31 மே 2016

திரை வள்ளல்


    

ஆண்டு 1957,

     சென்னை.

     அது ஒரு மருத்துவமனை.

     மஞ்சள் காமாலை மற்றும் குடல் வீக்கத்தால் பாதிக்கப் பட்ட, அம் மனிதர், இம் மருத்துவமனையில்தான் சேர்க்கப்பட்டுள்ளார்.

       இம்மனிதர் மருத்துவமனையில் சேர்ந்த நாளில் இருந்தே, மருத்துவமனை வளாகம் எங்கும், எப்பொழுதும் ஓரே கூட்டம்.


     நூற்றுக் கணக்கில் தினம், தினம் பொது மக்கள், ரசிகர்கள், உதவி நாடி வருபவர்கள், திரை உலக பிரபலங்கள் என மருத்துவ மனைக்கு, இவரை நலம் விசாரிக்க வருபவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

      இவர் ஓர் சிரிப்பு நடிகர் .சிரிப்பு நடிகர் மட்டுமல்ல வள்ளல், தத்துவவாதி, ஆசிரியர், கலைத் துறையில் எல்லாமுமாகி நிற்பவர்.

     கலைஞன் என்பவன், மனிதர்களிலே ஒருவன், அவன் ஒதுக்கப் படவும் கூடாது, ஒதுங்கி வாழவும் கூடாது. இதை அழுத்தமாகக் கூறியதோடு, செயல்படுத்தியும் வாழ்ந்து வருபவர்.

     பேரன் காலத்து விஞ்ஞானத்தை, பாட்டன் காலத்திலேயே எழுதி, பாட்டாய் பாடியவர்.

    புகழையும், பொருளையும் திகட்டத் திகட்டச் சம்பாதித்தவர்.

   புகழை மட்டும் வைத்துக் கொண்டு, பொருளை எல்லாம், வாரி வாரி வழங்கிய வள்ளல்.

        இல்லை என்று இவரிடம் சென்றால், இல்லை என்று கூறாமல், இருப்பதை எல்லாம், போதும் போதும் என்று கூறும் வரை எடுத்துக் கொடுப்பவர்.

      பணம் இருந்தால் பணம் கொடுப்பார்.

      பணம் இல்லையேல், வீட்டில் இருக்கும் வெள்ளிப் பாத்திரங்களைக் கூட, கொஞ்சமும் தயங்காமல் எடுத்துக் கொடுப்பார்.

     பல திரைப் படங்களை சொந்தமாய் தயாரித்து, இலட்சக் கணக்கில் பொருள் ஈட்டியவர்தான்.

    ஆனாலும், ஓர் படம், ஒரே ஒரு படம், இவர் மொத்தச் செல்வத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு போய்விட்டது.

    அப் படத்தின் பெயர் என்ன தெரியுமா?

    ப ண ம்.

   ஆம் நண்பர்களே, பணம் என்னும் பெயரில் ஓர் படம் எடுத்து, இருந்த பணத்தை எல்லாம் இழந்தார்.

   பணம் போனாலும், குணம் மட்டும் மாறவில்லை.

   கொடுத்துக் கொண்டே இருந்தார்.

   கொடுத்துக் கொண்டே இருந்தவருக்குத்தான், திடீரென்று மஞ்சள் காமாலை மற்றும் குடல் வீக்கம்.

   கையில் இருந்த பணம் எல்லாம் கரைந்த நிலையில், இதோ மருத்துவ மனையில் படுத்திருக்கிறார்.

    ஆனாலும் முகத்தில் கவலை இல்லை, இல்லையே என்னும் ஏக்கமும் இல்லை.


ஒரு நாள் இவரைப் பார்ப்பதற்கு எம்.ஜி.ஆர் வந்தார்.

     எம்.ஜி.ஆர் மூச்சு விடக் கூட நேரமில்லாமல் நடித்துக் கொண்டிருந்த காலம் அது.

     இருந்தபோதிலும், பட பிடிப்பையே ரத்து செய்து விட்டு இவரைப் பார்ப்பதற்காக மருத்துவ மனைக்கு ஓடோடி வந்தார்.

     சிறிது நேரம் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், புறப்படும் பொழுது, தன் ஜிப்பாவில் இருந்த, இரண்டு பணக் கட்டுக்களை எடுத்து, படுக்கையில் கீழே சொருகி வைத்துவிட்டுப் புறப்பட்டார்.

     எம்.,ஜி.ஆர் அவர்களை வழியனுப்பும் பொருட்டு, படுக்கையில் புரண்டு படுத்தவர், படுக்கையின் கீழ் ,பணக்கட்டுகள் இருப்பதை உணர்ந்து, விடை பெற்றுச் சென்று கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர் அவர்களைக் கூப்பிட்டார்.

    ராமச்சந்திரா

   எம்.ஜி.ஆர் திரும்பிப் பார்த்தார்.

   ராமச்சந்திரா, ஏன் பணத்தை இப்படி, கட்டு கட்டா வச்சிட்டுப் போறே. சில்லறையா மாத்தி வச்சிட்டுப் போ. வருகிறவர்களுக்குக் கொடுக்க வசதியாக இருக்கும்.

   நம்ப முடிகிறதா நண்பர்களே,

   இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்திருக்கிறார் என்பதை நம்ப முடிகிறதா.

   இந்த நடிகர்
   இந்தச் சிரிப்பு மருத்துவர்

   இந்த மனிதர்
   இந்த மாமனிதர்
   யார் தெரியுமா?

எங்கே தேடுவேன் – பணத்தை
எங்கே தேடுவேன்
திருப்பதி உண்டியலில்
மாட்டிக் கொண்டாயோ?
திருவண்ணாமலை
குகை புகுந்தாயோ
எனப் பாடி விழிப்புணர்வு ஊட்டியர்.

நாட்டுக்குச் சேவை செய்ய
நாகரீக கோமாளி வந்தானைய்யா
என்று பாடியவர்


இவர்தான்
கலைவாணர்
என்.எஸ்.கிருஷ்ணன்.


கலைவாணரின் நினைவினைப் போற்றுவோம்.