09 பிப்ரவரி 2015

குரு போற்றுவோம்


ஆண்டு 2008. அக்டோபர் 22. இந்தியாவின் முதல் நிலவு விண்கலத்தை ஏந்திச் செல்லும் ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்கிறது.

     சந்திரயான்.

     இந்த நூற்றாண்டின், மிகப் பெரிய விஞ்ஞான சாகசம், சாதனை என உற்சாகத்தோடு உச்சரிக்கப்படும், வெற்றிப் பயணம் சந்திரயான். நிலவிலும் நீருண்டு என்பதை கண்டுபிடித்து, உலகிற்கு அறிவித்த, நிரூபித்த நிகரற்ற பயணம் சந்திரயான்.

   


நவம்பர் 14 ஆம் நாள். இரவு மிகச் சரியாக 8.06 மணிக்கு, ஊர்தி ஒன்று (Moon Impact Probe) சந்திரயானில் இருந்து பிரிந்து, நிலவின் வெளியில் 25 நிமிடங்கள் பறந்து, பயணித்து, சரியாக 8.31 மணிக்கு, நிலவின் தென் துருவப் பகுதியை முத்தமிட்டது.

     இந்தியாவின் மூவர்ணக் கொடியை, நிலவில் நிலை நாட்டியது.
    

நண்பர்களே, அந்நாள், நவம்பர் 14, முதல் இந்தியப் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவின் பிறந்த நாள்.

     இந்திய விண்வெளித் திட்டத்திற்கு வித்திட்ட, அந்த உன்னத மனிதருக்கு, வழங்கப் பெற்ற மாபெரும் மரியாதை இது.
     

சந்திரயான் என்ற ஆளில்லா விண்கலத்தை, நிலவுக்கு ஏவி, வெற்றி கண்ட, 600 விஞ்ஞானிகளைக் கொண்ட குழுவின்,
திட்ட இயக்குநர்
மயில்சாமி அண்ணாதுரை.

---
     பெங்களூர். காலை நேரம். சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறு, அந்தப் பெரியவர், அன்றைய செய்தித் தாளினைப் படித்துக் கொண்டிருக்கிறார்.

     கடந்த ஒரு வார காலமாகவே, சந்திரயான் பற்றிய செய்திகளே, முதல் பக்கத்தில்.

     மயில்சாமி அண்ணாதுரையின் படம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு புத்தம்புது செய்திகளுடன் வெளி வந்து கொண்டிருந்தது.

     சந்திரயான் பற்றிய செய்திகளை, மிகுந்த ஆர்வமுடன் படித்துக் கொண்டிருக்கிறார், அந்த ஓய்வு பெற்ற, இயற்பியல் பேராசிரியர்.

      வீட்டுத் தொலைபேசி ஒலிக்கத் தொடங்குகிறது. நாற்காலியில் இருந்து, எழுந்து, நடந்து சென்று, தொலைபேசியை கையில் எடுத்து, காதருகே கொண்டு செல்கிறார்.

ஹலோ

பேராசிரியர் குண்டு ராவ் அவர்களின் இல்லம்தானே?

ஆமாம், பேராசிரியர் குண்டுராவ்தான் பேசுகிறேன்

ஐயா, வணக்கம். நான் உங்கள் முன்னாள் மாணவன் பேசுகிறேன். நலமாக இருக்கிறீர்களா ஐயா.

நலமாய் இருக்கிறேன், முன்னாள் மாணவரா?

ஆம் ஐயா, நான் உங்கள் முன்னாள் மாணவன். பெயர் அண்ணாதுரை

எந்த அண்ணாதுரை?

ஐயா, என்னை நேரில் பார்த்தால் கூட, உங்களுக்கு என்னை அடையாளம் தெரியாது. என்னுடைய பெயரும் உங்களுக்கு நினைவில் இருக்க வாய்ப்பில்லை.

பேராசிரியர் யோசிக்கவே, மறுமுனைனில் குரல் தொடர்ந்து ஒலிக்கிறது

கடந்த ஒரு வார காலமாக, செய்தித் தாட்களில் மயில்சாமி அண்ணாதுரை என்ற பெயர் வருகிறதல்லவா? அது நான்தான் ஐயா.
     

பேராசிரியர் பேச்சிழந்து நிற்கிறார். பேச்சை மட்டும் அல்ல, உலகையே மறந்து நிற்கிறார். சற்று முன் தொலைபேசி வழி, வெளி வ்ந்த வார்த்தைகள், காதுகளில் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன.

     கொஞ்சம் கொஞ்சமாக, பேராசிரியரின் முகம் மகிழ்ச்சியால் மலர்கிறது, கண்கள் வியப்பால் விரிகின்றன.

விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை என்னுடைய முன்னாள் மாணவரா? மயில்சாமி அண்ணாதுரை என்னுடைய மாணவரா?

திரும்பத் திரும்பக் கேட்கிறார்.

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் உங்களிடம் படித்தேன் ஐயா. கடந்த மூன்று நாட்களாக, பெரு முயற்சி செய்தும், உங்கள் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எப்படியோ, இப்பொழுதுதான், உங்கள் எண் கிடைத்தது. இதில் வியப்பு என்னவென்றால், தாங்களும் பெங்களூரில்தான் இருக்கிறீர்கள்.

      பேராசிரியரின் உதடுகள் துடிக்கின்றனவே தவிர, வார்த்தைகள் வெளிவர மறுக்கின்றன. கண்களில் ஆனந்தக் கண்ணீர் மெதுவாய், எட்டிப் பார்க்கிறது.

ஐயா, நான் உங்களை சந்திக்க விரும்புகின்றேன், வீட்டு முகவரியைக் கூறுங்கள்.

     பேராசிரியரின் துடிக்கும் உதடுகளில் இருந்து, வார்த்தைகள், மெதுவாக, மிக மெதுவாக வெளிப்படுகின்றன.

இவ்வுலகமே வியந்து பாராட்டுகின்ற, செயலை சாதித்துக் காட்டியவர் நீங்கள். உங்களைப் பார்க்க, உங்களைப் பாராட்ட, நான் வருகிறேன், இதோ இப்பொழுதே கிளம்புகிறேன்.

ஊர்க் குருவி எவ்வளவுதான் உயரே, உயரே பறந்தாலும் பருந்து ஆகி விட முடியாது ஐயா. என்றென்றும், எப்பொழுதும் தாங்கள் என் ஆசிரியர்தான். எவ்வளவு காலங்கள் கடந்தாலும், நான் தங்கள் மாணவன்தான்.

     அன்று மாலையே, பேராசிரியர் குண்டு ராவ் அவர்களின் இல்லத்திற்கு வருகிறார் மயில்சாமி அண்ணாதுரை.

     பேராசிரியரை நேரில் கண்டதும், முகம் மலர, இரு கரம் கூப்பி வணங்கி, அவரின் திருவடிகளில் விழுந்து வணங்குகிறார்.

     பதறிப்போன பேராசிரியர், அண்ணாதுரையின் தோள்களைப் பிடித்துத் தூக்கி, மார்புற அணைத்து நெகிழ்ந்து போகிறார்.

ஐயா, தாங்கள் பணியாற்றிய பொள்ளாச்சி  நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில், ஓராண்டு பி.யு.சி படித்தேன்.

சிறு வகுப்பு முதலே, எனக்கு ஆர்வமில்லாத பாடம் என்று ஒன்று இருந்ததென்றால், பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே வேப்பங்காயாக கசந்தது என்றால், அது இயற்பியல்தான்.

தாங்கள் இயற்பியலைப் போதித்த விதம், ஒவ்வொரு இயற்பியல் கோட்பாடுகளையும் விவரித்த விதம், என்னுள், இயற்பியல் மேல், ஒரு வித காதலையே உருவாக்கி விட்டது ஐயா.

அன்று இயற்பியல் மேல் நான் கொண்ட காதல், இன்று வரை தொடர்ந்து வளர்ந்தே வருகிறது.

இன்று சந்திரயானின் விண்வெளிப் பயணம் வெற்றி பெற்றதற்கு அடிப்படைக் காரணம் இயற்பியல்.

என்னுடைய இயற்பியல் அறிவின் தொடக்கப் புள்ளியே தாங்கள்தானே ஐயா.

அதனால்தான், சந்திராயன் திட்டம் வெற்றி பெற்றவுடன், என் முதல் வணக்கத்தை, என் முதல் மரியாதையை, என் குருவிற்குக் காணிக்கையாக்க விரும்பினேன்.

குருவே, என் முதல் வணக்கத்தையும், முதல் மரியாதையினையும் ஏற்றருளுங்கள்.

ஒரு ஆசிரியருக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்.
குரு போற்றுவோம்.
----