்லாம் எனது. எல்லாமே நமது என்பதைக் குறிப்பிடும் வகையில் மணமக்கள் இடம் மாறி அமர்ந்தனர்.

       பின்னர் மணமக்கள் இருவரும் எழுந்து நின்று, சுற்றம் சூழ வருகை தந்து, வாழ்த்த வந்திருந்த உறவினர்களையும், நண்பர்களையும் நோக்கி, இரு கரம் கூப்பி வணங்கினர்.

      கலகல, சலசல, படபட, மடமட என்பவை இரட்டைச் சொற்கள். இரட்டைக் கிளவிகள் எனப்படும். இவற்றைப் படிக்காத பாமரர் கூட தனித் தனியாக பிரித்துக் கூறமாட்டார். ஏனெனில் இச் சொற்கள் பிரித்தால் பொருள் தராது. இணைந்திருந்தால் மட்டுமே இனிமை தரும், பொருள் தரும்.

      கணவனும் மனைவியும் இரட்டைக் கிளவி போல் அமைய வேண்டும், எனவே

இரட்டைக் கிளவி போல் பிரியா வாழ்வினர்

என்றார் பாவேந்தர். அந்தப் பாவேந்தரின் வரிகளாலேயே, இப் பாவேந்தனையும், சபீதாவையும் வாழ்த்துகிறேன்.

     நிலத்திற்கு மேலே பொலிவுடன் தெரிவது மரம். பூவும், இலையும், காயும், கனியும், கிளையும் வெளிப்படத் தெரியும். அவற்றாலா மரம் நிற்கிறது? வளர்கிறது? வளம் தருகிறது? உரமும், ஊட்டமும் நீரும் நிலையும் பெற வாய்ப்பது வேரால் அல்லவா? வேர்ப்பிடி இல்லாமல், நீர்ப்பிடி உண்டா? நிலைப் பிடி உண்டா? அதனால்தான்,
ஆண் மரம், பெண் வேர்

என்றார் பாவேந்தர்.அந்தப் பாவேந்தரின் வார்த்தைகளாலேயே, சபீதாவை வாழ்த்துகிறேன்,
வேராய் விளங்கி, குடும்பத்தைக் காப்பாய்

என வாழ்த்துகிறேன் என இளங்குமரனார் வாழ்த்தினார்.

     பின்னர் அரங்கில் நிறைந்திருந்தோரை நோக்கி,
உறவினர்களே, நண்பர்களே, இதோ உங்கள் முன் மணமக்கள் இருகரம் கூப்பி வணங்கி நிற்கின்றனர். மணமக்களை நாமும் வாழ்த்துவோமாக, என்று கூறி
மணமக்கள் என்று கூற, அரங்கில் இருந்தோர் வாழ்க வாழ்க என முழங்கினர்.

மணமக்கள்
வாழ்க வாழ்க

மணமக்கள்
வாழ்க வாழ்க

மணமக்கள்
வாழ்க வாழ்க

வாழ்த்தொலியால் அரங்கம் அதிர்ந்த்து.

     குடும்பத்தின் குத்து விளக்கு மனைவி என்பர். ஒற்றைத் திரி, எத்தனை திரிகளுக்கு ஒளி வழங்குகிறது. ஒளி வழங்கும் திரி, தன் ஒளியில் குறைவு படுகிறதா? இருண்ட வாழ்வை ஒளி வாழ்வு ஆக்குவது பெண்மையே என்பதைக் கண்டது பண்டைத் தமிழகம். அதனால்தான்

மனைக்கு விளக்கம் மடவார்

என்றனர் நமது முன்னோர். இதோ மணமக்கள் இப்பொழுது குடும்ப விளக்கை ஏற்றுவர் என்று கூறிய தமிழ்க் கடல், மணமக்களை குடும்ப விளக்கேற்ற அழைத்தார்.

       மணமக்கள் குடும்ப விளக்கேற்றினர்.

     அடுத்து மணமக்கள் இருவரும், பெற்றோரின் தாழ் பணிந்து வணங்க, பெற்றோர் நால்வரும், உள்ளம் பூரித்து, மனதில் மகிழ்ச்சி பொங்க, அன்றலர்ந்த மலர் போல் மலர்ந்த முகத்துடன், மலர் தூவி, தங்களின் செல்வங்களை வாழ்க, வாழ்க என வாழ்த்தினர்.

     அவைமுழுதும் நிரம்பியிருக்கும் உறவினர்களே, நண்பர்களே, மண மக்களைப் பெற்றோர்கள் மட்டுமே மலர் தூவி வாழ்த்துகிறார்களே, அரங்கில் அமர்ந்திருக்கும் நமக்கு அட்சதை வழங்கவில்லையே என நினைக்கலாம். தாங்கள் அட்சதையைத் தூவி எறிய, தங்களின் முன் அமர்ந்திருப்போர்களின் தலையில் அல்லவா அட்சதை போய் சேருகிறது. இதோ நீங்கள் அமர்ந்திருக்கும் இடம் நாடி, மணமக்கள் வாழ்த்து பெற வருகிறார்கள். மணமக்களுக்கு முன், மலர் தட்டு ஏந்தியவாறு இருவர் வருவர். மலர் தூவி வாழ்த்துக்கள், மனமார வாழ்த்துங்கள் என்றார்.

      மணமக்கள் இருவரும், மேடையினின்று இறங்கி, அரங்கு முழுவதும் வலம் வந்தனர். உறவினர்கள் , நண்பர்கள் அனைவரும் மலர் தூவி வாழ்த்த அரங்கே மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியது.

     தமிழர் திருமணம், தமிழ்த் திருமணமாய் அரங்கேறிய காட்சி, அரங்கில் இருந்தவர்களின் மனங்களில் நீங்கா இடத்தினைப் பிடித்து விட்டது. மணவிழாவின் ஒவ்வொரு நிகழ்விற்கும், விளக்கம் கூறி, காரண காரியங்களை எடுத்துரைத்து, தமிழ்க் கடல் இளங்குமரனார் நடத்திக் காட்டிய விதமே, தனியொரு அழகாய் திருமண விழாவிற்கு மெருகூட்டியது,

     எத்துனையோ திருமண விழாக்களுக்குச் சென்றிருந்தாலும், பாவேந்தன் சபீதா திருமணம், தமிழ்த் திருமணமாய், தனித் தமிழ் திருமணமாய், திருவள்ளுவரின் நெறி நின்று நடைபெற்றது, பண்டைத் தமிழரின் பெருமையினை, தமிழரின் உயர்ந்த உன்னத வாழ்வியல் நெறிகளை, இன்றைய உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதாய் அமைந்த்து.

                பிறக்கும்  போதே  பெருமை  யோடு
              பிறந்தவன் தமிழன் – தமிழ்ப்
              பெருங்குடி தன்னிற் பிறந்தவன் தமிழன்

              முதலில் தோன்றிய  மனிதன்  தமிழன்
              முதல்மொழி  தமிழ்மொழி  - ஆதலால்
              புதுவாழ்  வின்வேர்  தமிழர் பண்பாடே

என்று முழங்குவார் பாவேந்தர். அத்தகு பெருமை வாய்ந்த பாவேந்தரின் வரிகளாளேயே நாமும் மணமக்களை வாழ்த்துவோம்.

                  மணமகளாரே,  மணமகனாரே
                  இணைந்தின்  புற்றுநன்  மக்களை  ஈன்று
                  பெரும்புகழ்  பெற்றுநீ  டூழி
                  இருநிலத்து  வாழ்க  இனிது.