26 ஜனவரி 2013

கணிதமேதை அத்தியாயம் 16


--------------------
யாருக்கும் தெரியாமல், தனது அறையிலிருந்து புறப்பட்டு,
இலண்டன் பாதாள ரயில் நிலையத்திற்குச் சென்ற இராமானுஜன்,
புறப்படத் தயாராக இருந்த ரயிலின் முன்,
தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தார்
------------------------

     இராமானுஜன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட உடன், கல்லூரியின் மூலம், இராமச்சந்திர ராவ் அவர்களுக்குச் செய்தியைத் தெரிவிக்கும்படி வேண்டினார். ஆனால் சிறிது குணமடைந்தவுடன், சுப்பிரமணியத்தைத் தொடர்பு கொண்டு, தான் நல்ல உடல் நிலையில் இருப்பதாகவும், கவலைப்பட வேண்டாம் என்றும் ராமச்சந்திர ராவ் அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டினார்.

     மருத்துவ மனையிலிருந்து பிசப் விடுதிக்குத் திரும்பிய பின்னர், ஹார்டியே சில நாட்கள் உடனிருந்து, இராமானுஜனைக் கவனித்துக் கொண்டார்.

     மருத்துவர்கள் பலவாறு அறிவுறுத்தியும், வற்புறுத்தியும் கூட, தனது உணவுப் பழக்கத்தை இராமானுஜன் கைவிடவில்லை. அக்டோபர் மாதத்தில் மீண்டும் உடல் நலம் குன்றிய இராமானுஜன், ஹில் குரோப் நகரக்கு அருகில் உள்ள மென்டிப் ஹில்ஸ் சானிடோரியத்தில் சேர்க்கப் பட்டார். அம் மருத்துவமனையில் பணியாற்றியவர் டாக்டர் சௌரி முத்து ஆவார். இவர் வேறு யாருமல்ல, நேவாஸா கப்பலில் இராமானுஜனுடன் பயணம் செய்து, ஏற்கனவே இராமானுஜனுக்கு அறிமுகமாகிய அதே மருத்துவர்தான்.
ஹில் குரோவ் மருத்தவ மனை இன்று சிதிலமடைந்த நிலையில்

     இராமானுஜனை முதலில் பரிசோதித்த மருத்துவர்கள், உடல் நலக் குறைவிற்குக் காரணம் வயிற்றுப் புண்ணாக இருக்கலாம் என எண்ணினார்கள். ஒரு கட்டத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்வது என்று கூட முடிவு செய்தார்கள்.

    ஒரு மருத்துவர், இராமானுஜனுக்கு கும்பகோணத்தில் ஹைட்ரோ செல்லுக்காக செய்யப் பட்ட அறுவை சிகிச்சை முறையாக செய்யப் படாததால், நீக்கப்படாத பகுதி புற்று நோய்க் கட்டியாக பரவியிருக்கலாம் என கருத்துத் தெரிவித்தார். ஆனால் இராமானுஜனின் உடல் நிலை மிகவும் மோசமடையாமல் இருந்ததால், மற்ற மருத்துவர்கள் புற்று நோய் என்பதை ஏற்க மறுத்தார்கள்.

     இறுதியாக இராமானுஜனுக்குக் காசநோய் இருப்பது கண்டறியப் பட்டது. விட்டமின் டி சத்துக் குறைவே காச நோய்க்குக் காரணம் எனக் கண்டறியப் பட்டுள்ளது. 18 ஆம் நூற்றாண்டு வரை காச நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு விட்டமின் டி சத்துக் குறைவினைத் தடுக்க, முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டுக் கறி, மீன், மீன் எண்ணெய் போன்றவையே உணவாக உட்கொள்ள அறிவுறுத்தப் பட்டது.

     ஆனால் இராமானுஜன் இவ்வகை உணவுகளில் ஒன்றைக் கூட சாப்பிடாதவராக இருந்தார். சூரிய ஒளியானது நமக்கு வெளிச்சத்தை மட்டும் தருவதில்லை. சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்கள், நம் தோலில் தொடர்ந்து படும் பொழுது, தோலில் உள்ள கொழுப்புகளைத் தூண்டி, விட்டமின் டி உற்பத்தியை ஊக்குவிக்கும். ஆனால் இலண்டனில், வருடக் கணக்கில் நான்கு சுவர்களுக்கு உள்ளேயே, தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்ட இராமானுஜனுக்கு சூரிய ஒளியும் கிடைக்காமற் போயிற்று.

மன நலக் குறைவு

     செப்டம்பர் 1917 இல் ஹார்டி சுப்பிரமணியனுக்கு எழுதிய கடிதத்தில், இராமானுஜன் குணமடைந்து வருகிறார். இராமானுஜன் தன் வீட்டிற்கு முன்பு போல் கடிதங்கள் எழுதுவதில்லை என்பதை சில நாட்களுக்கு முன்னர்தான் அறிந்தேன். குடும்பத்தில் ஏதோ பிரச்சினைகள் இருப்பதால் இராமானுஜன் உடலளவில் மட்டுமல்ல, மனதளவிலும் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளார் என எழுதினார்.
1914 இல் இராமானுஜன் கடிதம் 

     மருத்துவ மனையில் தன்னைச் சந்திக்க வந்த ஹார்டியிடம் முதன் முறையாக, தன் குடும்பம் பற்றிப் பேசினார் இராமானுஜன்.

     நான் இரண்டு வருடங்களில் வீட்டிற்கு வந்துவிடுவேன் என்று தனது தாயாருக்கு உறுதியளித்து விட்டுத்தான் இலண்டன் வந்தேன். ஆனால் ஒன்றரை வருடங்களுக்கு முன், நான் எனது தாயாருக்கு எழுதிய கடிதத்தில், ஒரு நீண்ட விடுமுறையில் கும்பகோணத்திற்கு வந்து செல்ல விரும்புதாக எழுதினேன். பதில் கடிதம் எழுதிய என் தாயார், இப்பொழுது இந்தியா வரத் தேவையில்லை. இங்கிலாந்திலேயே தங்கியிருந்து எம்.ஏ., பட்டமும் பெற்றபின் வரலாம் என்று எழுதியிருந்தார்கள். அதனால் நான் இந்தியா செல்லும் முடிவைக் கைவிட்டேன்.

     எனது மனைவியிடமிருந்து கடிதம் வரவில்லை என்று கூறுவது தவறு. என் மனைவி ஜானகி எனக்கு சில கடிதங்களை எழுதியிருந்தாள். அதில் அவர் எனது வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு சென்றுவிட்டதற்கானக் காரணங்களைக் கூறியிருந்தாள் எனக் கூறினார்.

      கோமளத்தம்மாள் இராமானுஜனைக் கும்பகோணத்திற்கு வரவேண்டாம் என்று கூறினார் என்பதும், ஜானகி கோபித்துக் கொண்டு விட்டை சென்று சென்றுவிட்டார் என்பதும், ஹார்டிக்குப் புதிய செய்திகளாக அதிர்ச்சி தருவனவாக இருந்தன.

     ஜானகியிடமிருந்து இராமானுஜனுக்குக் கடிதம் வரவில்லை எனறால் , ஜானகி கடிதம் எழுதவில்லை எனப் பொருளல்ல. ஜானகி இராமானுஜனுக்கு எழுதிய கடிதங்கள் இடைமறிக்கப் பட்டன.

     ஒரு முறை இராமானுஜனுக்கு அனுப்பப்பட வேண்டிய உணவுப் பொருட்கள் அடங்கிய பார்சல்  தயாரானபோது, கோமளத்தம்மாள் வீட்டில் இல்லாத சமயத்தில், ஜானகி ஒரு கடிதம் எழுதி, பார்சலின் இடையில் வைத்தாள். வீடு திரும்பிய கோமளத்தம்மாள் எப்படியோ உளவறிந்து, ஜானகியின் கடிதத்தைக் கண்டுபிடித்து எடுத்து விட்டார். பாவம் ஜானகியால் ஒன்றும் செய்ய இயலாத நிலை. கோமளத்தம்மாளின் கையசைவிற்கேற்பச் செயல்பட வேண்டிய நிலையிலேயே ஜானகி இருந்தார்.

     இராமானுஜன் சென்னையில் இருந்தபோதே, இருவரையும் கணவன், மனைவியாக வாழவோ, பேசிப் பழகவோ கூட அனுமதிக்காத கோமளத்தம்மாள், இராமானுஜன் இலண்டனில் இருக்கும் நிலையில் கடிதப் போக்குவரத்தையும் இடைமறித்து தடுத்து, கணவனுக்கும் மனைவிக்கும் தொடர்பே இல்லாமல் செய்தார். ஜானகி அணிந்து கொள்ள நல்ல புடவையைக் கூட வழங்காது மௌம் சாதித்தார்.

     வீட்டின் அனைத்து வேலைகளையும் செய்து முடித்து, தண்ணீர் எடுக்கக் காவிரி ஆறு வரை சென்று ஜானகி பாடுபட்ட போதிலும், கோமளத்தம்மாள் மகிழ்வுடன் ஜானகியை நோக்கி ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை. ஜானகியின் ஜாதகப் பலனால்தான் இராமானுஜன், இலண்டனில் உடல் நலம் குன்றி அவதிப்படுகின்றான் என்று தீர்க்கமாக நம்பியதே இதற்கெல்லாம் காரணமாகும். வேறு ஒரு பெண்ணை இராமானுஜனுக்கு மணம் செய்து வைத்திருந்தாள், இராமானுஜன் பூரண உடல் நலத்துடன் இருந்திருப்பான் என்று நம்பினார்.

     கராச்சியில் வேலை பார்த்து வந்த, ஜானகியின் சகோதரர் சீனிவாச அய்யங்காருக்கு, ராஜேந்திரத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இதனையே ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட ஜானகி, கோமளத்தம்மாளின் பிடியிலிருந்து விடுபட எண்ணி, உறவினர் துணையுடன் இராஜேந்திரம் சென்றார். ஜானகியின் பெற்றோரும், கும்பகோணத்தில் உள்ள தங்கள் உறவினர்கள் மூலம், ஜானகியின் நிலையினை அறிந்திருந்ததால், ஜானகியை மீண்டும் கும்பகோணத்திற்கு அனுப்பாமல், தங்களது மகனுடன், கராச்சிக்கு அனுப்பி வைத்தனர்.

    கராச்சியிலிருந்து ஜானகி இராமானுஜனுக்குக் கடிதம் எழுதினார். தன் நிலையைக் கூறி, உடுத்திக் கொள்ளக் கூட ஒரு நல்ல புடவை இல்லாத நிலையிலேயே இருக்கிறேன். எனவே புடவை வாங்கவும், தனது சகோதரரின் திருமணத்திற்கு மொய் செய்யவும் பணம் அனுப்பி உதவுமாறு கேட்டுக் கடிதம் எழுதினார். இராமானுஜனும் உடன் பணம் அனுப்பி வைத்தார்.

     ஏற்கனவே உடல் நலம் குன்றியிருந்த இராமானுஜன், இவ்வகை நிகழ்வுகளால், மேலும் மன நலமும் குன்றி, தனது குடும்பமே தன்னைக் கைவிட்டு விட்டதாகவும், தன்னை ஒரு அனாதையாகவும் உணர்ந்தார். 1914 அம் ஆண்டு மாதத்திற்கு மூன்று கடிதங்கள் எழுதியவர், 1916 இல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கடிதம் எழுதினார். ஆனால் 1917 இல் கடிதம் எழுதுவதையே விட்டுவிட்டார்.

     இறுதியாத தான் அனாதை போலவே இருக்கின்றோம் என்பதை உணர்ந்த இராமானுஜன், முதன் முதலாக ஹார்டியிடம்தன் குடும்ப நிலை குறித்து வேதனையை வெளிப்படுத்தினார்.

     பின்னாளில் இது குறித்த எழுதிய ஹார்டி, இவ்விசயத்தில் குற்றம் சுமத்தப்பட வேண்டியவன் நான்தான். இராமானுஜன் பற்றிய செய்திகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டியவன் நான்தான். அவ்வாறு இருந்தும், இராமானுஜனின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ, அவரது குடும்பத்திற்கும் அவருக்கும் இடையேயான உறவு பற்றியோ, கொஞ்சம் கூட அறிந்து கொள்ளாமல் இருந்து விட்டேன். இராமானுஜனைத் தினமும் சந்தித்தவன் நான். அவரது குடும்பப் பிரச்சினைகளுக்குப் பேசியே தீர்வு கண்டிருக்க முடியும்.

      தினமும் இராமானுஜனைக் காணக் காலையில் அவர் அறைக்குச் சென்றால், ஒவ்வொரு நாளும், புத்தம் புதிதாக நான்கு அல்லது ஐந்து தேற்றங்களைக் கண்டுபிடித்து வைத்திருப்பார். உடனே எனது கவனமெல்லாம் கணக்கின் பக்கமே சென்றுவிடும். இதனால் தனிப்பட்ட முறையில் கணிதத்தைக் கடந்து உரையாட, உறவாட நேரமே இல்லாமல் போனது என்று எழுதுகிறார்.

G.H.Hardyயும் மற்றவர்களும் இராமானுஜனின் பெலோசிப்பிற்காக விண்ணப்பித்த விண்ணப்பம்
     1918 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற, இலண்டன் கணிதவியல் கழகக் கூட்டத்தில், பெலோசிப்பிற்காக (Fellowship) விண்ணப்பித்துள்ள 103 பேர் அடங்கிய பெயர்ப் பட்டியல் வாசிக்கப் பட்டது. இப்பட்டியலில் இருந்து பதினைந்து பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட இருந்தனர்.

     உடல் நலம் குன்றியிருந்த இராமானுஜன், பெலோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால். இராமானுஜனின் உடல் நலத்திலும், மன நலத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று எண்ணி, பதற்றத்துடனேயே இறுதி அறிவிப்பபிற்காக ஹார்டி காத்திருந்தார்.

     இந்நிலையில் தற்காலிகமாக மருத்துவ மனையிலிருந்து, பிசப் விடுதிக்குத் திரும்பியிருந்த இராமானுஜன் 1918 ஆம் ஆண்டு இறுதியில், பிரச்சினைகளைத் தாங்க முடியாமல், தற்கொலை செய்து கொள்வது என்ற விபரீத முடிவினை எடுத்தார்.

    யாருக்கும் தெரியாமல், தனது அறையிலிருந்து புறப்பட்டு, இலண்டன் பாதாள ரயில் நிலையத்திற்குச் சென்ற இராமானுஜன், புறப்படத் தயாராக இருந்த ரயிலின் முன், தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தார்.

.... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமா.

19 ஜனவரி 2013

கணிதமேதை அத்தியாயம் 15


---------------
இரவு நேரங்களில் கன்னங்களில் கண்ணீர் வழியும்.
வீடு பற்றிய நினைப்பில் தூங்காமலே விழித்திருப்பேன்.
எனது கவலைகளை, எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூட
இங்கு யாரும் இல்லை.
-          மகாத்மா காந்தி
-------------------

     ஐந்தாவது நாள் சட்டர்ஜிக்கு இராமானுஜனிடமிருந்து தந்தி வந்தது. தான் ஆக்ஸ்போர்டில் இருப்பதாகவும், தனக்கு தந்தி மணியார்டர் வழியாக ஐந்து பவுண்ட் அனுப்ப இயலுமா என்று கேட்டிருந்தார். கேம்ப்பிரிட்ஜிலிருந்து என்பது மைல் தொலைவிலுள்ள ஆக்ஸ்போர்டிற்கு ஏன் சென்றார், இத்தனை நாட்களாக எங்கு தங்கியிருந்தார் என்பதை அறியாத சட்டர்ஜி, உடனடியாக இராமானுஜன் கேட்ட தொகையினை அனுப்பி வைத்தார்.

     அடுத்த நாள் இராமானுஜன் கேம்ப்பிரிட்ஜிற்குத் திரும்பி வந்தார். நான் மூன்றாவது முறை வழங்கிய சூப்பை பெண்கள் இருவரும் ஏற்க மறுத்தது, என்னை மிகவும் பாதித்து விட்டது. அவர்கள் இருவரும் என்னை அவமதித்து விட்டதாகவே கருதினேன். அதனால் அவர்கள் இருவரும் இருக்கும் இடத்திலிருந்து, எவ்வளவு தொலைவு விலகிச் செல்ல முடியுமோ, அவ்வளவு தொலைவு செல்வது என்று முடிவெடுத்தேன். ஆனால் என்னிடம் இருந்த பணத்தைக் கொண்டு ஆக்ஸ்போர்டு வரைதான் செல்ல முடிந்தது என்று தன் தலைமறைவிற்கு இராமானுஜன் விளக்கம் கூறினார்.

     இலண்டன் வாழ்க்கைக்கு ஏற்ப தன் உடையமைப்பையும், சிகையலங்காரத்தையும் மாற்றி, ஹார்டி, லிட்டில் வுட், நெவில் மற்றும் அறிஞர்கள் போற்றும் வண்ணம், புறத் தோற்றத்தையும், செயல்படும் தன்மைனையும் மாற்றி அமைத்துக் கொண்டாலும், மனதளவில், உணர்வுகளைக் கட்டுப் படுத்த இயலாத, சிறு சிறு நிகழ்வுகளைக் கூட மனதளவில் தாங்க இயலாத, கும்பகோணத்திலிருந்து யாரிடமும் சொல்லாமல் விசாகப்பட்டினத்திற்கு ஓடிய, அதே பழைய இராமானுஜனாகவே, அவர் இருந்து வந்ததையே இந்நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது.

மகாத்மா காந்தி 
     மேலும், கல்வி க்ற்கும் பொருட்டு, இங்கிலாந்திற்கு வந்து தனிமையை உணர்ந்தவர்களுள் இராமானுஜன் முதல் மாணவரும் அல்ல. இராமானுஜன் பிறந்த ஆண்டான 1887 இல் மேற்படிப்பிற்காக, இலண்டனில் கால் பதித்தவர்தான் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி. வன்முறையை அறவே கைவிட்டு, ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கி, இந்தியாவிற்குச் சுதந்திரத்தை வாங்கித் தந்த மகாத்மா காட்டி அடிகள், தான் கல்வி கற்க இலண்டன் சென்ற நிகழ்வைக் கூறும் பொழுது, நான் எப்பொழுதும் எனது வீட்டையும், நாட்டையுமே நினைத்துக் கொண்டிருந்தேன். என் தாயார் என்னிடம் காட்டிய அன்பும், பாசமும் ஒவ்வொரு நொடியும் என் மனதில் ஊசலாடியது. இரவு நேரங்களில் கன்னங்களில் கண்ணீர் வழியும். வீடு பற்றிய நினைப்பில் தூங்காமலே விழித்திருப்பேன். எனது கவலைகளை, எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூட இங்கு யாரும் இல்லை. யாரிடமாவது என் கவலைகளைக் கூறினாலும், அதனால் என்ன பயன் விளையப் போகிறது. எதுவுமே எனக்கு ஆறுதல் தராது என்பது எனக்குத் தெரியும். இங்கு எல்லாமே புதியனவாகவும், விநோதமாகவும் இருக்கிறது. நான் என்னை அந்நியனாகவே உணர்ந்தேன் என்று எழுதுகிறார்.

     இராமானுஜனுக்கு 1909 இல் நடைபெற்ற திருமணம், வாழ்வின் பொறுப்புகளை உணர்த்தி, மனம் தளர்வுற்றிருந்த காலத்தே, அவரை மனிதராக்க உதவியது. ஆனால் இங்கிலாந்து வாழ்க்கையோ இராமானுஜனை மெல்ல, மெல்ல மன அழிவின் விளிம்பிற்கு அழைத்துச் செல்லத் தொடங்கியது.

     இராமானுஜனின் மூன்றாண்டு கால இலண்டன் வாழ்வானது, நான்கு சுவர்களுக்குள் அடங்கிப் போனது. தொடர்ச்சியாக முப்பது மணி நேரம் கணி விழித்துக் கணித ஆராய்ச்சியில் செலவிடுவது, தொடர்ந்து இருபது மணி நேரம் உறங்குவது எனப் பணியாற்றியதால், நேரத்தில் உணவு உண்ணும் பழக்கம், ஓய்வு மற்றும் மனச் சம நிலை ஆகியவை இராமானுஜனிடமிருந்து சிறிது சிறிதாக செல்லத் தொடங்கின.

ஜகோபி
     1916 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி, கேம்ப்பிரட்ஜ் பிளாசபிகல் சொசைட்டியில். இராமானுஜனின் ஆய்வுக் கட்டுரையை வாசித்தது ஹார்டிதானே தவிர இராமானுஜன் அல்ல. 1917 ஆம் ஆண்டு சனவரி மாதம் 18 ஆம் நாள், இலண்டன் கணிதவியல் கழகத்தில், இராமானுஜனும் ஹார்டியும் இணைந்து தயார் செய்த கட்டுரையினை வாசித்ததும் ஹார்டிதான். அக்கூட்டத்தில் இராமானுஜன் கலந்து கொள்ளவே இல்லை. தாளிட்ட அறைக்குள் கணித ஆய்வில் மூழ்கி இருந்தார்.

     இதேபோல் ஆய்வின் பயனாக தங்கள் உடல் நலத்தைத் தியாகம் செய்தவர்கள் பலர் உள்ளனர். கணித மாமேதை ஜகோபியிடம், அவரது நண்பர், உங்கள் உடல் நிலையைக் கவனித்துக் கொள்ளக் கூடாதா? என்று கேட்டதற்கு, ஆமாம், சில சமயம் நான் உடல் நலத்தைப் பற்றி நினைப்பதேயில்லை. அதனால் என்ன? எனத் திருப்பிக் கேட்டார்.

     நியூட்டன் பற்றி எழுதிய இ.டி.பெல் நியூட்டன் தனக்கு உடல் என்று ஒன்று இருப்பதையோ, அதற்கு உணவு தேவைப்படும் என்பதையோ, உறக்கம் தேவை என்பதையோ அறியாதவராகவே விளங்கினார் என்று எழுதுகிறார்.

நியூட்டன்
     இராமானுஜன், தனது குடும்ப உறுப்பினர்கள் யாருமின்றித் தனியே இலண்டன் சென்றார். சென்ற இடத்திலும் அறிமுகமான முகங்களைப் பார்ப்பதற்கோ, இந்தியச் சிரிப்பைக் காண்பதற்கோ, தமிழ்ச் சொற்களைக் கேட்பதற்கோ வழியில்லை. அவருக்கு உணவு தயாரிப்பதற்கோ, உணவைப் பரிமாறுவதற்கோ, ஜானகி போல், அவரது தாயாரைப் போல், கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் போதே, உணவை உருட்டி, இராமானுஜனின் கையில் கொடுப்பதற்கோ யாருமில்லை. உறங்கச் சொல்லி நினைவூட்டக் கூட ஆளின்றித் தனியே வாடினார்.

     சைவ உணவை மட்டுமே உண்ணுவது என்ற இராமானுஜனின் பிடிவாதத்தால், அவரது உடல் நிலை நலிவடையத் தொடங்கியது. மேலும் முதலாம் உலகப் போரின் தாக்கம் இராமானுஜனையும் விட்டு வைக்கவில்லை.

உடல் நலக் குறைவு

     இராமானுஜன் 1914 ஆம் ஆண்டு ஆய்வு மாணவராக ட்ரினிட்டி கல்லூரியில் தன் பெயரைப் பதிவு செய்தார். அவர் தனது பெயரையும், தன்னைப் பற்றிய விவரங்களையும் மாணவர் சேர்க்கைப் பதிவேட்டின் பக்கம் எண்.8 இல் குறிப்பிட்டுக் கையெழுத்திட்டார்.

    அப்பதிவேட்டை இன்று பார்க்கும் யாவரும் அதிர்ச்சி அடைவர். இராமானுஜனின் பெயருக்கு அடுத்த பக்கத்தில் ஜான் டீ லாடர் எனும் பெயர் உள்ளது. ஆனால் கையெழுத்தில்லை. இஸ்லே சாம்ப்பெல் என்பவர் சேர்ந்ததாகப் பதிவேடு கூறுகிறது. ஆனால் இங்கும் கையொப்பமில்லை. இருவரும் சேர்க்கையை உறுதி செய்து கொண்டு, கல்லூரிக்கு வரப் புறப்பட்டவர்கள்தான். ஆனால் கல்லூரிக்கு வந்து சேரவேயில்லை. குண்டு வெடிப்பில் பலியானதால், கல்லூரியில் காலடி வைப்பதற்கே வழியில்லாமல் ஆனது.

     அடுத்தடுத்த பக்கங்களில் உள்ள பெயர்களைப் பார்ப்போமேயானால், ஒவ்வொரு பெயரின் எதிரிலும், போரில் காணாமல் போய்விட்டார். குண்டு வெடிப்பில் பலியானார் எனும் பதிவுகளையே மீண்டும், மீண்டும் காணலாம்.

     பல்கலைக் கழகம் திறந்திருந்தது. ஆனால் மயான அமைதியுடன் காட்சியளித்தது. கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழக வளாகத்தில், பயிற்சி மேற்கொண்ட இரானுவ அதிகாரி ஒருவர், பல்கலைக் கழகத்தின் நாடித் துடிப்பானது நின்று விட்டது. இளங்கலை பயிலும் சில மாணவர்கள், குறிப்பாக விடுதி மாணவர்கள் மட்டுமே, அதிலும் குறிப்பாக இராணுவத்தில் சேருவதற்கு உரிய வயதினை அடையாத மாணவர்கள் மட்டுமே இருந்தனர் என்று எழுதுகிறார்.

     இராமானுஜனின் பயிற்றுநராக இருந்த இ.டபிள்யூ.பாரன்ஸ் அவர்கள், கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயிலும் என் மாணவர்களில் பாதிபேருக்கு மேல் இப்போரில் உயிரிழந்தோ, குண்டு வெடிப்பில் முடமாகியோ போனார்கள். நான் உழைத்த உழைப்பு, பட்ட வேதனை அனைத்தும் பயனற்றுப் போயிற்று என்று எழுதுகிறார்.

     போரின் தொடக்கத்தில் இராமானுஜனுக்குப் பாலும், காய், கனிகளும் தடையின்றிக் கிடைத்தன. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, சைவ உணவுப் பொருட்கள் கிடைப்பது பெரிதும் கடினமான செயலாக இருந்தது. இதனாலும், குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்ணும் பழக்கம் இராமானுஜனை விட்டு விலகத் தொடங்கியது.

     உடல் நலம் குன்றிய இராமானுஜன், தாம்சன் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

.... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமா.

12 ஜனவரி 2013

கணிதமேதை அத்தியாயம் 14



அத்தியாயம் 14
------------------------

     இராமானுஜன் எங்கிருக்கிறார் என்று யாருக்குமே தெரியவில்லை. 
இராமானுஜனைக் காணவில்லை.
------------------

     கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தன் நண்பர்களுக்கும், தனது தாயாருக்கும் எழுதிய கடிதத்தில், இலண்டனில் தொடர்ந்து மேலும் இரண்டாண்டுகள் தங்கியிருப்பதுதான் என் ஆய்விற்கு உதவும் என நம்புகிறேன் என எழுதியிருந்தார்.

     கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு பயிற்றுநர் நியமிக்கப்படுவது வழக்கம். அவ்வாறு இராமானுஜனுக்குப் பயிற்றுநராக, வழிகாட்டியாக நியமிக்கப்பட்டவர் இ.டபிள்யூ. பேர்னஸ்.

    இ.டபிள்யூ பேர்னஸ் 1915 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில், சென்னைப் பல்கல்க் கழகப் பதிவாளர் பிரான்சிஸ் டௌஸ்பெரி அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், இராமானுஜன் தன் ஆய்வுப் பணிகளை மிகவும் சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறார். எதிர்வரும் 1917, அக்டோபர் மாதத்தில் இராமானுஜன் ட்ரினிட்டி கல்லூரியின் பெலோசிப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி. மேலும் இராமானுஜனுக்குச் சென்னைப் பல்கலைக் கழகம், கல்வி உதவித் தொகையினை இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே அனுமதித்துள்ளது. இக்காலக்கெடு நிறைவடையும் தருவாயில் இருப்பதால், இக்காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுகிறேன் என வேண்டுகோள் விடுத்தார்.

     சென்னையில் இருந்து சர் பிரான்சிஸ் ஸ்பிரிங்கும் இதே  கோரிக்கையினைச் சென்னைப் பல்கலைக் கழகத்தார் முன் வைத்தார். சென்னைப் பல்கலைக் கழகமும் ஓராண்டிற்கும், தேவைப்படின் மேலும் ஓராண்டிற்கும், கல்வி உதவித் தொகையினை நீட்டித்து வழங்குவதாக அறிவித்தது.

இராமானுஜனின் மனத் தளர்ச்சி

     ஒரு ஆசாரமான குடும்பத்தில் பிறந்து, சைவ உணவுகளை மட்டுமே உண்டு, வாழ்வின் பெரும் பகுதியினை, தலையில் குடுமியுடனும், வேட்டி சட்டையுடனும், காலில் செறுப்புடனும் கழித்த இராமானுஜன், இலண்டன் பயணத்திற்காகத் தன் முடி அமைப்பை, உடையின் வகைகளை மாற்றிக் கொண்டு, இலண்டனின் தட்ப வெட்ப நிலையையும், குளிரையும் பொருட்படுத்தாது வாழ்ந்தாரே தவிர, தனது சைவ உணவையும், தனது மன இறுக்கத்தையும் மாற்றியமைத்துக் கொள்ள இயலாதவராகவே இருந்தார்.

     இலண்டன் வந்து சேரும் வரை, வீட்டின் சமையலறை பக்கமே சென்று அறியாத இராமானுஜன், இலண்டனில் தனக்கு வேண்டிய உணவைத் தானே தயாரித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

     சில சமயங்களில் விடுமுறை நாட்களிலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும், கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயிலும் இந்திய மாணவர்களை அழைத்து, சாம்பார், ரசம் எனத் தயார் செய்து விருந்தளிப்பார். ஒரு சமயம் இந்து நாளிதழின் நிறுவனரும், ஆசிரியருமான கஸ்தூரி ரங்கன் அவர்கள், கேம்ப்பிரிட்ஜ் சென்று இராமானுஜனைச் சந்தித்தபோது, அவருக்காகப் பொங்கல் தயாரித்து விருந்தளித்து அசத்தினார்.

     கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயின்று வந்த, பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த சந்திர சட்டர்ஜி என்பாருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது. இந்நிகழ்வினைக் கொண்டாட விரும்பிய இராமானுஜன், சந்திர சட்டர்ஜியை விருந்திற்கு அழைததார்.

     இராமானுஜன் வழங்க இருக்கும் விருந்தில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் வகையில், சந்திர சட்டர்ஜி, தன் வருங்கால மனைவியான, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிலும் இள ருத்ராவுடன் இராமானுஜன் இல்லத்திற்கு வருகை தந்தார். கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த நியூஹாம் கல்லூரியில் பயிலும், ஹைதராபாத்தைச் சார்ந்த மிருளானி சட்டோபாத்யாயாவையும் உடன் அழைத்து வந்தார். பின்னாளில் இந்தியத் தொழிலாளர் கழகத்தின் முன்னேற்றத்திற்காகத் தீவிரமாகப் பணியாற்றியவரும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் த்னியொரு பள்ளியைத் தொடங்கியவருமான மிருளானி சட்டோபாத்யாயா இவர்தான்.

     விருந்தினர் மூவரையும் தன் இல்லத்தில் வரவேற்ற இராமானுஜன், மூவரையும் அமரச் செய்து, தானே தயாரித்த சூப்பை வழங்கினார். மூவரும் அருந்திய பின், மீண்டும் தேவையா எனக் கேட்டு இரண்டாம் முறையும் சூப்பை வழங்கினார். மூன்றாம் முறை, மீண்டும் சூப் அருந்துகிறீர்களா என இராமானுஜன் வினவ, சந்திர சட்டர்ஜி தனக்கு வேண்டும் எனப் பெற்றுக் கொள்ள, பெண்கள் இருவரும் போதும் எனக் கூறினர்.

    உணவிற்கு இடையில் தங்கள் பேச்சினைத் தொடர்ந்த மூவரும், சிறிது நேரத்தில், அந்த இல்லத்தில் தாங்கள் மூவர் மட்டுமே இருப்பதையும், இராமானுஜன் அங்கு இல்லாததையும் உணர்ந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல்  மூவரும் காத்திருந்தனர். இராமானுஜன் வரவேயில்லை. வீடு முழுக்கத் தேடினர். பின்னர் சட்டர்ஜி கட்டிடத்தின் அடித்தளத்திற்குச் சென்று விசாரித்தார். இராமானுஜன் அவசர, அவசரமாகக் கீழிறங்கி வந்து, ஒரு டாக்ஸியில் கிளம்பிச் சென்றதை அறிந்து  திடுக்கிட்டார். இரவு பத்து மணி வரை மூவரும் காத்திருந்தனர். இராமானுஜன் வரவேயில்லை.

     அன்று மட்டுமல்ல, அடுத்த நான்கு நாட்களும் இராமானுஜன் எங்கிருக்கிறார் என்று யாருக்குமே தெரியவில்லை. இராமானுஜனைக் காணவில்லை.

.... வருகைக்கு நன்றி நண்பர்களே, மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா.

--------------
வாலையானந்தா சுவாமிகள்

     ஞாயிற்றுக் கிழமை (6.01.13) காலை 7.00 மணி. என் அலைபேசி உயிர் பெற்று ஒலித்தது. மறுமுனையில் நண்பர் சரவணன்.

     இன்று ஏதேனும் முக்கிய வேலை இருக்கிறதா? கொரடாசேரிக்கும், திருவாரூருக்கும் சென்று வருவோமா? என்றார். சற்றும் தாமதியாமல், சென்று வருவோம் என்றேன்.


நண்பர் சரவணன்
     பதினைந்து நாட்களுக்கு முன், நண்பர் சரவணனுடன் கொரடாசேரி சென்ற பொழுது, சென்றே தீரவேண்டும் என்று எண்ணியிருந்த ஓர் இடத்திற்கு, நேரமின்மைக் காரணமாகச் செல்ல இயலாமல் போய்விட்டது. மறுமுறை கொரடாசேரி செல்வதற்கான வாய்ப்பு கிடைக்காதா என்று எண்ணி ஏங்கிக் காத்திருந்த வேலையில்தான் நண்பர் சரவணன் அழைத்தார்.

     நான் ஆசிரியராகப் பணியாற்றும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், வேதியியல் முதுகலை ஆசிரியராகப் பணியாற்றிவரும், எனது நண்பர் வெ.சரவணன் அவர்கள், கல்வியியலில்,
மனவெழுச்சி நுண்ணறிவு, அறிவியல் படைப்பாக்கம்,
பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனில்
நகர் புற மாணவர்களுக்கும், கிராமப் புற மாணவர்களுக்கும்
இடையேயான ஒப்பீடு ஓர் ஆய்வு
என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டு வருகின்றார்.

     இந்த ஆய்விற்காக மாணவர்களின், மனவெழுச்சி நுண்ணறிவு, அறிவியல் படைப்பாக்கம் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன்களை மதிப்பீடு செய்யும் வகையில், மூன்று வகையான வினாத் தாட்களைத் தயாரித்துள்ளார். இம் மூன்று தேர்வுகளையும், மாணவர்கள், நாளொன்றுக்கு ஒரு தேர்வு வீதம் எழுத வேண்டும்.

     இத்தேர்வுகளை இரண்டு மாவட்டங்களில்  உள்ள எட்டு பள்ளிகளில் நடத்தியாக வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள, நகரப் பகுதியில் அமைந்திருக்கும் அரசு மேனிலைப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளி, மேலும் அதே மாவட்டத்தின் கிராமப் புறத்தில் அமைந்துள்ள அரசு மேனிலைப் பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளி என மாவட்டத்திற்கு நான்கு பள்ளிகளில் இத்தேர்வினை நடத்தியாக வேண்டும். அப்பொழுதுதான் நகர்புற மாணவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்குமான திறமைகளை ஓப்பீடு செய்ய இயலும்.

      நணபர் சரவணன் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தினையும், திருவாரூர் மாவட்டத்தினையும், தனது ஆய்வுக் களமாகத் தேர்ந்தெடுத்திருந்தார்..

     திருவாரூர் மாவட்டத்தில், திருவாரூரிலேயே இரு பள்ளிகளையும், திருவாரூர் மாவட்டத்தின் கிராமப் பகுதியான கொரடாசேரியில் இரு பள்ளிகளையும் தேர்ந்தெடுத்திருந்தார். பதினைந்து நாட்களுக்கு முன், இருவரும் கொரடாசேரி சென்றோம். இரு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுமே, சரவணனின் நண்பர்கள். மேலும் கொரடாசேரி அரசு பெண்கள் மேலைப் பள்ளியில், எனது நண்பர்களான திரு இராசாராம் அவர்களும், திரு பொன்மணி அவர்களும் முதுகலை ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அந்நண்பர்களையும் சந்திக்கலாமே என்ற ஆவல்.

     இதுமட்டுமல்ல, மேலும் ஓர் ஆர்வம் என்னுள்ளே நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது. அதுதான் கொரடாசேரி வாலையானந்த சுவாமிகள் மடத்திற்குச் செல்ல வேண்டும் என்ற தணியாத தாகமாகும்.

     எனவே இருவரும் சென்றோம். நண்பர்களைச் சந்தித்தோம். வினாத் தாட்களை வழங்கினோம். ஆனால் இரு பள்ளிகளிலும் உள்ள நண்பர்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்ததால், உடனே விடைபெற இயலாத நிலை. நேரம் பிற்பகலானது. எனவே வாலையானந்த சுவாமிகளின் மடத்திற்குச் செல்ல இயலாமல் திரும்பினோம். மனதில் இந்த ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது.

     எனவே மீண்டும் நண்பர் சரவணன் அழைத்ததும், தாமதியாமல் உடனே கிளம்பினேன். இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டோம். கொரடாசேரியை அடைந்தோம்.

     கொரடாசேரி அரசு பள்ளியில், தற்காலிகப் பணியிடத்தில், முதுகலை ஆசிரியராகப் பணியாற்றி வரும் திரு வேலவன் அவர்கள் எங்களுக்காகக் காத்திருந்தார். இவர் கொரடாசேரியில் தனிப் பயிற்சி மையம் நடத்தி வருபவர்.

     விடுமுறை நாளில் விடைத்தாட்களைப் பெற்றுக் கொள்வதாக, ஏற்கனவே கூறியிருந்ததால், ஞாயிற்றுக் கிழமையன்று, தனது தனிப் பயிற்சி மையத்தில் எங்களுக்காகக் காத்திருந்தார். நன்றி கூறி விடைத்தாட்களைப் பெற்றுக் கொண்டோம்.

    திரு வேலவன் அவர்கள், தான் அரசுப் பள்ளியில பணியாற்றிய தற்காலிகப் பணியிடமானது, கடந்த வாரம் நிரப்பப் பட்டு விட்டமையால், பள்ளியிலிருந்து விலகி விட்டதாகவும், தற்பொழுது, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்காக முழு மூச்சுடன் தயாராகி வருவதாகவும் கூறினார்.

      தற்காலிகப் பணியினை வேலவன் தொடராதது, எங்களுக்கு வருத்தமளித்தாலும், கவலைப் படாதீர்கள், இதுவும் நன்மைக்கே, தற்பொழுது கிடைத்துள்ள கூடுதல் நேரத்தையும் ஆசிரியர் தகுதித் தேர்விற்குப் படிக்க, முழுமையாகப் பயன் படுத்திக் கொள்ளுங்கள். நிரந்தர அரசுப் பணியொன்று தங்களுக்காகக் காத்திருக்கின்றது என வாழ்த்தி விடை பெற்றோம்.

     கொரடாசேரியிலிருந்து புறப்பட்டு, இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வெண்ணவாசல் நோக்கிப் பயணித்தோம்.

     கடந்த வருடத்தில் ஒருநாள், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், என்னுடன் பணியாற்றும், எனது பால்ய நண்பர் எஸ்.மோகன், வாலையானந்தா மடத்திற்குச் சென்று வந்ததைப் பற்றிக் கூறியிருந்தார். அன்றிலிருந்தே, கொரடாசேரி செல்ல வேண்டும், வாலையானந்தா மடத்தைக் காண வேண்டும் என்று மனதில் குடிகொண்டிருந்த ஆசை, இதோ இன்று நிறைவேறப் போகின்றது.



     இதோ வெண்ணவாசல். இதோ இதுதான் பாண்டவை ஆறு. இடது புறம் திரும்பி, பாண்டவை ஆற்றின் வடகரையின் வழியே சென்றோம். ஒரு திருப்பத்தில், இடதுபுறமாக, அதோ அந்த தென்னந் தோப்பிற்குள் இருக்கின்றதே, அதுதான் வாலையானந்த சுவாமிகள் மடம்.

     இதுதான் தமிழவேள் உமாமகேசுவரனார் சித்தாந்தம் கற்ற இடம், தீட்சிதை பெற்று துறவியாய் உருமாறிய இடம்.

                                               உணவெலாந்  தமிழ்ச்சுவையே  உறவெலாந்
                                                                தமிழ்ப்புலவ  ருவக்கும்  அன்பிற்
                                               றணவிலா  நன்மக்கள்  தமிழ்பயிலும்
                                                                மாணவரே  தமிழ்த்தாய்க்  கேற்ற
                                              குணநிலா  வியமகனே  உமாமகேச்
                                                              சுரப் பெயர்கொள்  கோவே

     தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்கள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவராய் அமர்ந்து, முப்பதாண்டுகள் ஒப்பிலாப் பணியாற்றிய மாமனிதர். ஒழுக்கத்தின் பிறப்பிடம், உயர் குணங்களின் உறைவிடம்.

    மாண்ட தமிழை மீட்டெடுத்து, தூய தமிழ் நடையாம் கரந்தை நடை கண்ட கவின் மிகு தமிழ்க் காதலர்.

    திரு, திருவாளர், திருமண அழைப்பிதழ் முதலான தூய தமிழ்ச் சொற்களைத் தமிழுலகிற்கு அறிமுகப் படுத்தியவர்.

    தமிழ் ஓர் உயர் தனிச் செம்மொழியே என 1919 லேயே உரத்த குரல் கொடுத்தவர்.

    தமிழுக்குத் தேவை தனியே ஓர் பல்கலைக் கழகம் என 1925 ஆம் ஆண்டிலேயே முழங்கியவர்.

    கட்டாய இந்தியை எதிர்த்து 1934 லிலேயே, சிங்கமாய் கர்ஜித்த தமிழ்ச் செம்மல். அச்சம் என்பதை அறியா தமிழ் மறவர்.

     இத்தகு பெருமை வாய்ந்த தமிழவேள் அவர்கள், தனது குருவாய் போற்றி வணங்கியவர்தர்ன் வாலையானந்த சுவாமிகள். தமிழவேள் பல காலம் தங்கி சித்தாந்தம் கற்றதும், சைவம் உணர்ந்ததும் வாலையானந்தா சுவாமிகளிடம்தான்.

     வாலையானந்தா சுவாமிகள் அவர்கள் 1879 ஆம் ஆண்டில், காரைக்காலை அடுத்த பொன்பற்றி என்னும் சிற்றூரில் பிறந்தவர். சிறுவயதிலேயே ஆன்மீக நாட்டம் கொண்டு, சமய தீட்சையும், நிர்வாண தீர்சையும் பெற்றவர். சச்சிதானந்தன் என்னும் தீட்சா நாமம் பெற்றவர்.

     தனக்கெனத் தனியிடம் தேடி, திருவாரூர் மாவட்டம், வெண்ணவாசல் சிற்றூரின், பாண்டவை ஆற்றின் வடகரையில், பஞ்சாட்ச புரம் என்னும் பெயரில் மடம் அமைத்தவர்.

        சித்தாந்த நிலையம் என்னும் குடில் அமைத்து, சித்தாந்தம் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டவர். சித்த மருத்துவத்தில் சீரிய புலமை பெற்று, தனக்கென தனியொரு வழியை அமைத்துக் கொண்டு, குட்டரோகம் போன்ற கடும் நோய்களையும், எளிதில் குணப்படுத்தியவர்.

     சித்தாந்தப் பட விளக்கம் என்னும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட நூலை 1917 இல் எழுதி வெளியிட்டவர். மேலும், சித்தாந்த விளக்க பால பாடம், துகளறு போதம், குண்ட வீதி, சிவனடியார் திருக் கூடம், அனுட்டான வீதி, பிரசாத படம், தத்துவ விளக்கச் சுருக்கம், சிவஞான போத சூரணிக் கொத்து, சிவஞான போதவுரை, தமிழ் மறை படம், திரிபதார்த்த சிந்தனை, சிவாலயமும் கும்பாபிடேகமும் முதலான நூல்களை எழுதியும், ஏராளமான நூல்களைப் பதிப்பித்தும், அயராத தமிழ்ப் பணியாற்றியவர்.

     தமிழவேள் உமாமகேசுவரனார் மட்டுமல்ல, நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஔவை துரைசாமி பிள்ளை, முதத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் போன்றத் தமிழ்ப் பெரியார்கள் பலரும், இவரிடத்து சித்தாந்தம் பயின்று சைவப் புலமைப் பெற்றவர்களாவர்.

      தமிழவேள் அவர்கள், தனது முப்பதாம் அகவையிலேயே, தம் இனிய வாழ்க்கைத் துணை நலத்தை இழந்தார். சில ஆண்டுகளிலேயே, தனது தமயன், சங்கம் நிறுவிய துங்கன் இராதாகிருட்டினனையும் இழந்தார். அருமை மகன் பஞ்சாபகேசன்தனையும் இழந்தார்.

மனைவியுடன் உமாமகேசுவரனார்

     துன்பங்கள் தொடர்ந்து வந்தபோதும், தமிழ் நினைவோடு வாழ்ந்தவர் உமாமகேசுவரனார். உறவினர்களும், நண்பர்களும், எதிர்கால நலன் கருதியாவது, இரண்டாவது மணம் புரிய வற்புறுத்திய போது, நான் என் மனைவியின் நினைவுகளோடு வாழவே விரும்புகின்றேன். புது உறவினை என்றும் நினையேன், நான் மீண்டும் ஒரு வீட்டிற்கு மருமகனாய் செல்ல விரும்பவில்லை என மறுத்த உயரிய பண்பாளர்.

     ஒருத்திக்கு ஒருவன் என்றால், ஒருவனுக்கும் ஒருத்திதான் என உறுதிபடக் கூறி வாழ்ந்த உன்னதர் உமாமகேசுவரனார்.

     எழிலார்ந்த தனது தோற்றத்தினைக் கண்டு மகிழும் உரிமை, என் மனைவிக்கு மட்டுமே உரிமையானது என்று கூறி, வாழ்க்கைத் துணையினை இழந்த, அந்நாளில் இருந்து, ஒப்பனைகளைத் துறந்தவர். நிலைக் கண்ணாடியின் முன் நின்று, தன் முகம் பார்க்கும், பழக்கத்தினையே அடியோடு விட்டொழித்த ஒழுக்கத்தின் உறைவிடம் உமாமகேசுவரனார்.

     அக்காலச் செல்வந்தர்களும், மெத்தப் படித்தவர்களும், தங்களின் தனி அடையாளமாய், தலைப் பாகை அணிவது வழக்கம். ஆனால் உமாமகேசுவரனார் தலைப் பாகை அணிவதற்காகக் கூட, நிலைக் கண்ணாடியின் முன் நிற்கும் பழக்கத்தைத் துறந்தார், மறந்தார். அதனால்தான் இன்று கிடைக்கும், ஒன்றிரண்டு உமாமகேசுவரனாரின் படங்களில் கூட, தலைப்பாகை ஒழுங்கின்றி இருக்கும் பாங்கைக் காணலாம்.

     மறுமணம் குறித்த உறவினர்களின் வற்புறுத்தல்கள் தொடரவே, அதிலிருந்த மீள, வாலையானந்தா சுவாமிகளின் மடம் நோக்கிச் சென்றார்.

     தனது குரு வாலையானந்தா சுவாமிகளைக் கண்டு பணிந்து, வணங்கி, தீட்சதை பெற்று, வீரத் துறவியானார், தமிழ் மறவரானார்.

    ஆம். உமாமகேசுவரனார் இல்லற பந்தம் அறித்தெறிந்து, தமிழ் வாழ, தமிழன்னையோடு சங்கமித்து, தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும், அன்னைத் தமிழுக்கு அர்ப்பணித்த உன்னத இடம், இவ் வாலையானந்தா சுவாமிகள் மடமாகும்.

     வண்டியை நிறுத்தி, நானும் நண்பர் சரவணனும் கீழே இறங்கினோம். தென்னந் தோப்பைச் சுற்றிலும், மூங்கில் பட்டைகளால் ஆன வேலி. முன்புறத்தில் ஒரு பெரிய கீற்றுக் கொட்டகை.

     மூங்கில் பட்டைகளால் ஆன சிறிய கதவினைத் திறந்து கொண்டு, உள்ளே காலடி எடுத்து வைத்தோம். உடல் சிலிர்த்தது. சொர்க்க வாசல் கதவினைத் திறந்தாற் போல், உள்ளத்தில் உணர்வலைகள். மெல்ல உள்ளே சென்றோம்.


     கீற்றுக் கொட்டகையில் முதியவர் ஒருவர் நின்றிருக்க, கைக் கூப்பி வணங்கியவாறு, அறிமுகப் படுத்திக் கொண்டோம். கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்றப் பெயரினைக் கேட்டவுடன், அப்பெரியவரின் முகம் மலர்ந்தது. வாருங்கள், வாருங்கள் என இருகரம் கூப்பி வரவேற்றார்.

    கீற்றுக் கொட்டகையினைத் தாண்டி ஒரு பெரும் தோப்பு. தென்னை மரங்களும், பாக்கு மரங்களும், வேப்ப மரங்களும் நிறைந்திருந்தன. தொலைவில் ஒரு சிறிய கோயில். அப்பெரியவர் அங்கு, எங்களை அழைத்துச் சென்றார். அருகில் சென்றதும்தான் தெரிந்தது, அது கோயில்தான், வாலையானந்தா சுவாமிகள் மீளாத் துயில் கொள்ளும், தமிழ்த் தாயின் கருவறை என்பது புரிந்தது. கருவறையின் நடுவினில் சிறிய லிங்கமும், அதன் அருகினில், வாலையானந்தா சுவாமிகளின் பாதரட்சையும்.

     இருவரும் கண் மூடி, கைக்கூப்பி வணங்கினோம். உமாமகேசுவரனாரின் குரு உறங்கும் இடமல்லவா? உமாமகேசுவரனாருடன் பேசியபடியே, வாலையானந்தா சுவாமிகள் நடமாடிய காட்சி, அகக் கண்ணில் விரிந்தது. உமாமகேசுவரனார் எத்துனை முறை இங்கு வந்திருப்பார். எவ்வளவு காலம் இங்கு தங்கியிருப்பார். எண்ணிப் பார்க்கிறேன்.

     விசாலமான இத்தேர்ட்டத்தில், உமாமகேசுவரனாரின் மூச்சுக் காற்றும் கலந்திருக்குமல்லவா? உமாமகேசுவரனாரின் தமிழ்ப் பேச்சை இங்கிருக்கும் மரங்கள் கேட்டிருக்குமல்லவா? உமாமகேசுவரனாரின் தமிழ் மூச்சை, இங்கிருக்கும் மரங்களும் சுவாசித்திருக்குமல்லவா? ஏதேதோ எண்ணங்கள் மனதினில் சுழல்காற்றாய் சுழன்றடிக்க, சிறிது நேரம் அங்கேயே நின்றோம்.

     வாலையானந்தா சுவாமிகள் நடந்துவரும் பொழுது எழும் பாதரட்சை ஒலி கேட்கிறது. திடுக்குற்ற நாற்புறமும் நோக்குகிறோம். தென்னை மட்டைகள் காற்றில் ஒன்றோடு ஒன்று மோதி எழுப்பும் ஓசை என்பது புரிந்தது.

     பின்னர் மூவரும் பேசியபடியே, கீற்றுக் கொட்டகைக்கு வந்தோம். கீற்றுக் கொட்டகையினை ஒட்டி, ஒரு ஓட்டுக் கட்டிடம். ஒரு புறம் வீடு, அதனை ஒட்டி ஒரு சிறு கோயில். கோயிலின் கருவறையில் அமர்ந்து அருள்பாலிக்கும்  தெய்வத்தைக் கண்டோம். அங்கு எங்களுக்கு காட்சி தந்தது, ஸ்ரீ சக்ர மகாமேரு.

     உலகில் வேறு எங்கனுமே இல்லாத வகையில், வாலையானந்தா சுவாமிகளால் உருவாக்கப் பெற்ற ஸ்ரீசக்ர மகா மேரு சுடர் வெளிச்சத்தில் பிரகாசித்தது.

     1958 ஆம் ஆண்டில் வாலையானந்த சுவாமிகள் இறைவனடி இணைந்த பிறகு, நாற்பதாண்டுகள், ஸ்ரீசக்ர மேருவினைத் தரிசிக்கப் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டது. 2004 ஆம் ஆண்டு முதல் மகா மேருவைத் தரிசிக்க மக்கள் அனுமதிக்கப் படுகின்றார்கள். உமாமகேசுவரனாரையும், வாலையானந்தா சுவாமிகளையும் மனதில் பூசித்தபடியே, மகா மேருவை வணங்கினோம்.

            ஆழ்மனது  அழுக்ககற்று  ஆதிகுருவே  போற்றி
            ஊழ்நீங்க  உதவிடுவாய்  உத்தமனே  போற்றி
            சூழ்வினை சுட்டெரிக்கும்  செஞ்சுடரே  போற்றி
            வாழ்வாங்கு  வாழ்விப்பாய் வாலையடி  போற்றி போற்றி

     வாலையானந்தா சுவாமிகள் வாழ்ந்த, உமாமகேசுவரனார் உலாவிய மண்ணை மனதார வணங்கி விடைபெற்றோம்.

   

    

     


    


05 ஜனவரி 2013

கணிதமேதை அத்தியாயம் 13


--------------------------------
இந்தியப் பல்கலைக் கழகத்தால்
தகுதியற்றவர் என்று நிராகரிக்கப் பட்ட இராமானுஜன்,
உலகின் தலை சிறந்த பல்கலைக் கழகங்களுள் ஒன்றான,
கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில்
பி.ஏ., பட்டம் பெற்றார்.
----------------------------------------


முதலாம் உலகப் போர்

     ஆஸ்த்திரிய அரசின் இளவரசனான பிரான்சிஸ் பெர்டினாண்ட் என்பவர், போஸ்னியாவின் ஒரு பகுதியான, செரஜிவோ என்னும் நகரில் 1914 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 28 ஆம் நாள் படுகொலை செய்யப் பட்டார். உடனடியாக ஆஸ்திரிய அரசு, இப்படுகொலைக்கு செர்பியாதான் காரணம் என்று குற்றம் சாட்டியது. மேலும் நட்பு நாடான ஜெர்மனியும் ஆஸ்திரியாவும் இணைந்து, ஜுலை 28 ஆம் நாள் செர்பியா மீது போர் தொடுத்தது. செர்பியாவுக்கு உதவ ரஷ்யா முன்வந்தது.

     இப்படி நான்கு நாடுகள் போர்க் களத்தில் வரிந்து கட்டிக் கொண்டிருக்க, ஐரோப்பாவின் மிக முக்கிய தேசமான பிரான்சு என்ன செய்யப் போகிறது என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

     இந்நிலையில் இந்தப் போரில் பிரான்சு பங்கு பெறக் கூடாது. நடுநிலைமை வகிக்க வேண்டும் என்று ஜெர்மனி சொன்னது. இதை மறுத்தது பிரான்சு. இதனால் கோபமடைந்த ஜெர்மனி, செர்பியா இருக்கட்டும், முதலில் பிரான்சை ஒழித்து விட்டுத்தான் மறுவேலை என முடிவு செய்து, பெல்ஜியம் வழியாக பிரான்சை நோக்கித் தன் படைகளை அனுப்பத் தொடங்கியது. போரில் நடுவு நிலைமை வகிப்பதாக முன்னமே சொல்லியிருந்த பெல்ஜியத்தின் வழியாக, தன் படைகளை ஜெர்மன் அனுப்பத் தொடங்கியதால், கோபமடைந்த பிரிட்டன் 1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி காலை 11.00 மணிக்குப் போரில் குதித்தது.

     பிரிட்டனின் நட்பு நாடான ஜப்பானும், ஜெர்மனிக்கு எதிராக போரில் இறங்கியது. முதலில் நடுவு நிலைமை வகித்த இத்தாலியும், பிரிட்டன், பிரான்சு பக்கம் சேர்ந்து ஜெர்ம்னியைத் தாக்கத் தொடங்கியது. 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி அதிகாரப் பூர்வமாக அமெரிக்கப் படைகளும் ஜெர்மனியைத் தாக்கக் தொடங்கின.

     முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகள், முன்னூறுக்கும் மேற்பட்ட போர்க் களங்கள். உலகை உலுக்கிய மாபெரும் யுத்தம் அது.


     ஆகஸ்ட் 14 ஆம் தேதி, ட்ரினிட்டி கல்லூரி வளாகத்தில், போரில் காயமடைந்தவர்களுக்கான, திறந்த வெளி முதல் பொது மருத்துவ மனை திறக்கப் பட்டது. செப்டமபர் மாதத்தில் கேம்ப்பிரிட்ஜ் வளாகத்தில், எங்கு நோக்கினும் போரில் காயம் அடைந்தவர்களையும், போரின் முன்னனிக்குச் செல்ல பயிற்சி மேற் கொள்பவர்களையும் தான் காண முடிந்தது.


     இராமானுஜன், இலண்டனுக்கு வந்தபின், கும்பகோணத்திற்கு மாதம் மூன்று முறை தொடர்ந்து கடிதம் எழுதி வந்தார். தனது கடிதத்தில் கணிதம் தொடர்பாகத் தான் மேற்கொண்டிருக்கும் பணிகள் குறித்தும், கணித இதழ்களில் வெளிவந்துள்ள தனது ஆய்வுக் கட்டுரைகள் பற்றியும் விரிவாகத் தெரிவித்தாரே அன்றி, உலகப் போர் பற்றி தனது கடிதங்களில் முக்கியத்துவம் அளித்து எழுதினாரில்லை.

     1914 ஆம் ஆண்டு நவம்பரில் எழுதிய கடிதத்தில், உலகப் போரின் விளைவாக, எனது கட்டுரைகளை விரைந்து வெளியிட இயலாத நிலையில் இருக்கின்றேன் எனக் குறிப்பிட்டார்.


 1915 ஆம் ஆண்டில் மட்டும் இராமானுஜனின் ஒன்பது ஆய்வுக் கட்டுரைகள், கணித இதழ்களில் வெளியாகின. இந்தியக் கணிதவியல் கழக இதழில் ஒரு கட்டுரையும், ஆங்கில இதழ்களில் ஐந்து கட்டுரைகளும், பிற மொழி இதழ்களில் மூன்று கட்டுரைகளும வெளியாயின.

பிஷப் விடுதி
     1915 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், தனது வீவெல்ஸ் கோர்ட் அறையிலிருந்து, பிசப்ஸ் விடுதிக்கு மாறினார். பிசப்ஸ் விடுதியின் இரண்டாம் தளத்தில், ஒரு வரவேற்பரை, ஒரு படுக்கை அறை, சமையலறையுடன் கூடிய வசதியான இல்லம் இராமானுஜனுக்கு ஒதுக்கப் பட்டது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இப் புதிய இல்லமானது, ஹார்டியின் வீட்டிலிருந்து நூறடி தூரத்தில் அமைந்திருந்தது.

எஸ்.இராமானுஜன், பி.ஏ.,

     1915 ஆம் ஆண்டு பகு எண்களின் உயர் மதிப்புகள் எனும் இராமானுஜனின் நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரையானது இலண்டன் கணிதவியல் கழக இதழில் வெளிவந்தது.

     எண்களைப் பகு எண்கள், பகா எண்கள் என இரு வகையாகப் பிரிக்கலாம். ஒரு எண் 1 என்ற எண்ணாலும், மற்றும் அதே எண்ணாலும் மட்டுமே மீதியின்றி வகுபடுமானால், அவ்வெண் பகா எண் எனப்படும். இரண்டிற்கும் மேற்பட்ட எண்களால மீதியின்றி வகுபடும் எண்கள் பகு எண்கள் எனப்படும்.

     எடுத்துக்காட்டாக, 23 என்பது பகா எண். இந்த எண்ணை 1, 23 ஆகிய இரு எண்களைத் தவிர மற்ற எண்களால் மீதியின்றி வகுக்க இயலாது. 21 என்பது பகு எண். இதை 1,3,7,21 ஆகிய எண்களால் மீதியின்றி வகுக்கலாம்.

     இராமானுஜன் தனது ஆய்வுக் கட்டுரையில் 24 என்ற எண்ணை ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொண்டார். 24 என்ற எண்ணை 1,2,3,4,6,8,12 மற்றும் 24 ஆகிய எண்கள் மீதியின்றி வகுக்கும்.

      21 என்ற எண்ணை நான்கு எண்களும், 20 என்ற எண்ணை ஆறு எண்களும் மீதியின்றி வகுக்கும். 1 முதல் 24 வரை உள்ள பகு எண்களிலேயே, அதிக எண்ணிக்கையிலான எண்களால் மீதியின்றி வகுபடும் ஒரே எண் 24 ஆகும்.

       இவ்வாறான எண்ணிற்கு உயர் பகு எண் எனப் பெயரிட்டார். இவ்வாறாக நூறு உயர் பகு எண்களை 2,4,6,12,24,36,48,60,120 ..... எனப் பட்டியலிட்ட இராமானுஜன், இவ்வெண்களுக்கு இடையில், ஏதேனும் தொடர்பு அல்லது தனித் தன்மை அல்லது அமைப்பு முறை உள்ளதா என ஆராய்ந்தார். இதன் விளைவாக,


என்ற பொதுவான அமைப்பினை அடிப்படையாகக் கொண்டு, எந்தப் பகு எண்ணையும் கண்டுபிடிக்கலாம் என்ற தனது ஆய்வு முடிவினை வெளியிட்டார்.

     கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில ஆய்வு மாணவராகச் சேர வேண்டுமானால், பல்கலைக் கழகச் சான்றிதழ் படிப்போ அல்லது பட்டயப் படிப்போ நிறைவு செய்திருக்க வேண்டும் என்றது அடிப்படை விதிகளுள் ஒன்றாகும். ஆனால் இவ்விதி இராமானுஜனுக்காகத் தளர்த்தப் பட்டது. உயர் பகு எண்கள் குறித்த தன் ஆய்வுக் கட்டுரையினையே, தன் ஆய்வேடாக பல்கலைக் கழகத்தில் இராமானுஜன் சமர்ப்பித்தார்.

     ஐந்து பவுண்ட் தொகையினை ஆய்வேட்டுக் கட்டணமாகவும், தனது இரு தேர்வர்களுக்கும், இரு பவுண்ட் வீதிம், நான்கு பவுண்ட் தொகையினைத் தேர்வுக் கட்டணமாகவும் செலுத்தினார்.

      ஆய்வேட்டினை ஏற்றுக் கொண்ட கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகம், 1916 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் நாள், இராமானுஜனுக்கு பி.ஏ., பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.


     பட்டமளிப்பு விழா நிறைவு பெற்றவுடன், இதன் நினைவாக, கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின், ஆட்சிக் குழுக் கட்டிடத்தின் வெளிப் புறத்தில் மற்ற மாணவர்களுடன் இணைந்து பட்டமளிப்பு விழா உடையுடன் ஒரு குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இடமிருந்து நான்காவதாக (நடுவில்) நிற்பவர் இராமானுஜன்
          கும்பகோணத்திலும், சென்னையிலும் இரு முறை தோல்விகளையேத் தழுவிய இராமானுஜன், இந்தியப் பல்கலைக் கழகத்தால் தகுதியற்றவர் என்று நிராகரிக்கப் பட்ட இராமானுஜன், பன்னிரண்டாண்டுகள் கடந்த நிலையில், உலகின் தலை சிறந்த பல்கலைக் கழகங்களுள் ஒன்றான, கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் மூலம் பி.ஏ., பட்டம் பெற்றார்.

....... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமோ.


----------------------

நமது நம்பிக்கை
இதழில்
கணிதமேதை சீனிவாச இராமானுஜன் தொடர்


நண்பர்களே,

வணக்கம்.
ஒரு மகிழ்ச்சியானச் செய்தியினைத்
தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

உலகறிந்த பேச்சாளராய்,
இளைஞர்களுக்கு எழுச்சியூட்டும் நற் கவிஞராய்,
உத்வேகம் தரும் எழுத்துக்களுக்குச் சொந்தக்காரராய்,
பன்முக ஆளுமையும், இளைஞர்கள்பால்
என்றென்றும் வற்றாத் தோழமையும் கொண்டவர்
கலைமாமணி மரபின்மைந்தர் திருமிகு ம.முத்தையா அவர்கள்.

இத்தகு பெருமை வாய்ந்த சான்றோரால் நடத்தப்பெறும்,
வாழ்வில் வெல்லத் துடிக்கும் இளம் உள்ளங்களின், வாசிப்பிற்கும், நேசிப்பிற்கும் உரியதாய்,

பல்லாயிரக்கணக்கான
இல்லங்களிலும், உள்ளங்களிலும்
நம்பிக்கைச் சுடரேற்றி வரும்,
நமது நம்பிக்கை
திங்களிதழில்,

வலைப் பூவில்,
தங்களின் பேராதரவுடன் வெளிவரும்,
கணிதமேதை சீனிவாச இராமானுஜன்
வாழ்க்கை வரலாற்றுத் தொடர்,
ஜனவரி இதழில் இருந்து வெளிவருகின்றது
என்பதைப் பெரு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வலைப் பூவில் இருந்து, இத்தொடரினைத் தேர்வு செய்த,
மரபின் மைந்தர் திருமிகு ம.முத்தையா அவர்களுக்கும்,

இந்த அவசர உலகில்,
பரபரப்பு மிகுந்த அன்றாடப் பணிகளுக்கு இடையிலும், வாழ்வின் பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும்,
வலைப் பூ விற்குத் தவறாது வருகை தந்து,
தங்களின் வருகையாலும், இன் சொற்களாலும்
ஆதரவளித்து வரும்,
நண்பர்களாகியத் தங்களுக்கும்
என் நெஞ்சரார்ந்த
நன்றியினைத்
தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கின்றேன்.


                     நன்றி,    நன்றி,    நன்றி,


என்றென்றும் தோழமையுடன்,
கரந்தை ஜெயக்குமார்