25 நவம்பர் 2017

வடகால்




     வடவாறு.

     நண்பர்களே, நான் பயின்ற, பணியாற்றுகின்ற, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை, ஒட்டி, உரசி, உறவாடிச் செல்கின்ற ஆறுதான் வடலாறு.

     சிறு வயதில், பள்ளிப் பருவத்தில், ஆற்றில் தண்ணீர் நிறைந்து ஒடும் காலங்களில், வடவாற்றில் நீந்தி மகிழ்வதுதான் எனக்கும், என் நண்பர்களுக்கும் முக்கியமான பொழுதுபோக்கு ஆகும்.


     நீச்சல் கற்றுக் கொண்டு, புதிதாய் நீந்தத் தொடங்கிய காலகட்டத்தில், இதே வடவாற்றின் பாலத்தில் இருந்து குதித்து, நீரில் மூழ்கி, மூச்சுத் திணறி, நண்பன் இராசேந்திரன் என்பவரால் காப்பாற்றப் பெற்ற அனுபவமும் உண்டு.

      இன்று நினைத்துப் பார்க்கிறேன். இந்த வடவாற்றில் இறங்கி குளித்து, முப்பது வருடங்களுக்கும் மேலாகிவிட்டது.

     ஆனால், இந்த முப்பது வருடமும், தினமும், இந்த வடவாற்றினைப் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன்.

      இருப்பினும், குளிக்க இயலவில்லையே, ஆற்றின் பாலத்தில் இருந்து, குதிக்க இயலவில்லையே எனும் ஏக்கம் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

      சில நாட்களுக்கு முன்னர், இந்த வடவாற்றின் கரையில் ஒரு பயணம் சென்றேன்.

      நானும், நண்பரும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியருமான, திரு அ.சதாசிவம் அவர்களும், ஆற்றங்கரையிலேயே, ஒரு மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு, ஒரு சிறு பயணம் சென்றோம்.

     எதற்குத் தெரியுமா?

     கரந்தையிலேயே பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த போதும், இத்துனை வருடங்களாய் காணாத, ஒரு காட்சியைக் காண்பதற்காகச் சென்றோம்.

     ஆற்றங்கரையினை ஒட்டியே, நீண்டு செல்லும், மணற் பாதையில், தூய்மையானக் காற்றைச் சுவாசித்தபடி, அமைதியானச் சூழலில் ஒரு பயணம்.

     வடகால்.

     கரந்தையை ஒட்டியுள்ள சின்னஞ்சிறு கிராமம்.

     வடகாலை நெருங்கி விட்டோம்.

     இதோ, இங்கே பாருங்கள், வடவாறு, காணாமல் போய்விட்டது.

     ஆமாம் நண்பர்களே, வடவாற்றின் கரையிலேயேதான் வந்தோம், வடகால் என்னும் சிற்றூரை அடைந்தவுடன், வடவாறு காணாமல் போய்விட்டது.

     வடவாற்றின் குறுக்கே ஒரு பெரும் சுவர்.

     சுவற்றிற்குப் பின் வெற்றுத் தரை.

     வடவாறு காணாமல்தான் போய்விட்டது.

     பெருஞ் சுவரைப் பார்க்கிறோம்.

     






பெருஞ்சுவரின் கீழிருந்து, தண்ணீர் கொப்பளித்து வெளி வருகிறது.

      சுவற்றின் கீழிருக்கும் குழாய்களின் வழியே ஆறு வெளிவருகிறது.

      வியந்து போய் நிற்கிறோம்.

      வடவாறும், முதலை முத்து வாரி எனப்படும் பேய்வாரியும், ஒன்றை ஒன்று குறுக்கிட்டு, வெட்டிக் கடந்து செல்லும் இடம் இந்த வடகால்.

     மேற்கிலிருந்து கிழக்காகப் பாயும் வடவாறும், தெற்கிலிருந்து வடக்காகப் பாயும் பேய்வாரியும், ஒன்றை ஒன்று சந்திக்கும் இடம், இந்த வடகால்.

     இரண்டு ஆறுகளும் பூமி மட்டத்திலேயே, ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்கின்றன.

     முதலை முத்துவாரி எனப்படும் பேய்வாரியானது, மழைக்காலங்களில் மட்டுமே, நீரைச் சுமந்து செல்லும், ஒரு வடிகாலாகும்.

     வடவாறோ, விவசாய நிலங்களுக்காக, கல்லணையில் இருந்து, நீரைக் கைப்பிடித்து அழைத்து வரும் ஆறாகும்.

     வடவாற்றில் நீர் வரத்து இருக்கும் பொழுதெல்லாம், இந்த வடவாற்று நீரின் ஒரு பகுதி, இந்தப் பேய்வாரியின் வழி திரும்பி, விவசாய நிலங்களை மூழ்கடித்து விடுவது வாடிக்கையாய் இருந்து வந்துள்ளது.

      இதனைத் தடுப்பதற்காகவும், வடவாற்று நீரினை, வடவாற்றின் திசையிலேயே, ஓட விடுவதற்காகவும், ஒரு புதிய கட்டுமானத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

      பேய்வாரியானது, வடவாற்றைக் கடக்கும் இடத்தில், இருபுறமும், பெருஞ்சுவர் எடுத்து, வடவாற்றைத் தடுத்து, பேய்வாரி, தடங்கல் இன்றிப் பயணிக்க வழி ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

     வடவாற்றின் குறுக்கே, இரு சுவர்களை எழுப்பி, பேய்வாரிக்கு வழிவிட்டால், வடவாறு எப்படி ஓடும், என்ற கேள்வி எழுகிறதல்லவா?

    


வடவாற்றின் குறுக்கே இரு சுவர்கள் எழுப்பி, வடவாற்றைத் தடுத்தாலும், அவ்விடத்தில் பூமியை அகழ்ந்து எடுத்து, மூன்று பெரிய குழாய்களைப் பதித்து, அதாவது பேய்வாரிக்கும் கீழே பதித்து, மேல் தளத்தை சிமெண்ட் கலவையால், சாலைபோல் அமைத்திருக்கிறார்கள்.

       வேக வேகமாய் ஓடி வரும் வடவாற்று நீர், இதன் முதல் சுவற்றில் மோதி, பின் கீழ் இருக்கும் குழாய்களில் புகுந்து, இருட்டில் பயணித்து, அடுத்தத் தடுப்புச் சுவற்றினைக் கடந்தவுடன், பூமிக்கு மேலே வந்து, சுதந்திரம் பெற்று விட்ட உணர்வோடு, புத்துணர்ச்சியோடு, வெகுவேகமாய் தன் பயணத்தைத் தொடருகிறது.

      தடுப்புச் சுவருக்கு முன், ஒரு தடுப்பணையினையும் அமைத்திருக்கிறார்கள்.

     




வேகமாய் ஓடி வரும் வடவாற்று நீர், சுவற்றில் பெருவேகத்தோடு மோதி, மோதி, சுவற்றைப் பலவீனப் படுத்தலாம் என்பதால், அதற்கு முன், ஒரு சிறு தடுப்பணையினைக் கட்டி, நீரின் வேகத்தைக் குறைத்திருக்கிறார்கள்.

       தடுப்புச் சுவற்றின் ஒரு ஓரத்தில் ஒரு கல்வெட்டு.

       தன் பொலிவினையும், உருவினையும், உண்மை நிறத்தினையும் இழந்த கல்வெட்டு, இக்கட்டுமானம் எழுப்பப்பெற்ற வருடத்தைப் பறை சாற்றுகிறது.

        1906 ஆம் ஆண்டு.

        இன்றைக்கு நூற்றுப் பத்து வருடங்களுக்கு முன், நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள், நமக்காக கட்டுவித்த கட்டுமானம் இது.

        தண்ணீரின் அருமையினையும், பெருமையினையும் அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

        நாம்தான் இன்று வரை உணரவில்லை.

        ஒவ்வொரு குளமாக, ஒவ்வொரு ஏரியாக, தூர்த்துத் தூர்த்துக் கட்டிடங்களைக் கட்டி எழுப்பிவிட்டு, தண்ணீர் இல்லை, தண்ணீர் இல்லை, எனக் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறோம்.