நண்பர்களே, வணக்கம்.
கடந்த மே மாதம், 26 ஆம் நாள், எங்கள் அன்பு மகளுக்குத்
திருமணம் நடைபெற்றதைப் பலரும் அறிவீர்கள்.
தமிழறிஞர்கள், நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்த காட்சிகள், இன்றும் என் மனக் கண்ணில் திரைப்படமாய் ஓடிக் கொண்டிருக்கின்றன.
இன்று மட்டுமல்ல, என்றும் ஓடிக்கொண்டே இருக்கும்.
இணைய வழி அறிந்தவர்கள்கூட, சற்றும் தயங்காமல்
வருகை தந்து, வாழ்த்தியதைப் பெருமையாகவே எண்ணுகின்றேன்.
மாப்பிள்ளை உறவினர்தான்.
திருவையாறுதான்.
இருப்பினும், அவர் பணியாற்றுவதோ மகாராஷ்டிராவில்.
மகாராஷ்டிராவின்
ஔரங்காபாத்தில்.
எனவே, திருமணம் நடைபெற்ற சில நாள்களில், மணமக்களைக்
குடியமர்த்துவதற்காக, மகாராஷ்டிரா புறப்பட்டோம்.
நான், என் வாழ்க்கை இணையர் பிரேமா, எங்கள் சம்பந்திகள் திரு
முருகானந்தம், திருமதி சசிகலா முருகானந்தம், எங்கள் இரண்டாம் மகன், அன்பு மருமகன்
திரு அஸ்வின் குமார், எங்கள் அன்பு மகள்
திருமதி சுவாதி அஸ்வின் குமார் என அறுவர்
புறப்பட்டோம்.
ஜுன் மாதம் எட்டாம் தேதி இரவு, தஞ்சையில் இருந்து
புறப்பட்டு, சென்னை சென்றோம்.
மறுநாள் ஒன்பதாம் தேதி, சென்னை செண்ட்ரல் தொடர்
வண்டி நிலையத்தில் இருந்து, காலை 9.00 மணிக்கு நாகர்சொல் விரைவுத் தொடர் வண்டியில், ஔரங்காபாத் நோக்கியப் பயணத்தைத் தொடர்ந்தோம்.
மறுநாள் திங்கட்கிழமை பிற்பகல் ஔரங்காபாத் சென்றடைந்தோம்.
ஔரங்காபாத் தொடர் வண்டி நிலையத்தில் இருந்து,
பத்தே பத்து நிமிடப் பயணத்தில் வீடு.
திருமணத்திற்கு முன்னரே, மாப்பிள்ளை, வீடு பார்த்து
ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.
ராக் உட் அடுக்ககம்.
இரண்டாவது மாடியில் வீடு.
வசதியான வீடு.
தொடர் திருமண வேலைகளால், ஔரங்காபாத்தைப் பற்றி
எதுவும் அறியாமல்தான் இருந்தேன், அறியாமல்தான் புறப்பட்டேன்.
ஔரங்காபாத் இல்லத்தில் நுழைந்த பிறகுதான், ஔரங்காபாத்தைப்
பற்றியத் தகவல்களை அலைபேசி வழி, இணையத்தில்
தேடினேன்.
இணையம் அள்ளி அள்ளிக் கொட்டியச் செய்திகளைக்
கண்டு வியந்து போனேன்.
ஔரங்காபாத்.
1610 ஆம் ஆண்டில், சுல்தான் இரண்டாம் முர்தாசா நிஜாம் ஷா அவர்களின் சபையில், முதல் அமைச்சராக
விளங்கிய மாலிக் ஆம்பர் என்பவரால், காட்கி என்ற சிற்றூர் தலைநகராக உருவாக்கப்பட்டது.
விரைவில் மக்கள் தொகைப் பெருக்கத்தால் கவர்ச்சிமிகு
நகராக உருமாறியது.
1626 ஆம் ஆண்டு ஆம்பர் மாலிக் இறந்தவுடன், அவரது
மகன் பதே கான் பதவிக்கு வந்தவுடன், காட்கி
என்ற பெயரை மாற்றி, இவ்வூருக்கு பதே நகர்
எனப் புதுப் பெயர் சூட்டினார்.
இந்த பதே நகர், 1633 இல் முகலாயப் பேரரசின் வசம்
சென்றது.
1653 ஆம் ஆண்டில், முகலாய இளவரசர் ஔரங்கசீப், தக்காணத்தின் அரச பிரதிநிதியாக
நியமிக்கப் படுகிறார்.
இவர், இந்த பதே நகரைத் தனது தலைநகராக மாற்றியதோடு,
இந்நகருக்கு ஔரங்காபாத் எனத் தன் பெயரைச்
சூட்டி மகிழ்ந்தார்.
ஔரங்காபாத்.
சற்றேறக்குறைய, 470 ஆண்டுகளாக ஔரங்காபாத் என
அழைக்கப்பட்ட, இந்நகரின் பெயரை, 2022 ஆம் ஆண்டு,
சிவசேனா தலைமையிலான மகாராஷ்டிர அமைச்சரவை, மராட்டியப் பேரரசின், இரண்டாவது சக்கரவர்த்தியான
சம்பாஜி போன்ஸ்லேயின் பெயரால், சம்பாஜி நகர்
என மாற்றியுள்ளது.
சம்பாஜி நகர் என மாற்றினாலும், இன்றும் ஔரங்காபாத்
என்றே அழைக்கப்பட்டு வருகிறது.
தொடர் வண்டி நிலையம் தொடங்கி, பெரும்பாலானப்
பெயர்ப் பலகைகளும் ஔரங்காபாத் என்றே, இன்றும், இந்நகரை அடையாளப் படுத்துகின்றன.
ஔரங்காபாத்.
ஔரங்காபாத்தைச் சுற்றிலும் எண்ணற்ற வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த தலங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
அஜந்தா,
எல்லோரா, ஔரங்காபாத் குகைகள், தௌலதாபாத் கோட்டை, கிரிஸ்னேஷ்வரர் கோயில், ஜமா மசூதி,
பீபி கா மக்பாரா, ஹிமாயத் பாக், பஞ்சக்கி, சலீம் அலி ஏரி எனப் பட்டியல் நீண்டு
கொண்டே செல்கிறது.
பக்தல்
கேட், டெல்லி கேட், ரங்கீன் கேட், ரோஷன் கேட், பாரபுல்லா கேட், பைதான் கேட், மக்கா
கேட், காலா கேட், நௌபத் கேட், மகாய் கேட் என, ஔரங்காபாத்தில் 52 வாயில்கள் இருந்திருக்கின்றன. அவற்றுள் பல இன்றும் இருக்கின்றன. எனவே ஔரங்காபாத்தை
வாயில்களின் நகரம் (City of Gates) என அழைக்கின்றனர்.
மேலும் ஔரங்காபாத் பருத்தி நெசவு மற்றும் கலைப்
பட்டு (ஆர்டிக் சில்க்) துணிகளின் முக்கிய உற்பத்தி மையமாகும்.
பைத்தானி
புடவைகள் ஔரங்காபாத்தின் தனித்த அடையாளமாக விளங்குகின்றன.
ஔரங்காபாத்தின் அதிகாரப்பூர்வ மொழியாக மராத்தி
மொழி உள்ளது., உருது மற்றும் இந்தி மொழிகளும் பேசப்படுகின்றன. ஆங்கில மொழியின் பயன்பாடு
மிகவும் குறைவு.
மே மாதத்தில் மட்டுமே வெயில் அதிகமாய இருக்கும்
என்கிறார்கள், மற்ற மாதங்களில் சிறிது குளிர், அவ்வப்பொழுது சாரல் மழை என குளிர்ந்த
வானிலையே நிலவுகிறது.
எங்கு நோக்கினும் வானுயர்ந்த மலைகளாள் சூழப்பட்ட
நகரமாக ஔரங்காபாத் விளங்குகிறது.
வட பாவ், பாவ் பஜ்ஜி, மோமோஸ், நான் காலியா, தஹ்ரி,
ஷீர்மல், பான் பூரி, ஸ்ரீகண்ட், சோயா சாப் இவையெல்லாம் ஔரங்காபாத்தின் உணவுகள். பிரியாணியும் உண்டு.
அப்பளத்தில் சிறிது ஓமப் பொடியைத் தூவித் தருகிறார்கள்,
இதுவும் இங்கு ஒருவகை உணவாக விரும்பி உண்ணப்படுகிறது.
எது சாப்பிட்டாலும், ஒரு சிறு பாத்திரத்தில்,
ஒருவகை சூப் போன்ற திரவத்தில், ஓமப்பொடி, பொறி போன்றவற்றைத் தூவித் தருகிறார்கள்.
சிறிது சாப்பிட்டாலே வயிறு நிறைந்து போகிறது.
ஔரங்காபத்தில் நான் பார்த்த வரையில், பொதுப்
போக்குவரத்து என்பது மிக மிகக் குறைவு.
பேருந்துகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே
இயக்கப் படுகின்றன.
படியில் நின்று பயணிப்பது என்பது இல்லை.
ஔரங்காபாத் தொழிற்சாலைகள் நிறைந்த நகரம்.
ஒவ்வொரு தொழிற்சாலையும், தங்கள் பணியாளர்களை
அழைத்துவர, தனித் தனியே பேருந்துகளை வைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு கல்வி நிலையங்களும், தங்களுக்கென்று
தனித் தனி பேருந்துகளை வைத்துள்ளன.
எனவே பொதுப் பேருந்துகளை நாடுவோர் மிகவும் குறைவு.
ஆட்டோக்களும், மகிழ்வுந்துகளும் நிறைந்து காணப்படுகின்றன.
சொந்த இரு சக்கர வாகனம், மகிழ்வுந்து இல்லையேல்
ஆட்டோவும், வாடகைக் காரும்தான் அதிக அளவில் பயன்படுத்தப் படுகின்றன.
ஔரங்காபாத்தில் நான் கண்டு வியந்த மற்றொரு காட்சி,
மின் கட்டணம்.
நம் ஊரைப் போல் அல்லாமல், மாதா மாதம் மின் கட்டணம்
வசூலிக்கிறார்கள்.
மின் கணக்கு எடுக்கும் ஊழியர் வந்து, பயன்படுத்தப்
பட்ட மின் யூனிட் விவரங்களைக் குறித்துக் கொண்டுபோன் சில நாட்களிலேயே, அச்சிட்ட மின்சாரக்
கட்டணம் குறித்த கேட்போலையானது, வீட்டிற்கு
வீடு வழங்கப் படுகிறது.
ஔரங்காபாத் சாலைகைளில் பயணித்தபோது, வயல்வெளிகளின்
நிறம் கண்டு வியந்து போனேன்.
கருப்பு.
கருப்பு நிற வயல்கள்.
சாலையோர மண்கூட கருப்பாகத்தான் இருக்கிறது.
பெரும்பாலும் பச்சை மிளகாய், வெங்காயம், பருத்தி
விளைவிக்கிறார்கள்.
வானம் பார்த்த பூமி.
மின் மோட்டார்களும் குறைவு.
பெரும், பெரும் வட்டக் கிணறுகள்.
ஆண்கள் அனைவரும் பேண்ட், சட்டைதான் அணிந்திருக்கிறார்கள்.
நடுத்தர வயதை அடைந்த ஆண்கள், தோளில் துண்டு போட்டிருக்கிறார்கள்.
நம் ஊரைப் போல் ஒரு பக்கத் தோளில் மட்டும், தொங்க
விடுவதில்லை.
பின் கழுத்து வழியாக, துண்டின் இரு முனைகளும்,
முன்புறம் தொங்கும்படியாக துண்டு அணிகிறார்கள்.
பேண்ட், சட்டை, துண்டு.
80 வயதைக் கடந்த ஒன்றிரண்டு பேர் மட்டுமே, பின்
பக்கம் சொருகும் படியான வேட்டியைக் கட்டியிருந்ததைப் பார்த்தேன்.
வயல் வெளிகளில் வேலை பார்க்கும் பொழுதுகூட பேண்ட்
சட்டைதான்.
வயல்
வெளிகளில் பணியாற்றுபவர்கள் அவ்வயலுக்குச் சொந்தமானவர்களே.
தாத்தா, பாட்டி, மகன், மகள், மருமகன், பேரப்
பிள்ளைகள் என குடும்பம் குடும்பமாக வயல்களின் வேலை பார்க்கிறார்கள்.
பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருந்தது.
ஷீரடி, பீபி கா மக்பாரா, அஜந்தா, எல்லோரா என
சுற்றிப் பார்த்தோம்.
என் சம்பந்திகள், ஔரங்காபாத்தில் ஒரு வாரம் தங்கியிருந்தனர்.
நானும், என் வாழ்க்கை இணையரும், மேலும் ஒரு வாரம்
தங்கினோம்.
15 நாள்கள் நகர்ந்ததே தெரியவில்லை.
ஆசிரியப் பணியில் இருந்து, ஓய்வு பெற்று, இரண்டு
வருடங்கள் கடந்து விட்டன. எனவே தஞ்சையில் இருந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை.
இனி தஞ்சை, ஔரங்காபாத் என வாழ்வை நகர்த்த வேண்டியதுதான்.
ஜுன் மாதம் 24 ஆம் நாள் திங்கள் கிழமை, தொடர்
வண்டியில் புறப்பட்டோம்.
மகளும், மருமகனும் தொடர் வண்டி நிலையத்திற்கு
வந்து வழியனுப்பி வைத்தனர்.
நானும், என் வாழ்க்கை இணையரும், எங்கள் வாழ்வில்
முதல் முதலாய் மகளைப் பிரிந்து புறப்பட்டோம்.
மகள் என்றால், திருமண வாழ்வில் இணைந்ததும், பிரிந்துதான்
ஆக வேண்டும் என்பது புரிகிறது.
இருப்பினும் எங்கள் இருவர் மனதிலும் ஓர் இனம்
புரியா அழுத்தம்.