18 நவம்பர் 2017

நீர்த் தூம்பு



                            நீர்த் தூம்பு


    சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே, பாசனப் புலமை வாய்ந்த இனம், நம் தமிழினம்.

     வானிலிருந்து பெய்யும் மழையானது, ஆற்றின் வழி பயணித்து, கடலில் கலந்து பயனின்றி பாழ்படுவதைத் தடுத்து, விவசாயத்திற்குப் பயன்படுத்தும் பொருட்டு, நம் முன்னோர் செய்த ஏற்பாடுதான் ஏரிகளும், குளங்களும்.

     பெரும் பெரும் ஏரிகளில் இருந்து, சிறு சிறு குளங்களுக்குத் தண்ணீரைக் கொண்டு சென்று, விவசாயம் செய்தனர்.
    

நண்பர்களே, தாங்கள், பல ஏரிகளைப் பார்த்திருப்பீர்கள், பல ஏரிகளின் கரையில் நின்று, நீர் நிறைந்து, ததும்பிக் கொண்டிருக்கும், பேரழகில் மயங்கியும் போயிருப்பீர்கள்.

     ஆனால், ஏரியில் இருந்து, கால்வாய்களோ, வாய்க்கால்களோ, ஆறுகளோ பிரிந்து செல்லாத நிலையில், எவ்வாறு, சிறு சிறு குளங்களுக்கு, நீர் செல்கிறது என்று தெரியுமா?

      எனக்குத் தெரியாது.

      தற்பொழுதுதான் தெரிந்து கொண்டேன்.

      நீர்த் தூம்பு

      பெரும் பெரும் ஏரிகளில் இருந்து, குளங்களுக்கு நீரைக் கொண்டு செல்ல, நம் முன்னோர் செய்திருந்த ஏற்பாடுதான் நீர்த் தூம்பு.

    நீர்த் தூம்பு

    தூம்பு என்பது, நீரைத் தேவைக்கு ஏற்றபடி, அளந்து அனுப்பும் கட்டுமானமாகும்.

    இன்றும் கூட, சில ஏரிகளில், அதன் மையப் பகுதியில், இரு கற்தூண்கள் நிற்பதைப் பார்த்திருப்பீர்கள்.

    இந்த இரு கற் தூண்களுக்கும் கீழே, கல் பலகைகளால் செய்யப் பட்ட, பெட்டி போன்ற ஒரு அமைப்பு இருக்கும்.

    இதற்குக் கல் பெட்டி என்று பெயர்.

    இந்த கல் பெட்டியின் மேல் ஒரு துளை போடப் பட்டிருக்கும். பக்கவாட்டில் கூட, இரண்டு அல்லது மூன்று துளைகள் இருக்கும்.

     இதற்கு ஒரு மூடியும் உண்டு

     இக்காலச் சிறுவர்களுக்குத் தெரியாது, ஆனால், நமக்குத் தெரியும். நாம் சிறுவர்களாய் இருந்த பொழுது, பம்பரம் விட்டு விளையாடி இருப்போம் அல்லவா, அந்த பம்பரத்தின் வடிவில், ஒரு கருங்கல் மூடி இருக்கும்.

    இக் கல்லுக்கு தூம்புத் துளை அடைப்புக் கல் என்று பெயர்.
   

இந்த பம்பரம் போன்ற கல்லின் மேல் பகுதியில், ஒரு கம்பி பொறுத்தப் பட்டிருக்கும்.

கல்பெட்டிக்கும் மேலே கற்தூண்கள் நிற்கிறதல்லவா, அந்த இரண்டு கற் தூண்களுக்கும் இடையில், மேலென்று கீழொன்றுமாக, இரண்டு குறுக்குக் கல் பலகைகள் பொருத்தப் பட்டிருக்கும்.

     இந்த குறுக்குக் கல்லில் துளைகள் இட்டு, அந்தத் துளைகள் வழியே கம்பியைச் செலுத்தி, அடைப்புக் கல்லுடன் இணைத்திருப்பார்கள்.

     அடைப்புக் கல் துளையினை முழுமையாக மூடி இருக்கும்.

    கம்பி மூலம் அடைப்புக் கல்லை மேலே தூக்கினால், ஏரியில் இருக்கும் நீர், இத்துளைக்குள் வெகுவேகமாய் நுழையும்.

பெருங் குள மருங்கில் கருங்கைச் சிறு வழி
இரும் பெரு நீத்தம் புகுவது போல
அளவச் சிறு செவி அளப்பு – அரு நல் அறம்
உளம் மலி உவகையோடு உயிர் கொளப் புகூஉம்
-    மணிமேகலை – அறவாணர் தொழுத கதை 79-82

         ஏரியில் நீர் நிறைந்திருக்கும் காலத்தில், இந்த அடைப்புக் கல்லை, மேலே தூக்கினால், ஏரி நீரானது, வெகுவேகத்துடன், சுற்றிச் சுழன்று சுழன்று, பெரும் பெரும் சுழிகளை உருவாக்கியவாறு, இந்தச் சிறு துளையினுள் நுழையும்.
      
பூமிக்குள் நீர் செல்வதற்கான கட்டுமானம்

ஏரியில் இருந்து, அதன் சுற்றுப் பகுதிகளில் இருக்கும், குளங்களுக்கு நீரைக் கொணடு செல்வதற்கு வசதியாக, பூமிக்குள்ளேயே, குழாய் போன்ற கட்டுமானங்களை, நம் முன்னோர் அமைத்திருந்தனர்.

       நீர்த் தூம்பின் வழி நுழையும் நீர், குழாய்களின் வழியே குளங்களைச் சென்றடையும்.

       நீர்த் தூம்பினால் இரு பலன்கள் உண்டு.

       முதலாவது ஏரியில் எவ்வளவு நீர் நிரம்பினாலும், கரை உடைப்பெடுக்காது. ஏரியின் கொள்ளளவையும் தாண்டி, நீர் மட்டம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

        இரண்டாவது, ஏரியின் நீர், வெகுவேகமாய் சுழன்று, சுழன்று, பெரும் சுழலை ஏற்படுத்தியவாறு, சின்னஞ் சிறு துளை வழியே நுழையும் போது, ஏரியின் தரைப் பகுதியில்  படிந்திருக்கும் வண்டல் படிவுகளும், நீரோடு சேர்ந்து, குழாய் வழியே சென்றுவிடும்.

         இதனால் ஏரியைத் தூர்வார வேண்டிய அவசியமே ஏற்படாது.

         மேலும் இந்த வண்டல் படிவுகள், குளங்கள் வழியே, வயல்களைச் சென்று சேருவதால், விளைச்சலும் பெருகும்.

          ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

          எல்லாம் நம் முன்னோர் ஏற்பாடு.

         இதுமட்டுமல்ல, இதோ இந்தக் கல்வெட்டுச் செய்தியினையும் படித்துப் பாருங்கள்.

நீர்ப்பிழை புரிதல் ஊர்ப் பிழைத் தற்றால்
நெடுமுடி மன்னவன் கடுஞ்சினங் கொள்ளும்.
-    பாண்டியர் கல்வெட்டு

         நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தாலோ, நீர் வழிகளைத் தடுத்தாலோ, மன்னன் பெருங் கோபம் கொள்வான், கடும் தண்டனையும் கிடைக்கும் என்பதை பறை சாற்றுகிறது இந்தக் கல்வெட்டு.

         நினைத்துப் பார்க்கவே, மெய் சிலிர்க்கிறதல்லவா

        நீர் மேலாண்மையில், நம் முன்னோர், எவ்வளவு அக்கறை காட்டியிருக்கிறார்கள், பார்த்தீர்களா?

        ஆனால் நாம்தான், நாகரிகம், வளர்ச்சி, நகரமயமாதல், எனப் புதிது புதிதாய் பெயர்களைக் கூறி, ஏரி குளங்களைத் தூர்த்து, தூர்த்து, வீடுகளைக் கட்டிக் கொண்டு, வெள்ளம் வருகிறது, வெள்ளம் வருகிறது என்று கூப்பாடு போடுகிறோம், வெள்ளம் வடிந்ததும், தண்ணீர் இல்லை, தண்ணீர் இல்லை எனத் தவியாய்த் தவிக்கிறோம்.

----

         நண்பர்களே, நீங்கள் வியப்பது புரிகிறது.

        என்னடா இவன், திடீரென்று பழந்தமிழர் நீர் மேலாண்மை பற்றிப் பேசுகிறானே, மணிமேகலையில் இருந்து, பாடல் வரிகளை மேற்கோள் காட்டுகிறானே, பாண்டியன் கல்வெட்டு பற்றியச் செய்திகளைப் போட்டுடைக்கிறானே, எப்படி, எப்படி என நீங்கள் வியப்பது புரிகிறது.

         இவையெல்லாம் எனக்குத் தெரிந்ததோ, அல்லது நான் படித்து அறிந்ததோ அல்ல.

         எனக்கும் பழங்காலப் பாடல்களுக்குமான, தூரம், மிக மிக அதிகம்.

          இச்செய்திகள் எல்லாம், நான் என் செவிகளால் மெய்மறந்து கேட்டவை.

         ஆம், ஒரு அருமையானச் சொற்பொழிவினைக் கேட்டேன்.

         சுமார் ஒரு மணி நேரம், மடை திறந்த வெள்ளமாய், ஆர்ப்பரித்து எழுந்தச் சொற்பொழிவு.

         பழந்தமிழர் நீர் மேலாண்மைப் பற்றி அடுக்கடுக்காய், அடுத்தடுத்துப் பலப் பலச்  செய்திகளைக் கேட்டு, கேட்டு,  அந்த ஒரு மணி நேரமும், உலகையே மறந்துபோய்தான் அமர்ந்திருந்தேன்.

தண்ணீரும் தமிழகமும்

         இச்சொற்பொழிவில் இருந்து, ஒரே ஒரு செய்தியினை மட்டும், தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். அவ்வளவுதான்.


ஏடகம்

     கடந்த மாதம், அக்டோபர் 8 ஆம் நாள் உதயம் பெற்ற அமைப்பு.

ஏடகம்

ஏடு + அகம்





இவ்வமைப்பின் சார்பில், ஓலைச் சுவடித் தமிழைப் படிப்பதற்கானப் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.

        இன்று சுவடி படிக்கத் தெரிந்தோர், நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றனர்.

        ஒரு கால கட்டத்தில், சுவடிப் படிக்கத் தெரிந்தோர், இல்லாமல் போய்விடுவார்களேயானால, தற்சமயம், அச்சில் ஏறாமல், சுவடியிலேயே தங்கியிருக்கும், ஆயிரக் கணக்கான, பாடல்கள், பதிவுகள், தகவல்கள், இருந்தும், இல்லாதவையாக மாறிவிடுமல்லவா.

        இக்குறையினைப் போக்கத் தனியொரு மனிதராக, களம் இறங்கி, பெரு முயற்சி எடுத்து வருகிறார், இந்த ஏடகம் அமைப்பின் நிறுவுனர்.

        இளைஞரோ, வயது முதிர்ந்தவரோ, ஆர்வத்தோடு வருபவர்களுக்கு, பேரார்வத்தோடு சுவடிப் பயிற்சியினை, இலவசமாய் வழங்கி வருகிறார்.

        மாதம் தோறும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையன்று, ஞாயிறு முற்றம் என்னும் பெயரில், தக்கவரை அழைத்து சொற்பொழிவாற்றச் செய்து வருகிறார்,

        இதுமட்டுமல்ல சமுதாய வளர்ச்சிக்குப் பாடுபட்டு வரும், மாமனிதர்களை, அடையாளம் கண்டு, பாராட்டுவதையும், தன் கடமையாகவே செய்து வருகிறார்.

        இவர், ஏடகத்தின் நிறுவுநர், சுவடி படித்தலில், கரை கண்டவர்.

        கடந்த ஏழு ஆண்டுகளாக, தஞ்சாவூர், சரசுவதி மகால் நூலகத்தின், தமிழ்ச் சுவடிகள் பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளராகத் திறம்படப் பணியாற்றி, இரு நூறுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, சுவடி படித்தறியும் பயிற்சியினை வழங்கி இருக்கிறார்.



தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் அமைந்துள்ள கோயில்களில், காணப்படுகின்ற, கல்வெட்டு, ஓவியம், சிற்பம் போன்றவைகளில், புதிய புதிய செய்திகளைக் கண்டறிந்து, உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டி வருகிறார்.

         சரசுவதி மகால் நூலகத்தின் சார்பில், பத்திற்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்திருக்கிறார்.

         இதுமட்டுமல்ல, இவர், தஞ்சை, தமிழ்ப் பல்கலைக் கழகத்தின், சுவடியியல் பாடத்திட்டக் குழு, மற்றும் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின், திருக்கோயில்கள் மறு சீரமைப்புக் குழு, முதலியவற்றின் உறுப்பினருமாவார்.

        மூன்றே எழுத்தில் தமிழ், குடவாயில் பாலசுப்பிரமணியன், அசலாம்பிகை அம்மையார் முதலான ஏழு நூல்களின் ஆசிரியர்.

தண்ணீரும் தமிழகமும்
சொற்பொழிவினை
ஒளிப் படக் காட்சிகளோடு,
கேட்போர் வியக்கும் வகையில்,
கேட்டோரின் நெஞ்சத்தில்
நம் முன்னோரின் அற்புத நீர் மேலாண்மைப் பெருமைகளை
விதைத்தவரும் இவர்தான்.

இவர்
உலகப் புகழ் பெற்ற
தஞ்சாவூர், சரசுவதி மகால் நூலகத்தின்
தமிழ்ப் பண்டிதர்
சுவடியியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர்


திரு மணி.மாறன்.

ஏடகம் சிறக்க போற்றுவோம்.
ஏடகத்தின் முயற்சி வாகை சூட வாழ்த்துவோம்.