கிஸ்தி, திரை,
வரி, வட்டி. வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கு ஏன் கொடுப்பது கிஸ்தி.
எங்களோடு வயலுக்கு வந்தாயா?, ஏற்றம்
இறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? நாத்து நட்டாயா? களை
பறித்தாயா? தரணி வாழ் உழவனுக்கு கஞ்சிக் களயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும்
எம் குலப் பெண்களுக்கு, மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா? அல்லது நீ மாமனா? மச்சானா?
மானங் கெட்டவனே, எதற்குக் கேட்கிறாய் திரை? யாரைக் கேட்கிறாய் வரி?
நண்பர்களே, தமிழ் மொழி அறிந்த பெரியவர்கள்
முதல், சிறுவர்கள் வரை, அனைவரும், இவ்வீர உரையினை நன்கறிவார்கள். வீரபாண்டிய கட்ட
பொம்மனை அறியாதவர்கள் யார்?
ஆனாலும்,
வீரபாண்டிய கட்ட பொம்மனுக்குச் சற்றும் குறைவில்லாத,
வீரத்தாய்
வேலு நாச்சியாரை
தமிழ்
மக்களில் எத்தனை சதவீதத்தினர் அறிவர்.
மிக
மிகக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.
வேதனையாக இருக்கிறது நண்பர்களே.
ஆங்கிலேயர்களுடன், தீரத்துடன், வீரத்துடன், விவேகத்துடன் போராடி, இழந்த மண்ணை
மீட்டெடுத்த,
வீர
மங்கை வேலு நாச்சியாரை
அறிந்தவர்கள்
குறைவு, என்பதை எண்ணும்போது, உள்ளம் வருந்தத்தான் செய்கிறது.
கடந்த சில மாதங்களில், வேலு நாச்சியாரைப்
பற்றிய சில நூல்களையும், இணையத்தில் பல கட்டுரைகளையும் படிக்கும் வாய்ப்பு
எனக்குக் கிட்டியது. படிக்கப் படிக்க வியப்பு மேலிட்டுக் கொண்டே சென்றது.
இப்படியும் ஒரு வீரப் பெண்மணியா? நமது நாட்டிலா? நமது மண்ணிலா? நமது மொழியிலா?
நம்பவே முடியவில்லை.
படித்ததை, உங்களுடன் பகிர்ந்து கொள்வதைவிட,
வேறு என்ன வேலை எனக்கு இருக்கிறது.
வேலு நாச்சியாரின் வீர வரலாற்றினை, ஒரு
சிறு தொடராக, குறுந் தொடராக, ஏழே ஏழு அத்தியாயங்களில், என் போக்கில் எழுத
முற்படுகிறேன்.
குற்றம் குறை இருப்பின், சுட்டுங்கள்,
திருத்திக் கொள்கின்றேன்.
தங்களின் அன்பான வருகையினையும், தங்களின்
உயர்ந்த, உன்னதக் கருத்துக்களையும், எதிர்பார்த்து, ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
வாருங்கள் நண்பர்களே, இதோ கால இயந்திரம்,
தங்களுக்காகத், தயராராகக் காத்திருக்கிறது. வாருங்கள், வந்து இருக்கைகளில்
அமருங்கள்,
நொடிக்கு
நூறாண்டு வீதம், பின்னோக்கிப் பயணிப்போம். 2014,..... 2000,.... 1900,.... 1800,.....
1700 .... இதோ காளையார் கோயில்.
காளையார் கோயில்
இறைவனுக்கு கற்பூர ஆராதனை காட்டப் படுகிறது.
மன்னர் இரு கரம் குவித்து, கண்களை மூடி, ஆண்டவனை மனதார வணங்கிக் கொண்டிருக்கிறார்.
திடீரென்று ஆலயத்திற்கு வெளியில், ஓர்
பலத்த வெடிச் சத்தம். மக்களின் கூக்குரல். துப்பாக்கிக் குண்டுகளின் தொடர்
முழக்கம்.
விழி மூடி, இறைவனை மனதார வணங்கிக்
கொண்டிருந்த மன்னரின் கண்கள், வியப்புடன் வாயிலை நோக்குகின்றன. இறைவனை நோக்கிக்
குவிந்திருந்த கரங்கள் கீழிறங்குகின்றன. வலது கை, இடையில் இருந்த வாளை உருவுகிறது.
உருவிய வாளுடன், நெஞ்சம் நிமிர்த்தி,
சிங்கம் போல், கோயிலுக்கு வெளியே வருகிறார் மன்னர். அவரைப் பின் தொடர்ந்து
இளையராணியும் வருகிறார்.
கோயிலுக்கு வெளியே, ஆங்கிலேயர்களின் வெறிக்
கூட்ட்ம் ஒன்று, பொது மக்களை, காக்கைக் குருவிகளைச் சுடுவது போல், சுட்டுத்
தள்ளிக் கொண்டிருந்தது.
மன்னர் உருவிய வாளுடன், வேங்கையென,
வெள்ளையரை நோக்கிப் பாய்கிறார். மன்னரின் வாள் சுழன்ற திசையெல்லாம்,
ஆங்கிலேயர்களின் தலைகள் அறுபட்டு, தரையில் விழுந்து உருண்டோடுகின்றன. மன்னரின்
மெய்க் காவல் படையினர் ஒரு பக்கம் சுழன்று, சுழன்று தாக்க, காளையார் கோயில்
மக்களும், கையில் கிடைத்த பொருள்களை எல்லாம் எடுத்து, ஆங்கிலேயர்களைத் தாக்கத்
தொடங்கினர்.
ஆங்கிலேயத் தளபதி ஜோசப் ஸ்மித்,
இராமநாத புரத்தில், அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையோடு, அமைதிப் பேச்சு
வார்த்தை என்னும் பெயரில், ஒரு நாடகம் நடத்திக் கொண்டிருக்க, இதோ, இங்கே, காளையார்
கோயிலின், பரந்து விரிந்த மரம் ஒன்றின் பின்னால் மறைந்து நிற்கிறான், மற்றொரு
ஆங்கிலேயத் தளபதி பான் ஜோர்.
நேரே நின்று போராடி, மன்னரை வீழ்த்த
முடியாது என்பது பான் ஜோருக்குப் புரிந்து விட்டது. திருட்டுத் தனமாய், மரத்தின்
பின் ஒளிந்தபடி., துப்பாக்கியை நீட்டி, மன்னரைக் குறி பார்க்கிறான். ஆள் காட்டி
விரல், விசையினை அழுத்துகிறது. அடுத்த நொடி, துப்பாக்கியில் இருந்து, குண்டு
சீறிப் பாய்கிறது.
வீரப் போரிடும் மன்னரைப் பின் தொடர்ந்து
வந்து கொண்டிருந்த இளைய ராணி, அப்பொழுதுதான் கவனித்தார். மரத்தின் பின்னால்
இருந்து, ஒரு துப்பாக்கி,
மன்னரையல்லவா
குறி பார்க்கிறது.
மன்னா...
ஒரு நொடி, ஒரே ஒரு நொடி கூட, தாமதிக்காமல்,
துப்பாக்கியில் இருந்து, புறப்பட்ட குண்டு, மன்னரைத் தொடும் முன், பாய்ந்து
சென்று, மன்னரை மார்போடு கட்டித் தழுவுகிறார். சீறி வந்த குண்டு, இளைய ராணியின்
முதுகைத் துளையிட, மன்னரைத் தழுவியபடியே, சரிகிறார்.
மன்னரைக் காப்பாற்றி விட்டோம், காப்பாற்றி
விட்டோம், அது போதும் என்ற நிம்மதி கண்களில் தெரிய, மெல்ல மெல்ல சரிகிறார்.
கவுரி....
மன்னர் இளைய ராணியைத் தாங்கிப் பிடிக்கிறார். கோபத்தில் சிவந்திருந்த
கண்கள், குண்டு வந்த திசையினைத் தேடுகின்றன.
பான் ஜோரின் துப்பாக்கியில் இருந்து, சீறி
வந்த மற்றொரு குண்டு, மன்னரின் மார்பைத் துளைக்கிறது.
மன்னரும், இளைய ராணியும், ஒருவரை ஒருவர்
தழுவிய படியே, மண்ணில் சாய்கின்றனர். இருவரின் இரத்தமும, ஒன்றிணைந்து, கோயிலின்
திசையில் இறைவனைத் தேடி ஓடுகிறது.
இந்திய வரலாற்றில், ஆங்கிலேயர்களை வீறு
கொண்டு எதிர்த்து, களம் கண்டு போரிட்டு, மரணத்தைத் தழுவிய முதல் மன்னர் இவர்தான்.
சிவகங்கைச்
சீமையின்
மன்னர்
முத்து
வடுக நாதர்.
அவர்தான்,
ராணி
வேலு நாச்சியார்.
-
தொடரும்