----------------
சைவம் என்ற
போர்வையில் உணவின்றிப் பட்டினிக் கிடந்து, இராமானுஜன் தன் முடிவை நோக்கி விரைந்து
செல்கிறார் – ஏ.எஸ்.இராமலிங்கம்
--------------
1918 ஆம் ஆண்டிலேயே, அதிவேக விஞ்ஞான
வளர்ச்சியின் காரணமாக, இலண்டன் இரயில்வே துறையானது, பயணிகளின் பாதுகாப்பு கருதி,
பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. பாதுகாப்பு நடவடிக்கைகளின்
ஒரு பகுதியாக, ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் தானியங்கிக் கதவுகள் பொருத்தப்
பட்டன. ஒரு ரயிலின் அனைத்துக் கதவுகளும் மூடியிருந்தால் மட்டுமே, ரயிலானது புகை
வண்டி நிலையத்தை விட்டுக் கிளம்ப முடியும்.
இராமானுஜன்
தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்த அதே நேரத்தில், தானியங்கிக் கதவுகளுள் ஒன்று
சரியாக மூடாததால், ரயில் புறப்படுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. அவ்வேளையில்
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே தொழிலாளி ஒருவர், இராமானுஜனைத்
தண்டவாளத்தில் இருந்து இழுத்துக் காப்பாற்றினார். இரத்தக் காயங்களுடன்
காப்பாற்றப்பட்ட இராமானுஜன், காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டு, கைது செய்யப்
பட்டார்.
இராமானுஜன் கைது செய்யப்பட்ட செய்தியறிந்து
ஸ்காட்லாந்து யார்டு காவல் நிலையத்திற்கு வருகை தந்த ஹார்டி, தனது பேச்சுத்
திறமையினையும், பல்கலைக் கழகச் செல்வாக்கினையும் பயன்படுத்தி, இங்கிலாந்து
ராயல் சொசைட்டியால் பெலோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரை எவ்வாறு கைது செய்யலாம்?,
பெலோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரை கைது செய்யும் அதிகாரம் காவல் துறைக்குக்
கிடையாது என வாதிட்டு, காவல் துறையினரின் நடவடிக்கைகளில் இருந்து இராமானுஜனை
விடுவித்தார்.
உண்மையில், கைது செய்யப்பட்ட அந்நாளில்
இராமானுஜன் பெலோவாக அறிவிக்கப்பட வில்லை. இராமானுஜனைக் காப்பாற்றும் வகையில்,
ஹார்டி தவறான தகவலை அளித்தார். மேலும் ராயல் சொசைட்டியால் பெலோவாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டவரை கைது செய்யக் கூடாது என்று விதியும் ஒன்றுமில்லை.
காவல் துறை அலுவலர் பின்னாளில், இராமானுஜனைப்
பற்றி விசாரித்தோம். அவர் சிறந்த கணித மேதை என்று அறிந்து, அவரது வாழ்வை
எவ்வகையிலும் பாழ்படுத்த வேண்டாம் என்று எண்ணியே ஸ்காட்லாண்ட் யார்டு அவரை
விடுவித்தது என்று கூறியுள்ளார்.
இராமானுஜனைத்
தற்கொலை செய்து கொள்ளுமளவிற்குப் பாதித்த நிகழ்ச்சி பற்றி சரியான தகவல்கள் இல்லை.
கல்லூரியில் தொடர்ந்து படித்திட இயலாதவாறு, கல்வி உதவித் தொகை நிறுத்தப்பட்ட
நிலையில், செய்வதறியாது, தனது வீட்டை விட்டு ஓடியவர்தான் இராமானுஜன். தன்
வீட்டில், தன்னால் விருந்தக்கு அழைக்கப் பட்டவர், தான் வழங்கிய சூப்பை மீண்டும்
மீண்டும் பெற்றுப் பருகாமல், போதும் என்று கூறிய சாதாரண நிகழ்வைக் கூட தாங்கிக்
கொள்ள இயலாமல் மனம் போன போக்கில் பயணம் மேற்கொண்டவர்தான் இராமானுஜன்.
கும்பகோணத்தை விட்டு வெகுதூரம் வந்து,
தனிமையில் தவித்த வேளையில், குடும்பத்தில் தான் மிகவும் மதித்த தாயாரும்,
மனைவியும் கருத்து வேறுபாடு கொண்டு, ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து வாழ்வதை
உணர்ந்து, ஆறுதல் கூறுவார் இன்றித் தவித்து, அவமானத்தால் குன்றிப்போய், எதாவது
ஒன்றைச் செய்து, இத்துயரிலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னையும்
அறியாமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம்.
தற்கொலை
முயற்சியில் இருந்து மீண்ட் இராமானுஜன் மீண்டும் சானிடோரியத்தில் சேர்க்கப்
பட்டார்.
பெலோ ஆப் ராயல் சொசைட்டி
சானிடோரியத்தில்
இராமானுஜன் தங்கி சிகிச்சை மேற்கொண்ட காலத்தில் பிப்ரவரி மாத இறுதியில்
ஹார்டியிடமிருந்து தந்தி வந்தது.
Congratulations. You
are selected as a Fellow of Royal Society
இராமானுஜன்,
இலண்டன் ராயல் சயின்டிபிக் சொசைட்டியின் பெலோவாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
போட்டியில் கலந்து கொண்ட 104 போட்டியாளர்களுள், தேர்ந்தெடுக்கப் பட்ட 15 பேரில்
இராமானுஜனும் ஒருவர். உடனே ஹார்டிக்குக் கடிதம் எழுதிய இராமானுஜன், தங்களுக்கு
நன்றியைத் தெரிவிப்பதற்கு, என் வார்த்தைகள் மட்டும் போதாது. நான் ராயல்
சொசைட்டியின் பெலோவாகத் தேர்ந்டுக்கப் படுவேன் எனக் கனவிலும் கருதவில்ல என்று
எழுதினார்.
இந்தியாவில் இச்செய்தியறிந்து அனைவரும்
மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர். மார்ச் 22 இல் இந்தியக் கணிதவில் கழகத்தின் சார்பாக
ஹார்டி எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதப்பட்டது.
பின்குறிப்பில், இராமானுஜனின் உடல் நிலையினைக் கவனித்துக் கொண்டதற்காக ஹார்டி
அவர்களுக்கு, சேசு அய்யர் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்திருந்தார்.
ஏ.எஸ்.இராமலிங்கம் |
இந்நிலையில்,
இராமானுஜன் சென்னையில் இருந்து கப்பல் மூலம், இலண்டனுக்குப் பயணம் மேற்கொண்டபோது,
சந்தித்த தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர்
ஏ.எஸ்.இராமலிங்கம் அவர்களிடமிருந்து, இராமானுஜனுக்குக் கடிதம் வந்தது.
பொறியாளரான இராமலிங்கம், உலகப் போர் தொடங்கியவுடன் இராணுவத்தில் சேர்ந்து,
இங்கிலாந்தின் வடபுறம் அமைந்துள்ள ஜரோ என்னும் இடத்தில் கப்பல் கட்டும் பணியில்
ஈடுபட்டிருந்தார். இராமானுஜன் ராயல் சொசைட்டிக்குத் தேர்வு செய்யப்பெற்ற செய்தியை,
நாளிதழ்கள் வழியாக அறிந்து, இராமானுஜனுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார். ஆனால
இராமானுஜனிடமிருந்து பதில் வராததால், ஹார்டியைத் தொடர்பு கொண்டு, இராமானுஜன் காச
நோயால் தாக்கப் பட்டு சானிடோரியத்தில் சிகிச்சை பெற்று வரும் செய்தியறிந்து
அம்முகவரிக்குக் கடிதம் எழுதினார்.
இராமலிங்கம்
தன் குடும்பத்தாருக்கு எழுதிய கடிதத்தில், இங்கிலாந்தில் இந்திய உணவு வகைகளுக்குப் பெரும் தட்டுப்பாடு
ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து, பார்சல் வழி உணவுப்
பொருட்கள் குவியத் தொடங்கின. இந்நிலையில் இராமானுஜனுக்கு எழுதிய கடிதத்தில்,
இராமானுஜனுக்கு இந்திய உணவுப் பொருட்கள் தேவையா எனக் கேட்டறிந்து, உடன் அனுப்பி
வைத்தார்.
ஜுன் 16
ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை, இராமலிங்கம் நேரில் சென்று இராமானுஜனை மருத்துவ
மனையில் சந்தித்தார். ஞாயிரன்று சென்றவர், செவ்வாய்க் கிழமை மதியம் வரை மூன்று
நாட்கள் இராமானுஜனுடனேயே தங்கியிருந்தார். மூன்று நாட்களும் பலவித செய்திகளை
இருவரும் பரிமாறிக் கொண்டனர். ஆனால் தான் ஏற்கனவே அறிந்திருந்த வகையில்,
இராமானுஜன் மன நலம் பாதிக்கப் பட்டவராகத் தெரியவில்லை என்றும், அதற்கான
அறிகுறிகளைக் கூட தான் காணவில்லை என்றும் ஹார்டிக்கு எழுதிய கடிதத்தில்
குறிப்பிட்டார்.
இராமலிங்கம்
ஹார்டிக்கு எழுதிய கடிதத்தின் நீளம் 12 பக்கங்கள் வரை நீண்டது. மருத்துவர்களின
கணிப்பு, இராமானுஜனின் உணவுப் பழக்கம், உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள் என நீண்டு
இறுதியில், தன் கணிப்பாக, இராமானுஜன் உணவுத் தொடர்பாக கடைபிடிக்கும், கொள்கைகள்
குறித்துக் கவலைப் படுகிறேன். சைவம் என்ற
போர்வையில் உணவின்றிப் பட்டினிக் கிடந்து, இராமானுஜன் தன் முடிவை நோக்கி விரைந்து
செல்கிறார் எனக் குறிப்பிட்டார்.
பெலோ ஆப் ட்ரினிட்டி
1918 ஆம் ஆண்டின் இறுதியில் ட்ரினிட்டி
கல்லூரியின், பெலோசிப்பிற்காக இராமானுஜனின் பெயர் பரிந்துரைக்கப் பட்டது. பல்கலைக்
கழக வளாகத்தில் ஹார்டி இராமானுஜனின் நெருங்கிய நண்பராக அனைவராலும் அறியப்
பட்டதால், இராமானுஜனின் பெயரைத் தான் முன்மொழியாமல லிட்டில் வுட் மூலம்
பரிந்துரைக்கச் செய்தார்.
ட்ரினிடி கல்லூரி |
ஆனால்
இராமானுஜன் தேர்ந்தெடுக்கப் படுவதைப் பேராசிரியர் ஆர்.ஏ.ஹெர்மன் என்பவர் எதிர்த்தார்.
கல்லூரி விதிகளின் படி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட, மனநலம் பாதிக்கப் பட்ட
ஒருவரை எவ்வாறு தேர்வு செய்வது என்று தன் வாதத்தை முன் வைத்தார்.
மிகவும்
உடல் நலம் குன்றியிருந்த லிட்டில் வுட், தான் நேரில் வர இயலாவிட்டாலும், தேர்வுக்
குழுவிற்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார். இராமானுஜனின் மன நிலை குறித்து இரு
மருத்துவர்கள் கொடுத்த சான்றிதழ்களை இணைத்து அனுப்பினார். இங்கிலாந்திலேயே
மிகப் பெரிய அறிவியல் கழகமாகப் போற்றப்படும் ராயல் சொசைட்டியே, இராமானுஜனை
பெலோவாகத் தேர்ந்தெடுக்கும் போது, உங்களால் எவ்வாறு இராமானுஜனை நிராகரிக்க
முடியும் எனத் தன் வாதத்தைக் கடிதம் மூலம் எடுத்து வைத்தார். இறுதியில்
லிட்டில் வுட் வாதம் வென்றது. இராமானுஜன் ட்ரினிட்டி கல்லூரியின் பெலோவாகத்
தேர்ந்தெடுக்கப் பட்டார்.
பிட்ஸ்ராய் இல்லம் |
இராமானுஜன்
மருத்துவ மனையில் இருந்து வெளியேற தனது விருப்பத்தை இராமலிங்கத்திடம்
தெரிவித்திருந்தார். இராமலிங்கமும் இராமானுஜனின் விருப்பத்தை ஹார்டியிடம்
தெரிவிக்கவே, இலண்டனின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள ஐந்து அடுக்குக் கட்டிடமான பிட்ஸ்ராய்
இல்லத்திற்கு இடம் மாற்றப் பட்டார். இந்த இல்லத்தில்தான் 1890 இல் உலகப் புகழ்
பெற்ற ஜார்ஜ் பெர்னாட்ஸ் ஷா அவர்களும், 1911 இல் வர்ஜீனிய
உல்ப் அவர்களும் வாழ்ந்தனர்.
1918 ஆம் ஆண்டு நவம்வர் 11 ஆம் நாள் உலகப்
போர் முடிவிற்கு வந்தது.
நவம்பர் 26 இல் ஹார்டி, சென்னைப் பல்கலைக்
கழகப் பதிவாளருக்கு ஓர் கடிதம் எழுதினார்.
இராமானுஜன் இந்தியாவிற்குத் திரும்ப வேண்டிய
நேரம் வந்துவிட்டதாகக் கருதுகிறேன்.
..... வருகைக்கு நன்றி நண்பர்களே.
மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமா.