29 ஜனவரி 2015

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?

     ஆண்டு 1963. சென்னை. பத்திரிக்கை அலுவலகம். தனது அறையில் அடுத்த நாள் வெளிவர வேண்டிய கட்டுரையினை அவர் எழுதிக் கொண்டிருந்தார். அவரது இயற்பெயர் மூக்காண்டி.

     பதினேழு வயதுடைய இரு பெண்கள், அவரது அறைக்குள் நுழைந்தனர். ஆழ்ந்த சிந்தனையோடு, உலகையே மறந்து, எழுத்துப் பணியில் ஈடுபட்டிருந்த மூக்காண்டி, பல நிமிடங்கள் கடந்த நிலையில், நிமிர்ந்து பார்க்கிறார். எதிரில் இரு பெண்கள்.

வாருங்கள், நீங்கள் யாரம்மா? என்ன வேண்டும்?


     இரு பெண்களில் ஒருவர், ஏதோ கூற முற்படுகிறார். அப் பெண்ணின் கண்கள் பாசத்தைப் பொழிகின்றன, ஆனாலும் வாயில் இருந்து வார்த்தைகள் வெளி வர மறுக்கின்றன.

     தயங்கித் தயங்கி ஏதோ கூற முற்பட்டவர், வார்த்தைகள் வெளிவராத காரணத்தால், மேசை மேலிருந்து, ஒரு துண்டுக் காகிதத்தை எடுத்து, இரண்டே இரண்டு வரிகளை, வேகமாக எழுதி, மூக்காண்டியின் முன் நீட்டினார்.

     ஒன்றும் புரியாமல், கை நீட்டி, அந்த துண்டுக் காகிதத்தை வாங்கிப் படித்தவர், அடுத்த நொடி அதிர்ந்து போனார்.

என் தாத்தாவின் பெயர் குலசேகர தாஸ்
என் அம்மாவின் பெயர் கண்ணம்மா.

     மூக்காண்டியின் உதடுகள் துடித்தன. கண்கள் கலங்கின. பலமுறை வார்த்தைகளை உச்சரிக்க முயன்றும், தோற்றுப் போகிறார். உதடுகள் அசைகின்றனவே தவிர, வார்த்தைகள் வெளிவராமல் வாய்க்குள்ளேயே முடங்கிப் போகின்றன.

     என்ன செய்வதென்று அறியாமல் தவித்தவர், அந்த சீட்டிலேயே, மேலும் இரண்டே இரண்டு வார்த்தைகளை எழுதி, அப்பெண்ணிடம் நீட்டினார்.

என் மகளா?

     ஆமாம் என அப்பெண், தலையசைக்க, இருக்கையில் இருந்து வேகமாய் எழுந்து, தன் மகளை கட்டி அணைத்து நெகிழ்ந்து போகிறார் அம் மனிதர்.

     நண்பர்களே, இது கற்பனையல்ல, கலப்படமற்ற உண்மை. இந்த மூக்காண்டி யார் தெரியுமா? இவர்தான்,


தோழர் ஜீவா என்கிற ஜீவானந்தம்.

     அந்த பத்திரிக்கை அலுவலகம்தான் ஜனசக்தி பத்திரிக்கை அலுவலகம்.

     தந்தையைக் காண வந்த பெண்ணின் பெயர் குமுதா. இவரது தாய்தான் ஜீவாவின் முதல் மனைவி கண்ணம்மா. குழந்தை பிறந்த சில நாட்களிலேயே, கண்ணம்மா இறந்துவிடவே, தாய் மாமனிடம் வளர்ந்தவர் குமுதா.

      பெற்ற மகளைக் கூட மறந்து, பொது வாழ்வினுக்குத் தன்னையே முழுமையாய் ஈந்த மாமனிதர் தோழர் ஜுவா அவர்களைப் போற்றுவோம்

57 கருத்துகள்:

  1. மனம் கணக்கிறது நண்பரே... இப்பேர் ப்பட்ட மாமனிதர்கள் வாழ்ந்த நாட்டில் இன்று கயவர்கள் கையில் நாடு சிக்குண்டு விட்டதே....
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. ஜீவாவைப் பற்றிய அருமையான சொற்சித்தரம் அய்யா
    தம 2

    பதிலளிநீக்கு
  3. தோழர் ஜீவானந்தம் அவர்களைப்பற்றி இதுவரை அறியாத தகவல்! தங்களின் சிறந்த தமிழ் நடையில் பகிர்ந்தமைக்கு இனிய நன்றி!!

    பதிலளிநீக்கு
  4. தோழர் ஜீவானந்தம் அய்யா அவர்களின் தொண்டு மறக்கமுடியாதது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறக்க முடியாத, மறக்கக் கூடாத தொண்டுதான்
      நன்றி ஐயா

      நீக்கு
  5. பிறக்காத பேரனுக்கே கோடிக்கணக்கில் சொத்து சேர்க்கும் இன்றைய அரசியல்வாதி எங்கே ,மக்களுக்காக மகளை மறந்த உத்தமன் எங்கே ?
    த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையிலேயே இது போன்ற அரசியல் தலைவர்களை இன்று காண இயலாதுதான்
      நன்றி நண்பரே

      நீக்கு
  6. இத்தகைய உத்தமர்கள் - நம்நாட்டில் வாழ்ந்திட என்ன தவம் செய்தோமோ!..

    மகத்தான மனிதர் - தோழர் ஜீவானந்தம் அவர்கள்!..

    பதிலளிநீக்கு
  7. "பொது நலன் பேணிய பொன் மகன் ஜீவா வின் புகழ் வாழ்க!
    நல்ல பதிவு!
    வாழ்த்துக்கள்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  8. எங்களது பேராசான் திரு. மு.பழனி இராகுலதாசன் அவர்கள் மூலமாக ஜீவா அவர்களை வாசித்திருக்கிறேன்...

    திரு. ஜீவா அவர்களைப் போற்றுவோம்....

    நல்ல பகிர்வு ஐயா...

    பதிலளிநீக்கு
  9. தன்னலமற்ற உத்தமர்கள் பலர் வாழ்ந்த நாடு இது,
    அவர்களின் நினைவுச்சுவடு தாங்கி இருப்போம்/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக நினைவுச் சுவடு தாங்கி இருப்போம்
      நன்றி நண்பரே

      நீக்கு
  10. இப்படியும் சில மனிதர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி இது. நம் அரசியல் வாதிகள் இவர்களிடமிருந்துடர்மிருந்து கொஞ்சமாவது கற்றுக் கொள்வார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கற்றுக் கொள்ள வாய்ப்பில்லை என்றுதான் எண்ணுகின்றேன்
      நன்றி ஐயா

      நீக்கு
  11. தன்னலமற்ற ஜீவா அவர்களைப் பற்றிய தகவலைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!! மிக்க நன்றி! துளசிதரன், கீதா

    ஜீவா எங்கள் ஊர்க்காரர் என்பதை மிகவும் பெருமையோடு இங்கு சொல்லிக் கொள்ள விழைகின்றேன். அவரைப் பற்றிய தகவல்கள் அறிந்திருந்தாலும் தாங்கள் இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! மிக்க நன்றி நண்பரே! - கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவாவின் ஊர்காரரா தாங்கள்
      கொடுத்து வைத்தவர்தான் தாங்கள்
      நன்றி நண்பரே
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  12. ஒரு மாமனிதரைப் பற்றிய அரிய நிகழ்வினை பகிர்ந்தமைக்கு நன்றி. இவ்வாறான மனிதர்களை தற்போது காண்பது மிகவும் அரிதே.

    பதிலளிநீக்கு
  13. ஒரு மாமனிதரின் வாழ்வில் நடந்த ஒரு அரிய நிகழ்வினை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

    த.ம. +1

    பதிலளிநீக்கு
  14. பொதுவாழ்வுக்கு இலக்கணம்
    சமூகத்திற்கே அற்பணித்த வாழ்க்கை
    அவர்களால் சமூகத்திற்கே பெருமை
    சமூகம் மறவா பெரும் அண்ணல்!

    பதிலளிநீக்கு
  15. தன்னலமற்ற தலைமகன். அம் மனிதனின் வாழ்வில் இன்னும் எத்துனை தகவல்கள் அப்பப்பா,,,,,,,,,,,,,,. மனிதர் எத்துனை தியாகங்கள் தான் ,,,,,,,,,,,,,. தியாகத்தின் முழு உருவம்.அவரைப் பற்றி தகவல்கள் கொஞ்சம் தெரிந்து இருந்தாலும். தாங்கள் சொன்னது புது தகவல். கரந்தையாரே இப்படி புது புது தகவல்கள் தருக. வருகிறோம். நன்றி.


    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா30 ஜனவரி, 2015

    அரிய நிகழ்வு சிறந்த பதிவு.
    மிக்க நன்றி.
    தெரியாத தகவல்
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  17. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    கொஞ்சம் வீட்டையும் கவனித்திருக்கலாமோ? பெற்ற பிள்ளைகளின் நலனில் அக்கறை இல்லாமல் பொது நலனில் பெரும் அக்கறை கட்டினால் இந்த காலத்தில் சமூகம் என்ன சொல்லும்.

    வீட்டிற்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் ஊருக்கு சேவை செய்ய புறபட்டால் உங்களை உங்கள் குடும்பமும், சுற்றமும் என்னசொல்லும் என்பதை பற்றி யோசிக்காமல் இப்படியும் மா மனிதர்கள் இருந்ததை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கின்றது.

    பகிர்வுக்கு நன்றி.

    கோ


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே நமது அந்நாளைய தலைவர்கள் அனைவருமே
      தன்னலம் மறந்து, சுயநலம் துறந்து பணியாற்றியவர்கள்தானே
      நன்றி நண்பரே

      நீக்கு
  18. அரிய சம்பவம்... அரியதோர் மனிதர் வாழ்வில்... நல்ல பதிவு!

    பதிலளிநீக்கு
  19. அரிய நிகழ்வு சிறந்த பதிவு. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  20. பகிர்வுக்கு நன்றி./பெற்ற மகளைக் கூட மறந்து, பொது வாழ்வினுக்குத் தன்னையே முழுமையாய் ஈந்த மாமனிதர் தோழர் ஜுவா அவர்களைப் போற்றுவோம்/ இங்குதான் நெருடுகிறது. தான் பெற்ற குழந்தையையே அறியாதவர் என்ன மாமனிதராய் இருந்தும் என்ன பிரயோசனம். ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டிற்கு பிரயோசனம் இல்லைதான்
      ஆனால் நாட்டிற்கு.....
      நன்றி ஐயா

      நீக்கு
  21. yes I too read it and about him already.great orator and very pure in public life

    பதிலளிநீக்கு
  22. ஆச்சர்யம்தான் என்றாலும் கோயில் பிள்ளை அவர்களின், மற்றும் ஜி எம் பி ஸார் கருத்துதான் எனக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்காக செக்கிழுத்தாரே வ.உ.சி
      தன் இல்லத்தை நினைத்திருந்தால், பொது வாழ்விற்கு வந்திருப்பாரா
      நன்றி நண்பரே

      நீக்கு
  23. ஜீவா போன்றோர் இனிக்காண்போமா என்பது சந்தேகம் ஐயா. அருமையான பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  24. முதலில் சமூகம்..பின்னர் தான் தங்கள் குடும்பம் என்று வாழ்ந்தவர்கள் ...வாழ்கிறவர்கள் இருக்கிறார்கள் என்பதை இப்போ ஏற்றுக்கொள்ளலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா

      நீக்கு
  25. தோழர் ஜீவானந்தம் அவர்கள் என்றும் போற்றப்பட வேண்டியவர்...

    பதிலளிநீக்கு
  26. இப்படியான மனிதர்களும் நம் மண்ணில் இருந்திருக்கிறார்கள் என்ற வியப்புதான் மேலிடுகிறது. இன்றைய நிலை..??

    பதிலளிநீக்கு
  27. தோழர் ஜீவாவின் வாழ்வில் நடந்த நெகிழ்ச்சியான ஒரு நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. (தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்)
    த.ம.11

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமதமானால் என்ன ஐயா
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா

      நீக்கு
  28. வணக்கம்
    ஐயா.
    அரிய பொக்கிஷம் தகவல் திரட்டுக்கு பாராட்டுக்கள் ஐயா... இவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம12
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  29. ஜீவா போன்றவர்கள் மிக அபூர்வம்!அருமையாகச் சொல்லி விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  30. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    தோழர் ஜீவானந்தம் அவர்களின் நாட்டிற்கு ஆற்றிய தொண்டினை எவ்வளவு போற்றினாலும் தகும். நாட்டிற்கு உழைத்த உத்தமர்களை தங்களின் பதிவுகளில் நினைவூட்டுவதன் மூலம் தாங்கள் செய்யும் தொண்டும் சிறப்பானதாகும். தொடரட்டும் தங்கள் தொண்டு

    பதிலளிநீக்கு
  31. ஜாதியைக் கடந்த மாமனிதர்கள் (மாண்பமைந்த கக்கன், ஜீவா, பசும்பொன், ராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராஜ் போன்ற பெருந்தகைகள்) பிறந்து வாழ்ந்த தமிழகம். அவர்களை ஜாதிக்கூண்டுக்குள் அடைத்த, அடைக்கத் துடிக்கும் பொதுஜனம். நல்லக்கண்ணு போன்ற ரத்தினங்களை வாழும்போது மதிக்கத் தெரியாத சனம் இருந்தென்ன பயன்?

    பதிலளிநீக்கு
  32. இது மிகவும் வியக்க வைக்கும் விறுவிறுப்பான பதிவாக உள்ளது. இதுவரை கேள்விப்படாத செய்தியாகவும் உள்ளது.

    பெற்ற மகளைக் கூட மறந்து, பொது வாழ்வினுக்குத் தன்னையே முழுமையாய் ஈந்த மாமனிதர் தோழர் ஜுவா அவர்களைப் போற்றுவோம்.

    இப்படிப்பட்ட மாமனிதர்களும் நம் நாட்டில் வாழ்ந்துள்ளார்களே !

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு