11 நவம்பர் 2017

யாரது, யாரது, தங்கமா?




     ஆண்டு 1950.

     கும்பகோணம்.

     தாராசுரம் புகை வண்டி நிலையம்.

     சிறுவர்கள்

     பதினைந்து வயதுள்ள சிறுவர்கள் பலர், புகை வண்டி நிலையத்தின், அகன்று விரிந்த, மரங்களின் நிழலில் அமர்ந்திருக்கிறார்கள்.


     இவர்கள் அனைவரும் சித்திரக் கலாசாலை மாணவர்கள்.

      சித்திரக் கலாசாலை

      ஓவியப் பயிற்சிப் பள்ளி.

      அக்காலத்தில், தமிழ் நாட்டில், இரண்டே இரண்டு, அரசு ஓவியப் பயிற்சிப் பள்ளிகள்தான் இருந்தன.

        ஒன்று சென்னையில்.

        மற்றொன்று கும்பகோணத்தில்.

        இவர்கள் அனைவரும் கும்பகோணத்து மாணவர்கள்.

        தாராசுரத்தில் இருக்கும் புகழ்பெற்ற, ஐராவதீசுவரர் கோயில் சிற்பங்களைப் பார்த்து, வரைந்து, பயிற்சி எடுப்பதற்காக வந்திருக்கிறார்கள்.

         காலை நேரப் பயிற்சி முடிந்தவுடன், அருகில் இருக்கும், தாராசுரம் புகை வண்டி நிலையத்தில் அமர்ந்து, மதிய உணவினை, சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

         ஒரு மாணவன் மட்டும் உணவு கொண்டு வரவில்லை.

         இன்று மட்டுமல்ல, ஐராவதீசுவரர் கோயிலில் பயிற்சியில் ஈடுபட்ட நாள் முதல், இன்று வரை, உணவு கொண்டு வந்ததே இல்லை.

         மற்ற மாணவர்கள், உணவு உண்பதற்காக உட்கார்ந்தவுடன், இம் மாணவன் மட்டும், நீங்கள்  சாப்பிடுங்கள், நான் அந்த டீ கடைக்குப் போய், சாப்பிட்டுவிட்டு வருகிறேன் என்று கூறி, மெல்ல புகை வண்டி நிலையத்தை விட்டு வெளியே வருகிறான்.

        மற்ற மாணவர்களின் பார்வையில் இருந்து அகன்றவுடன், டீ கடைக்கு, எதிர் திசையில் வேகமாய் நடக்கிறான்.

        சற்று தொலைவில் ஒரு கிணறு.

        இளநீரைப் போல் சுவை தரும் நீர் நிரம்பியக் கிணறு.

        அக்கிணற்றில் இருந்து, நீரை இறைத்து, வயிறு முட்ட முட்டக் குடிக்கிறான்.

        பின்னர், சிறிது நேரம், அங்கிருக்கும் மரத்தின் நிழலில் அமர்ந்துவிட்டு, பின் மெல்ல நடந்து மற்ற மாணவர்களுடன் இணைகிறான்.

         டீ கடையில் இன்று அருமையான சாப்பாடு.

        சாப்பிட்டது போலவே நடிக்கிறான்.

        சாப்பாட்டிற்கு வழி இல்லை.

        ஏழ்மை.

        சாதாரண ஏழ்மை அல்ல, வாட்டி வதைக்கும் ஏழ்மை.

       பல நாட்கள், இவனது தாயார், இவனுக்கு, மிக மலிவாய் கிடைக்கும், வாழைப் பழங்களை வாங்கிக் கொடுத்துவிட்டு, அவற்றின், தோலைத் தின்று தன் வயிற்றை நிரப்பிக் கொண்டவர்.

       விரைவில் வேலைக்குச் செல்ல வேண்டும்.

       அன்புத் தாயின் பசியாற்ற வேண்டும்.

       இதே நினைவோடு ஓவியம் கற்றான்.

       ஓவியக்கலை இவன் உதிரத்தோடு, உதிரமாய் ஒன்றெனக் கலந்தது.

---
     
      கடந்த 1.11.2017 புதன் கிழமை மாலை 6.30 மணியளவில், நானும், முனைவர் பா.ஜம்புலிங்கம் ஐயா அவர்களும், தஞ்சாவூர், மாரியம்மன் கோயில் சாலையில், அமைந்திருக்கும், ஞானம் நகரில் இருக்கும், ஓவியரது இல்லத்தில் அமர்ந்திருக்கின்றோம்.
      

வயது 80 ஐத் தொட்டுவிட்ட போதிலும், எட்டு வயதுச் சிறுவன் போல் சிரிக்கிறார், மகிழ்வாய் பேசுகிறார்.

       இன்னும் சிறிது நேரம், பேசமாட்டாரா என நம்மை ஏங்க வைக்கும் பேச்சு.

      பேச்சு முழுவதும், இவரது வாழ்க்கை அனுபவங்கள், அலைகடலென ஆர்ப்பரித்து எழுந்து, நம்மை வியக்க வைக்கின்றன.

       பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, ஒரு வெள்ளைத் தாளினை எடுத்து, எழுதுகோலைத் திறந்து, சிறு சிறு கோடுகள் வரையத் தொடங்கினார்.
      



ஆகா, படம் அல்லவா, வரைந்து காட்டுகிறார் என்பதை உணர்ந்து, இருக்கையில் இருந்து எழுந்து, காணொலியாய் பதிவு செய்வதற்காக, அலைபேசியை எடுப்பதற்குள், பாதி படத்தை வரைந்து முடித்து விட்டார்.

      மின்னல் வேகம்.

      ஒரே ஒரு நிமிடத்திற்குள், வெள்ளைத் தாளில், உயிரோவியமாய், பகுத்தறிவுப் பகலவன், உதித்த, பொன்னானக் காட்சியினைக், கண்ணாரக் கண்டு, வியந்து போனேன்.

       நண்பர்களே, தமிழகத்தின் பல இடங்களில், சில உணவுக் கூடங்களில் கூட, இந்திய மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும், சுஷ்ருதா அவர்கள், சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு நோயாளிக்கு, தலையில், மூளையில், அறுவை சிகிச்சை செய்யும் காட்சி, பெரும் படமாக மாட்டப் பெற்றிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

       நீங்களும் பார்த்திருக்கலாம்.
      

இவரது இல்லத்திற்கு வந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். அந்த ஓவியத்தை வரைந்ததே இவர்தான் என்பதை.

       போற்றுதலுக்கும், வணங்குதலுக்கும் உரிய பெரியவர் இவர்.

---

      பொன்னியின் செல்வன்.

      இவ்வுலகில் வாழும், எழுதப் படிக்கத் தெரிந்த, அத்துனைத் தமிழ் உள்ளங்களையும் கொள்ளை கொண்ட, அற்புத நாவல், பொன்னியின் செல்வன்.

      அமரர் கல்கியின், தெளிந்த, நீரோட்டம் போன்ற எழுத்துக்களுக்கு, உயிர் கொடுத்து, உரு கொடுத்து, பொன்னியின் செல்வன் முழுவதையும், சித்திரக் கதையாய் உருவாக்கும், உன்னதப் பணியில், அயராது முயன்று வருகிறார், இந்த 80 வயது இளைஞர்.


பொன்னியின் செல்வன்
சித்திரக் கதை

      இதுவரை இரண்டு பகுதிகளை வெளிக் கொணர்ந்தவர், தற்பொழுது, மூன்றாம் பகுதியை, கண்கவர் சித்திரங்களால், உருவாக்கி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகளை, வெள்ளைத்தாளில், திரைப்படம் போல் ஓட விட்டிருக்கிறார்.

      பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை, மூன்று பகுதிகளாய் வெளியிட்டிருக்கிறார்.

       அடுத்தப் பகுதிக்கானப் பணியினை, ஒரு சிறு குழந்தையின், குதூகலத்துடன் தொடங்கி இருக்கிறார்.

       மூன்று பகுதிகளும் சேர்த்து, 327 பக்கங்கள்.

       பக்கத்துக்குப் பக்கம், கடந்தகால வரலாற்றுக்குள் நம்மையும் கைபிடித்து அழைத்துச் செல்லும் ஓவியங்கள்.



பொன்னியின் செல்வன்
சித்திரக் கதை

       நண்பர்களே, பொன்னியின் செல்வன் சித்திரக் கதையின், மாபெரும் ஓவியச் சுழலுக்குள் மூழ்கியதால், ஓவியரின் பெயரைச சொல்ல, மறந்தே போய்விட்டேன். 

மனித வாழ்க்கையில் மிஞ்சுவது என்ன?
என்ற கேள்வியை,
பலமுறை மனதிற்குள் கேட்டுப் பார்த்து,
தனது வாழ்க்கையில்,
ஏதாவது அழுத்தமானச் சுவடுகளைப் பதித்துச் செல்ல வேண்டும்
என்று முடிவெடுத்துச்
செயலில் இறங்கியவர் இவர்.

இதோ,
இப்பூமிப் பந்து சுழன்று கொண்டிருக்கும் வரையில்,
நிலைத்து நிற்கும் தன்மை வாய்ந்த
உன்னதப் படைப்பை,
தமிழ்கூறும் நல்லுலகிற்குக்
காணிக்கையாய் வழங்கி இருக்கிறார்.

இவரது நண்பர் ஒருவர்,
இவரைப் பார்க்கும் பொழுதெல்லாம்,
இப்படித்தான், ராகத்தோடு, பாடலாய் பாடி அழைப்பாராம்.

யாரது,   யாரது,  தங்கமா


ஆம், இவர்தான்
ஓவியர் தங்கம்.