03 பிப்ரவரி 2015

16 வயது தலைமையாசிரியர்


ஆண்டு 2002 இல் ஓர் நாள். மேற்கு வங்கத்தின் பெர்காம்பூரில் உள்ள, ராஜ் கோவிந்தா சுந்தரி வித்யாபீத் அரசுப் பள்ளி. பிற்பகல் 2.00 மணி. பள்ளியின் அன்றைய அலுவல் முடிவடைந்து விட்டதை தெரிவிக்கும் வகையில் மணி ஓசை ஒலிக்கின்றது. அரை நாள் மட்டுமே செயல் படும் பள்ளி அது.

     மாணவ, மாணவியர் உற்சாகமாக பள்ளியை விட்டு, தங்கள் வீடுகளை நோக்கி, கூட்டம் கூட்டமாக சிரித்துப் பேசிக் கொண்டே நடக்கத் தொடங்கினர்.

      ஒரு மாணவன் மட்டும், புத்தகப் பையினை தோளில் சுமந்தபடி, அவ்வூரையும் தாண்டி நடந்து சென்று கொண்டிருந்தான். ஒன்பது வயதே நிரம்பிய மாணவன் அவன்.


      பேச்சுத் துணைக்குக் கூட, யாருமில்லாமல், வயல் வெளிகளையும், காடு மேடுகளையும் கடந்து நடந்து கொண்டிருக்கிறான்.

      அம்மாணவன் தன் வீட்டினை அடைய, ஐந்து கிலோ மீட்டர் தொலைவினையும் தாண்டி, நடந்தாக வேண்டும். எப்படியும் அச்சிறுவன் தன் வீட்டினை அடையும் போது மணி நான்கு ஆகிவிடும்.

      கடந்த நான்கு வருடங்களாக இதே போல்தான் தனியொரு ஆளாக, நடந்தே வருகிறான், நடந்தே போகிறான். காலையில் இரண்டு மணி நேரம், பிற்பகலில் இரண்டு மணி நேரம் நடந்து கொண்டே இருக்கிறான்.

      முர்ஷிதாப்த். இம்மாணவன் வசிக்கும் கிராமத்தின் பெயர். எதற்காக இம்மாணவன், தன் கிராமத்தை விட்டுவிட்டு, தொலைவில் உள்ள வேறொரு கிராமத்திற்குக் கால் தேய தேய நடந்து வந்து படிக்க வேண்டும் என்று தோன்றலாம். அதற்குக் காரணம் இருக்கிறது. இவனது கிராமத்தில் பள்ளிக் கூடம் என்பதே கிடையாது.

       நண்பர்களே, உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். முர்ஷிதாபாத் கிராமத்தில், பள்ளி மட்டுமல்ல, எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் கூட யாரும் கிடையாது.

       முர்ஷிதாபாத் கிராமத்தின் பழ வியாபாரி நஷ்ருதீன். இக்கிராமத்தில், யாருக்குமே வராத ஓர் ஆசை, இவரது உள்ளத்தில் மட்டும், எப்படியோ வந்து எட்டிப் பார்த்தது. நாம்தான் படிக்கவில்லை, நமது மகனாவது படிக்கட்டுமே.

       எனவே, தனது மகனை ஐந்து கிலோ மீட்டருக்கும் மேல் தொலைவில் உள்ள, பெர்காம்பூர் அரசுப் பள்ளியில் சேர்த்தார்.

      முர்ஷிதாபாத்தில் இருந்து, பள்ளிக்குச் செல்லும் ஒரே மாணவன் பாபர் அலி மட்டும்தான்.

      வெயில் உச்சந் தலையில் சுளீரென்று இறங்க, இதோ பாபர் அலி, தன் வீடு நோக்கி நடந்து கொண்டிருக்கிறான்.

      கடும் வெயிலில் இருந்து தப்பிக்க, ஒரு மரத்தடி நிழலில் சிறிது நேரம், இளைப்பாறிய, ஒன்பது வயதுச் சிறுவன், பாபர் அலியின் உள்ளத்தில், திடீரென்று ஓர் எண்ணம், அக்கடும் வெயிலிலும், மின்னலாய் தோன்றியது.

      நமது கிராமத்தில் இருந்து, நான் ஒருவன் மட்டும் படித்தால் போதுமா? என் வயதை ஒத்த, என் கிராமத்து நணபர்கள், ஏடெடுத்து எழுதுவது எப்போது? நூலெடுத்துப் படிப்பது எப்போது?

      எனது நண்பர்கள் எல்லாம், காடுகளில் சுள்ளி பொறுக்கும் வேலையையும், ஆடு மாடுகளை மேய்க்கும் வேலையையும் அல்லவா செய்து வருகிறார்கள்.

     வயலிலும், காடுகளிலும் வேலை செய்தால்தானே, இவர்களுக்கு ஒரு வேளை உணவாவது கிடைக்கும். என்ன செய்வது?

      மர நிழலில் இருந்து, வெயிலில் காலடிகளை எடுத்து வைத்து, வீடு நோக்கி நடக்க நடக்க, அந்தச் சின்னஞ் சிறுவனின் உள்ளத்தில், ஓர் உயர்ந்த எண்ணம், ஓர் உன்னதச் செயல் திட்டம், மெதுவாக, மிக மெதுவாக, கருப் பெற்று, உரு பெற்றுக் கொண்டேயிருந்தது.

         பாபர் அலி தன் கிராமத்திற்குச் சென்றதும், தன் வீட்டிற்குக் கூடச் செல்லாமல், ஓர் பாறையின் மீது ஏறி நின்று கொண்டு, வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும், சிறுவர் சிறுமியரை அழைத்தான்.

     நண்பர்களே, வாருங்கள். பள்ளி செல்ல இயலவில்லையே, படிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இனியும் வேண்டாம். வாருங்கள், எழுதவும், படிக்கவும் நான் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன். வாருங்கள், நண்பர்களே வாருங்கள்.

     பாபர் அலியின் அழைப்பினை ஏற்று ஓரிரு சிறுவர்கள் படிக்க முன் வந்தனர். அவர்களை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

    


வீட்டின் பின் புறம் உள்ள, கொல்லைப் புறத்தில் அவர்களை அமர வைத்து, அன்றைய தினம், பாபர் அலிக்கு அவனது ஆசிரியர், கற்றுக் கொடுத்த பாடத்தை, கதை போலவே, சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுத்தான். தினமும் மாலையில் ஒவ்வொரு பாடமாக, ஒவ்வொரு கதையாக சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருந்தான்.

      தினமும் காலை முதல் பிற்பகல் வரை, மாணவனாய் கல்வி பயிலும், பாபர் அலி, மாலை நேரங்களில், ஆசிரியராய் மாறி பாடம் நடத்தினான். எழுத்துக்களை, எண்களை மெல்ல மெல்ல, எழுதக் கற்றுக் கொடுத்தான். எழுத்துக் கூட்டிக் கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தான்.

      தொடக்கத்தில் பாபர் அலியின் அழைப்பினை ஏற்று, படிக்க வந்த சிறுவர்கள், தினமும் தொடர்ந்து, பாடம் படிக்க வருகை தரத் தொடங்கினார்கள். வகுப்புகள் நடைபெற, நடைபெற, மாணவர்களின் எண்ணிக்கையும் சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே சென்றது.

      பத்து இருபது என்றிருந்த எண்ணிக்கை, நூறு, இருநூறாய் உயர்ந்தது. சிறுவர்கள் மட்டுமல்ல, தாத்தாக்களும், பாட்டிகளும் கூட, மாலை வேளைகளில், இப்பேரனின் வகுப்பிற்கு வரத் தொடங்கினர்.

      பள்ளி சென்று படிக்க இயலாதா, பக்கத்துக் கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்களும், சிறுமியர்களும், மாலை நேர வகுப்பிற்கு வரத் தொடங்கினர்.

       கூட்டம் அதிகரிக்க, அதிகரிக்க பாபர் அலியால், தனியொருவனாய், சமாளிக்க இயலவில்லை. தன் வகுப்புத் தோழர்களை உதவிக்கு அழைத்தான்.

       வகுப்புத் தோழர்கள் பத்து பேர் உதவ முன் வந்தனர். பத்து பேருக்கும் மாணவர்களை பகிர்ந்து கொடுத்தான் ஒரு வகுப்பு, பத்து வகுப்பாய், ஆல் போல கிளை விட்டுப் பரவிப் படர்ந்தது.

      ஒரு பள்ளியே, பாபர் அலியின் வீட்டுக் கொல்லைப் புறத்தில் நடை பெறத் தொடங்கியது.
          
  பாபர் அலியின் மாலை நேரப் பள்ளிக்கு விடுமுறை என்பதே கிடையாது. மழை பெய்தால் மட்டும் விடுமுறை. திறந்த வெளிப் பள்ளி அல்லவா.

         நண்பர்களே, இப் பள்ளியில் இன்று ஆயிரம் பேர் கல்வி பயின்று வருகிறார்கள். இன்றும் பள்ளி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

       2009 ஆம் ஆண்டில், இந்தியாவின், ஆங்கிலத் தொலைக் காட்சி நிறுவனமான
CNN – IBN  நிறுவனம்,
பாபர் அலிக்கு,
உண்மை நாயகன் விருது
( Real Hero Award)
வழங்கிச் சிறப்பித்தது.


அதே ஆண்டில்,
BBC வானொலி நிறுவனமானது,
உலகின் இளைய தலைமையாசிரியர்
(Youngest Head Master In the World)
என்னும் விருதினை வழங்கிச் சிறப்பித்தது.

      உலகின் இளைய தலைமையாசிரியர் விருதினைப் பெற்ற போது, பாபர் அலியின் வயது 16.

      பாபர் அலி இன்றும் மாணவராய் படித்துக் கொண்டிருக்கிறார். தலைமையாசிரியராய் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

       பாபர் அலியின் தன்னலமற்ற சேவை போற்றுதலுக்கு உரியது.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை
என்பார் திருவள்ளுவர். அழிவில்லாத செல்வமாகிய கல்விச் செல்வத்தை, அனைவருக்கும் வாரி, வாரி வழங்கிக் கொண்டிருக்கும்
பாபர் அலியை
போற்றுவோம்.

வாழ்க          வாழ்க
என்று
வாழ்த்துவோம்