அவருக்கு வயது ஐம்பது இருக்கலாம்.
உழைத்து, உழைத்து முறுக்கேறிய உடல்
இடுப்பில் நான்கு முழ வேட்டி
தோளில் துண்டு
தலையில் தலைப்பாகை
மெல்ல அந்த வீட்டை நெருங்குகிறார்
வீட்டை நெருங்கியவுடன், தலையில் இருந்த தலைப்
பாகையையும், தோளில் கிடந்த துண்டையும் எடுத்து, கக்கத்தில் வைத்துக் கொள்கிறார்.
அவரது உடல் அவரையும் அறியாமல், கேள்விக்குறிபோல்
மெல்ல வளைகிறது
வளைந்து குனிந்தவாறே, வீட்டிற்குள் சென்று,
உள்ளே அமர்ந்திருக்கும் மனிதரை இருகரம் கூப்பி வணங்குகிறார்.
முழுக்கை சட்டை, பேண்ட் அணிந்து, சட்டைக்கும்
மேலே, கோட்டும் அணிந்து அமர்ந்திருந்த மனிதர் இவரைப் பார்க்கிறார்.
எனக்காகத் தாங்கள், நீதிமன்றத்தில்
ஒரு வழக்காட வேண்டும்
முதலில் நேராக நில்லுங்கள், கக்கத்தில்
வைத்திருக்கும் துண்டை எடுத்து, முண்டாசு கட்டுங்கள்
வந்தவர் தயங்குகிறார்
ஐயா ஒரு வழக்குப் போடனும்
முதலில் முண்டாசைக் கட்டுங்கள்
வந்தவர், மேலும் கூனிக் குறுகுகிறார்
வழக்கறிஞர் முடிவாய் கூறுகிறார்
தலைப் பாகையைக் கட்டிக் கொண்டு,
தோளில் துண்டினைப் போட்டுக் கொண்டு, நிமிர்ந்து நின்றால்தான், உங்கள் வழக்கு என்ன என்பதையே
காது கொடுத்துக் கேட்பேன்.
வேறு வழியின்றி, வந்தவர், கக்கத்தில் இருந்த
ஒரு துண்டை எடுத்து முண்டாசுக் கட்டிக்கொண்டு, மற்றொரு துண்டை தோளில் போட்டுக் கொண்டு நிமிர்கிறார்.
வழக்கறிஞர், இப்பொழுது, வந்தவரின் முகத்தைப்
பார்க்கிறார்.
நூறு சூரியன்கள் ஒன்று சேர்ந்து ஒளியூட்டுவதைப்
போன்ற ஒரு பிரகாசம், வந்தவரின் முகத்தில் உதயமாகிறது.
முகத்தில் ஒரு கம்பீரம், கண்களில் ஒரு பெருமிதம்,
எங்கிருந்தோ ஓடிவந்து ஒட்டிக் கொண்டதை வழக்கறிஞர் கவனிக்கிறார்.
எத்துணை எளியவராக இருந்தாலும், வறியவராக இருந்தாலும்,
சுய மரியாதையை விரும்புகிறார்கள் என்பது வழக்கறிஞருக்குப் புரிந்து போகிறது.
வழக்குக் கொண்டுவந்தவரின் பெயர் பாலசுந்தரம்.
வழக்கறிஞர் யார் தெரியுமா?
---
கடிதம்
கடிதம் எழுதும் பழக்கம் இன்று இல்லாமலேயே போய்விட்டது.
உறவுகளின் சுக, துக்கங்களையும், கனவுகளையும்,
ஏக்கங்களையும், எதிர்கால இலட்சியங்களையும் சுமந்து பறந்த கடிதம், இன்று மக்களின் நிம்மதியைப்
போன்று, காணாமலே போய்விட்டது.
மெத்தப் படித்தவர்கூட கடிதம் என்றால் எழுதத்
தயங்கும் காலம் இது.
ஆனால் அக்காலத்தே, கடிதம் ஒன்றுதானே, அங்கும்
இங்கும், ஓடியாடி, செய்திகளைப் பகிர்ந்து கொள்ள உதவிய ஒற்றைத் தூதன்.
இவர் தன் காலத்தில், கடிதம் எழுதுதலைத் தன் அன்றாடப்
பணிகளுள் ஒன்றாகவே செய்து வந்தவர்.
எளியவரிடமிருந்து கடிதங்கள் வந்தாலும், தலைவர்களிடமிருந்து
கடிதங்கள் வந்தாலும், இரண்டயும் ஒன்றாய் போற்றி, இரண்டிற்கும் பதில் கடிதங்களை சளைக்காமல்,
அலுக்காமல் எழுதியவர்.
கப்பலில் சென்றாலும், புகைவண்டியில் சென்றாலும்
எழுதிக் கொண்டேதான் பயணிப்பார்.
இவர் பயணிக்கவேப் பிறந்தவர்
இந்தியாவில்
இவர் காலடி படாத இடமே இல்லை எனலாம்
அந்த அளவிற்குப் பட்டி தொட்டி எங்கும் பயணித்தவர்
இப்பொழுது புரிந்து விட்டதல்லவா? இவர் யார்
என்பது தெரிந்து விட்டதல்லவா?
ஆம், நண்பர்களே, நீங்கள் நினைப்பது சரிதான்
மகாத்மா காந்தியடிகள்தான்
காந்தி ஜோஷி கடிதப் போக்குவரத்து
என்றொரு புத்தகம் இருக்கிறது
காந்தி ரோலண்ட் கடிதப் போக்குவரத்து
என்றொரு புத்தகம் இருக்கிறது
காந்தி எழுதி, அச்சில் எறிய
கடிதங்கள் மட்டும் எவ்வளவு தெரியுமா?
சொன்னால் நம்பமாட்டீர்கள்
ஒரு இலட்சம் கடிதங்கள்
---
உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் மகாத்மா
காந்தி
உலக நாடுகளில், ஐம்பது நாடுகள், தங்கள் தலைநகரங்களில்,
காந்திக்கு சிலை வைத்திருக்கின்றன.
நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களின் தலைநகரான இலண்டனிலேயே,
மகாத்மா காந்திக்கு இன்று சிலை இருக்கிறது.
ஆங்கிலேயே ஆட்சியின்போதே, ஆங்கிலேய கவர்னர்,
காந்தியின் சிலை ஒன்றினைத் திறந்து வைத்திருக்கிறார் என்று சொன்னால் நம்புவீர்களா?
ஈரோடு
வ.உ.சி
பூங்காவில்
ஒரு மார்பளவு
சிலை
1927 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட சிலை
இன்றும் அற்புதமாய் காட்சியளிக்கிறது
சிலை திறப்பு விழாவிற்குத் தலைமையேற்றவர்
அன்றைய ஈரோடு நகராட்சித் தலைவர்
திரு
சீனிவாச முதலியார்.
திறந்து வைத்தவர்
விஸ்கண்ட்
கோஸன்
The
Viscount Goschen
அன்றைய தமிழகக் கவர்னர்.
இச்சிலையினைத் திறந்து வைப்பதற்காக,
சென்னையில் இருந்து, ஈரோட்டிற்கு வந்திருக்கிறார்
வியப்பாக இருக்கிறதல்லவா
நானும் வியந்துபோய்தான் அமர்ந்திருந்தேன்.
---
கடந்த 30.1.2019 புதன் கிழமை மாலை
தஞ்சாவூர், பெசண்ட் அரங்கில்,
மக்கள்
சிந்தனைப் பேரவையின்
சார்பில்
மகாத்மா
காந்தி பிறந்த 150வது ஆண்டு விழா
நடைபெற்றது.
இவ்விழாவில் செவிமடுத்தச் செய்திகளுள், ஒன்றிரண்டைத்தான்
தங்களோடு பகிர்ந்து கொண்டேன்.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை,
எப்போதும் தன் விரல் நுனியில், பத்திரமாய் பாதுகாக்கும்,
பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் அவர்கள்
இவ்விழாவிற்கு உரிய ஏற்பாடுகளைச்
சிறப்பாகச் செய்திருந்தார்.
இவ்விழாவிற்குத் தலைமையேற்ற,
திருவையாறு, பாரதி இலக்கியப் பயிலக இயக்குநர்
திரு வே.கோபாலன் அவர்கள்
தஞ்சையின் பெருமையினைப் போற்றும், ஒரு புதுத் தகவலை வழங்கினார்.
1919 ஆம் ஆண்டு தஞ்சைக்கு வந்த மகாத்மா காந்தி,
இதே பெசண்ட் அரங்கில் இருந்த, மகாகனி மரத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த, வட்ட வடிய,
சிமெண்ட் மேடையில் நின்று, சரியாகச் சொல்வதானால், 24.3.1919 அன்று இங்கு கூடியிருந்தப்
பெருங்கூட்டத்தை நோக்கி உரையாற்றி இருக்கிறார்.
மகாத்மா
இவ்விடத்தில் பேசிய நூறாவது ஆண்டு இது.
எனவே,
இவ்விடத்தில், மகாத்மா பேசியதன் நினைவாக, மணிமண்டபமோ அல்லது காந்திக்கு உருவச் சிலையோ
எழுப்ப வேண்டும் என்றார்.
இவ்விழாவில்
மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர், நிறுவுநர்
திருமிகு
த.ஸ்டாலின் குணசேகரன்.
காந்தியப் பொருளியல் அறிஞர்
முனைவர்
பேராசிரியர் க.பழனித்துரை,
பரிசுத்தம் பொறியியல் கல்லூரி நிறுவுநர்
திருமிகு
செ.ப.அந்தோணிசாமி
மா.பொ.சி அவர்களின் தொண்டர்
புலவர்
தங்க.கலியமூர்த்தி
காந்தியத் தொண்டர்கள்
திரு
ம.கருப்பையா திருமதி க.சித்ரா
தம்பதியினர்,
மக்கள் சிந்தனைப் பேரவையின்
திரு
க.அன்பழகன்
திரு
இரா.மோகன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், இவ்விழாவின்போது,
ம.பொ.சி
அவர்கள்
எழுதிய
காந்தியடிகளைச் சந்தித்தேன்
என்னும் நூலின் இரண்டாம் பதிப்பும் வெளியிடப் பெற்றது.
காந்தியும், காந்தியச் சிந்தனைகளும்,
இக்காலத்திற்கு மட்டுமல்ல,
எக்காலத்திற்கும் தேவை
என்பதை உணர்த்தும் வகையில்
இவ்விழா நிகழ்வுகளை வடிவமைத்து,
சிறப்புற ஏற்பாடுகளைச் செய்திருந்த
பேராசிரியர்
கோ.விஜயராமலிங்கம் அவர்களின்
முயற்சி போற்றுதலுக்கு உரியது.
போற்றுவோம், வாழ்த்துவோம்.