24 மே 2016

இளமையில் வறுமை



கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
என வறுமையின் கொடுமையினைப் பாடுவார் ஔவையார்.

வறுமையான வாழ்வில் திக்கித் திணறியபோதும்,
தமிழ் திராவிடத்திற்குத் தாயும், ஆரியத்திற்கு மூலமும் என்னும் உண்மையை உலகமறிய, மேலையறிஞர் ஒப்ப நாட்டவே இறைவன் என்னைப் படைத்திருக்கின்றான்
என உரைத்து, தமிழுக்கே தன் வாழ்வு முழுமையையும் ஈந்தத் தமிழறிஞர் இவர்.


எனக்கு வறுமையும் உண்டு
மனைவி மக்களும் உண்டு
அவற்றோடு மானமும் உண்டு
என முழுங்கியவர்.

நச்சினார்க் கினிய நம்பி
சிலுவை வென்ற செல்வராயன்
அருங்கலை வல்லான் அடியார்க்கு நல்லான்
பைந்தமிழ் வளர்த்த பாண்டியன்
மடந்தவிர்த்த மங்கைர்க்கரசி
மணிமன்ற வாணன்
இவையெல்லாம், இத்தமிழறிஞர் தன் குழந்தைகளுக்குச் சூட்டிய தனித் தமிழ்ப் பெயர்கள்.

   தன் குழந்தைகளுக்கு மட்டுமா தமிழ்ப் பெயர் சூட்டினார்.

   தன் மகள், மடந் தவிர்த்த மங்கையர்க்கரசி வளர்ந்து, இராபின்சன் என்பாரை மணந்தபோது, தன் மருமகனின் பெயரையும் அறவாணன் என்று மாற்றியப் பெருந்தகை இவர்.

   நினைக்கவே நெஞ்சம் நெகிழ்கிறது அல்லவா

நானும் என் மனைவியும் ஓருயிரும்
ஈருடலுமாக இருந்தோம்
என, எழுதி எழுதி மகிழ்ந்த இவர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூட பணமில்லாமல், தன் மனைவியை, தன் ஆருயிர் மனைவியை பறிகொடுத்ததுதான் கொடுமையிலும் கொடுமை.

என் மனைவியார் அகுத்தோபர் 27 ஆம் பக்கல் இறந்தார். அன்று மருத்துவச் சாலைக்கு, வாடகை இயங்கியில் அனுப்ப என்னிடம் 10 உரூபா இல்லாதிருந்தது. அனுப்பியிருந்தால் பிழைத்திருப்பார்.

     நண்பர்களே, படிக்கும்போதோ மனம் பதறுகிறது அல்லவா.

     ஒரு மாபெரும் தமிழறிஞர் 10 ரூபாய் இல்லாமையல், தன் அருமை மனைவியை இழந்திருக்கிறார்.

    தன் மனைவி இறந்தபிறகும், தான் உயிரோடு இருப்பதற்கானக் காரணத்தையும், அவரே கூறுகிறார் கேளுங்கள்.

என் மனைவியார் இறந்த அன்றே, என் உலக வாழ்க்கை முடிந்தது.
ஆயினும் முக்கடமைகளை நிறைவேற்றவே இன்று உயிரோடிருக்கிறேன்.
அவற்றுள் ஒன்று வட மொழியினின்று தமிழை மீட்டல்.

மனைவியின் மறைவிற்குப் பிறகும்,
தமிழுக்காகவே
வாழ்ந்த,
இந்தத் தமிழறிஞர் யார் தெரியுமா?

மாந்தன் பிறந்தகம் குமரிக் கண்டமே
அவன் பேசிய மொழி தமிழே
தமிழே உலக முதன் மொழி
தமிழே திரவிடத்திற்குத் தாய்
தமிழே ஆரியத்திற்கு  மூலம்
என ஆய்ந்து ஆய்ந்து எழுதி நிரூபித்ததவர்.

இவர்தான்,
பாவாணர் பாவலர், நற்றமிழ் நாவலர்
இலக்கியச் செல்வர், இலக்கண வித்தகர்
உரை வேந்தர், கட்டுரை வன்மையர்
நுண்மான் நுழைபுல எழிலர், நுணங்கிய கேள்வியர்
எனப் பலவாறு போற்றப்பெற்ற


தேவநேயப் பாவாணர்.


தேவநேயப் பாவாணரின்
நினைவினைப் போற்றுவோம்