தசரா.
தசரா பண்டிகை.
இராவணனைக் கொன்று, இராமன் பெற்ற வெற்றியைக் கொண்டாடும்
பண்டிகை தசரா.
இந்தியாவில் தசரா பண்டிகைக் கொண்டாடப்படும் காரணம்
இதுதான்.
ஆனால், ஒரு மாநிலத்தில் மட்டும், தசரா இராமனுக்காகக் கொண்டாடப் படுவதில்லை.
உள்ளூர் தெய்வமான தண்டேசுவரி தேவிக்காகக் கொண்டாடப் படுகிறது.
வியப்பாக இருக்கிறதல்லவா?
13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, மன்னர் புருஷோத்தம் தேவ் அவர்களின் ஆட்சியின்போது,
இம்மன்னரின் விருப்பப்படி தொடங்கியதாக நம்பப்படுகிறது.
அன்று
முதல், 13 ஆம் நூற்றாண்டில் இருந்து, ஓராண்டுகூட விடுபடாமல், தொடர்ச்சியாக, இன்று வரை
கொண்டாடப்பெற்று வருகிறது.
உலகின் மிக நீண்ட திருவிழா என அழைக்கப்படுகிறது.
காரணம், ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் 75 நாட்கள்
இந்தத் திருவிழா நடைபெறும்.
உண்மையில், இவ்விழாவினைத் திருவிழா என்பதைவிட,
பெருவிழா என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
பல்வேறு பழங்குடியின மக்கள் ஒன்றிணைந்து, சேர்ந்து
நடத்தும் விழா.
ஜக்தல்பூர்
தசரா.
பஸ்தர் தசரா.
சத்தீஸ்கர்
மாநிலத்தில் நடைபெறும் திருவிழா.
இத்திருவிழாவின் ஒவ்வொரு வேலையினையும், ஒவ்வொரு
பழங்குடி இனக் குழு மேற்கொள்ளும்.
இதில் வியப்பிற்குரிய செய்தி என்னவென்றால், எந்தப்
பழங்குடி இனக்குழு, எந்த வேலையினைச் செய்கிறது என்று மற்ற குழுக்களுக்குத் தெரியாது.
ஒருங்கிணைப்பு ஏதுமின்றி, வேலை தொடர்ந்து நடந்து
கொண்டே இருக்கும்.
இத்திருவிழாவிற்கான, இரண்டு அடுக்கு தேர் செய்வதற்கான
மரத்தைத் தேர்ந்தெடுத்து, வெட்டிக் கொண்டு வந்து சேர்க்கும் ஒரு குழு.
மற்றொரு குழு, இம்மரத்தைக் கொண்டு தேரினை உருவாக்கும்.
தேரினை இழுத்துச் செல்வதற்கான, மிக நீண்டு உறுதியான
கயிறுகளை ஒரு குழு தயாரித்துக் கொண்டு வரும்.
தேர் மற்றும் இறைவியை அலங்காரம் செய்வதற்குத்
தேவையான பூக்களை, வண்டி வண்டியாய் ஒரு குழு கொண்டு வந்து கொடுக்கும்.
ஒரு குழு அலங்காரம் செய்யும்.
75 நாட்களும், அப்பகுதி முழுவதும் ஒளி வீசிப்
பிரகாசிக்கத் தேவையான எண்ணெய்யினை ஒரு குழு கொண்டு வரும்.
ஒவ்வொரு குழுவும், ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட
அதே நாளில், தங்கள் பணியினை நிறைவேற்றும்.
விழாவிற்கு முதல் நாளே, அனைத்துப் பணிகளும் நினைவுற்று,
தேர் திருவிழாவிற்காகக் காத்திருக்கும்.
பல்வேறு குழுக்கள் செயலாற்றினாலும், ஒரு குழு, இன்னொரு குழுவுடன் கலக்காது.
ஒவ்வொரு குழுவும், தங்கள் குழுவினருக்கான, உணவுப்
பொருட்களைத் தாங்களே கொண்டு வந்து, தாங்களே தனியே சமைத்து சாப்பிடுவார்கள்.
மிகப்பெரும் அளவிலான, பழங்குடியினர் கூட்டம்
கூடும்.
ஆனால் ஒரு சிறு அசம்பாவிதம் கூட நிகழாது.
ஒவ்வொரு குழுவும் தங்களது சுயத்தை இழக்காமல்
பணியாற்றும்.
பண்டிகை முடிந்து, இறைவி அம்மன் கோயிலுக்குத்
திரும்பிய பின், ஒவ்வொரு குழுவும், அவரவர் கிராமத்திற்குத் திரும்பும்.
இன்று வரை, கடந்த பல நூறு வருடங்களாக இப்படித்தான்
இந்தத் திருவிழா நடைபெறுகிறது.
---
பழங்குடியினர்.
தொல் பழங்குடியினர்.
காட்டில் வசிப்பவர்கள் என்றாலே, ஏதும் அறியாதவர்கள்,
நாகரிகம் புரியாதவர்கள் என்று நாம்தான், அவர்களைத் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறோம்.
மரம் வெட்டுபவர்கள் நாம்.
வயல் வெளிகளைத் தூர்த்து, கான்கிரீட் காடுகளை
எழுப்புபவர்கள் நாம்.
ஆற்று மணலை அள்ளி அள்ளி, காசு பார்ப்பவர்கள்
நாம்.
ஆனால், பழங்குடியினர்.
இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழ்பவர்கள்.
ஒரு காட்டில் பல்வேறு பழங்குடி இனக் குழுக்கள்
இருக்கும்.
ஒரு குழுவின் மொழி, மற்ற குழுவிற்குத் தெரியாது.
உதாரணத்திற்கு அந்தமான் தீவினை எடுத்துக் கொண்டால்,
இரு குழுக்களாய் அருகருகே வசிக்கிறார்கள்.
ஒரு குழுவின் மொழி, அடுத்த குழுவிற்குத் தெரியாது.
ஆனால், அன்று முதல் இன்று வரை, எதற்காகவும்,
பழங்குடி இனக் குழுக்களுக்குள் சண்டை வந்ததே கிடையாது.
ஒவ்வொரு குழுவும், தனக்கான வாழ்வை வாழும்.
அனைத்து குழுவினரிடத்தும், ஒரு குணம், ஒரே ஒரு
பொதுவான குணம், ஓர் எண்ணம், அவர்கள் உதிரத்தில் ஒன்று கலந்து ஓடுகிறது.
காடு
நம்முடையது.
---
ஒவ்வொரு குழுவும், தங்களது அறிவினை, அனுபவங்களை,
தங்கள் குழுவின் அடுத்த தலைமுறைக்குக் கடத்திக்
கொண்டே இருக்கிறது.
இதனால் ஒவ்வொரு குழுவும், தங்கள் அடையாளத்தை,
தங்களின் சுயத்தை இழக்காமல் பாதுகாக்கிறது.
காட்டில் மாமரங்களில் இருந்து மாம்பழங்கள் கீழே
விழுந்து சிதறிக் கிடக்கும்.
ஆனால் ஒருவர் கூட, ஒரு மாம்பழத்தை எடுத்து உண்ண
மாட்டார்கள்.
அக்குழுவின் தலைவர் மூப்பன் அல்லது சீயான் அனுமதி
கொடுத்த பிறகுதான், மாம்பழத்தை எடுத்து சாப்பிடுவார்கள்.
மாம்பழம் பழுத்தவுடன் சாப்பிட்டால், அதன் கொட்டையில்
இருந்து, மரம் முளைக்கவே முளைக்காது.
இதனால், வெகுவிரையில் மாம்பழமே இல்லாமல் போய்விடும்.
எனவே, சாப்பிட்டுவிட்டு, கீழே போடப்படும் கொட்டை,
முளைக்கும் பக்குவத்தை, தகுதியை அடைந்த பிறகுதான், மூப்பன் உத்தரவு போடுவார், அனுமதி
கொடுப்பார்.
இனி சாப்பிடலாம்.
இவர்கள்தான் பழங்குடியினர்.
---
இவர்கள் வாழ்வு, இயற்கையோடு இயைந்தது.
இருப்பதைக் கொண்டு மகிழ்வோடு வாழ்வது.
நாளைக்கு என்று எதையுமே, சேர்த்து வைக்கும் பழக்கம்
இவர்களிடம் இல்லவே இல்லை.
பொருள் சார்ந்த வாழ்க்கையும் கிடையாது.
இவர்கள்தான் பழங்குடியினர்.
---
காட்டுப் பகுதியில் ஒரு தடுப்பணை கட்டுவதற்கான
முயற்சியினை அரசு மேற்கொள்கிறது.
பழங்குடியினரிடம் பேசுகிறார்கள்.
தடுப்பணை
எதற்கு?
தடுப்பணை கட்டினால், அதிக தண்ணீர் எப்போதும்
கிடைக்கும், விளைச்சலை அதிகரிக்கலாம் என்கிறார்கள்.
அதிகமான விளைச்சலை வைத்துக் கொண்டு, நாங்கள்
என்ன செய்யப் போகிறோம்?.
இவர்கள்தான் பழங்குடியினர்.
---
பூச்சு மருந்து பயன்படுத்தச் சொல்லி, அரசாங்கம்
அறிவுறுத்தியது.
விளைச்சல் பெருகும் என்று ஆசை காட்டியது.
பூச்சு மருந்துகளைப் போட்டால், எங்கள் தானியங்களை,
கிளிகள், குருவிகள் சாப்பிடாது.
கிளிகளும், குருவிகளும், பறவைகளும் சாப்பிடாதது
எங்களுக்கும் வேண்டாம்.
இவர்கள்தான் பழங்குடியினர்.
---
இவர்கள் வாழும் வீடுகள், சாணியால் மெழுகப்பட்டு
மிகவும் சுத்தமாய் இருக்கும்.
தெருக்களில் குப்பைகள் இருக்கவே இருக்காது.
எது கிடைத்தாலும், பகிர்ந்துண்டு வாழ்பவர்கள்
பழங்குடியினர்.
ஒற்றுமையின் இலக்கணமாய் வாழ்பவர்கள் பழங்குடியினர்.
தனக்கென்று தனியாக எப்பொருளுளையும், எந்த பழங்குடி
மனிதரும் வைத்துக் கொள்ள மாட்டார்.
மகிழ்வோடு ஆடும் நடனத்தில்கூட, தனி நபர் நடனம்
இவர்களிடத்தில் கிடையாது.
குழு நடனம்தான்.
இவர்கள்தான் பழங்குடியினர்.
உண்மையான நாகரிக மக்கள்.
---
கடந்த
27.8.2023
ஞாயிற்றுக்
கிழமை மாலை,
ஏடக அரங்கில்
தமிழ்ச் சுவடியியல் சான்றிதழ் வகுப்பின்
தொடக்க விழா
நடைபெற்றது.
வேளாண்
அறிஞர், இயற்கை மருத்துவர்
தலைமையில்
நடைபெற்றத்
தொடக்க விழாவில்,
சத்தீஸ்கர்
மாநிலத்தின்.
சுகாதாரம்
மற்றும் குடும்ப நலத்துறை ஆணையர்
பழங்குடிகள் ஒரு பார்வை
என்னும்
தலைப்பில் உரையாற்றி
பழங்குடிகள்
பற்றிய ஒரு புரிதலை, ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
சுவடியியல்
ஆசிரியரும், ஏடகப் பொருளாளருமான
நன்றி
கூற, விழா இனிது நிறைவுற்றது.
முன்னதாக,
ஏடக
நிறுவனர், தலைவர், சுவடியியல் ஆசிரியர்
விழாவிற்கு
வந்திருந்தோரை வரவேற்று மகிழ்ந்தார்.
ஏடக அரங்கில்
தொல் பழங்குடிகளை
உலாவ விட்டு,
இயற்கையோடு இணைந்து
இயைந்து வாழ
விழிப்புணர்வூட்டிய
ஏடக நிறுவனர், தலைவர்
பாராட்டுவோம், போற்றுவோம்.