26 ஜனவரி 2013

கணிதமேதை அத்தியாயம் 16


--------------------
யாருக்கும் தெரியாமல், தனது அறையிலிருந்து புறப்பட்டு,
இலண்டன் பாதாள ரயில் நிலையத்திற்குச் சென்ற இராமானுஜன்,
புறப்படத் தயாராக இருந்த ரயிலின் முன்,
தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தார்
------------------------

     இராமானுஜன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட உடன், கல்லூரியின் மூலம், இராமச்சந்திர ராவ் அவர்களுக்குச் செய்தியைத் தெரிவிக்கும்படி வேண்டினார். ஆனால் சிறிது குணமடைந்தவுடன், சுப்பிரமணியத்தைத் தொடர்பு கொண்டு, தான் நல்ல உடல் நிலையில் இருப்பதாகவும், கவலைப்பட வேண்டாம் என்றும் ராமச்சந்திர ராவ் அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டினார்.

     மருத்துவ மனையிலிருந்து பிசப் விடுதிக்குத் திரும்பிய பின்னர், ஹார்டியே சில நாட்கள் உடனிருந்து, இராமானுஜனைக் கவனித்துக் கொண்டார்.

     மருத்துவர்கள் பலவாறு அறிவுறுத்தியும், வற்புறுத்தியும் கூட, தனது உணவுப் பழக்கத்தை இராமானுஜன் கைவிடவில்லை. அக்டோபர் மாதத்தில் மீண்டும் உடல் நலம் குன்றிய இராமானுஜன், ஹில் குரோப் நகரக்கு அருகில் உள்ள மென்டிப் ஹில்ஸ் சானிடோரியத்தில் சேர்க்கப் பட்டார். அம் மருத்துவமனையில் பணியாற்றியவர் டாக்டர் சௌரி முத்து ஆவார். இவர் வேறு யாருமல்ல, நேவாஸா கப்பலில் இராமானுஜனுடன் பயணம் செய்து, ஏற்கனவே இராமானுஜனுக்கு அறிமுகமாகிய அதே மருத்துவர்தான்.
ஹில் குரோவ் மருத்தவ மனை இன்று சிதிலமடைந்த நிலையில்

     இராமானுஜனை முதலில் பரிசோதித்த மருத்துவர்கள், உடல் நலக் குறைவிற்குக் காரணம் வயிற்றுப் புண்ணாக இருக்கலாம் என எண்ணினார்கள். ஒரு கட்டத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்வது என்று கூட முடிவு செய்தார்கள்.

    ஒரு மருத்துவர், இராமானுஜனுக்கு கும்பகோணத்தில் ஹைட்ரோ செல்லுக்காக செய்யப் பட்ட அறுவை சிகிச்சை முறையாக செய்யப் படாததால், நீக்கப்படாத பகுதி புற்று நோய்க் கட்டியாக பரவியிருக்கலாம் என கருத்துத் தெரிவித்தார். ஆனால் இராமானுஜனின் உடல் நிலை மிகவும் மோசமடையாமல் இருந்ததால், மற்ற மருத்துவர்கள் புற்று நோய் என்பதை ஏற்க மறுத்தார்கள்.

     இறுதியாக இராமானுஜனுக்குக் காசநோய் இருப்பது கண்டறியப் பட்டது. விட்டமின் டி சத்துக் குறைவே காச நோய்க்குக் காரணம் எனக் கண்டறியப் பட்டுள்ளது. 18 ஆம் நூற்றாண்டு வரை காச நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு விட்டமின் டி சத்துக் குறைவினைத் தடுக்க, முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டுக் கறி, மீன், மீன் எண்ணெய் போன்றவையே உணவாக உட்கொள்ள அறிவுறுத்தப் பட்டது.

     ஆனால் இராமானுஜன் இவ்வகை உணவுகளில் ஒன்றைக் கூட சாப்பிடாதவராக இருந்தார். சூரிய ஒளியானது நமக்கு வெளிச்சத்தை மட்டும் தருவதில்லை. சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்கள், நம் தோலில் தொடர்ந்து படும் பொழுது, தோலில் உள்ள கொழுப்புகளைத் தூண்டி, விட்டமின் டி உற்பத்தியை ஊக்குவிக்கும். ஆனால் இலண்டனில், வருடக் கணக்கில் நான்கு சுவர்களுக்கு உள்ளேயே, தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்ட இராமானுஜனுக்கு சூரிய ஒளியும் கிடைக்காமற் போயிற்று.

மன நலக் குறைவு

     செப்டம்பர் 1917 இல் ஹார்டி சுப்பிரமணியனுக்கு எழுதிய கடிதத்தில், இராமானுஜன் குணமடைந்து வருகிறார். இராமானுஜன் தன் வீட்டிற்கு முன்பு போல் கடிதங்கள் எழுதுவதில்லை என்பதை சில நாட்களுக்கு முன்னர்தான் அறிந்தேன். குடும்பத்தில் ஏதோ பிரச்சினைகள் இருப்பதால் இராமானுஜன் உடலளவில் மட்டுமல்ல, மனதளவிலும் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளார் என எழுதினார்.
1914 இல் இராமானுஜன் கடிதம் 

     மருத்துவ மனையில் தன்னைச் சந்திக்க வந்த ஹார்டியிடம் முதன் முறையாக, தன் குடும்பம் பற்றிப் பேசினார் இராமானுஜன்.

     நான் இரண்டு வருடங்களில் வீட்டிற்கு வந்துவிடுவேன் என்று தனது தாயாருக்கு உறுதியளித்து விட்டுத்தான் இலண்டன் வந்தேன். ஆனால் ஒன்றரை வருடங்களுக்கு முன், நான் எனது தாயாருக்கு எழுதிய கடிதத்தில், ஒரு நீண்ட விடுமுறையில் கும்பகோணத்திற்கு வந்து செல்ல விரும்புதாக எழுதினேன். பதில் கடிதம் எழுதிய என் தாயார், இப்பொழுது இந்தியா வரத் தேவையில்லை. இங்கிலாந்திலேயே தங்கியிருந்து எம்.ஏ., பட்டமும் பெற்றபின் வரலாம் என்று எழுதியிருந்தார்கள். அதனால் நான் இந்தியா செல்லும் முடிவைக் கைவிட்டேன்.

     எனது மனைவியிடமிருந்து கடிதம் வரவில்லை என்று கூறுவது தவறு. என் மனைவி ஜானகி எனக்கு சில கடிதங்களை எழுதியிருந்தாள். அதில் அவர் எனது வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு சென்றுவிட்டதற்கானக் காரணங்களைக் கூறியிருந்தாள் எனக் கூறினார்.

      கோமளத்தம்மாள் இராமானுஜனைக் கும்பகோணத்திற்கு வரவேண்டாம் என்று கூறினார் என்பதும், ஜானகி கோபித்துக் கொண்டு விட்டை சென்று சென்றுவிட்டார் என்பதும், ஹார்டிக்குப் புதிய செய்திகளாக அதிர்ச்சி தருவனவாக இருந்தன.

     ஜானகியிடமிருந்து இராமானுஜனுக்குக் கடிதம் வரவில்லை எனறால் , ஜானகி கடிதம் எழுதவில்லை எனப் பொருளல்ல. ஜானகி இராமானுஜனுக்கு எழுதிய கடிதங்கள் இடைமறிக்கப் பட்டன.

     ஒரு முறை இராமானுஜனுக்கு அனுப்பப்பட வேண்டிய உணவுப் பொருட்கள் அடங்கிய பார்சல்  தயாரானபோது, கோமளத்தம்மாள் வீட்டில் இல்லாத சமயத்தில், ஜானகி ஒரு கடிதம் எழுதி, பார்சலின் இடையில் வைத்தாள். வீடு திரும்பிய கோமளத்தம்மாள் எப்படியோ உளவறிந்து, ஜானகியின் கடிதத்தைக் கண்டுபிடித்து எடுத்து விட்டார். பாவம் ஜானகியால் ஒன்றும் செய்ய இயலாத நிலை. கோமளத்தம்மாளின் கையசைவிற்கேற்பச் செயல்பட வேண்டிய நிலையிலேயே ஜானகி இருந்தார்.

     இராமானுஜன் சென்னையில் இருந்தபோதே, இருவரையும் கணவன், மனைவியாக வாழவோ, பேசிப் பழகவோ கூட அனுமதிக்காத கோமளத்தம்மாள், இராமானுஜன் இலண்டனில் இருக்கும் நிலையில் கடிதப் போக்குவரத்தையும் இடைமறித்து தடுத்து, கணவனுக்கும் மனைவிக்கும் தொடர்பே இல்லாமல் செய்தார். ஜானகி அணிந்து கொள்ள நல்ல புடவையைக் கூட வழங்காது மௌம் சாதித்தார்.

     வீட்டின் அனைத்து வேலைகளையும் செய்து முடித்து, தண்ணீர் எடுக்கக் காவிரி ஆறு வரை சென்று ஜானகி பாடுபட்ட போதிலும், கோமளத்தம்மாள் மகிழ்வுடன் ஜானகியை நோக்கி ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை. ஜானகியின் ஜாதகப் பலனால்தான் இராமானுஜன், இலண்டனில் உடல் நலம் குன்றி அவதிப்படுகின்றான் என்று தீர்க்கமாக நம்பியதே இதற்கெல்லாம் காரணமாகும். வேறு ஒரு பெண்ணை இராமானுஜனுக்கு மணம் செய்து வைத்திருந்தாள், இராமானுஜன் பூரண உடல் நலத்துடன் இருந்திருப்பான் என்று நம்பினார்.

     கராச்சியில் வேலை பார்த்து வந்த, ஜானகியின் சகோதரர் சீனிவாச அய்யங்காருக்கு, ராஜேந்திரத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இதனையே ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட ஜானகி, கோமளத்தம்மாளின் பிடியிலிருந்து விடுபட எண்ணி, உறவினர் துணையுடன் இராஜேந்திரம் சென்றார். ஜானகியின் பெற்றோரும், கும்பகோணத்தில் உள்ள தங்கள் உறவினர்கள் மூலம், ஜானகியின் நிலையினை அறிந்திருந்ததால், ஜானகியை மீண்டும் கும்பகோணத்திற்கு அனுப்பாமல், தங்களது மகனுடன், கராச்சிக்கு அனுப்பி வைத்தனர்.

    கராச்சியிலிருந்து ஜானகி இராமானுஜனுக்குக் கடிதம் எழுதினார். தன் நிலையைக் கூறி, உடுத்திக் கொள்ளக் கூட ஒரு நல்ல புடவை இல்லாத நிலையிலேயே இருக்கிறேன். எனவே புடவை வாங்கவும், தனது சகோதரரின் திருமணத்திற்கு மொய் செய்யவும் பணம் அனுப்பி உதவுமாறு கேட்டுக் கடிதம் எழுதினார். இராமானுஜனும் உடன் பணம் அனுப்பி வைத்தார்.

     ஏற்கனவே உடல் நலம் குன்றியிருந்த இராமானுஜன், இவ்வகை நிகழ்வுகளால், மேலும் மன நலமும் குன்றி, தனது குடும்பமே தன்னைக் கைவிட்டு விட்டதாகவும், தன்னை ஒரு அனாதையாகவும் உணர்ந்தார். 1914 அம் ஆண்டு மாதத்திற்கு மூன்று கடிதங்கள் எழுதியவர், 1916 இல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கடிதம் எழுதினார். ஆனால் 1917 இல் கடிதம் எழுதுவதையே விட்டுவிட்டார்.

     இறுதியாத தான் அனாதை போலவே இருக்கின்றோம் என்பதை உணர்ந்த இராமானுஜன், முதன் முதலாக ஹார்டியிடம்தன் குடும்ப நிலை குறித்து வேதனையை வெளிப்படுத்தினார்.

     பின்னாளில் இது குறித்த எழுதிய ஹார்டி, இவ்விசயத்தில் குற்றம் சுமத்தப்பட வேண்டியவன் நான்தான். இராமானுஜன் பற்றிய செய்திகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டியவன் நான்தான். அவ்வாறு இருந்தும், இராமானுஜனின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ, அவரது குடும்பத்திற்கும் அவருக்கும் இடையேயான உறவு பற்றியோ, கொஞ்சம் கூட அறிந்து கொள்ளாமல் இருந்து விட்டேன். இராமானுஜனைத் தினமும் சந்தித்தவன் நான். அவரது குடும்பப் பிரச்சினைகளுக்குப் பேசியே தீர்வு கண்டிருக்க முடியும்.

      தினமும் இராமானுஜனைக் காணக் காலையில் அவர் அறைக்குச் சென்றால், ஒவ்வொரு நாளும், புத்தம் புதிதாக நான்கு அல்லது ஐந்து தேற்றங்களைக் கண்டுபிடித்து வைத்திருப்பார். உடனே எனது கவனமெல்லாம் கணக்கின் பக்கமே சென்றுவிடும். இதனால் தனிப்பட்ட முறையில் கணிதத்தைக் கடந்து உரையாட, உறவாட நேரமே இல்லாமல் போனது என்று எழுதுகிறார்.

G.H.Hardyயும் மற்றவர்களும் இராமானுஜனின் பெலோசிப்பிற்காக விண்ணப்பித்த விண்ணப்பம்
     1918 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற, இலண்டன் கணிதவியல் கழகக் கூட்டத்தில், பெலோசிப்பிற்காக (Fellowship) விண்ணப்பித்துள்ள 103 பேர் அடங்கிய பெயர்ப் பட்டியல் வாசிக்கப் பட்டது. இப்பட்டியலில் இருந்து பதினைந்து பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட இருந்தனர்.

     உடல் நலம் குன்றியிருந்த இராமானுஜன், பெலோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால். இராமானுஜனின் உடல் நலத்திலும், மன நலத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று எண்ணி, பதற்றத்துடனேயே இறுதி அறிவிப்பபிற்காக ஹார்டி காத்திருந்தார்.

     இந்நிலையில் தற்காலிகமாக மருத்துவ மனையிலிருந்து, பிசப் விடுதிக்குத் திரும்பியிருந்த இராமானுஜன் 1918 ஆம் ஆண்டு இறுதியில், பிரச்சினைகளைத் தாங்க முடியாமல், தற்கொலை செய்து கொள்வது என்ற விபரீத முடிவினை எடுத்தார்.

    யாருக்கும் தெரியாமல், தனது அறையிலிருந்து புறப்பட்டு, இலண்டன் பாதாள ரயில் நிலையத்திற்குச் சென்ற இராமானுஜன், புறப்படத் தயாராக இருந்த ரயிலின் முன், தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தார்.

.... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமா.