வான விரிவைக் காணும்போ தெல்லாம் – உமா
மகேச்சுரன் புகழே என் நினைவில் வரும்.
ஆன தமிழ்க் கல்லூரி நிறுவினோன் – மக்கள்
அன்பினோன், அறத்தினோன் ஆன்ற அறிவினோன்
பெற்ற அன்னையை அன்னாய் என்றுவாய்
பெருக அழைக்கவும் நேரமே யில்லை
உற்றார் உறவினர்க் காக உழைக்க
ஒருநாள் ஒருநொடி இருந்ததே இல்லை
கற்றவர் தமிழர் என்னுமோர் உயர்நிலை
காண வேண்டி இல்லந் துறந்து
முற்றுங் காலத்தைத் தமிழ்த் தொண்டாக்கினோன்
வாழ்க தமிழ் முனிவன் திருப்பெயர்
வான விரிவைக் காணும் போதெல்லாம் – உமா
மகேச்சுரன் புகழே என் நினைவில் வரும்
-
பாவேந்தர் பாரதிதாசன்
நண்பர்களே, நான் பிறந்தது கரந்தை. நான்
தவழ்ந்தது கரந்தை. நான் வளர்ந்தது கரந்தை. நான் பயின்றது கரந்தை. நான்
பணியாற்றுவதும் கரந்தை.
எனக்கு ஒரு நல் வாழ்வு, ஏற்றமிகு
வாழ்வளித்த, கரந்தைக்கு, இதுவரை நான் என்ன செய்திருக்கிறேன்? என்னையேக் கேட்டுப்
பார்க்கிறேன். விடைதான் தெரியவில்லை.