23 ஆகஸ்ட் 2023

பத்தாம் அறிவு

 


ஒன்றறிவதுவே உற்றறிவதுவே

இரண்டறிவதுவே அதனொடு நாவே

மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே

நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே

ஆறறிவதுவே அவற்றொடு மனனே


     ஓரறிவு உயிர் தொடங்கி, ஆறு அறிவு நிலைகளைக் கூறும், இத் தொல்காப்பியப் பாடலைப் பலரும் அறிந்திருப்பார்கள்.

     ஒன்றறிவதுவே உற்றறிவதுவே

     ஓரறிவு என்பது தொடு உணர்வால் அறிவது.

     உடலால் உணர்வது.

     வெப்பம், தட்பம்.

     வன்மையானது, மென்மையானது.

     சுரசுரப்பானது, வழவழப்பானது.

     இவற்றை அறியக் கூடியது ஓரறிவு.

     இரண்டறிவதுவே அதனொடு நாவே.

     நாவினால் சுவையை உணரலாம்.

     உடம்பால்  அறியும் அறிவும், நாவால் அறியும் அறிவும் சேர்ந்தது இரண்டறிவு.

     மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே.

     மூக்கால் நறுமணத்தை அறியலாம்.

     துர்நாற்றத்தை அறியலாம்.

     உடலால் பெறும் அறிவு, நாவால் பெறும் அறிவு, மூக்கால் பெறும் அறிவு மூன்றும் இணைந்தது மூவறிவு.

     நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே.

     காட்சிகளைக் காட்டுவது கண்.

     வண்ண, வண்ண நிறங்களை அறிவது கண்.

     உருவத்தை உணர்த்துவது கண்.

     உடலால் பெறும் அறிவு, நாவினால் பெறும் அறிவு, மூக்கால் பெறும் அறிவோடு, கண்ணால் காணும் அறிவும் சேர்வது நான்கறிவு.

     ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே.

     செவியால் ஒலியை உணரலாம்.

     உடல், நா, மூக்கு, கண்ணோடு செவியினால் கேட்கும் அறிவும் இணைவது ஐந்தறிவு.

     ஆறறிவதுவே அவற்றொடு மனனே.

     உடல், நா, மூக்கு, கண், செவி என ஐம்புலன்களால் பெறும் அனுபவங்களின் தொகுப்பு, எண்ண அலைகளாக நமக்குள் ஓடும்போது, எண்ண அலைகளின் தொகுப்பைத் தொகுத்து அறிவது மனம்.

     உடல், கண், காது, மூக்கு, செவி போன்று இது ஒரு உறுப்பல்ல.

     எண்ண அலைகளின் தொகுப்பு.

     பகுத்தறிதல்.

     பகுத்தறிவு. இதனால்தான்

மக்கள் தாமே ஆறறி வுயிரே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

என முழங்கி, மனிதன் ஆறறிவு கொண்டவன் என்று மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பதிவு செய்தவர் தொல்காப்பியர்.

     அப்படியானால் மனிதர்களுக்கு இருப்பது ஆறு அறிவுகள் மட்டும்தானா?

     இல்லை,

     மனிதனுக்குப் பத்து அறிவுகள் இருக்கின்றன என்கிறார் ஒரு சித்தர்.

     பத்து அறிவுகளா?

     வியப்பாக இருக்கிறதல்வா.

     யார் இந்த சித்தர்?

     இவர் அப்படி என்னதான் சொன்னார்?

     பார்ப்போம் வாருங்கள்.

அறிவு வடிவு என்று அறியாத என்னை

அறிவு வடிவு என்று அருள் செய்தான் நந்தி.

அறிவு வடிவு என்று அருளால் அறிந்தே

அறிவு வடிவு என்று அறிந்திருந் தேனே.

     பேர் அறிவின் வடிவை அறியாது இருந்த எனது அக இருளை நீக்கி, உண்மை அறிவின் வடிவத்தை உணர்த்தி, அருள் செய்தார் என் குருநாதர்.

     நானும், பேரறிவின் வடிவு என்பதை அறிந்து, உணர்ந்தேன் என்கிறார்.

     ஞான குருவானவர் சீடனின், அறியாமையைப் போக்கி, மெய் அறிவினை அருளுவார் என்கிறார் இந்தச் சித்தர்.

     இச்சித்தரின் குருநாதன் நந்தி.

     நந்தியின் சீடரான இந்தச் சித்தர், திருமூலர்.

     திருமூலர் தனது திருமந்திரத்தில், ஆறாம் அறிவைக் கடந்தும், மேலும் நான்கு அறிவுகளை மனிதர் பெறலாம் என்கிறார்.

உற்றறிவு ஐந்தும், உணர்ந்தறிவு ஆறு ஏழும்

கற்றறிவு எட்டும், கலந்தறிவு ஒன்பதும்

பற்றிய பத்தும், பலவகை நாழிகை

அற்றறியாது அழிகின்ற வாறே.

     சுவை, ஒளி, ஊறு, நாற்றம், ஓசை ஆகியவற்றால் அறிவும் அறிவு உற்றறிவு.

     உணர்ந்தறிவு என்பது மன அறிவு.

     இதை உணர்ந்தவர் சிலர்.

     உணராதவர் பலர்.

     நன்மையின் பக்கமே நிற்பது.

     ஒட்டுமொத்த சமுதாயத்தின் நன்மைக்காகவே உழைப்பது.,

     இதுபோன்று நிற்பவர்கள்தான் உணர்வுடையோர்.

     உணர்ந்தறிவு உடையோர்.

     அடுத்து எட்டாவது அறிவு, கற்றறிவு.

     பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் அறிவு அல்ல.

     இன்று நாம் தரும் கல்வி பிழைப்புக்கானது.

     உணர்ந்தறிவு பெற்றோர், தங்களுடைய அனுபவங்களை எல்லாம், சாறு பிழிந்து, இந்த சமுதாயத்திற்காக, ஞான நூல்களாகக் கொடுத்துள்ளனர். இந்த நூல்களைப் படித்தால், வைராக்கியம் பிறக்கும்.

     பட்டறிவை, பத்தாவது அறிவைப் பெறவேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும்.

     இதுதான் கற்றறிவு.

     அடுத்தது, ஒன்பதாவது அறிவு, கலந்தறிவு.

     ஒவ்வொரு சித்தரும், தங்களது அறிவுக் களஞ்சியத்தை, நூல்களாக நமக்கு வழங்கியுள்ளனர்.

     சித்தர் இலக்கியங்களை, முழுமையாகப் படித்துப் புரிந்து கொள்ள இயலாது.

     பல்வேறு குறியீடுகளை, ரகசிய வார்த்தைகளை, ரகசிய வாக்கியங்களை ஆங்காங்கே வைத்திருப்பார்கள்.

     இவற்றைப் பெரியோரின் துணையோடு, உணர்ந்து, தெரிந்து, தெளிவு பெற வேண்டும்.

     இதுவே கலந்தறிவு.

     இறுதியார் பத்தாம் அறிவு, பற்றறிவு.

     நம்மைப் படைத்த இயற்கையைப் பற்றிக் கொள்ளுதல்.

---

கடந்த 13.8.2023

ஞாயிற்றுக் கிழமை மாலை

ஏடகம்

ஞாயிறு முற்றம்

சொற்பொழிவு.

     அறிவு என்பது என்ன? ஐம்பொறிகளால் நமக்குக் கிடைக்கும் உணர்வுகளை, மூளையைப் பயன்படுத்திப் பரிசீலித்து, அவற்றோடு, நமது பழைய நினைவுகளையும், உணர்வுகளையும் கலந்து விவாதிக்கும் பொழுது, விவாதத்தில் முடிவில் கிடைப்பதுதான் அறிவு.

     ஆனாலும், இந்த ஐந்து பொறிகளுக்கு அப்பாலும், உணர்வுகளுக்கு அப்பாலும், அனுபவப்பூர்வமாக அறிந்த, அறியாத ஒரு அறிவுச் சுரங்கமே இருக்கிறது.

அறிவு அறிவு என்று அங்கு அரற்றும் உலகம்

அறிவு அறியாமை யாரும் அறியார்.

அறிவு அறியாமை கடந்த றிவினால்

அறிவு அறியாமை யழகிய வாறே

என, தஞ்சாவூர், அரசர் மேனிலைப் பள்ளி, மேனாள் தலைமையாசிரியர்


திரு கா.பாண்டியன் அவர்கள்

சித்தர்கள் காட்டிய அறிவு நிலை

எனும் தலைப்பிலானத் தனது பொழிவை நிறைவு செய்த பொழுது, அரங்கே வியப்பில் ஆழ்ந்து, உறைந்துதான் போனது.

     காரணம், சொற்பொழிவாற்றியவர் தமிழறிஞர் அல்ல, பள்ளித் தமிழாசிரியரும் அல்ல.

     இயற்பியல் ஆசிரியர்.

      நான், தஞ்சாவூர், மன்னர் சரபோசி அரசினர் கல்லூரியில், 81 – 84 கால கட்டத்தில், இளங்கலை கணிதம் பயின்ற பொழுது, எனது விருப்பப் பாடமாக இருந்தது இயற்பியல்.

     விருப்பப் பாடம்தான் ஆனாலும், அப்பாடம் என்னை விரும்பாமல் போனது.

     எனவே, அன்று அரசர் மேனிலைப் பள்ளியில், புதிதாக, முதுகலை இயற்பியல் ஆசிரியராகப் பணியில் சேர்ந்திருந்த, இவரிடம்தான், தனிப் பயிற்சிக்குச் சென்றேன்.

     இவருக்கு அப்பொழுது திருமணம் ஆகவில்லை.

     ஓராண்டு காலம் இவரிடம் இயற்பியல் கற்றேன்.

     அப்பொழுது முதல், கடந்த நாற்பது ஆண்டுகளாக, தனது மாணவர்தானே என்று எண்ணாமல், ஒரு உயர்ந்த நட்பு நிலையில் பழகி வருபவர்.

சித்தர்கள் காட்டிய அறிவு நிலை

எனும் இவரது பொழிவு கேட்டு, ஆடித்தான் போய்விட்டேன்.

     இவர், தன் உரையினை நிறைவு செய்தபொழுது, பெரும் புயலொன்று அடித்து ஓய்ந்த ஒரு அமைதி.

     இயற்பியல் ஆசிரியரா, திருமூலரையும், தொல்காப்பியரையும், வள்ளலாரையும் அருவியாய் கொட்டினார் என அதிர்ந்து போனேன்.

     ஒரு மணிநேரம், இடைவெளி விடாது, சித்தர் பாடல்களைப் பேரருவியாய் கொட்டிக் கொண்டே இருந்தார்.

     ஒரு பாடலை மனதுள் வாங்குவதற்குள், அடுத்து, அடுத்து என பெருமழையாய் பாடல்களைக் கொட்டித் தீர்த்தார்.

     என் இயற்பியல் ஆசிரியர் பொழிந்த, ஒன்றிரண்டு பாடல்களை மட்டுமே, இவ்விடம் பகிர்ந்துள்ளேன்.

     அனைத்தையும், முழுமையாய் தெரிந்து, தெளிய வேண்டுமானால், மீண்டும் ஒருமுறை, இவரிடம் தனிப் பயிற்சிக்குச் சென்றாக வேண்டும்.

தஞ்சாவூர், இயற்கை உழவர், யோகா ஆசிரியர்


திரு பி.சிவ சண்முகம் அவர்கள்

தலைமையில் நடைபெற்ற,

இப்பொழிவிற்கு வந்திருந்தோரை.

ஏடகப் புரவலர், பொறுப்பாளர்


திரு பி.கணேசன் அவர்கள்

வரவேற்றார்.

தமிழ்நாடு அரசு, போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி,

பணி நிறைவு பெற்ற


திரு கோவி.சண்முகம் அவர்கள்

நன்றி கூற

விழா இனிது நிறைவுற்றது.

துணை இயக்குநரும், திரைப்பட நடிகருமான


திரு ராம.நாகராஜன் அவர்கள்

விழா நிகழ்வுகளை சுவைபடத் தொகுத்து வழங்கினார்.

 

ஏடகத்தில்

என் ஆசிரியரை,

தன் ஆசிரியரை

சொற்பெருக்காற்ற வைத்து.

சித்தர் பாடல்களால்

அரங்கை நிரப்பி,

பெருமகிழ்வு எய்திய

ஏடக நிறுவனர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களைப்

போற்றுவோம், பாராட்டுவோம்