29 நவம்பர் 2013

இணைந்த இதயங்களின் ஓராயிரம் நன்றிகள்

நான் உன்னை எப்படி நேசிக்கிறேன்
இதோ வழிகளை எண்ணுகிறேன்.

பார்வைக்கு அப்பால் உன்னை உணரும்போது
ஆன்மாவின், தெய்வீக அருளின் உச்சியில்
நான் உன்னை நேசிக்கிறேன்.

பாராட்டால் குளிர்வதைப் போல்
நான் உன்னைத் தூய்மையாக நேசிக்கிறேன்

சுவாசம், புன்னகை
கண்ணீர்
வாழ்வின் சகல விஷயங்களோடும்
நான் உன்னை நேசிக்கிறேன்.
-           எலிசபெத் பேரட் பிரவுனிங்

     நண்பர்களே, இருளில் இணைந்த இதயங்களான, வெற்றிவேல் முருகன் நித்யா தம்பதியினரின் திருமண நிகழ்வினை, மனக் கண்ணால் கண்டு, நெஞ்சார வாழ்த்தி, இனம் புரியாத உணர்வுகளின் பிடியில் சிக்குண்டு நீங்கள் தவிப்பது எனக்குப் புரிகிறது.

     கருத்துரைகளையே, திருமண அட்சதையாய்த் தூவி, மணமக்கள் வாழ்வாங்கு வாழ வாழ்த்தி மகிழ்ந்திருக்கும், தங்களின் அன்புள்ளம், உங்களின் ஒவ்வொரு எழுத்திலும் தெளிவாய் தெரிகிறது.

     நண்பர்களே, சுவாமிமலை அம்பாள் சன்னதியில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்திய உற்றார், உறவினர்களை விட, வலைப் பூவின் வழியாக, இருளில் ஒளி தேடி இணைந்த உள்ளங்களை, நெகிழ்ந்து வாழ்த்திய நேச மிகு நண்பர்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் கடந்து விட்டது.


     உண்மையிலேயே மணமக்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். பூமிப் பந்தின் ஒவ்வொரு மூலையில் இருந்தும், நேசமிகு வலைப் பூ உறவுகளின், பாசமிகு வார்த்தைகளில் நனைந்திருக்கிறார்கள். இவர்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்தான்.

     நண்பர்களே, உங்கள் ஒவ்வொருவருக்கும் மணமக்கள் இருவரும், தங்களது நன்றியினைத், தங்களது மகிழ்வினைத் தெரிவித்துள்ளார்கள்.

     ஆம் நண்பர்களே, கடந்த புதன் கிழமை 27.11.2013 பள்ளி முடிந்து, வீடு திரும்பிய பின், கணினி முன் அமர்ந்து, மின்னஞ்சலைப் பார்த்தபோது, மனம் இன்ப அதிர்ச்சியில் உறைந்தது. காரணம், மனமகண் வெற்றிவேல் முருகனின் மின்னஞ்சல் காத்திருந்தது.

We humbly accept greetings from the other bloggers.

      மணமக்களை வாழ்த்திய ஆயிரக்கணக்கான வலைப் பூ உறவுகளுக்கு, மணமக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.

     நண்பர்களே, அம்மின்னஞ்சலிலேயே ஒரு பாடல். பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான நான்மணிக் கடிகை-யில் இருந்து.

கொடுப்பின் அசனம் கொடுக்க, விடுப்பின்
உயிர் இடையீட்டை விடுக்க, எடுப்பின்
கிளையுள் அழிந்தார் எடுக்க, கெடுப்பின்
வெகுளி கெடுத்து விடல்.

     சத்தியமாக எனக்குப் பொருள் விளங்கவில்லை நண்பர்களே. மனம் கூசித்தான் போனது. கண்ணிருந்தும், தாய் மொழியாம் தமிழில் நான்கு வரிகளைப் படித்து பொருள் உணர இயலவில்லையே என்ற இயலாமை.

     அலைபேசியை எடுத்தேன். எனது ஆசிரியர் புலவர் கோ.பாண்டுரங்கன் அவர்களைத் தொடர்பு கொண்டேன். பாடலைச் சொன்னேன். அடுத்த நொடி, விளக்கம் அருவியாய் கொட்டியது.

     ஒருவருக்கு ஒன்றைக் கொடுப்பதானால், உணவைக் கொடு. ஒன்றை விட்டுவிடுவதானால், உயிரைப் பற்றிய பற்றை விட்டு விடு. ஒருவரை உயர்த்த வேண்டுமென்றால், உன் உறவினருள் ஏழையரைத் தாங்கி உயர்த்து. ஒன்றைக் கெடுப்பதானால், கோபத்தைக் கெடு.

     நண்பர்களே, பாட்டின் பொருள் அறிந்த பிறகு வெற்றிவேல் முருகன் மீதான மதிப்பு மேலே, மேலே உயர்ந்த கொண்டே செல்கிறது.

சந்தித்தாக வேண்டியதை எதிர்கொள்பவனை நான் நேசிக்கிறேன்
வெற்றிகரமாக அடிவைத்து சந்தோஷமான இதயத்துடன்
தினசரி சண்டையில் பயமின்றி சண்டையிடுபவன் அவன்.
-          சாரா கே. போல்டன்

     வாழ்வே போராட்டமாய் மாறிய பிறகும், தமிழை நேசித்து வாழும் உள்ளம் வெற்றிவேல் முருகனுடையது என்பதை அறியும்போது, நெஞ்சம் பெருமையில் விம்முகிறது நண்பர்களே.

     நண்பர்களே, இதோ வெற்றிவேல் முருகனின் மின்னஞ்சல், தங்களின் நேசமிகு பார்வைக்கு.
-------------------------------
Dear Jeyakumar Sir,

We (Nithya and I) have read your blog post and are honoured to be presented in such a wonderful. We also very humbely accept greetings from the other bloggers. Once again our sincere gratitude to you for positively writing our life history.

Sincere Regards,
Vetrivel Murugan and Nithya.


கொடுப்பின் அசனம் கொடுக்க; விடுப்பின்
உயிர் இடையிட்ட விடுக்க; எடுப்பின்
கிளையுள் அழிந்தார் எடுக்க; கெடுப்பின்
வெகுளி கெடுத்து விடல்!
                                           நான்மணிக்கடிகை - (பாடல்-79)


Vetrivel Murugan Adhimoolam,
Department of Sociology,
The New School for Social Research,
65 fifth avenue,
New York, New York 10003.

Home:

1370 Saint Nicholas avenue,
APT 15M,
New York, NY 10033.

Phone: +1-347-208-6976.

E-mails:

avm124@gmail.com

murua795@newschool.edu

vadhimoolam@lagcc.cuny.edu

vadhimoolam@bmcc.cuny.edu

Skipe ID: vetrivelmurugan

Twitter: avm124

-----------------------------------------

     இதுமட்டுமல்ல நண்பர்களே, 28.11.2013 மாலை 6.30 மணியளவில், அலைபேசி அழைத்தது. மறுமுனையில் வெற்றிவேல் முருகன்.

     சார், உங்களது கட்டுரையினைப் படிக்கக் கேட்டேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். கட்டுரையினைப் படித்துக் கருத்துரை வழங்கிய அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அடுத்த முறை இரும்புத் தலைக்கு வரும்பொழுது, உங்களைச் சந்திக்க விரும்புகிறேன் என்றார்.

     மகிழ்ச்சியோடு காத்திருக்கிறேன் ஐயா, வரும்பொழுது தெரியப் படுத்துங்கள். அவசியம் வருகிறேன் என்றேன்.

     உங்களோடு பல செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் போன்ற மனிதர்களின் உணர்வுகள், செயல்பாடுகள் குறித்துப் பேச ஆசைப் படுகின்றேன். நீங்கள் இதை வெளி உலகிற்குத் தெரியப்படுத்த வேண்டும். என் போன்றோரை, இவ்வுலகம், இன்னும் முழுமையாய் புரிந்து கொள்ள வேண்டும் என எண்ணுகின்றேன் என்றார்.


     நண்பர்களே, இதைவிட வேறு என்ன வேலை எனக்கிருக்கிறது. நண்பர் வெற்றிவேல் முருகன், இரும்புத் தலைக்கு வரும் நாளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

பாடகன் பாடியதற்கு மேலான இன்பம் இருக்கிறது
இருவரும் தெய்வீக அருளால் ஒன்றிணைந்து
இதயம் மாறாதிருத்தல், நெற்றி சுருங்காதிருத்தல்
எல்லா இன்னல்களிலும் அன்பாய் சாகும்வரை இருத்தல்

ஒரு மணி நேரம் புனிதமான அன்போடு இருப்பது
பல யுகங்கள் இதயமற்றுத் திரியும் இன்பத்திற்கு ஈடானது
மண்ணுலகில் சொர்க்கம் இருக்குமானால்
அது இதுதான் அது இதுதான்.
-          தாமஸ் மூர்

மணமக்கள் இருவரும்
இன்புற்று இனிது வாழ

வாழ்த்துவோம் நண்பர்களே.

23 நவம்பர் 2013

இருளில் இணைந்த இதயங்கள்

அவனுக்குப் பின்னால் வெளிர்நிறக் கடல்
அவனுக்கு முன்னால் கரையற்ற கடல்.

நல்ல நண்பன் கூறினான், நாம் பிரார்த்திக்கலாமா இப்போது?
ஐயோ நட்சத்திரங்களைக் கூட காணவில்லை
வீரனே .... தலைவனே, பேசு. நான் என்ன சொல்லட்டும்
ஏன் பேசுகிறாய்? பயணம் செல், தொடர்ந்து பயணம் செல்.

காற்று தொடர்ந்து வீச அவர்கள் பயணம் தொடர்ந்தது
இறுதியில் களைத்த நண்பன் கூறினான்,
ஏன், நானும் என் மாலுமிகளும் இறக்கத்தான் வேண்டுமா?
இந்தக் காற்று தன் வழியை மறந்துவிட்டது, ஏனெனில்
பயங்கரமான இக்கடலில் இருந்து கடவுள் விலகிவிட்டார்
வீரனே, தலைவனே, பேசு இப்போது பேசு
அவன் கூறினான் பயணம் செல், தொடர்ந்து பயணம் செல்

வீரனே தலைவனே ஒரு நல்ல வார்த்தை சொல்
நம் நம்பிக்கை போனால் நாம் என்ன செய்வது?
பாயும் கத்திபோல வார்த்தைகள் பாய்ந்து வந்தன
பயணம் செல், பயணம் செல், தொடர்ந்து பயணம் செல்

வெளுத்து சோர்ந்த அவன் தன் மேடை ஏறினான்
இருளின் ஊடே பார்த்தான். ஆ... அந்த இரவு
இரவுகளில் எல்லாம் இருண்டது. பிறகு ஓர் ஒளி
வெளிச்சம், வெளிச்சம் இறுதியில் ஒளி தோன்றியது
அது வளர்ந்து நட்சத்திர ஒளியில் கொடி விரிந்தது
அது வளர்ந்து காலத்தின் விடியலாக வெடித்தது

அவன் ஓர் உலகை வென்றான். அவன் உலகிற்கு
மாபெரும் பாடம் சொன்னான்
பயணம் செல். தொடர்ந்து பயணம் செல்.
-          ஜோரூன் மில்லர்

     நண்பர்களே, வாழ்க்கை என்பதே ஒரு பயணம்தானே. மேடு, பள்ளங்கள், சோதனைகள், சாதனைகள், குறுக்கீடுகள், பந்த பாசங்கள், உறவுகள், பிரிவுகள், நட்புகள், நம்பிக்கைத் துரோகங்கள் என அனைத்தையும் கடந்துதானே, வெற்றி கண்டுதானே, நிலை குலையாமல் நாம் பயணிக்கிறோம்.

     பிறப்புண்டேல் இறப்புண்டு என்றனர் நம் முன்னோர். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட வாழ்வினில்தான் எத்தனை எத்தனைப் பயணங்கள், எத்தனை எத்தனை சோதனைகள்.

     நண்பர்களே, நாமும் பல சோதனைகளைச் சந்தித்தவர்கள்தான். சோதனைகளை எதிர்கொண்டு போராடி வென்றவர்கள்தான். ஆனால் வாழ்வே போராட்டமானால்?

வாழ்வு முழுவதும் சோகம் என்றாலும் கலங்காதே
உன் துக்கத்தினால் காலை உதயம் தன் அழகை இழந்துவிடாது
ஓடைநீர் தனது பளபளப்பான நிலையான அழகை
அசோக மர இலைக்கோ தாமரை மலருக்கோ தராமல் போகாது.

வாழ்க்கை இருண்டது , சிக்கலானது என்றாலும் கலங்காதே
நேரம் நிற்காது. உன் துக்கத்திற்காக தாமதிக்காது.
-             சரோஜினி நாயுடு

     சோதனையினையே மூச்சுக் காற்றாய் சுவாசித்தபோதும், சற்றும் தளராமல் போராடி, வாழ்வில் இணைந்த இரு இதயங்களை, திருமணம் என்னும் உன்னத உறவில் ஒன்றிணைந்த இரு நல் உள்ளங்களை, அவர்களின் திருமண விழாவின்போது, சில நாட்களுக்கு முன்னர் சந்தித்தேன் நண்பர்களே.

      நண்பர்களே, இவர்கள் இருவரும் காதலுக்காகப் போராடியவர்கள் அல்ல. பிறந்தது முதல் வாழ்வதற்காகப் போராடி வருபவர்கள். வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு நொடியினையும் போராடிப் போராடியே கடந்து வருபவர்கள்.

      நண்பர்களே இன்னும் விளங்கவில்லையா? மனதினைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள் நண்பர்களே, மனதினைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள். திருமண விழாவின் மூலம் இணைந்த இவ்விருவரும், பிறப்பு முதலே கண் பார்வை அற்றவர்கள்.
 
நண்பர் துரை. நடராசன்
      நண்பர் துரை.நடராசன் அவர்கள், நான் ஆசிரியராகப் பணியாற்றும் உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், உடற் கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர். இவர் தஞ்சையை அடுத்த இரும்புத் தலை என்னும் சிற்றூரைச் சார்ந்தவர்.

     நண்பர்களே, நண்பர் துரை.நடராசன் அவர்கள், இரும்புத் தலை என்னும் எழிலார்ந்த பூமியின் வளர்ச்சிக்காக, அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருபவர். இரும்புத் தலையில் மட்டுமல்ல, அதன் சுற்றுவட்ட கிராமங்களிலும், எதாவது ஒரு வீட்டில் மங்கல நிகழ்ச்சி என்றால் அவர்கள் அழைக்கும் முதல் நபரும்,, ஏதாவது ஒரு சிறு பிரச்சினை என்றால் அதனைத் தீர்க்க அவர்கள் அணுகும் முதல் நபரும் துரை நடராசன் அவர்கள்தான். பள்ளி நேரம் போக, இவர் செலவிடும் நேரம் முழுவதும் ஊருக்காகத்தான்.

      நண்பர் துரை நடராசன் அவர்களுடன், ஆசிரியர் அறையில் பேசிக் கொண்டிருந்த பொழுது, இத்திருமணம் பற்றிக் கூறினார். மணமகள் இவரது மைத்துணரின் மகள். இவர் ஏற்பாடு செய்து, முன்னின்று நடத்தும் திருமணம் இது.

     மணமக்கள் பற்றி இவர் பேசப் பேச, மனதில் இனம் புரியாத ஓர் உணர்வு. அதனை எவ்வாறு மொழிப்படுத்துவது என்று தெரியவில்லை. மணமக்களைக் காண வேண்டும், நானும் இத்திருமணத்திற்கு வருகிறேன் என்றேன்.

      கடந்த வியாழக்கிழமை 14.11.2013 அன்று காலை, கும்பகோணம், சுவாமி மலையில், அம்பாள் சன்னதியில் இவர்கள் திருமணம்  எளிமையாய் அரங்கேறியது.

      நண்பர்களே, மணமக்களைப் பார்த்தேன். அமைதி தவழும் மலர்ந்த முகங்கள். குழந்தைபோல் இருவரும் சிரித்த சிரிப்பினைக் காண கண் கோடி வேண்டும்.



போற்றி போற்றி ஓர் ஆயிரம் போற்றி நின்
    பொன்ன டிக்குப்பல்  லாயிரம் போற்றிகாண்
சேற்றி லேபுதி  தாக முளைத்த தோர்
     செய்ய  தாமரைத்  தேமலர்  போலாளி
தோற்றி  நின்றனை  பாரத நாட்டிலே
     துன்பம்  நீக்கும்  சுதந்திர  பேரிகை
சாற்றி  வந்தனை, மாதரசே எங்கள்
     சாதி செய்த  தவப்பயன்  வாழி  நீ
என புதுமைப் பெண்ணை வாழ்த்துவாரே மகாகவி பாரதியார், அந்த மகாகவி கண்ட புதுமைப் பெண்ணாகவே மணமகள் நித்யா எனக்குத் தோன்றினார். தனக்குப் பார்வையில்லையே என நித்யா வீட்டின் ஓர் மூலையில் முடங்கிவிடவில்லை. பார்வையற்றவர்களுக்கானப் பள்ளிக்குச் சென்றார். படித்தார். நண்பர்களே ஒரு செய்தி சொல்லட்டுமா?. நித்யா எம்.ஏ., பி.எட்., பட்டம் பயின்ற பட்டதாரி. இப்பொழுது சொல்லுங்கள் நண்பர்களே, நித்யா அவர்கள் பாரதி கண்ட புதுமைப் பெண்தானே.



கண்உடையார்  என்பவர் கற்றோர்  முகத்துஇரண்டு
புண்உடையார்  கல்லா தவர்

    கல்வி கற்காதவரின் கண்கள், கண்களே அல்ல புண்கள் என்பார் திருவள்ளுவர். திருவள்ளுவர் வழி நின்று சொல்வதானால், மணமகன் வெற்றிவேல் முருகன் அவர்களும் கண்ணுடையாரே ஆவார். ஆம் நண்பர்களே, கண் இல்லையே என்று கலங்காமல் கல்வி கற்றார். இவர் படித்த படிப்பு என்ன தெரியுமா? எம்.ஏ., எம்.ஃ.பில்., பிஎச்.டி.,. ஆம் நண்பர்களே, ஆம் முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்றவர் வெற்றிவேல் முருகன். இவர் டாக்டர் பட்டத்திற்கான ஆராய்ச்சியினை மேற்கொண்டது எங்கு தெரியுமா? நண்பர்களே, இங்கல்ல, இந்தியாவிலேயே அல்ல, அமெரிக்காவில், நியூயார்க்கில். நம்பமுடியவில்லையா நண்பர்களே, உண்மை. இத்தனைக்கும் இவர் ஒன்றும் வசதிபடைத்த வீட்டில் பிறந்தவர் அல்ல. நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். பிறகு எப்படி அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்தார் என்று தோன்றுகிறதா? உழைப்பு நண்பர்களே உழைப்பு. ஆர்வத்துடன் படித்து, ஒவ்வொரு நிலையிலும், கல்வி உதவித் தொகையினைப் பெற்றே, நியூயார்க் வரை சென்று வந்துள்ளார். தற்பொழுது, பாட்னா மத்திய பல்கலைக் கழகத்தில், பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். இவர்களின் தன்னம்பிக்கை எத்தகையது என்பது இப்பொழுது புரிகிறதா நண்பர்களே.

       வெற்றிவேல் முருகனின் தங்கையின் பெயர் செந்தமிழ்ச் செல்வி. இவர் ஒரு பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். நண்பர்களே, விதி, விதி என்று சொல்கிறார்களே, அந்த விதி இவர்கள் குடும்பத்தில் எப்படி முழுமையாக விளையாடியிருக்கிறது தெரியுமா? ஆம் நண்பர்களே செந்தமிழ்ச் செல்வியும் கண் பார்வை அற்றவர். மனந்தளராமல் படித்து ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். நல் மனதுக்குச் சொந்தக்காரர் ஒருவரை மணந்து கொண்டு, நல்லறமே இல்லறமாய் வாழ்ந்து வருகிறார்.

       நண்பர்களே, அம்பாள் சன்னதியில், திருமணம் முடிந்து, மணமக்கள் இயல்பாய், சிரித்தபடியே பேச, பேச மனதில் ஓர் ஆயிரம் கேள்விகள் வலம் வந்தபடியே இருந்தன.
     என்ன பாவம் செய்தார்கள் இவர்கள். இயற்கை ஏன் இவர்களிடம், தனது திருவிளையாடலை, தனது கொடூர குணத்தினைக் காட்டியுள்ளது. கருப்பு சிகப்பு என்ற வார்த்தைகளின் வித்தியாசத்தினைக் கூட அறியாதவர்கள் அல்லவா இவர்கள். தாங்கள் என்ன நிறம் என்பது கூட தெரியாதவர்கள் அல்லவா இவர்கள். நிறம் என்ன நிறம், நாம் எப்படியிருக்கிறோம், மனிதன் என்றால் எப்படி இருப்பான், கால் எப்படியிருக்கும், கை எப்படியிருக்கும், முகம் என்றால் என்ன, அது எப்படி இருக்கும், உண்ணுகின்றோமே உணவு, அது எப்படி இருக்கும், சட்டை என்கிறார்களே, வேட்டி, சேலை என்கிறார்களே அவையெல்லாம் எப்படி இருக்கும், என்பதையே அறியாதவர்கள் அல்லவா இவர்கள்.



      நாம் வாழும் உலகில் எத்தனை எத்தனை மதங்கள். அவை அனைத்தும் போதிப்பது அன்பு என்ற ஒன்றைத்தானே. மதங்கள் போதிப்பதைப் படித்து அறிந்த பிறகும், அதனைப் பின்பற்றாது, கண்ணிருந்தும் குருடர்களாய் துப்பாக்கியையும், வெடிகுண்டுகளையும் சுமந்து, பேரழிவை உண்டாக்கி வாழும் மக்கள் பலரிருக்க, அவர்களைத் தண்டிக்காது, இவர்களை மட்டும் ஒளியற்றவர்களாய் பிறக்க வைத்து, ஏன் தண்டிக்க வேண்டும்?. கண்ணற்ற மனிதர்களைப் படைப்பதற்கும் ஒரு கடவுளா?. இக்கடவுள் முற்றும் உணர்ந்தவரா? அனைத்தும் அறிந்தவரா? மனதில் கேள்விகள் தோன்றுகின்றனவே தவிர, பதில்தான் கண்ணா மூச்சு ஆடிக்கொண்டேயிருக்கிறது.

     நண்பர்களே, சொன்னால் நம்ப மாட்டீர்கள், திருமணம் முடிந்த பிறகு, சுவாமிமலை தேவஸ்தான அலுவலகத்திலே, திருமணப் பதிவேட்டில், மாப்பிள்ளை தன் கையெழுத்தினைப் பதிவு செய்தார் என்று கூறினால் நம்புவீர்களா? எனது இரண்டு கண்களாலும் பார்த்தேன்.

     படிவத்தைக் கொடுத்ததும், தனது வலது கையால், போனாவினைப் பெற்றுக் கொண்டு, கையெழுத்துப் போட வேண்டிய இடத்தில், கைபிடித்து போனாவின் முனையினை வைக்கச் சொன்னார். பேனாவை குறித்த இடத்தில் வைத்ததும், தனது இடது கை, ஆள் காட்டி விரலையும், நடு விரலையும், அகல விரித்து, பேனாவின் முனையில் சொருகினார்.

     நண்பர்களே, நாமெல்லாம் சிறு வயதில், இரண்டு கோடு நோட்டில் எழுதியிருப்போமே நினைவில் இருக்கிறதா? பக்கம் முழுவதும் இரண்டிரண்டு கோடுகளாக அச்சிடப் பெற்றிருக்கும். நாம் அதன் இரண்டு கோடுகளுக்கும் இடையில், குண்டு குண்டாக எழுதிப் பழகினோமே ஞாபகத்திற்கு வருகிறதா?


     நண்பர்களே, இவரும் அப்படித்தான் கையொப்பமிட்டார். இவரைப் பொறுத்தவரை, நடு விரல் மேல் கோடு, ஆள் காட்டி விரல் கீழுள்ள கோடு. கையெழுத்திட வேண்டிய இடத்தின் எல்லைகளாக, மேலும் கீழும் விரல்கள். விரல்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தெளிவாகக் கையெழுத்திட்டார். மலைத்துப் போய்விட்டேன் நண்பர்களே, மலைத்துப் போய்விட்டேன்.

          வாழ்வின் எக்காலத்தும் மறக்க இயலா திருமணம் இத் திருமணம்.

     நண்பர்களே, கண்பார்வை அற்றவர்கள் இருவர் இணைந்து, ஒரு புதுவாழ்வினைத் துவக்கியிருக்கிறார்கள். இருவரின் தன்னம்பிக்கையும், தைரியமும், நெஞ்சுரமும் போற்றப்பட வேண்டியவை.

     இருளிலேயே இருந்து வாழப் பழகிவிட்ட, இவ்விருவரின் எதிர்கால வாழ்வு ஒளிமயமானதாக அமைய, மனதார வாழ்த்துவோமா நண்பர்களே.

     இவர்களது இல்லறத்தின் பயனாய், நாளை இவ்வுலகில் தோன்றவிருக்கும் மழலை ஒளிவீசும் கண்களோடு தோன்றி, இவ்விருவரையும் கண்ணே போல் போற்றிப் புரக்க, நெஞ்சார வாழ்த்துவோமா நண்பர்களே.

மணமக்கள் நல்வாழ்வு வாழட்டும்
நாளை வரும் மழலை
இவ்வுலகைக் கண்ணாரக் காணட்டும்.

    
      

    



15 நவம்பர் 2013

கண்ணகியின் அடிச்சுவட்டில் ஒரு நீநீநீண்ண்ட பயணம்


தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
என்பார் திருவள்ளுவர்., நாமும் நமது பணியினை நிறைவாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், தினமும் முயன்று கொண்டே இருப்பவர்கள்தான். ஆனாலும் நமது முயற்சியின் எல்லை சிறியது, முயற்சிக்கும் காலமும் சிறியது.

      நாம் அனைவரும் புத்தகங்கள் படிப்பவர்கள்தான். எத்துனையோ மாமனிதர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கரைத்துக் குடித்தவர்கள்தான். இதிகாசங்களையும், இலக்கியங்களையும், காப்பியங்களையும் படித்தவர்கள்தான். ஆனால் நம்மில் எத்தனைபேர், நூல்கள் சுட்டும் திசையில் பயணித்திருக்கிறோம்.

      களப் பணி என்னும் சொல் இன்று மிகவும் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. தமிழாய்வாளர்கள் இன்று களப்பணி செய்து, புதிய புதிய செய்திகளை, உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார்கள்.

     தமிழ்ப் பல்கலைக் கழகத்திலே பணியாற்றும், எனது நண்பர் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள், விடுமுறை நாட்களில், பௌத்தத்தின்அடிச்சுவட்டைத் தேடி, சோழ நாடு முழுமையும் பயணம் செய்து கொண்டே இருக்கிறார்.

    இன்று களப்பணி ஆற்றுவதற்கு தொடர் வண்டிகள், பேரூந்துகள், வானூர்திகள், இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வசதிகள் பல்கிப் பெருகிவிட்டன. ஆனால் இன்றைக்கு 68 ஆண்டுகளுக்கு முன்னர், பயண வசதிகள் என்ன இருந்திருக்கும், என்பதை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள் நண்பர்களே.

     ஒரு சில புகை வண்டிகள், மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், இரு சக்கர மிதி வண்டிகள் இவைதானே, அன்றிருந்தவை.
பேராசிரியர் சி.கோவிந்தராசனார்
     தஞ்சாவூர், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், கரந்தைப் புலவர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், இலங்கையைச் சார்ந்த பேரறிஞர், யாழ் நூல் என்னும் தமிழ் இசை இலக்கண நூலின் ஆசிரியர், சுவாமி விபுலானந்த அடிகளாரிடம், சிலப்பதிகாரத்தைத் திறம்படக் கற்றவர். சிலப்பதிகாரத்தில் ஊறித் திளைத்தவர். அவரது மனதில் நீண்ட நாட்களாகவே, ஓர் ஆசை, ஏக்கம், கனவு. சிலப்பதிகாரத்தில் கண்ணகி பயணம் செய்த, பாதை வழியாகவே, ஒரு பயணம் செய்தால் என்ன என்ற தணியாத தாகம்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களும் எண்ணி, எண்ணித் துணிந்து இறங்கினார்.

     சொன்னால் நம்ப மாட்டீர்கள், பேராசிரியர் சி.கோவிந்தராசனார், கண்ணகியின் அடிச்சுவட்டில் பயணம் தொடங்கிய ஆண்டு 1945. ஆம் நண்பர்களே, இன்றைக்கு 68 ஆண்டுகளுக்கு முன்னர், துணிந்து இறங்கினார்.

      கண்ணகியின் அடிச்சுவட்டில், கண்ணகி பயணித்த பாதை வழியாகவே, இவரும் நடந்தே சென்றார். கல்லூரி விடுமுறையில் நடந்தார், விடுமுறை எடுத்துக் கொண்டு நடந்தார். ஊதியத்தைச் செலவிட்டு நடந்தார். தனது உடமைகள் ஒவ்வொன்றையும், விற்று, விற்று, காசாக்கிக் கொண்டே நடந்தார்.

     இவர் நடந்தது ஒரு மாதம், இரு மாதமல்ல, பதினேழு ஆண்டுகள் நடந்தார். முடிவில் சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல, வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தினார்.


     அதுமட்டுமல்ல, சிலப்பதிகாரத்தில், குன்றக்குரவை என்னும் காதையுள், கண்ணகி மலைமேல், வேங்கை மர நிழலில் நின்று தெய்வமான இடத்தினையும், அவ்விடத்தில் சேரன் செங்குட்டுவன் அமைத்த பத்தினிக் கோட்டம் என்னும் கண்ணகிக் கோயிலையும் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்த பெருமைக்கு உரியவரும் இவரேதான்.

      பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், பதினேழு ஆண்டுகள் செலவிட்டு, கண்ணகியின் பாதச் சுவடுகளைப் பின் பற்றி நடந்த பாதையின் வழியே, நாமும் ஒரு புனிதப் பயணம் மேற்கொள்வோமா. வாருங்கள் நண்பர்களே வாருங்கள்.

      பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், தனது பயணத் திட்டத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டார்.

     காவிரிப் பூம்பட்டிணம் முதல், காவிரியின் வடகரை வழியாக, திருவரங்கம், உறையூர் வரையிலான பாதை, இவரது ஆய்வின் முதல் பகுதி.

     உறையூர் முதல், கற்குடி, பூங்குடி, விராலிமலை, கொடும்பாளூர் வழியாகப் பிரான் மலை, அழகர் மலை, மதுரை வரையிலான பாதை இவரது ஆய்வின் இரண்டாம் பகுதி.

     மதுரை மாநகர் ஆராய்ச்சி இவரது ஆய்வின் மூன்றாம் பகுதி.

     மதுரை முதல் வையை கரை வழியே நெடுவேள் குன்றம் வரையிலான பாதை இவரது ஆய்வின் நான்காம் பகுதி.

கண்ணகியில் அடிச்சுவட்டில் பேராசிரியர் பயணித்த பாதை

    


1945 ஆம் ஆண்டின் ஓர் நாள், இவர் மயிலாடுதுறை என்று இன்று அழைக்கப் படுகின்ற மாயுரம் வரை புகை வண்டியில் சென்றார். அங்கிருந்து இரு சக்கர மிதி வண்டிதான். அந்தக் காலத்தில், இவர் மாயுரத்தில் இறங்கி விசாரித்த பொழுது, காவிரிப் பூம்பட்டிணம் எங்கிருக்கிறது என்று யாருக்குமே தெரியவில்லை.

     பலமுறை முயன்ற பிறகு, கடற் கரையில் மீனவர்களின் ஒரு சில குடிசைகளுடன், மணற் பரப்பும், மணல் மேடுகளும், கள்ளியுடன் காரைச் சூரைச் செடிகளும் செறிந்த புதர்களும், சவுக்குத் தோப்புகளும், புனங் காடுகளும் சூழ்ந்திருந்த பட்டணம் என்று, அன்று அழைக்கப் பட்டப் பகுதியே, பண்டைய புகார் நகரம் இருந்த இடம் என்பதைக் கண்டுபிடித்தார்.

     அங்கிருந்த மீனவர்களின் துணையோடு, கட்டுமரத்தில் ஏறி, ஒரு கல் அளவு கடலில் பயணித்தார். கடல் ஆழமின்றி இருந்ததை அறிந்தார். கடலில் மூழ்கி, மூச்சை அடக்கிக் கொண்டு, கடலுள் பயணிக்கும் பயிற்சி பெற்றிருந்த முழுக்காளிகள் சிலரை, கடலினுள் மூழ்கச் செய்து, கடலடி ஆய்வு செய்தார். கடலில் மூழ்கிய மீனவர்கள் பழமையான செங்கற் பகுதிகள், சுண்ணக் காரைகள், பாசி படிந்த பானை ஓடுகள் என பலவற்றை எடுத்து வந்து இவரிடம் வழங்கினர்.

     இவ்வாராய்ச்சியின் பயனாக, கடற்கோளினால் அழிந்து கடலடியில் மறைந்து நிற்கும் நிலப் பரப்பே, காவிரிப் பூம்பட்டிணம், கண்ணகி பிறந்த இடம் என்பதை உறுதி செய்தார்.

     1945 ஆம் ஆண்டில் பூம்புகாரில் ஆய்வினைத் தொடங்கிய இவருக்கு, கால் நடையாக ஆராய்ந்து, ஆராய்ந்து, நடந்து, நடந்து மதுரை வரை செல்வதற்கே பன்னிரண்டு ஆண்டுகள் தேவைப் பட்டன.

     திருப்பரங் குன்றம் செல்லும் சாலையில் பழங்காலத்தில், இடுகாடாக இருந்த கோவலன் திடல் என்ற பகுதியினையும், செல்லத்தம்மன் கோயிலில் இருந்த, கண்ணகி சிலையினையும் கண்டு பிடித்தார்.

      பிறகு, மதுரையில் கோவலனை இழந்த கண்ணகி, சேரநாடு நோக்கிச் சென்ற வழியில், இளங்கோ அடிகள் தந்த குறிப்புகளின் உதவியுடன் நடக்கத் தொடங்கினார்.

     வையை ஆறானது, சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, பாதை வழியாகவே, தடம் மாறாமல் இன்றும் பயணிப்பதை கண்டு கொண்டார்.
     மதுரையில் இருந்து கோட்டையின் மேற்கு வாசல் வழியாக மனமுடைந்து, வெறுப்பு உணர்ச்சியோடு, தனித்துப் புறப்பட்ட கண்ணகி, வையை ஆற்றின் ஒரு கரையைப் பின்பற்றி, மேற்கு நோக்கி சென்று, நெடுவேள் குன்றத்தில் அடி வைத்து ஏறி, மலை மேல் இருந்த, வேங்கை மரச் சோலையில் நின்று தெய்வமானாள்.

    சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் நிறுவி, அதில், தான் இமயத்தில் இருந்து கொண்டு வந்த கல்லில், சிலை செய்து வைத்து வழிபாடு செய்தான். அச் செய்தியினை, அறிந்த கண்ணகியின் செவிலித் தாயும், பணிப் பெண்ணும், தேவந்தி என்கிற தோழியும் சேர்ந்து, கண்ணகித் தெய்வத்தைக் காண, காவிரிப் பூம்பட்டிணத்தில் இருந்து புறப்படுகிறார்கள். இவர்கள் மதுரைக்கு வந்து, அங்கிருந்த மாதரியின் மகள் ஐயை, கண்ணகியைப் பற்றிக் கூறக் கேட்டு, அவளையும் அழைத்துக் கொண்டு, வையை ஆற்றின் ஒரு கரை வழியாகச் சென்று, பெரிய மலையின் மேல் ஏறி, கண்ணகியின் கோயிலை அடைந்தார்கள்.

       மேற்கண்ட இரு செய்திகளும், சிலப்பதிகாரக் கட்டுரைக் காதையிலும், வாழ்த்துக் காதை உரைப் பாட்டுப் பகுதியிலும் இடம் பெற்றுள்ளன.

     எனவே, மேலே கண்ட சிலப்பதிகார வழிகளின் படி மதுரையில் இருந்து, தரை வழியாகச் சென்றால், வையை ஆற்றின் தென் கரையே, அதற்குரிய வழி என்பதைப் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் ஆராய்ந்து உணர்ந்தார்.

     இவ்வழியைப் பின்பற்றி நடந்தப் பேராசிரியர் சி.கோவிந்தராசனார், 40 மைல்களுக்கும் மேல் பயணித்து, வையை ஆற்றின் தென்புறம் தொடர்ந்து நடந்து சுருளி மலைத் தொடரை அடைந்தார்.

     சுருளி மலைத்தொடரின் மேற்குப் புறக் கோடியில் உற்பத்தியாகும் வையை ஆறு, பள்ளத்தாக்கின் வழியாக, வடக்கு நோக்கி ஓடி, தேனி அருகில், கிழக்கு நோக்கித் திரும்புகிறது. இங்கு குன்னூர் இருக்கிறது. இங்கிருந்து கண்ணகி நடந்த வழியாகச் செல்வதற்கு காட்டிலும், கரம்பிலும், சதுப்பு நிலத்திலும் ஓடி வரும் வையை ஆற்றைப் பின்பற்ற வேண்டும்.

     குன்னூரில் இருந்து வையை ஆற்றைப் பின்பற்றி நடந்து, எதிரில் நிற்கும் மலைத் தொடரின் குறுக்கே, எங்காவது ஓரிடத்தில் மலை மேல் ஏறுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தார்.

வையை ஒரு கரைகொண்டு ஆங்கு நெடுவேள்
குன்றம் அடிவைத்து ஏறினாள்
என்று இளங்கோ அடிகள் கூறியிருப்பதற்கு ஏற்ப, இயற்கையில் அமைப்பு அவ்விடம் இருப்பதை அறிந்தார்.

     மேல் சுருளிமலையின் ஒரு பகுதியை ஆராயத் தொடங்கினார். சுருளி மலைதான் நெடுவேள் குன்றம் என்பதை உறுதி செய்தார்.

      பண்டைக் காலத் தமிழ் மரபுப் படி, முருகனின் பெயர்களுள் ஒன்று நெடுவேள் என்பதாகும். அப்பெயராலேயே, இம்மலைத் தொடர் அழைக்கப் பட்டிருக்க வேண்டும் என முடிவு செய்தார்.

     சித்தன் இருப்பு என்ற பெயருடன் விளங்கிய மலை, ஆவினன் குடியாகி, பின்னர் பொதினி மலையாக மாறி, தொடர்ந்து அதுவும் திரிந்து பழநி மலை என்று ஆனது போலவே, நெடுவேள் குன்றம் என்னும் பெயர், மலையில் இருந்து சுருண்டு விழும் அருவியின் பெயரால் சுருளி மலையாக மாறியிருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.

     சுருளி மலைத் தொடராலும், பழநி மலைத் தொடராலும் இணைந்து முப்புறமும் சுவர் வைத்தாற்போல் சூழப்பட்ட பகுதியில், வர்ஷ நாடு எனப்படும், கம்பம் பள்ளத்தாக்கின் காட்டுப் பிரதேசம் பரந்து விரிந்து கிடக்கிறது.

     வர்ஷ நாட்டின் மலைப் அடிவாரப் பகுதிகளை ஆராய்ந்த பேராசிரியர் சி.கோவிந்தராசனார், கீழக் கூடலூருக்குத் தெற்கே உள்ள கோயிலில் கல்வெட்டு ஒன்றினைக் கண்டு பிடித்தார்.

     கி.பி.14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு அது. மங்கல தேவி அம்மன் பூஜைக்கு, சேர மன்னன் ஒருவன், தானமாக வழங்கிய நிலங்களைப் பற்றிய செய்தி, அக்கல்வெட்டில் பொறிக்கப் பட்டிருந்தது.

      பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின் மனதில் ஒரு மின்னல் வெட்டியது. கண்ணகிக்கு அடைக்கலம் தந்தபொழுது, அவளுக்கு உரிய சிறப்புப் பெயரில் ஒன்றான, மங்கல மடந்தை என்னும் பெயரை கவுந்தி அடிகள், இடையர் குல மங்கையான மாதரியிடம் கூறும் காட்சி, இவருக்கு நினைவிற்கு வந்தது.

     1963 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி, மங்கலதேவி மலை ஆராய்ச்சிக்காக கூடலூருக்குச் சென்றார் பேராசிரியர். அடுத்த நாள் 17 ஆம் தேதி, அதிகாலை நான்கு மணிக்கு, ஊர் மக்கள் சிலரின் துணையுடனும், முத்து மற்றும் கந்தசாமி என்னும், இவரது இரு மாணவர்களோடும் புறப்பட்டார்.

     கூடலூரில் இருந்து மலையின் அடிவாரத்திற்குச் செல்ல மூன்று மைல்கள் நடக்க வேண்டியிருந்தது.  முல்லையாறு, காட்டாறு, களிமண் வழுக்கல், காடு கரம்பு, யானைகளின் புழக்கம் ஆகியவற்றைக் கடந்தாக வேண்டியிருந்த்து. ஏழு மணிக்கு மலை ஏறத் தொடங்கினார்கள். மலையில் தொடர்ந்து உயரும் மூன்று அடுக்குகளையும் ஏறிக் கடக்க வேண்டியிருந்தது. இடையே பற்பல இடையூறுகள்.

     ஒரு வழியாக, மங்கல தேவி மலையின் மேற் பரப்பிற்கு வந்தார்கள். போதைப் புற்காடு எட்டடி உயரத்திற்கு வளர்ந்து மண்டிக் கிடந்தது. அப் புதற்களுக்கு இடையில், ஓரிடத்தில், மூன்று சிற்ப வேலைப் பாடுகளுடன் கூடிய பெரிய, பெரிய கற்களைக் கண்டார்.

     அவற்றுள் இரண்டு கம்பமாக நிறுத்தப் பட்டிருந்த்து. ஒன்று வில் வடிவமாக கம்பத்தின் மீது நிறுத்தப் பட்டிருந்த்து. வில் வடிவமான கல்லின், ஒரு முகப்பில், மகர வாசிகையும, இரு பெண்களின் உருவமும் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப் பட்டிருந்தன. இதை ஆராய்ந்த்தில், இது ஒரு சிற்ப முறையிலான மகர தோரண வாயில் என்பதை அறிந்தார்.

     பேராசிரியருடன், உடன் வந்த உள்ளூர் காரர்களில் ஒரு வேட்டைக் காரரும் இருந்தார். அந்த வேட்டைக் காரர், எல்லோரையும் உரக்கக் கத்துமாறு கூறவே, அனைவரும் தங்களால் இயன்ற வரை ஒலி எழுப்பினர். எதிரே திட்டாகத் தெரிந்த காட்டில் இருந்து எதிரொலி கிளம்பியது.

        எதிரொலி கிளம்பிய திட்டைச் சுட்டிக் காட்டிய வேட்டைக் காரன், அதோ தெரிகிறதே, அதுதான் வேங்கைக் கானல். அதனுள்ளேதான் கோட்டம் உள்ளது, அங்கிருந்துதான் எதிரொலி வருகிறது என்றார்.

      பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின் நெஞ்சம், ஒரு நிமிடம், துடிப்பதை சற்றே நிறுத்திவிட்டுப் பிறகு துடிக்கத் தொடங்கியது. வேங்கைக் கானல், கோட்டம், ஆகா, ஆராய்ச்சியின் இலக்கைத் தொட்டு விட்டோம். பதினேழு ஆண்டுகால ஆராய்ச்சிக்கு, உழைப்பிற்குப் பலன் கிடைத்து விட்டது. மனம் மகிழ்ச்சியில் குதூகலிக்கத் தொடங்கியது.

     இது எப்படி வேங்கைக் கானல் ஆகும்? கோட்டம் என்றால் என்ன? யார் சொன்னது? என கேள்வி மேல் கேள்விகளால், வேட்டைக் காரனைத் துளைத்தெடுத்தார்.

     அதெல்லாம் தெரியாதுங்க. இதை வேங்கைக் கானல் என்றுதான் கூப்பிடுவாங்க. இதுக்குள்ளேதான மங்கல தேவி குடி. அதுதான் கோட்டம். இதுக்கு இதுதான் பேரு என்றார்.

     வேங்கைக் கானல் என்ற பெயரைக் கேட்டவுடன் கோவிந்தராசனார் அவர்களின் உடல் ஒரு முறை சிலிர்த்தது. உள்ளத்தில் புதிய சக்தி பிறந்தது. கானலில நுழைந்தார். 200 அடி பக்கமுள்ளதாகவும், ஓரளவு சதுரமாக உள்ளதுமாகிய கோட்டத்தைக் கண்டார். கருங்கற்கள் அடுக்கிய நிலையில், யானைகள் உள்ளே வராத வகையில், மதிர் சுவர் அமைந்திருந்தது. உட்பகுதி முழுவதும் புதர் மண்டிக் கிடந்தது. மரங்கள் நிறைந்திருந்தன.

     செடி, கொடிகளால் சூழப்பட்டு சிதைந்த நிலையில் நிற்கும் கற்படைக் கோயில்கள் நான்கு ஆங்காங்கே இருந்தன. இரண்டு கோயில்கள் சிறியதாகவும், அழகுடனும் காட்சியளித்தன. இக் கோயிலின் உட்பகுதி வேரும், விழுதும், தழை மடிசல்களும், மழை நீரும் நிறைந்து, இடிபாடுகளுடன் இடிந்து கிடந்த்து.

     கோட்டத்தின் கிழக்குப் பகுதியில் ஓர் அழகான படிக்கட்டு. அதற்கு முன்னர் அரை குறையாகக் கட்டப் பட்டு, குத்துக் கற்களுடன் நிற்கும் வாயில். கோட்டத்திற்கு வெளியே சிறு சுனை.

    சுனையினைச் சூழ்ந்து, அடர்ந்து இருண்டு நிற்கும் காட்டு வேங்கை மரங்கள்.

     மிகப் பழமையோடு கூடியதும், பலி பீடத்துடன் உள்ளதுமாகிய மூன்றாவது கோயிலின் அருகினில் சென்றார்.

கண்ணகி சிலையின் மேற்பகுதி
கண்ணகி சிலையிருந்த அடிப் பகுதி (பீடம்)

      உள்ளே சுமார் இரண்டடி உயர அளவில், ஒரே கல்லில், இரண்டு கைகளுடன், இடது காலை பீடத்தில் மடக்கி, வலது காலை ஊன்றிய நிலையில், ஒரு பெண்ணின் சிலை.

      அப்பெண்ணின் தலையில் கிரீடம் இல்லை. விரிந்த கூந்தல். இடதுப் புற மார்பு சிறியதாக இருந்தது.

      இதுதான், இதுதான் நண்பர்களே சேரன் செங்குட்டுவன் அமைத்த கண்ணகி சிலை. படிக்கும் நமக்கே, இவ்வளவு மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்படுகிறதே, இதனைக் கண்டு பிடித்த பேராசிரியர் சி.கோவிந்தராசனார் எவ்விதம் இருந்திருப்பார். உள்ளத்தில் உணர்ச்சிகள் அலைமோத, உற்சாகக் கடலிலே அல்லவா மிதந்திருப்பார். பதினேழு ஆண்டுகால இடையறா முயற்சி அல்லவா?

     கண்ணகி சிலை செய்யப் பெற்றக் கல், திண்மை இல்லாத, ஒருவகைக் கருங்கல். அதனால் அழிந்த அக் கட்டடத்தில் இருந்து , கீழே விழுந்த கற்களால் சிதைந்து போயிருந்தது. 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலையல்லவா.

     பல நூற்றாண்டுகளாக, இச்சிலை வழிபாட்டிற்கு உரியதாக இருந்துள்ளது என்பதனை, சிலையில் இருந்த வழவழப்பான தேய்வு புலப்படுத்தியது.

     இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில், பல இடங்களில் குறிப்பிடும், நெடுவேள் குன்றமும், பத்தினிக் கோட்டமும் இதுதான் நண்பர்களே. சேரன் செங்குட்டவன் அமைத்த கண்ணகி சிலையும் இதுதான்.
கண்ணகி தீர்த்தம்
கண்ணகி கோயில் கல்வெட்டு




கண்ணகி கோயில், இன்றும்  அதே நிலையில்




கண்ணகி கோயிலும், செல்லும் மலைப் பாதையும்
 (இது இன்றைய நிலைமை)

கோவை நன்னெறிக் கழகத்தின் சார்பில், 21.3.1965 அன்று ம.பொ.சி அவர்கள் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில்தான் முதன்முதலாக, கண்ணகி சிலையினைக் கண்டு பிடித்தது பற்றி வெளியுலகிற்குத் தெரியப் படுத்தினார். தொடர்ந்து பல இதழ்களில் கட்டுரைகள் எழுதினார்.

      இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் போது, தனது கண்டுபிடிப்புப் பற்றி சிறிய ஆங்கில நூல் ஒன்றினையும் வெளியிட்டார். அன்றைய தமிழக முதல்வர் அவர்கள், 17.5.1971 அன்று பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களைக் அழைத்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற, இளங்கோவடிகள் சிலைத் திறப்பு விழாவின் போது, பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின் கண்டுபிடிப்பு பற்றி, தமிழக முதல்வரே , தமிழ் உலகிற்கு அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.

தேடிச் சோறுநிதந்  தின்று – பல
     சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக வுழன்று – பிறர்
     வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
    கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
    வீழ்வே னென்று நினைத் தாயோ?
என்று பாடுவாரே பாரதி. அம்மகாகவியின் வரிகளுக்கு ஏற்ப, வேடிக்கை மனிதராய், வகுப்பறையே உலகென்று வீழ்ந்து விடாமல், வீறு கொண்டு எழுந்து, நடையாய் நடந்து, மலைதனில் மறைந்த வரலாற்றிற்கு உயிர் கொடுத்து, உலகறியச் செய்த மாமனிதரல்லவா இவர்.
   
கர்மவீரர் காமராசருடன் கை குலுக்குபவர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார்


பதினேழு ஆண்டுகள், ஒரே சிந்தனை, ஒரே செயல். சாதித்துக் காட்டிய மனிதரல்லவா பேராசிரியர் சி.கோவிந்தராசனார்.

பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களை சில நாட்களுக்கு முன்னர்,
இந்தப் பதிவிற்காகச் சந்தித்த போது எடுத்துக் கொண்ட படம்.
(படம் எடுத்து உதவியவர் நண்பர் கரந்தை சரவணன் அவர்கள்)
      பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், இன்றும் நலமுடன் உள்ளார். அவருக்கு வயது 94. பத்தினி தெய்வம் கண்ணகியை நமக்கு மீட்டுக் கொடுத்தப் பேராசிரியர் சி.கோவிந்தராசனார், இன்னும் நூறாண்டு வாழ வாழ்த்துவோம். அவர்தம் உழைப்பை எந்நாளும் போற்றுவோம்.

       


     


     
பேராசிரியர் சி.கோவிந்தராசனார் குடியரசுத் தலைவரிடம் விருது பெறும் காட்சி

பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பாராட்டப்பெறும் காட்சி
---------------------------------

ஆர்வத்தினால், பதிவு சற்று நீண்டு விட்டது.
பொறுத்தருள வேண்டுகிறேன்

என்றென்றும் நட்புடன்,
கரந்தை ஜெயக்குமார்
---------------