காஷ்மீர்.
இன்று காஷ்மீரில் வசிக்கக்கூடிய மக்களில் 80
சதவிகிதத்திற்கு மேலானவர்கள் இஸ்லாமியர்கள்.
இஸ்லாம் படையெடுப்பின் மூலம் இந்தியாவிற்கு வந்தது
என்பார்கள்.
1500 ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்லாம் தோற்றம் பெற்ற காலத்திலேயே, தமிழ் நாட்டிற்கு இஸ்லாம் மதம் வந்திருக்கிறது.
அன்றிருந்த சேரமன்னர் மெக்காவிற்குப் பயணித்திருக்கிறார். இஸ்லாம் மதத்திற்கு மாறியிருக்கிறார்.
தமிழகக் கடற்கரையோரம் முழுவதும் வணிகத் தொடர்புகள்
மூலம், இஸ்லாமியத் தத்துவங்கள் வந்தன.
படையெடுப்பின் மூலம் வரவில்லை.
வணிகத்தின் மூலம் வந்தது, வளர்ந்தது.
காஷ்மீர்.
இந்தியத் தத்துவவாதிகள் ஒன்றுகூடக் கூடிய இடமாக
காஷ்மீர் இருந்தது.
ஆறாம் நூற்றாண்டில் தோன்றிய, ஆதி சங்கரர், இந்தியா முழுதும் பயணித்தார்.
அவர் உருவாக்கிய அத்வைதத் கோட்பாட்டை, இந்தியா முழுதும் கொண்டு சேர்ப்பதற்காகப் பயணித்தார்.
ஆனால் புத்தர் இந்தியா முழுதும் பயணிக்கவில்லை.
ஆனால், அவரது தத்துவங்கள் இந்தியா முழுவதும்
பயணித்துப் பரவியது.
சமணமும் இப்படித்தான்.
புத்தர் காலத்திலேயே பௌத்த மதம், எந்தளவிற்குப்
பயணித்து இருக்கிறது என்றால், அன்றைக்கு இருந்த மிகப் பெரிய மன்னரான நாகார்ஜுனர், ஒரு
குறிப்பிட்ட காலம் காஷ்மீரின் ஸ்ரீநகரிலேயே வசித்திருக்கிறார்.
புத்தமதம் பெரிய அளவில் பரவியதன் விளைவுதான்,
காஷ்மீரில் இருந்து திபெத் மற்றும் சீனாவிற்குச் சென்றது.
தால்
ஏரி.
ஸ்ரீநகரின் தால் ஏரியைச் சுற்றி, பல முக்கியமான
இடங்கள் உள்ளன.
ஆதிசங்கரர்
மலை என்று ஒரு மலை இன்றும் இருக்கிறது.
இம்மலையில் ஆதிசங்கரர் தவம் இருந்த குகை இருக்கிறது.
ஆதிசங்கரருக்கு ஒரு கோயிலும் இருக்கிறது.
இன்றும் காஷ்மீரில் இருக்கக்கூடிய இந்துக்கள்
பெரிய அளவில் இங்கு, வழிபட வருகிறார்கள். ஆனால் இந்துக்களை அழைத்து வரக்கூடிய அனைத்து
ஆட்டோ ஓட்டுநர்களும் இஸ்லாமியர்கள்.
காஷ்மீரில் அன்றும், இன்றும், என்றும் இந்து,
இஸ்லாமியர் பிரச்சனை என்பது கிடையவே கிடையாது.
இராமானுஜரும் காஷ்மீருக்கு வந்திருக்கிறார்.
இஸ்லாம் மதமும் இதே போல் பயணத்தின் வழியாகத்தான்
காஷ்மீருக்கு வந்தது.
படையெடுப்பின் மூலம் அல்ல.
இஸ்லாம் தென்னிந்தியாவிற்குக் கடல் வழியாக வந்தது.
காஷ்மீருக்குத் தரை வழி வந்தது.
காஷ்மீர் என்பது அன்றைக்கு இருந்த பட்டுப் பாதை என்கிற வணிகப் பாதையின் முக்கியத்
தலமாக இருந்தது.
எங்கெல்லாம் வணிகப் பாதை இருக்கிறதோ, எங்கெல்லாம்
வணிகர்கள் வருகிறார்களோ, அங்கெல்லாம் தத்துவவாதிகளும் வருவார்கள்.
இப்படித்தான் பட்டுப் பாதையின் வழி இஸ்லாமும்
வந்தது.
ஸ்ரீநகர் முழுவதும் பள்ளத்தாக்கு.
சுற்றிலும் மலைகள்.
பள்ளத்தாக்கு என்பது, சன்னி முஸ்லிம்கள் வசிக்கக்
கூடியப் பகுதி.
மலைப் பகுதி முழுக்க சியா முஸ்லிம்கள் வசிக்கிறார்கள்.
சன்னி, சியா முஸ்லிம்கள் ஒரே மாநிலத்தில், இவ்வளவு
அடர்த்தியாக, வாழும் பகுதி, இந்தியாவிலேயே, காஷ்மீரில் மட்டும்தான்.
இருப்பினும், அவர்கள் ஊடாக இருந்த மதம் என்பது
பெரும்பாலும், சூபிக் கலாச்சாரத்தில் இருந்த மதமாகவே இருந்தது.
சூபியிசம் என்றால், நாம் சித்தர்கள் என்கிறோமல்லவா?
அதைப் போலத்தான் இஸ்லாமியச் சித்தர்கள்.
இவர்கள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வார்கள்.
500 ஆண்டுகளுக்கு முன், காஷ்மீர், முகலாயர்களின்
கட்டுப்பாட்டில் இருந்த பொழுது, மன்னர் சலீம் ஸ்ரீநகருக்குச் செல்கிறார்.
அம்மண்ணின் கலாசாரத்தைக் கண்டு வியந்த சலீம்,
இந்த காஷ்மீர் மக்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லையே
என்று எழுதினார்.
கிருஷ்ண
ஜெயந்தியையும் கொண்டாடுகிறார்கள், ரம்ஜானையும் கொண்டாடுகிறார்களே, காஷ்மீர் முஸ்லிம்கள்
என்னவாக இருந்திருப் பார்கள். இந்தப் பண்பாடு எவ்வளவு உயர்ந்தது என்று எழுதினார்.
சூபியிசம் வளர்ந்ததன் விளைவு, இம்மக்களிடம் மத
சகிப்புத்தன்மை இயல்பாகவே, இம்மக்களின் பண்பாடாகவே வளர்ந்துள்ளது.
---
குலாப்
சிங்.
சீக்கியப் படையின் தளபதி.
18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், ஆங்கிலேயர்களுக்கும்,
சீக்கியர்களுக்கும் நடந்த போரின்போது, இந்த குலாப் சிங், சீக்கிய மன்னரை ஆதரிக்காமல்,
ஆங்கிலேயப் படையினை ஆதரிக்கிறார்.
ஆங்கிலேயர்கள் வெற்றி பெறுகின்றனர்.
வெற்றியால் மகிழ்ந்த ஆங்கிலேயர்கள், தங்கள் மகிழ்வினைத்
தெரிவிக்கும் வகையில், சிலகாலமே தங்கள் வசம் இருந்த, காஷ்மீரை, குலாப் சிங்கிற்கு சலுகை
விலையில் விற்கிறார்கள்.
அன்றைய பணத்தில் 75 இலட்சத்திற்கு காஷ்மீர்,
குலாப் சிங்கிற்கு விற்கப் பட்டது.
விற்றாலும், ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கொடுக்க
வேண்டும் என முடிவாயிற்று.
வருடத்திற்கு ஒரு குதிரை, 12 ஆடுகள் மற்றும்
3 கம்பளி.
இவைதான் கப்பம்.
அன்று முதல், அதாவது 1846 ஆம் ஆண்டு முதல்
1947 வரை குலாப் சிங்கின் வம்சம்தான் காஷ்மீரை ஆண்டது.
காஷ்மீர்.
காஷ்மீர் சால்வை உலகப் பிரசித்தி பெற்றது.
நெப்போலியன் தன் மனைவிக்கு ஆசை ஆசையாய் பரிசளித்தது,
காஷ்மீர் சால்வையைத்தான்.
காஷ்மீர் சால்வை, காஷ்மீரின் மிகப் பெரிய வணிகமாக
வளர்ந்தது.
வணிகம் பெரியதாய் வளரும் பொழுது, அந்தத் தொழிலில்
ஈடுபடுபவர்கள் மிகப்பெரும் சுரண்டலுக்கு ஆளாவார்கள்.
காஷ்மீர் நெசவாளர்களைப் போலவே, காஷ்மீர் விவசாயிகளும்
முக்கியமானவர்கள்.
வருமானம் வர, வர அரசாங்கம் வரியை உயர்த்திக்
கொண்டே போனது.
வரி அதிகரிக்க, அதிகரிக்க பொறுக்க முடியாத மக்கள்,
1872 ஆம் ஆண்டில், மன்னருக்கு எதிரானப் போராட்டத்தை முதன் முதலாக நடத்தினர்.
மன்னராட்சி நெசவாளர்களை ஒடுக்கியது.
போராட்டத்திற்குக் காரணமானவர்களை அழித்து ஒழித்தது.
இந்நிலையில் 1925 ஆம் ஆண்டில், ஹரிசிங் காஷ்மீர்
மன்னர் ஆகிறார்.
குலாப் சிங்கின் பெயரனின், மகன் இவர்.
1925 ஆம் ஆண்டில், காஷ்மீரின் நிலை பற்றி, ஆங்கிலேயர்கள்,
தங்கள் பதிவேடுகளில் பதிந்த கருத்தினை அறிவது, அன்றைய நிலையினைத் தெள்ளத் தெளிவாகப்
படம் பிடித்துக் காட்டும்.
காஷ்மீரில்
இயற்கை வளம் கொட்டிக் கிடக்கிறது. அங்குள்ள மக்கள் கடும் உழைப்பாளிகளாக இருக்கிறார்கள்.
இருப்பினும், அவர்கள் அவ்வளவு பேரும், வறுமையில் இருக்கிறார்கள். வறுமையில் மட்டுமல்ல,
அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கல்வி அறிவு என்பது கிடையவே கிடையாது.
இந்நிலையில் காஷ்மீரில் ஒரு மாற்றம் நிகழ்கிறது.
சில கிறித்துவ மிஷனரிகள் வருகிறார்கள்.
கல்வி தருகிறார்கள்.
அதிக அளவில் இல்லாவிட்டாலும், சிலர் படிக்கத்
தொடங்கினர்.
அப்படிப் படித்த ஒரு சிலருள் மிகவும் முக்கியமானவர்
ஒருவர்.
ஷேக்
அப்துல்லா.
படிக்கிறார்.
படித்துவிட்டு, கல்லூரிப் படிப்பிற்காக லாகூர்
செல்கிறார்.
லாகூர் பகுதி, அன்றைக்கு அரசியலில் மிகவும் சூடாக
இருந்த காலம்.
ஷேக் அப்துல்லாவிற்குப் பல அரசியல் தலைவர்களின்
நெருக்கம் ஏற்படுகிறது.
நிறைய நூல்களை வாசிக்கிறார்.
குறிப்பாக, இடதுசாரி தத்துவம் நிறைந்த கம்யூனிச
நூல்களைப் படிக்கிறார்.
தொடர்ந்து, முதுகலைப் படிப்பிற்காக, உத்தரபிரதேசத்திலுள்ள,
ஜாமியா இஸ்லாமியக் கல்லூரியில் சேர்ந்து, வேதியியல் படிக்கிறார்.
காரணம் இவர் நெசவாளர் குடும்பத்தைச் சார்ந்தவர்
என்பதால், குடும்பத் தொழிலை வளர்க்க வேதியியல் படிக்கிறார்.
அக்காலகட்டம், இந்தியாவில் சுதந்திர உணர்ச்சி
பற்றி எறிந்து கொண்டிருந்த காலம்.
படித்து முடித்துவிட்டு 1932 ஆம் ஆண்டு, காஷ்மீர்
திரும்பிய ஷேக் அப்துல்லாவின் உள்ளத்தில் ஓர் எண்ணம். இந்தியாவைப் போல் நாமும் போராட்டத்தை நடத்த வேண்டும், உடனடியாகப் போராட்டத்தைத்
தொடங்கியாக வேண்டும்.
காஷ்மீரின்
தால் ஏரியின் அருகிலேயே ஒரு பெரும் மசூதி.
இம்மசூதியின் சிறப்பு என்னவென்றால், இம்மசூதியில்,
முகமது நபியின் ரோமம் பாதுகாக்கப்படுகிறது என்னும் இஸ்லாமியர்களின் நம்பிக்கையாகும்.
உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமியர்கள் வருகை தரும்
மசூதி.
ஏழாயிரம் பேர் தொழுகைக்காக கூடியிருக்கின்ற,
ஒரு வெள்ளிக் கிழமையன்று பேசுகிறார். இந்த
மன்னர் நம்மை இவ்வளவு சுரண்டுகிறாரே, நாம் இவ்வளவு துன்பப்படுகிறோமே, நாம் ஏன் மன்னருக்கு
எதிராக, நம்முடைய உரிமைகளைக் கேட்டு, ஒரு பெரிய மாநாடு நடத்தக்கூடாது? என்று கேட்கிறார்.
ஒரு பெரிய மாநாட்டை நடத்துவது என்று முடிவு செய்கிறார்கள்.
மாநாடு நடக்கிறது.
ஷேக் அப்துல்லா முன்னின்று நடத்துகிறார்.
காஷ்மீரின் ஒரு விசித்திரமான தன்மை என்னவென்றால்,
அங்கிருக்கும் நிலங்கள் பெரும்பாலும், காஷ்மீர் இந்து பண்டிட்டுகளுக்குச் சொந்தமானவை.
அங்கே பணியாற்றக் கூடியவர்கள் சாதாரண ஏழை இஸ்லாமியர்கள்.
மாநடு முடிந்தவுடன், அதனை ஒரு கட்சியாக மாற்றுகிறார்கள்.
அகில
இந்திய முஸ்லிம் மாநாட்டுக் கட்சி.
மன்னர் கட்சியினை பிரச்சினையாகப் பார்க்கிறார்.
மாநாட்டுக் கட்சியினரோ அடுத்து செய்ய வேண்டியப்
பணிகளைக் கலந்து ஆலோசிக்கின்றனர்.
மக்களை
அரசியல் படுத்தவில்லை என்றால், இயக்கத்தை வளர்க்க முடியாது என்பதை உணர்கின்றனர்.
காஷ்மீர்
மக்களில் 80 சதவிகித மக்கள் கல்வி அறிவு இல்லாதவர்கள்.
எனவே, 1934 இல் அங்கு படிக்கத் தெரிந்த எல்லா
மாணவர்களையும் கூட்டி, ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்குகிறார்கள்.
1936 ஆம் ஆண்டில், தால் எரிக்கு அருகிலேயே, முதன்
முதலாக ஒரு புத்தகக் கடையைத் திறக்கிறார்கள்.
மாணவர்களும், இளைஞர்களும், அரசியலாளர்களும் ஒன்றுசேரும்
இடமாக, அரசியல் குறித்து உரையாடும் இடமாக புத்தகக் கடை மாறுகிறது.
காஷ்மீருக்கு மிக அருகில் சோவியத் ரஷ்யா.
ரஷ்யாவில் இருந்து, நடந்தே காஷ்மீருக்கு வந்துவிடலாம்.
அப்படி
ரஷ்யாவில் இருந்து நடந்தே காஷ்மீர் வந்தவர்களும், புத்தகக் கடைக்கு வருகிறார்கள், உரையாடுகிறார்கள்.
மெல்ல, மெல்ல அரசியல் இயக்கமாய் வளர்கிறது.
இந்நிலையில், பஞ்சாபில் இருந்த, சிறந்த இடதுசாரி
தலைவர்களுள் ஒருவரான பி.பி.எல்.பேடி அவர்களை
காஷ்மீருக்கு அழைக்கிறார்கள்.
காஷ்மீருக்கு வந்த பேடி, அரசியல் இயக்கமாக மாற்றினால்,
எதிர்கால இலட்சியம் தேவை, மேலும் அந்த எதிர்கால இலட்சியத்தை அடைவது குறித்த ஒரு செயல்
திட்டமும் தேவை என்பதை வலியுறுத்த, ஒரு செயல் திட்டம் உருவாக்கப் படுகிறது.
நயா காஷ்மீர்.
புதிய காஷ்மீர் என்னும் பெயரில் ஒரு புதிய அரசியல்
திட்டத்தை உருவாக்கினார்கள்.
மீண்டும் ஒரு மாநாட்டை நடத்தி, நயா காஷ்மீர்
செயல் திட்டத்தை முன் வைக்கிறார்கள். கட்சியின் பெயரையும் மாற்றுகிறார்கள்.
அகில காஷ்மீர் மாநாட்டுக் கட்சி
இக்கட்சியின்
குழுவில் இஸ்லாமியர்களோடு, இந்துக்களும் இடம் பெற்றனர். கணிசமான சீக்கியர்களும் இருந்தார்கள்.
எல்லோரும் இணைந்து, காஷ்மீர் மன்னருக்கு எதிராகத்தான்
போராடினார்களே தவிர, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடவில்லை.
ஒரு நாட்டினுடைய
விடுதலை என்பது, வெறும் அரசியல் விடுதலை அல்ல. அது பொருளாதார விடுதலையோடு கூடியதாக
இருக்க வேண்டும்.
நாங்கள் உலகம் முழுவதும் நடக்கக்கூடிய, ஒவ்வொரு
நாட்டினுடைய விடுதலைப் போராட்டத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
எங்களுக்குத் தெரிந்து, ஒரு நாட்டில் பொருளாதார
விடுதலையோடு விடுதலை கிடைத்ததென்றால், அது சோவியத் ரஷ்யாவுக்குத்தான்.
அப்படியானதொரு, பொருளாதார விடுதலையோடு கூடிய
காஷ்மீரை உருவாக்குவதுதான் நயா காஷ்மீர்
என மாநாட்டு நிறைவுரையில் அறிவித்தான் ஷேக் அப்துல்லா.
இந்த
மாநாடுகளை, அறிக்கைகளை எல்லாம் கண்டு மன்னர் ஹரிசிங் கொதிக்கிறார்.
இதற்கெல்லாம் காரணம் ஷேக் அப்துல்லாதான் என முடிவு
செய்து, அவரைக் கைது செய்து, சிறையில் அடைக்கிறார்.
ஒன்பது ஆண்டுகள் சிறை தண்டனை.
இந்நிலையில்தான், இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுப்பது
என்று முடிவாகிறது.
என்ன பெயர் வைப்பது என்ற பேச்சு நடக்கும் பொழுது,
பாகிஸ்தானியர்கள், தங்கள் நாட்டிற்கு இந்தியா
எனப் பெயர் வைக்க வேண்டும் என்றனர்.
இந்திய விடுதலையின்போது ஏற்பட்ட பிரிவினையின்போது,
இந்தியா என்ற நாட்டை இரண்டாகப் பிரிக்கும் பொழுது, இரு நாடுகளும் ஒரு புதுப்பெயர்தானே
வைத்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே இருந்த இந்தியா என்ற பெயரையே ஏன் பயன்படுத்த வேண்டும்
என்ற கேள்வியை எழுப்பியது.
அதை மீறித்தான் இந்தியா என்ற பெயர் வந்தது.
பாகிஸ்தானுக்கு, ஏன் பாகிஸ்தான் என்ற பெயர் வந்தது
தெரியுமா?
PAKISTHAN.
STHAN என்றால் நிலம் என்று பொருள்.
இஸ்தான் புல்.
கஸகஸ்தான்.
உஸ்பெகிஸ்தான்.
தஜிகிஸ்தான்.
ராஜஸ்தான்.
அப்படியானால், PAKIS என்றால் என்ன?
1930 களில், இஸ்லாமியக் கவிஞர் இக்பால், ஒரு முழக்கத்தை முன்வைத்தார்.
முஸ்லிம்களுக்கு என்று ஒரு நாடு.
இந்நாட்டிற்கு என்று ஒரு பெயரையும் உருவாக்கினார்.
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய மாநிலங்களின்
பெயர்களின் முதன் எழுத்தை எடுத்துக் கோர்த்தார்.
பஞ்சாப் - P
ஆப்கான் பிராவின்ஸ் - A
காஷ்மீர் - K
இஸ்லாமாபாத் - I
சிந்து – S
இப்படித்தான் பாகிஸ்தான் என்ற பெயர் தோன்றியது.
காஷ்மீர் – K.
பாகிஸ்தான் தனி நாடாகப் பிரியும்பொழுது, காஷ்மீர்
பாகிஸ்தானுடன் வந்துவிடும், இணைந்துவிடும் என்று எதிர்பார்த்தனர்.
ஆனால் காஷ்மீர் யாருடனும் இணையாமல், தனி நாடாகவே
தொடர்ந்தது.
காஷ்மீர் மன்னர் ஹரி சிங் ஒரு முடிவெடுக்கிறார்.
நமது எதிரி, ஷேக் அப்துல்லா சிறையில் இருக்கிறார்.
இந்தியா தனி நாடாகிவிட்டது.
பாகிஸ்தான் தனி நாடாகிவிட்டது.
நாம் இடையில் இருக்கிறோம்.
எனவே, நாம் இரு நாட்டுடனும் ஒரு போர் நிறுத்த
ஒப்பந்தத்தை செய்து கொள்வோம் என முடிவெடுக்கிறார்.
இரு நாடுகளுக்கும், ஒரு போர் நிறுத்த சமாதான
உடன்படிக்கையை அனுப்புகிறார்.
ஜின்னா கையொப்பம் இடுகிறார்.
நேரு கையெழுத்து இடவில்லை.
இந்திய அரசாங்கம், குறிப்பாக நேரு, ஷேக் அப்துல்லாவிடம்
நட்புடன் இருந்தார்.
நான்
பார்த்த, அன்றைக்கு இருந்த, அப்பகுதிக்கு உரிய தலைவர்களிலேயே, ஒரு முற்போக்கான, படித்த,
மதச் சார்பற்ற எண்ணத்தோடு இருக்கக்கூடிய, ஒரே தலைவராக எனக்கு ஷேக் அப்துல்லாதான் தெரிகிறார்
என்றார் நேரு.
ஷேக் அப்துல்லாவைக் கைது செய்தபோது, இந்தியப்
பிரதமராய், ஷேக் அப்துல்லாவைக் காண, காஷ்மீர் புறப்பட்டார் நேரு.
காஷ்மீர் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்படுகிறார்.
நாங்கள் உங்களை அனுமதித்தால், பாகிஸ்தான் தலைவர்களையும்,
காஷ்மீருக்குள் அனுமதித்தாக வேண்டும்.
எனவே, திரும்பிச் செல்லுங்கள்.
இந்திய விடுதலைக்குப்பின், நேரு செல்ல வேண்டும்
என்று நினைத்த முதல் நாடு காஷ்மீர்தான்.
ஆனால் அனுமதிக்கவில்லை.
நேரு திரும்பி வந்துவிடுகிறார்.
இதேபோல், ஜின்னா பாகிஸ்தான் பிரதமரான பிறகு,
தொடக்க காலப் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு, சிறிது நாட்கள் ஓய்வெடுக்க காஷ்மீர் செல்ல
விரும்பி, தகவல் அனுப்புகிறார்.
இப்பொழுதுதான்
நேருவை திருப்பி அனுப்பினோம்.
தற்பொழுது உங்களை அனுமதித்தால், இந்தியாவின்
கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
எனவே காஷ்மீருக்கு வராதீர்கள்.
ஜின்னா தன் பயணத் திட்டத்தை நிறுத்தி வைத்தார்.
இருப்பினும் அவர் மனதுள், ஒரு தீராத கோபம்.
போரை அறிவித்துவிடலாமா? என யோசிக்கிறார்.
ஆனாலும், அன்றைய சூழல் அவரைத் தடுத்தது.
இந்திய விடுதலையின்போது, இந்திய ரிசர்வ் வங்கியில்
இருந்த தொகை 140 கோடி.
இதில் 100 கோடி இந்தியாவிற்கும், 40 கோடி பாகிஸ்தானுக்கும்
என முடிவு செய்யப்பட்டிருந்தது.
முதல் தவணையாக பாகிஸ்தானுக்கு 10 கோடி வழங்கப்
பட்டிருந்தது.
எனவே, இந்தத் தொகையை வைத்துக் கொண்டு போர் செய்ய
வாய்ப்பில்லை.
இருப்பினும், இப்பிரச்சினையை, அப்படியே விட்டுவிடவும்
மனமில்லை.
காஷ்மீரில் உள்நாட்டுக் கலகத்தை உருவாக்குவது
என பாகிஸ்தான் உளவுப் பிரிவு முடிவெடுத்தது.
பாகிஸ்தான் எல்லையில் இருந்த, காஷ்மீர் பதான்
ஆதிவாசிகளை அழைத்து, பாகிஸ்தானில் போர் பயிற்சி கொடுத்தார்கள்.
ஆயுதங்களை வழங்கினார்கள்.
பாகிஸ்தான் ஓர் இஸ்லாமிய நாடு.
காஷ்மீர் ஓர் இஸ்லாமிய நாடு.
இஸ்லாம், இஸ்லாம் நாட்டோடு சேருவதுதான் சரியாக
இருக்கும்.
எனவே புனிதப் போரைத் தொடங்குங்கள் என அனுப்பி
வைத்தார்கள்.
இந்தியா கவனித்துக் கொண்டே இருந்தது.
ஷேக் அப்துல்லா சிறையில் இருக்கிறார்.
பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள், ஸ்ரீநகரை
நெருங்கும்வரை, மன்னர் ஹரி சிங் அவர்களுக்கு, இப்படி ஒரு படை, தன் நாட்டை நோக்கி வருவதே
தெரியவில்லை.
ஆனால், ஆங்கிலேய அரசாங்கத்திற்கு செய்தி போய்விடுகிறது.
இந்தியாவின் முதல் வைஸ்ராயாக இருந்த மவுண்ட்
பேட்டன் அவர்கள் ஹரிசிங்குடன் பேசுகிறார்.
உங்கள்
இராணுவத்தை வைத்துக் கொண்டு, பாகிஸ்தானில் பயிற்சி பெற்று வருபவர்களுடன் போராட முடியாது.
எனவே இந்தியாவுடன் இணைந்து விடுங்கள்.
ஹரி சிங் அமைதியாகிறார்.
இராணுவம் நெருங்குகிறது.
இந்திய அரசாங்கம் ஒரு நிபந்தனையை விதித்தது.
முதலாவதாக,
ஷேக் அப்துல்லாவை விடுதலை செய்யுங்கள்.
விடுதலை செய்தார்கள்.
ஆனாலும், காஷ்மீருக்கு வேறொரு சோதனை காத்திருந்தது.
காஷ்மீரின் விமானத் தளம் மிகவும் சிறியது.
இந்தியாவில் இருந்து பெரும் படையினைக் கொண்டுபோய்
உடனடியாக இறக்க முடியாது.
எனவே, ஷேக் அப்துல்லாவும், பேடி முதலான கம்யூனிஸ்டுகளும்
ஒரு முடிவு செய்கிறார்கள்.
மக்கள்தான் இராணுவம்.
மக்களுக்கு இராணுவப் பயிற்சி கொடுத்தார்கள்.
இந்தியாவில் முதல் பெண்கள் படையை நிறுவியவர்
சுபாஷ் சந்திர போஸ் என்பதை அறிவோம்.
அதேபோல், காஷ்மீரில் இருந்த ஆயிரக்கணக்கானப்
பெண்களுக்கு இராணுவப் பயிற்சி கொடுத்தார்கள்.
இந்திய இராணுவம் வருவதற்கு முன் இவர்கள் தயாராகிவிடுகிறார்கள்.
மக்கள் கையில் நேரடியாக ஆயுதங்கள் கொடுக்கப்பட்டன.
ஷேக் அப்துல்லாவும், பேடி போன்றவர்களும், இந்தியாவிற்கு
ஒரு கோரிக்கை வைக்கின்றனர்.
முதலில்
இந்திய அதிகாரிகளை ஜம்முவிற்கு அனுப்புங்கள்.
பதான்
ஆதிவாசிகள் என்றைக்கு உள்ளே வந்தார்களோ, அதற்கு முன் தேதியிட்டு, மன்னர், இந்தியாவுடன்
இணைகிறேன் என கையெழுத்துப் போடட்டும். அப்படி கையெழுத்துப் போட்டால்தான், தன்னுடைய
நாட்டிற்குள் வரும் வெளிநாட்டினரை முறியடிக்க, தன் இராணுவத்தை, இந்திய இராணுவத்தைப்
பயன்படுத்த முடியும் என்கிறார்கள்.
ஹரிசிங் ஒத்துக் கொள்கிறார்.
இந்திய அதிகாரிகளுக்காகக் காத்திருக்கிறார்.
இந்திய அதிகாரிகள் வருவதற்கு முதல் நாள், மன்னர்
ஹரி சிங், தன்னுடைய உதவியாளரை கூப்பிட்டு, நாளைக்கு
காலை வரை, இந்திய அதிகாரிகள் வருகிறார்களா எனப் பார்.
இல்லையெனில், நான் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது,
பக்கத்தில் இந்த துப்பாக்கி இருக்கும். என்னை நீயே கொன்றுவிடு என்றார்.
இதுதான் அன்றிருந்த நிலைமை.
இந்திய அதிகாரிகள் வருகிறார்கள்.
ஹரிசிங் கையெழுத்துப் போடுகிறார்.
காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது.
பாகிஸ்தான் இராணுவம் விரட்டி அடிக்கப்படுகிறது.
ஜ.நா அதிகாரிகள் வருகிறார்கள்.
அன்றைய தேதியில், பாகிஸ்தான் இராணுவம் எதுவரை
இருக்கிறதோ, அது பாகிஸ்தானுக்கு உரியது.
இந்திய இராணுவம் எதுவரை இருக்கிறதோ, அப்பகுதி
இந்தியாவிற்கு உரியது என முடிவு செய்கிறார்கள்.
இந்தியாவுடன் இணைந்த பிறகும், ஷேக் அப்துல்லாவை
காஷ்மீரின் முதல்வராக்க, ஹரி சிங் தயாராக இல்லை.
காந்தி போய் பேசுகிறார்.
1948 மார்ச் மாதத்தில், ஷேக் அப்துல்லா முதல்வராக,
மன்னர் ஹரி சிங் அவர்களால் அறிவிக்கப் படுகிறார்.
இந்நிலையிலும், ஜின்னா, ஷேக் அப்துல்லாவிடம்
பேசுகிறார்.
நீயும்
முஸ்லிம், நானும் முஸ்லிம். நீ என்னுடன்தானே சேர வேண்டும் என்று கேட்கிறார்.
நீயும்
நானும் பிறப்பால் இஸ்லாமியராக இருக்கலாம்.
ஆனால் நானும் நேருவும்தான், சிந்தனையால், மதச்
சார்பற்ற கோட்பாட்டால், ஜனநாயகப் பண்புகளால் ஒன்றாக இருக்கிறோம் என்கிறார் ஷேக் அப்துல்லா.
காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பது என்று முடிவெடுத்து
ஒப்பந்தம் போட்டாகிவிட்டது. முதல்வரை நியமித்தாகிவிட்டது. இருப்பினும் இந்தியாவுடன்
எப்படி இணைப்பது என்பது குறித்துப் பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன.
காஷ்மீர் என்பது தனி தேசிய இனம்.
தேசிய இனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால்,
வெளியில் இருந்து ஆட்கள் உள்ளே வரக்கூடாது என்பதற்காக 1927 ஆம் ஆண்டிலேயே, காஷ்மீர்
தனி சமஸ்தானமாக இருந்தபோது, அதுவும் இந்தியா, பாகிஸ்தான் எனகிற இரு தேச கருத்துருவாக்கம்,
பிறப்பதற்கு முன்னரே, காஷ்மீரை ஆண்ட இந்து மன்னர் ஹரி சிங் அவர்கள், காஷ்மீரின் தனித்துவத்தைப்
பாதுகாக்கும் பொருட்டு, காஷ்மீருக்கு வெளியே உள்ளவர்கள், காஷ்மீருக்குள் நிலம் வாங்குவதற்கான
தடைச் சட்டத்தைப் பிறப்பித்திருக்கிறார்.
மேலும் காஷ்மீரிகளின் தனித்துவத்தைப் பாதுகாக்கும்
பொருட்டு, காஷ்மீருக்கென்று தனித்துவமான பல சட்டங்கள் இருக்கின்றன.
இந்த சட்டங்கள் எல்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்கள்
முழு அரசியல் நிர்ணய சபையும் அமர்ந்து விவாதித்தது.
முழு மனதோடு ஏற்றுக் கொண்டது.
சட்டப் பிரிவு 370 உருவாக்கப்பட்டு, சட்டமாக
நிறைவேற்றப்படுகிறது.
இந்த சட்டம் உருவாக்கப்பட்டபோது, நேரு அந்த அமைச்சரவைக்
கூட்டத்திலேயே இல்லை.
ஏன் இந்தியாவிலேயே இல்லை.
வெளிநாட்டில் இருந்தார்.
பேச்சுவார்த்தையின்போது இருந்தவர், அமைச்சர்
படேல்.
இந்த சட்டம் நிறைவேறியவுடன் படேல், ஒற்றுமையின் அடையாளம் சட்டம் 370 என்றார்.
தொடர்ந்து, ஷேக் அப்துல்லா தலைமையிலான அரசானது,
நயா காஷ்மீர் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது.
காஷ்மீரில் உள்ள நிலங்கள் அனைத்தும் பெரிய பெரிய
நிலக்கிழார்களிடம் இருந்தன.
உழைக்கக்கூடிய விவசாயிகளிடம் நிலங்கள் இல்லை.
ஆகவே, நிலங்களைப் பிரித்துக் கொடுப்பது என்று
முடிவு செய்தனர்.
இந்தியாவிலேயே முதன் முதலாக, 1948 ஆம் ஆண்டிலேயே,
நில சீர்திருத்தத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் காஷ்மீர்.
மாற்றங்கள் தொடர்ந்தன.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தூதுரக
அதிகாரிகள், பிரதமர் நேருவிடம், தங்கள் நாடுகளின் சார்பாக, கடிதங்களை அளிக்கிறார்கள்.
இரு நாட்டின் கடிதங்களிலும் ஒரே செய்தி.
புதிதாக
உருவாகியிருக்கிற இந்தியாவின் புதிய அரசாங்கம், காஷ்மீர் மீது ஒரு கண் வைக்க வேண்டும்,
காஷ்மீரில் நடக்கக்கூடிய அரசியல் நடவடிக்கைகள், புதிதாக உருவான இந்திய அரசுக்கு உவப்பானதாக
இருக்காது. அங்கே கம்யூனிஸ்டுகளின் நடவடிக்கைகள் அதிகமாக இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.
அதை இந்திய அரசாங்கம் கட்டுப்படுத்தாவிட்டால்,
உங்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்.
ஷேக் அப்துல்லாவோ நேருவின் நண்பர்.
நேரு, ஷேக் அப்துல்லாவிற்கு 1948 ஆம் ஆண்டு மே
28 ஆம் நாள், ஒரு கடிதம் எழுதினார்.
எனக்கு, வெளியில் இருக்ககூடிய அந்நிய தூதரகங்களிடம்
இருந்து, ஒரு நெருக்கடி உருவாகி இருக்கிறது. பி.பி.எல்.பேடி போன்றவர்களை நீங்கள், ஆலோசகர்களாக
அருகில் வைத்திருக்கிறீர்கள்.
ஆலோசர்களாக அருகில் வைத்திருப்பது மட்டுமல்லாமல்,
அவர்களுக்குத் தனியாக கார் எல்லாம் கொடுத்திருக்கிறீர்கள். அதெல்லாம் கொடுக்க வேண்டியதுதான்.
பிரச்சனையில்லை.
ஆனால் அவர்களுடைய நடவடிக்கைகள் மீது, நீங்கள்
ஒரு கண் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்தியாவில் இன்றைக்கு இருக்கக் கூடிய,
கம்யூனிஸ்டுகள், நாம் எதிர்பார்ப்பதைப் போல் இல்லை.
ஜுன் 3 ஆம் தேதி, ஷேக் அப்துல்லா, பதில் கடிதம்
எழுதினார்.
உங்களுக்கு
வந்த தகவல்கள், மிகைப்படுத்தப் பட்டத் தகவல்கள். கம்யூனிஸ்டுகளின் நடமாட்டம் இருக்கிறதா
என்றால் இருக்கிறது. அது கட்டுப்படுத்தப்பட்ட சூழலில்தான் இருக்கிறதே தவிர, நீங்கள்
அச்சப்படத் தக்க வகையில் இல்லை.
ஆகவே, பிரதமர் அவர்களே, நீங்கள் நிம்மதியாகத்
தூங்குங்கள்.
---
கடந்த 14.7.2024
ஞாயிற்றுக் கிழமை மாலை,
ஏடகம்
ஞாயிறு முற்றம்.
1947
ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் நாள், காஷ்மீர் மன்னர் ஹரி சிங், இந்தியாவோடு இணைகிறேன்
என கையெழுத்துப் போடுகிற நொடிவரை, காஷ்மீர் மக்களுக்கு, இந்திய தேசியம் குறித்தோ, இந்திய
விடுதலைப் போராட்டம் குறித்தோ, இந்தியாவுடன் இணைய வேண்டும் என்பது குறித்தோ எந்த உணர்வும்
கிடையாது.
ஏனெனில் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வேறு.
இதனை உணர, காஷ்மீர் மாநிலத்தின் நிலையினை, வரலாற்றுப்
பின்புலத்தோடு பார்க்க வேண்டும்
என்று
கூறி,
தமிழ்நாடு
முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்
துணைப்
பொதுச் செயலாளர்
காஷ்மீர் – மக்களும்
இயற்கையும்
எனும்
தலைப்பில் அற்புத உரையாற்றி,
காஷ்மீரைக்
கண்முன் கொண்டு வந்து காட்டியதோடு,
கடந்த
ஆண்டு, தான் மேற்கொண்ட
காஷ்மீர்
பயண அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
தஞ்சாவூர்,
பாரதி புத்தகாலய, மண்டலப் பொறுப்பாளர்
தலைமையில்
நடைபெற்ற
ஏடகப்
பொழிவிற்கு வந்திருந்தோரை
தஞ்சாவூர்,
வழக்கறிஞர்
வரவேற்றார்.
தஞ்சாவூர்,
பொறியாளர்
நன்றி
கூற
விழா
இனிது நிறைவுற்றது.
தஞ்சாவூர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கக்
விழா
நிகழ்வுகளை அழகுத் தமிழால் தொகுத்து வழங்கினார்.
காஷ்மீர்
என்றாலே
ஆப்பிளும், தேநிலவும்தான்
என்ற எண்ணத்தை மாற்றி,
காஷ்மீர் மக்களின்
உழைப்பையும்
உன்னதத்தையும்
அறியும் வகையில்
முற்றப் பொழிவை
முன்னிறுத்திய
ஏடக நிறுவுநர், தலைவர்
போற்றுவோம், வாழ்த்துவோம்.