ஆண்டு 1989
இவர் ஒரு பீகாரி
தஞ்சாவூர் மாவட்டத் துணை ஆட்சியராகப் பொறுப்பேற்றார்.
தமிழ் வார்த்தைகள் ஒன்றினைக் கூட அறியாதவர்
இவருக்கு ஓர் ஆசை
தமிழ் நாட்டிற்குப் பணியாற்ற வந்துவிட்டு, தமிழ்
தெரியாமல் இருக்கலாமா?
தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும்
அதுவும் முறையாக, திறமையானத் தமிழாசிரியர் ஒருவரிடம்
தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும்
விரைவில் தமிழில் பேச வேண்டும்
தஞ்சை மாவட்டத்தையே சல்லடை போட்டுச் சலித்து,
ஓர் ஆசிரியரைத் தேர்ந்தெடுத்தார்.
தினமும் தன் பணியோடு, பணியாகத் தமிழ் கற்றுக்
கொள்ள ஆரம்பித்தார்.
அமிழ்தினும் இனிய தமிழை, தேன் கலந்து சொல்லிக்
கொடுத்தார் ஆசிரியர்.
விரைவில் தமிழ் இவரது நாவில் குடியேறியது.
இவர் பேசும் தமிழை நீங்கள் அனைவரும் கேட்டிருப்பீர்கள்.
மழலைத் தமிழ் கேட்டு வியந்திருப்பீர்கள்
பிற்காலத்தில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின்,
தமிழ் மாநிலத் தலைவராகப் பணியாற்றி, மழலைத் தமிழில், கொஞ்சு மொழியில் பேசியவர்.
இவர்தான்
திரு
பிரவீன் குமார், இ.ஆ.ப
இவருக்குத் தமிழ் சொல்லிக்
கொடுத்த,
அந்தத் தமிழாசிரியர் யார் தெரியுமா?
என் ஆசான்.
---
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக்
கொழிலொழுகுஞ்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதிற்
றக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந்
திலகமுமே
தெக்கணமு மதிற்சிறந்த திராவிடநற்
றிருநாடும்
அத்திலக வாசனைபோ லனைத்துலகு மின்பமுற
எத்திசையும் புகழ்மணக்க விருந்தபெருந்
தமிழணங்கே
தமிழணங்கே
உன்சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே
நாம் பள்ளியில், மாணவர்களாய் படித்த காலத்தில்,
தினம் தினம் உச்சரித்த பாடல்.
தமிழ்த்தாய் வாழ்த்து
இப்பாடலை இயற்றிய மனோன்மணீயம் சுந்தரனார் அவர்கள்,
1897 ஆம் ஆண்டிலேயே, இயற்கையோடு இரண்டறக் கலந்துவிட்டார்.
1913 ஆம் ஆண்டில், இப்பாடலைக் கண்டெடுத்து, தமிழ்த்தாய்
வாழ்த்தாக அறிமுகப்படுத்தியப் பெருமை, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தையே சாரும்.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பெருமுயற்சியால்,
பட்டி தொட்டியெங்கும் பரவிய இப்பாடல், 1970 ஆம் ஆணடு, அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால், அரசு அங்கீகாரத்தைப்
பெற்றது.
அன்றுமுதல் அரசு விழாக்களிலும் பள்ளிகளிலும்,
நீராருங் கடலுடுத்த பாடல் நீக்கமற நிறைந்து நிற்கிறது.
ஆயினும் இப்பாடல் ஒரு சிறு மாற்றத்துடன் பாடப்பட்டு
வருவதை இம்மனிதர்தான் முதல் முதலில் கண்டு பிடித்தார்.
நாம் இப்பாடலின் மூன்றாவது வரியை நான்காவது வரியாகவும்,
நான்காவது வரியை மூன்றாவது வரியாகவும், மாற்றிப்பாடி வருகிறோம்.
இது சரியா
இது முறையா
ஒரு பாடலின் வரிகளை மாற்றும் அதிகாரம், அப்பாடலை
இயற்றியவருக்கு மட்டுமே உண்டு.
நாம் யார், பாடல் வரிகளை மாற்றுவதற்கு எனக் களமிறங்கினார்
இவர்.
இவர், தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஆட்சிக்குழு
உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில், இதுகுறித்த தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்து, அனைவரையும்
திடுக்கிட வைத்தார்.
இவர்கூறிய பிறகுதான், பாடல் வரிகள் மாறியுள்ளதே,
மற்றவர்கள் கவனத்திற்கு வந்தது.
இவர்முன் மொழிந்த தீர்மானம் நிறைவேறியதா? ஏற்றுக்
கொள்ளப்பட்டதா எனத் தெரியவில்லை. இருப்பினும் இவர் முயற்சி தொடரத்தான் செய்தது.
இவர் என் ஆசான்.
---
ஒன்றல்ல, இரண்டல்ல முழுதாய் ஆயிரம் ஏக்கர்
இடம் ஒதுக்கி, கோடிக் கணக்கில் நிதியினையும் ஒதுக்கி, 1981 ஆம் ஆண்டு, தஞ்சையில், தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவியவர், அன்றைய
தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர்., அவர்கள்.
தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப்பெற்று, இருபது
ஆண்டுகளுக்கும்மேல் கடந்த நிலையில், ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக நுழைந்த இம்மனிதர்தான்,
முதன் முதலில், ஒரு கேள்வி எழுப்பினார், தீர்மானமும் கொண்டு வந்தார்.
எம்.ஜி.ஆர்.,
படம் எங்கே?
தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவியவரின் படம்,
தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்தில் எங்குமே இல்லையே? ஏன்? உடனே படம் வையுங்கள் எனத் தீர்மானம்
கொண்டு வந்தார்.
எம்..ஜி.ஆர் அவர்களுக்காகக் குரல் கொடுத்தவர்
யார் தெரியுமா?
என் ஆசான்.
---
என் ஆசான்
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், உமாமகேசுவர மேனிலைப்
பள்ளியில், நான் மாணவனாய் பயின்றபோது, என் தமிழ் ஆசான் இவர்.
சிறந்த பேச்சாளர்
இவர் வாய் திறந்தால்,. செந்தமிழ் ஆர்ப்பரித்து
எழும்.
சிறந்த எழுத்தாளர்
இவர் எழுதுகோலைத் திறந்தால், இதுவரை நாம் அறியாத,
தமிழ்ச் சொற்கள், தெறித்து விழும்.
இன்னும் கொஞ்சம் எழுத மாட்டாரா என மனம் ஏங்கும்.
இதுபோல் நாமும் எழுத மாட்டோமா என நெஞ்சு துடியாய்
துடிக்கும்.
நேரம் தவறாமை
இவரது பிறவிக் குணங்களுள் ஒன்று.
பள்ளிக்கு அருகிலேயே வீடு.
சற்று நேரமாவது போல் தெரிந்தால், மேல் சட்டையின்
பொத்தான்களைக் கூடப் போடாமல், மிதிவண்டியில் பள்ளிக்குப் பறந்து வருவார்.
கருத்த உருவம்
வெண்மை மனம்
மாணவனாயிருந்து இவரிடம் கற்றது அதிகம்.
பின்னர், இதே பள்ளியில் ஆசிரியரான பின்னும்,
இவரிடம் கற்றுக் கொண்டதோ அதிகம், அதிகம்.
கரந்தைத் தமிழ்ச சங்கத்தின் சார்பில் வெளியிடப்பெற்ற
பல நூல்களுக்கு, இவரோடு சேர்ந்து பணியாற்றி இருக்கிறேன்.
பல விழாக்களுக்கு இவரோடு சேர்ந்து உழைத்திருக்கிறேன்.
என் மீது மிகுந்த அன்பு காட்டியவர்
என்னைத் தன் தோழனாய் ஏற்றுக் கொண்டவர்.
விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம் என்னும் எனது
பயண நூலுக்கு, வாழ்த்துரை கேட்டபோது, கேட்காமலேயே, முழு நூலையும், பிழை திருத்தம் செய்து
கொடுத்தவர்.
என் தமிழ் ஆசான்
இன்று நான் எழுதும் எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்
புலவர்
மீனா.இராமதாசு அவர்கள்.
கடந்த 24.2.2019 அன்று,
தன் 84 ஆம் அகவையில்,
எங்களையெல்லாம் பரிதவிக்க விட்டுவிட்டு
இயற்கையோடு கலந்து விட்டார்.
உடலால் பிரிந்தாலும்.
உணர்வால்
நட்பால்,
தமிழால்
என்றென்றும்
எம்மோடிருப்பார்.
புலவர்
மீனா.இராமதாசு