26 ஜூலை 2013

கரந்தை - மலர் 17

------ கடந்த வாரம் ------
மடத்திற்குச் சொந்தமான இடத்தினை விலைக்கு வாங்குவதால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சட்டச் சிக்கல்கலையும் மனதில் நிறுத்தி ஆராய்ந்தார் உமாமகசுவரனார்.
----------------------
     மாபெரும் தமிழ்ப் பணியாற்றிவரும் கரந்தைத் தமிழ்ச் சங்கம், காலூன்ற இடமின்றியும், இடம் வாங்கப் பொருளின்றியும் தவிக்கின்றது. எனவே ஆட்சியாளர்கள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு இடம் வழங்கி உதவிட வேண்டும் என்று, அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் உமாமகேசுவரனார் வேண்டுகோள் விடுத்தார்.
 
பாவா மடம்
     வேண்டுகோள் பலித்தது. சென்னை மாகாண சட்டத்துறை செயலாளர் திவான் பகதூர் ராமச்சந்திர ராவ் அவர்களின், உத்தரவிற்கு இணங்க, கரந்தையில் வடவாற்றின் வடகரையில் அமைந்திருந்த, பாவா மடத்திற்குச் சொந்தமான இடம், 1894 ஆம் ஆண்டின் நிலம் கையகப் படுத்துதல் சட்டத்தின்படி அரசால் கையகப் படுத்தப்பட்டது.

      கையகப் படுத்தப் பட்ட நிலத்தினை ஆங்கிலேய அரசாங்கம், முறைப்படி பத்திரப் பதிவு செய்து சங்கத்திற்கு வழங்கியது.
 
வள்ளல் பெத்தாச்சி செட்டியார்
   . இவ்விடத்தினை வாங்கும் பொருட்டு வள்ளல் பெத்தாச்சி செட்டியார், சங்கத்திற்கு ரூ.1000த்தினை அன்பளிப்பாக வழங்கினார். மேலும் அன்றைய தினம் வரை சங்கத்தால் சேமிக்கப்பட்ட தொகை முழுவதும், இந்நிதியுடன் சேர்க்கப்பட்டு, அரசாங்கத்தினரிடம் வழங்கப்பட்டது.

      அன்றைய ஆங்கிலேய அரசினர், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திடமிருந்து பெற்றுக் கொண்ட தொகை ரூ.1,867 மற்றும் 6 அணா மட்டுமே. அவ்விடத்திற்கான மீதமுள்ள இழப்பீட்டுத் தொகையின் அரசாங்கமே, பாவா மடத்திற்கு வழங்கியது


     இவ்வாறாக, பெத்தாச்சி செட்டியார் அவர்களின் வள்ளல் தன்மையாலும், பல அறிஞர்களின் உதவியுடனும், ஆங்கிலேய அரசாங்கத்தின் மாபெரும் உதவியோடும், ஆதரவோடும், 44,662 அடி நிலமானது, 1924 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் நாள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குச் சொந்தமானது.

தமிழ்ப் பொழில்

                வாழி  கரந்தை  வளருந்  தமிழ்ச்சங்கம்
                வாழி  தமிழ்ப்பொழில்  மாண்புடனே வாழியரோ
                மன்னுமதன்  காவலராய்  வண்மைபுரி  வோரெவரும்
                உன்னுபுக  ழின்நலம்  உற்று
                         - நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற மூன்றாவது ஆண்டிலேயே, திங்களிதழ் ஒன்றினைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உமாமகேசுவரனார் உள்ளத்தே உயிர் பெற்றது.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் நோக்கங்களைத் தமிழ்ப் பேருலகினருக்கு நன்கு தெரிவித்து, அன்னார் உதவிபெற்று அவற்றினை நிறைவேற்றுமாறு காண்டலும், தமிழ் மக்களையும், அவர்தம் தெய்வத் திருமொழியினையும் இழிதகவு செய்து, உண்மை சரித நெறி பிறழ எழுதிவரும் விசயங்களை நியாய நெறியில் கண்டித்தலும், மேல் நாட்டுச் சாத்திரங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அமைத்துக் கொள்ளுதலுமாகிய, இன்னோரன்ன நோக்கங்களோடு, சங்கத்தினின்று ஓர் சிறந்த தமிழ்ப் பத்திரிக்கை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஐவர் கொண்ட குழு ஒன்று 1914 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

     திருவாளர்கள் நா.சீதாராம பிள்ளை, ஐ.குமாரசாமி பிள்ளை, த.வீ.சோமநாதராவ்  மற்றும் த.வே.இராதாகிருட்டினப் பிள்ளை ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாவர். இக்குழுவினர் பத்திரிக்கைத் தொடங்குவதற்காக அரசாங்கத்தின் அனுமதி பெறுவதற்குரிய பணிகளைத் துவக்கினர். இதே வேளையில் பத்திரிக்கை ஆரம்பிப்பதென்றால் அதற்கு வேண்டும் மூலதனத்தைத் திரட்டும் பணியும் தொடங்கப் பெற்றது. தமிழ் அன்பர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து நன்கொடைகள் பெறுவதற்காக வேண்டுகோள் விடுக்கப் பெற்றது.

      பத்திரிக்கை ஒன்றினைத் தொடங்குவதற்காக 1914 ஆம் ஆண்டில் உமாமகேசுவரனர் அவர்களால் தொடங்கப் பெற்ற முயற்சிகள், பல்வேறு காரணங்களாலும் நிதிப் பற்றாக் குறையாலும், நிறைவேறாமலே இருந்தது.  இருப்பினும் 1919 ஆம் ஆண்டில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தொடங்கப்பெற இருக்கின்ற மாதாந்திர இதழுக்கு தமிழ்ப் பொழில் என்னும் பெயர் சூட்டப்பெற்றது.  1929-21 லும் போதிய அளவு புரப்போர் சேராமையினால் தமிழ்ப் பொழில் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

     இவ்வாண்டில் திருவாளர்கள் உமாமகேசுவரம் பிள்ளை, கும்பகோணம் த.பொ.கை. அழகிரி சாமி பிள்ளை, கூடலூர் வே. இராமசாமி வன்னியர், பட்டுக்கோட்டை வேணுகோபால் நாயுடு, திருச்சிராப்பள்ளி உ.க. பஞ்ச ரத்தினம் பிள்ளை, திருச்சி நா.துரைசாமி பிள்ளை, கும்பகோணம் ஆர்.சாமிநாத அய்யர் ஆகியோர் தமிழ்ப் பொழில இதழுக்குப் பங்குத் தொகை வழங்கினர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பத்தாம் ஆண்டு விழாவானது, 4.9.1921 மற்றும் 5.9.1921 ஆகிய தேதிகளில், கரந்தை கந்தப்ப செட்டியார் அறநிலையத்தில, கீழையூர் சிவ. சிதம்பரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் போது, தமிழ் மொழியின் மேண்மையைப் பேணுதற் பொருட்டாகத் தமிழ்ப் பொழில என்னும் திங்கட்டாளை வெளியிடுவதற்கு தக்கவாறு பொருளுதவி செய்ய வேண்டுமெனத் தமிழ் மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறார்கள் எனும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இவ்வாண்டில் திருவாளர்கள் வேணுகோபால நாயுடு மற்றும் திருச்சி டி.நாராயண சாமி பிள்ளை ஆகியோர் தமிழ்ப் பொழில் பங்குத் தொகையாக ரூ.23 வழங்கினர்.

     1913 ஆம் ஆண்டில் உமாமகேசுவரனார் அவர்களால் தொடங்கப் பெற்ற முயற்சியானது, பதினோரு ஆண்டுகளுக்குப் பின்னரே நிறைவேறியது. 1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.  தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழினை அச்சிட்ட பெருமை, தஞ்சாவூர் லாலி அச்சகத்தையேச் சாரும். இதன் முதல் பொழிற்றொண்டராகப் பணிபுரிந்தவர் கவிஞர் அரங்க. வேங்கடாசலம் பிள்ளையாவார்.
 
1925 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப் பொழில் இரண்டாவது இதழின் அட்டை
 (முதல் இதழின் அட்டை கிடைக்கப் பெற வில்லை)
     பொதுவாக ஒரு இதழ் எனின் ஆசிரியர் அல்லது பொறுப்பாசிரியர் என்று அச்சிடுதல் மரபு. ஆனால் உமாமகேசுவரனாரோ, இதழாசிரியர் என்பதற்குப் பதிலாக பொழிற்றொண்டர் என்றே அச்சிடச் செய்தார். உறுப்பினர் கட்டணம் என்பதற்கு மாறாக கையொப்பத் தொகை என்றும், விலாசம் என்பதை உறையுள் என்றும், ஆங்கிலத்தில் வி.பி.பி. என்பதை விலைகொளும் அஞ்சல் என்றும் பயன்படுத்தத் தொடங்கினார்.

     பல்வேறு இன்னல்களைத் தாண்டி தமிழ்ப் பொழில் இதழானது வெளிவரத் தொடங்கிய பின்னரும் கூட,  ஒவ்வொரு மாதமும், இவ்விதழ் சந்தித்த சோதனைகள், தாண்டிய தடைகள் ஏராளம். தமிழ்ப் பொழில் இதழினைப் போற்றுவார் போதிய அளவு இல்லாததால் வருந்திய உமாமகேசுவரனார் அவர்கள், தமிழ்ச் செல்வர்கள், தாய் மொழித் தொண்டிற்காக, ஆண்டிற்கு இரண்டு மூன்று ரூபாய் செலவிடுவதற்குத் தயங்கும் நிலை கண்டு வருந்தினார். தமிழ்ப் பொழில உறுப்பினராக அனைவரும் சேர்ந்து பயன்பெறுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சை
தமிழ்ப் பொழில்

கருந்திட்டைக்குடி,
விசு, சித்திரை,க
ஐயா,
     இத்துடன் பொழிற் கையொப்ப விண்ணப்பம் ஒன்று இணைத்துள்ளோம். தங்கள் நண்பருள் ஒருவரையேனும் கையொப்பக்காரராகச் சேரும்படி வேண்டி, இணைத்துள்ள விண்ணப்பத்தில் அவர்கள் ஒப்பம் வாங்கி அனுப்ப வேண்டுகிறோம். ஒருவரைத் தாங்கள் சேர்த்தனுப்புவது, பொழிலின் பயனை ஆயிரவர்க்கு அளித்ததாகும் என்பதை நினைவூட்டுகிறோம். சிறுதொண்டு பெரும்பயன் விளைவிக்கும் வகைகளுள் இது ஒன்றெனக் கருத்திற் கொள்ள வேண்டுகிறோம்.

தங்கள் அன்பன்,
த.வே. உமாமகேசுவரன்
பொழிற்றொண்டர்

     உமாமகேசுவரனார் மேற்கொண்ட அயரா முயற்சிகளின் பயனாக, தஞ்சை மாநாட்டாண்மைக் கழகத்தினரும், தஞ்சை நாட்டாண்மைக் கழகத்தினரும், பாவநாசம் நாட்டாண்மைக் கழகத்தினரும், தத்தம் ஆட்சி எல்லையிலுள்ள பள்ளிக் கூடங்களுக்கெல்லாம் தமிழ்ப் பொழில இதழினை அனுப்பிட ஆணை வழங்கி உதவினர்.

     தஞ்சைமா நாட்டின் கல்வி நெறி ஆராய்ச்சியாளர் தலைவராக இருந்த, திரு பி.பி.எஸ்.சாஸ்திரியார் அவர்களும், இத் தமிழ்ப் பொழில் கல்லூரி பள்ளிக் கூடங்களுக்கு இன்றியமையாது வேண்டப்படும் சிறப்பினை உடைய உண்மையை அறிவித்து, அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிக் கூடங்களும் வாங்குமாறு செய்தார்.
 
மறைமலை அடிகள்
     தமிழ்ப் பொழில் இதழினைக் கண்ட மறைமலையடிகள் மனம் மகிழ்ந்து கூறியவற்றைப் பாருங்கள். தாங்கள் விடுத்த தமிழ்ப் பொழில் முதலிரண்டு மலர்களும் பெற்று மகிழ்ந்தேன். தாங்களும் ஏனை கற்றறிஞரும் எழுதியிருக்கும் தமிழ்க் கட்டுரைகளை உற்று நோக்கி வியந்தேன். தமிழ்ப் பொழில் நீடு நின்று நிலவுமாறு முயல்க. ஏனெனில், இஞ்ஞான்று பற்பல இதழ்கள் தோன்றித் தோன்றி மறைகின்றன. மேலும் வடசொற்கள் சிறிதும் கலவாத தனித் தமிழிழேயே, தாங்களும் மற்றைக் கல்வியறிஞரும் கட்டுரைகள் எழுதுவதை விடாப்பிடியாய்க் கைக்கொள்ளல் வேண்டும். வடசொற் கலப்பால் தமிழைப் பாழாக்க மடிகட்டி நிற்கின்றனர். ஆதலால் நம்மனோர் தமிழில் வடசொற்களைக் கலத்தற்கு சிறிதும் இடம் விட்டுக் கொடுத்தல் ஆகாது. தமிழ் மொழியை விட்டால் தமிழர்க்கு வேறு சிறப்பில்லை. தங்கள் முயற்சி நன்கு நடைபெறுக வென்று திருவருளை வேண்டுகிறேன்.

..... வருகைக்கு நன்றி நண்பர்களே, மீண்டும் சந்திப்போமா.


19 ஜூலை 2013

கரந்தை - மலர் 16

----- கடந்த வாரம் ------
நம் பல்கலைக் கழகம் தமிழ் பல்கலைக் கழகம் அன்று,
தமிழ் (பேசும்) மாவட்டங்களுக்கு உரிய பல்கலைக் கழகம் அவ்வளவுதான்
---------------------------

      இந்த இரங்கத்தக்க நிலை இன்று, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மட்டுமன்று, தமிழகத்தின் பல்கலைக் கழகங்கள் அனைத்திலும், நீடிக்கின்றது.

     மருத்துவம், பொறியியல், வேளாண்மை முதலிய அறிவியல் கலைகளைத் தமிழில் கற்பிக்க முறையான முழுமையான முயற்சிகள் மேற்கொள்ளப் படவில்லை. பட்டப் படிப்பு அளவில் தமிழில் கற்பிக்கபபடும் இயற்பியல், வேதியியல், விலங்கியல் முதலிய அறிவியல் பாடங்கள் கூட, பட்ட மேற்படிப்பில், தமிழில் கற்பிக்கப் படுவதில்லை. அதனால்தான் கரந்தைத் தமிழ்ச் சங்கமானது, தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப்பெற வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும், கட்டுரைகள் மூலம் வலியுறுத்தியும் வந்தது.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் கனவானது, அறுபத்து மூன்று ஆண்டுகள் கடந்த பின்னர், 1981 ஆம் ஆண்டில், அன்றைய முதல்வர் மாண்புமிகு டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் நிறைவேறியது. உமாமகேசுவரனார் கூட, தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் திருச்சியில் நிறுவிட வேண்டும் என்றுதான் தீர்மானம் இயற்றினார். ஆனால் உமாமகேசுவரனார் வாழ்ந்த தஞ்சையிலேயே, தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவிய பெருமைக்கு உரியவர் எம்.ஜி.ஆர்.

     பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் வள்ளல் தன்மையினையும், பெருந்தன்மையினையும் நாடே அறியும். தமிழுக்காக ஒர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை உருவாக்கியதோடு, அப்பல்கலைக் கழகத்திற்கு இடம் ஒதுக்கிய நிகழ்விலும், தான் வள்ளல்தான் என்பதை நிரூபித்தவர் எம்.ஜி.ஆர்.

     தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் தஞ்சையில் நிறுவுவது என்று முடிவு செய்த அன்றைய தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், அப்பணி தொடர்பாக தமிழறிஞர்களின் கூட்டம் ஒன்றினைக் கூட்டினார். தமிழ்ப் பல்கலைக் கழகம் அமைப்பதற்கு எவ்வளவு இடம் தேவை? என தமிழறிஞர்களிடம் வினவினார். ஒரு தமிழறிஞர் 50 ஏக்கர் ஒதுக்கினால் நன்றாக இருக்கும் எனக் கூறினார். மற்றொருவார் தயங்கியவாறே 100 ஏக்கர் ஒதுக்கினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று கூறினார். பெருவள்ளல், பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் புன்னகைத்தவாறே, தமிழுக்கு என்று ஒரு பல்கலைக் கழகத்தைத் தனியே அமைக்கவிருக்கின்றோம். இப்பல்கலைக் கழகம் சீரும் சிறப்புமாகச் செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். எனவே இப் பல்கலைக் கழகத்திற்கு 1000 ஏக்கர் இடத்தினை ஒதுக்குகிறேன் என்று கூறி தமிழறிஞர்களை வியப்பில் ஆழ்த்தினார். கூறியபடியே 1000 ஏக்கர் நிலத்தினை ஒதுக்கி தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவிய பெருந்தகை எம்.ஜி.ஆர்.
தமிழ்ப் ப்லகலைக் கழக நூலகம் திறப்பு விழாவில் எம்.ஜி.ஆர்
தமிழ்ப் பல்கலைக் கழக நூலகம்

     மேலும் தமிழுக்கு என்று தனியே ஓர் பல்கலைக் கழகம் தேவை என்று முதன் முதலில் குரல் எழுப்பிய, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முயற்சிகளைப் பாராட்டும் வகையில், தமிழ்ப் பல்கலைக் கழக சட்டப் பிரிவு 18(a) வகுப்பு II (6) ன் படி, தமிழ்ப் பல்கலைக் கழகப் பேரவையில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு என்று நிரந்தரமாக, ஓர் இடத்தினையும் வழங்கிய வள்ளல் எம்.ஜி.ஆர் அவர்களாவார்.

பெத்தாச்சி புகழ் நிலையம்

     கரந்தைத் தமிழ்ச் சங்கக் கலா நிலையம் என்னும் பெயரில், உமாமகேசுவரனார் தொடங்கிய நூலகம் தொடர்பான நிகழ்வுகளை முன்னரே கண்டோம். இந்த சங்க நூல் நிலையத்தின் பயனை இனிதுணர்ந்த, சென்னை அரசாங்க மேல் சபை உறுப்பினரும், சங்க ஆதரிப்பாளருமான, காநாடு காத்தான் பெருந்திருவர் தமிழ் வள்ளல் திவான் பகதூர், மு.சித.பெத்தாச்சி செட்டியார் அவர்கள், 1922 ஆம் ஆண்டு நடைபெற்ற, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பதினோராவது ஆண்டு விழாவில் உரையாற்றிய போது, தம்பால் உள்ள நூல்கள் முழுவதையும், சங்க நூல் நிலையத்துடன் சேர்த்துவிட விரும்புவதாக குறிப்பிட்டார். ஆண்டுவிழாவின் போது குறிப்பிட்ட வண்ணம், சில மாதங்கள் கடந்த நிலையில், சங்க உறுப்பினர் சிலரைத் தமது இல்லத்திற்கு வரவழைத்து, தனது நூல்கள் முழுவதையும், தாமே தனது திருக்கரங்களால் எடுத்து வழங்கினார்.

      பெத்தாச்சி செட்டியார் அவர்களால் வழங்கப் பட்ட நூல்களின்  தொகை எண்ணிறந்தவையாகும். எட்டு மர பீரோக்களையும், அதிலிருந்த நூல்கள் முழுவதையும் சங்கத்திற்கு வழங்கியருளினார்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கக் கலா நிலையத்தில், பெத்தாச்சி செட்டியார் வழங்கிய நூல்களைத் தனிப் பகுதியாக வைத்து, அப்பகுதிக்கு பெத்தாச்சி புகழ் நிலையம் என்று பெயரிட்ட உமாமகேசுவரனார் அவர்கள், 22.9.1923 ஆம் ஆண்டு நடைபெற்ற, சங்கத்தின் பன்னிரண்டாம் ஆண்டு விழாவிற்கு, தமிழ் வள்ளல் மு.சித.பெத்தாச்சி செட்டியார் அவர்களைத் தலைமையேற்கச் செய்து,

              இம்மையு  மறுமையும்  ஈறி  லின்பமும்
              செம்மையி  னளிக்கும்   சிவன்சே  வடியிணை
              என்றும்  மறவா  நன்றறி  யுளத்தினை
              கருவூ  ரானிலை  யரனார்  திருவிழாச்
              செப்புதற்  கரிய  சிறப்புட  னிகழ்த்தி
              இயலிசைப்  புலவர்  எண்ணிலார்  மகிழப்
              புயலெனப்  பொன்மழை  பொழியுங்  கோமான்
              மதுரைத்  தமிழவை  மாட்சியிற்  புரப்போய்
              கரந்தையெம்  சங்கம்  காதலித்  தளிப்போய்
              இன்னபல்  சீரும்  எண்ணி ஆங்கில
              மன்னவர்  சூட்டு  திவான்பக  தூரினை
              ஆண்டிப்  பட்டிநா  டாளுங்  காவல
              வருக  பெத்தாச்சி  மாண்  பெயரோய்  நலம்
              பெருக  எம்சங்கத்  திருவிழாப்  பீடுற
              வருக  தலைமையின்  வாழியர்  வருகவே

என்று வாழ்த்தி மகிழ்ந்ததோடு மட்டுமன்றி, அவ்விழாவின் போதே, தமிழ் வள்ளல் பெத்தாச்சி செட்டியார் அவர்களின் சகோதரரும், சென்னை அரசாங்க சட்டமன்ற உறுப்பினருமாகிய, சர் மு.சித.முத்தையாச் செட்டியார் அவர்களை அழைத்து,

              சென்னைமா  நகரின்  சிறப்பினன்  என்னும்
              பன்னருஞ்  சீரொடு  பகர்  சர்ப்  பட்டமும்
              பெற்றொளிர்  பெருமைய,  பிறங்கும்  இந்திய
              அரசியல் உறுப்பினன்  ஆயஎம்  அண்ணால்
              இந்திய  நாட்டுட  னேனையாங்  கிலமா
              நாடும்நின்  சீரினை  நன்கறிந்  திடுமெனின்
              முன்னுநின்  சீர்கள்  முழுதுரைப்  பனவோ
              ஆயமாப்  புகழினை  மேவியச்  சங்கத்
              தெளிமை  எண்ணா  தெம்பியின்  நல்லருள்
              வாய்ந்தொளிர்  சங்கம்  மன்னுநம்  அருளையும்
              எய்வதற்  குரித்தென  எண்ணிவந்  தருளினை
              பெத்தாச்சி  வள்ளல்  பெரும்புகழ்  நிலையம்
              திறந்தருள்  செய்க  செம்மாஅல்  நீணிலத்
              தெத்திசை  யும்புகழ்  முத்தையப்  புரவல
              மாநில  நிதிபதி  மான
              ஊழி  ஊழி  வாழி  வாழியரே

என வாழ்த்தி வரவேற்று, அவர்தம் திருக்கரங்களாலேயே, பெத்தாச்சி புகழ் நிலையத்தினைத் திறந்திடச் செய்தார்.

     ஆண்டுதோறும் வளர்ச்சியடைந்த இந்நூலகத்தில், 1926 ஆம் ஆண்டில், 2120 தமிழ் நூல்களும், 1286 ஆங்கில நூல்களும், 144 வட மொழி நூல்களும் இருந்தன. சங்க அன்பர்கள் வ.தங்கவேல் பிள்ளை அவர்களும், சி.வேதாசலம் அவர்களும், நூலக மேற்பார்வையாளருடன் இணைந்து, பல நாட்கள் அரும்பாடு பட்டு, நூல் நிலையத்தில் உள்ள நூல்களை வரையறை செய்து, நூல் நிலைய சுவடிகளின் பெயர் பட்டியலை அச்சாக்கம் செய்து வெளியிட்டனர்.

இடம் வாங்குதல்

     அமிழ்தினும் இனிய தமிழ் அன்னைக்கு, வடவேங்கடம் முதல் தென்குமரி இடைப்பட்ட இடங்கள் யாவும், உரியனவாக இருந்தும், கரந்தையம் பதியில் தமிழன்னைக்கு இல்லம் எடுக்க, ஓர் அடி நிலம் கூட சொந்தமாய் இல்லையே என்று எண்ணிய உமாமகேசுவரனார் பெருங் கவலை அடைந்தார். சங்கமானது தோன்றிய நாளில் இருந்து, கந்தப்ப செட்டியார் சத்திரத்திலேயே செயல்பட வேண்டிய நிலையே நீடித்தது.

     விழாக் காலங்களிலும், திருமண நாட்களிலும், கந்தப்ப செட்டியார் சத்திரம்,  வாடகைக்கு விடப்படும். அத்தகைய நாட்களில், சங்கப் பணிகளை அச்சத்திரத்தில் செய்வது இயலாத காரியம். எனவே சங்கத்திற்கென்று சொந்தமாய ஓர் இடத்தினை வாங்கியே தீருவது என்று எண்ணி முயற்சியில் இறங்கினார்.
வள்ளல் பெத்தாச்சி செட்டியார்

     உமாமகேசுவரனாரின் மனக் குறையினைப் போக்க எண்ணிய, வள்ளல் பெத்தாச்சி செட்டியார் அவர்கள், சங்கத்திற்கு இடம் வாங்குவதற்காக ஒரு பெருந் தொகையினை அன்பளிப்பாக வழங்க முன்வந்தார்.

      சங்கத்திற்கு இடம் வாங்கும் பொருட்டு, வள்ளல் பெத்தாச்சி செட்டியார் அவர்கள், 1923 ஆம் ஆண்டின் மத்தியில், உமாமகேசுவரனாரை அழைத்துக் கொண்டு, தஞ்சையில் பல இடங்களையும் சுற்றிப் பார்த்தார்.

     இறுதியில் கரந்தை வடவாற்றின் வடகரையில் அமைந்திருந்த, ஒரு பெரும் இடத்தினை வாங்குவதென்று முடிவு செய்தனர். அவ்விடம் கரந்தை பாவா மடத்திற்குச் சொந்தமானதாகும். பாவா மடத்தினரிடமிருந்து, இவ்விடத்தினை நேரடியாக வாங்குவதற்கு உரிய பொருளில்லாத காரணத்தாலும், மேலும் மடத்திற்குச் சொந்தமான இடத்தினை விலைக்கு வாங்குவதால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சட்டச் சிக்கல்கலையும் மனதில் நிறுத்தி ஆராய்ந்தார் உமாமகேசுவரனார்.


…….. வருகைக்கு நன்றி நண்பர்களே, மீண்டும் சந்திப்போமா

11 ஜூலை 2013

கரந்தை - மலர் 15


----- கடந்த வாரம் ----
இத்தீர்மானமே, தமிழுக்குத் தனியே ஓர் பல்கலைக் கழகம் வேண்டுமென, தமிழ்கூறும் நல்லுலகில் இயற்றப்பட்ட முதல்  தீர்மானமாகும்.
---------------------

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பதினோராம் ஆண்டு விழா, 18.11.1922 மற்றும் 19.11.1922 ஆகிய தேதிகளில், சென்னை சட்டக் கல்லூரிப் பேராசிரியரும், காளிகட் பல்கலைக் கழகத்தின், சட்ட விரிவுரையாளரும், சங்கத்தின் உறுப்பினருமாகிய திரு சா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்றபோதும், தமிழ்ப் பல்கலைக் கழகம் குறித்த தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, அரசியலாருக்கு அனுப்பப் பெற்றது.

     மேலும், 22.9.1923 மற்றும் 23.9.1923 ஆகிய தேதிகளில், தமிழ் வள்ளல் சா.ராம.ழ.சித. பெத்தாச்சி செட்டியார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற, சங்கத்தின் பன்னிரண்டாம் ஆண்டு விழாவின்போதும், இத் தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப் பட்டது. இதே விழாவில், சென்னை மாகாணக் கல்வி அமைச்சர், சென்னைப் பல்கலைக் கழகத் திருத்தத்தை, வெகு திறமையுடன் முன் கொண்டு வந்து சட்டமாக்கியதற்காகவும், தமிழ் நாட்டிற்கென ஓர் பல்கலைக் கழகம் ஏற்படுத்துவதில், ஆதரவு காட்டி பேசியதற்காகவும், தங்கள் நன்றியை தெரிவித்து, அன்னவரை வாழ்த்துவதோடு, திருச்சிராப் பள்ளியில், ஓர் தமிழ்ப் பல்கலைக் கழகம் விரைவில் தோற்றுவித்தற்கான முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டுமென இப்பெருங்கூட்டத்தார் வேண்டிக் கொள்கின்றனர் எனும் மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

      சென்னை வளர்ச்சி நெறி அமைச்சர் மாண்புற்ற டி.என். சிவஞானம் பிள்ளை அவர்கள் தலைமையில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பதிமூன்றாம் ஆண்டு விழாவானது 20.9.1924 மற்றும் 21.9.1924 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இவ்விழாவிற்குச்  சில சட்டசபை உறுப்பினர்களும், தமிழ்ப் புலவர்களும் மற்ற பெரியோர்களும் வந்திருந்தனர்.

      வளமலியும்  பொருணிலையில்  மாணாமை  மயங்கிடினும்
      உளநிறையன்  பார்மிகுவ  தொருகரந்தை  யுறுசங்கம்
      உறுசங்கம்  இதுவென்றே  உற்றனையில்  வோங்கவையம்
      வருமெங்கள்  சிவஞான  வள்ளால்  நீவாழியவே

      புலமையினர்  சிலரேனும்  பொருள்பலர்  இலரேனும்
      வளமையெனும்  உளமுடையார்  வாய்கரந்தை  வளர்சங்கம்
      வளர்சங்கம்  இதுவென்றே  வந்தனையில்  மாவையம்
      உளமகிழெம்  சிவஞான  உயர்வோய்  நீவாழியவே

      வருதேவர்  பலராக,  மலிபகழார்  தமிழ்த்தேவெம்
      ஒருதேவென்  பார்மலியும்  ஓர்கரந்தை  ஒளிர்சங்கம்
      ஒளிர்சங்கம்  இதுவென்றே  ஓர்ந்தவையம்  நேர்ந்தனையால்
      எழிலன்பிற்  சிவஞான  ஏந்தால்  நீவாழியவே

எனச் சங்கத்தின் சார்பில் மாண்புற்ற அமைச்சர் டி.என். சிவஞானம் பிள்ளை அவர்களுக்கு வாழ்த்துப் பா வழங்கப் பெற்றது.

     இவ்விழாவிற்கு வந்திருந்தவர்களில் பொரும்பாலார் சென்னைச் சட்டசயையைத் தமிழை வளர்க்காததற்குக் குறை கூறித் தங்களுக்கென ஓர் பல்கலைக் கழகம் நிறுவிக்கொள முயன்றுவரும் ஆந்திரர்களின் ஊக்கத்தை எடுத்துக் காட்டி, சட்டசபையிலுள்ள தமிழர்கள், உடனே ஓர் சட்டம் கொண்டு வந்து, ஓர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை விரைவில் நிறுவ வேண்டுமென மிக ஆர்வத்தோடு பேசினார்கள். ராவ் பகதூர் டி.ஏ. செட்டியார் அவர்களும், திரு அலர்மேல் மங்கைத் தாயாரும், இப்பொழுதுள்ள சென்னைப் பல்கலைக் கழகத்தையே, நம்முடைய விருப்பம் போல் மாற்றிக் கொள்ள முயன்று, அவ்விருப்பம் கைகூடா விட்டால், தனியாக ஒரு பல்கலைக் கழகத்துக்காக உழைப்பது  நலமாயிருக்கும், என தங்களது எண்ணத்தினைத் தெரிவித்தனர். முடியுமானால் நாளையே ஓர் தமிழ்ப் பல்கலைக் கழகமொன்றை நிறுவிட வேண்டுமென்று எண்ணி வந்த பலரும், இவ்விருவரது எண்ணத்தைக் காதில் ஏற்றுக் கொள்ளவேயில்லை. ஆங்கு கூடியிருந்தவர்களின் விருப்பத்தைக் கைத் தூக்காற் கணக்கிட்ட பொழுது, திரு செட்டியார் அவர்களின் எண்ணத்தைச் சார்ந்தவர் வெகு சிலராகவே காணப்பட்டனர்.

     மேலும் இவ்விழாவின் போது, சென்ற ஆண்டுத் தீர்மானங்களை அரசியலார் இதுகாறுங் கருதாதிருத்தலுக்கு, இப்பெருங்கூட்டத்தார் வருந்தி, இம் முடிவுகளை பின்னரும் உறுதிபடுத்தி, இனி வாளாவிருத்தல் கூடாமையின், இம்முடிவுகளை அரசியலார் முதலியோருக்குத் தெரிவித்து, அவற்றை இனியும் காலந் தாழ்த்தாது நிறைவேற்றவும், தமிழ் மொழி, தமிழர்களின் மேம்பாடுகட்கு இன்னும் ஆனவற்றை எடுத்துரைத்து, நமது அருமைத் தமிழ் மொழி சிறந்து விளங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும, இப் பெருங்கூட்டத்தார், அடியிற் குறிப்பிட்டவர்களால் ஆகிய நிலைக் கழகம் ஒன்று ஏற்படுத்துகிறார்கள்.

     இப்பெருமக்கள் இந்த அருமைப் பணியினை மகிழ்ந்து ஏற்று, இனிது நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். ஒவ்வொரு நிலப் பகுதிக்கும் பெரும்பாலும் ஐந்து பேருக்கு மேற்படாமல், அவ்வப்போது வேண்டியிருப்பின் அறிஞர்களை சேர்த்துக் கொள்ளலாம்.


நிலைக் கழகத்தின் தலைவர் - இராமநாத புரம் அரசர்

நிலைக் கழகத்தின் அமைச்சர் - த.வே.உமாமகேசுவரனார்

சென்னை
திருவாளர்கள்
01.     நமசிவாய முதலியார்
02.    பவானந்தம் பிள்ளை
03.    திருநாவுக்கரசு முதலியார்
04.    ஏ.பாலகிருட்டின முதலியார்
05.    டாக்டர் கிருட்டினசாமி அய்யங்கார்

செங்கற்பட்டு
திருவாளர்கள்
01.     சச்சிதானந்தம் பிள்ளை
02.    சுவாமி வேதாசலனார்
03.    ஏ.இராமசாமி முதலியார்

தென் ஆற்காடு

01.     திரு உ.வே. சாமிநாத அய்யர்

வட ஆற்காடு

01.     திரு இராஜவேலு முதலியார்

சிற்றூர்
01.     திரு சி.ஆர்.இரட்டியார்

தஞ்சாவூர்
திருவாளர்கள்
01.     டி.முத்தைய முதலியார்
02.    ஐ.குமாரசாமி பிள்ளை
03.    அரங்க. வேங்கடாசலம் பிள்ளை

திருச்சிராப் பள்ளி
திருவாளர்கள்
01.     மு.வேங்கடசாமி நாட்டார்
02.    எஸ்.கே.தேவசிகாமணி
03.    அற்புதசாமி உடையார்

மதுரை
திருவாளர்கள்
01.     டி.சி.சீனிவாச அய்யங்கார்
02.    பி.டி.இராஜன்
03.    எம்.டி.சுப்பிரமணிய முதலியார்

திருநெல்வேலி
திருவாளர்கள்
01.     ஆர்.பி.சேதுப் பிள்ளை
02.    சுப்பிரமணிய பிள்ளை
03.    வி.ஆர்.சுப்பிரமணிய முதலியார்

இராமநாதபுரம்
திருவாளர்கள்
01.     மு.கதிரேசச் செட்டியார்
02.    சர் எம்.சி.டி.முத்தையச் செட்டியார்
03.    எம்.ஏ.ஆர்.என்.இராமநாதன் செட்டியார்

திருவனந்தபுரம்
01.     திரு டி.இலட்சுமனப் பிள்ளை

இலங்கை
திருவாளர்கள்
01.     எஸ்.அனவரத விநாயகம் பிள்ளை
02.    சர் பி.இராமநாதன்
03.    சுவாமி விபுலானந்தர்

சேலம்
01.     திரு டாக்டர் எஸ்.சுப்பராயன்

கோயமுத்தூர்
திருவாளர்கள்
01.     சி.கே.சுப்பிரமணிய முதலியார்
02.    இராமலிங்கம் செட்டியார்
03.    சி.எம்.இராமச்சந்திர செட்டியார்

பொது
01.     திரு. பி.வி.மாணிக்க நாயக்கர்

எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தினை கும்பகோணம் திரு ஊ.சா.வேட்கடராம அய்யர் அவர்கள் முன்மொழிய, இலக்கண விளக்கப் பரம்பரை சோமசுந்தர தேசிகர் அவர்கள் வழிமொழிந்தார்.

     மேலும் தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டுவது தொடர்பாக, கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழான தமிழ்ப் பொழில் இதழில் பல கட்டுரைகள் வெளியிடப் பெற்றன.

     ஓர் தமிழ்ப் பல்கலைக் கழகம் தனிமையாக நமக்கு வேண்டுமாவென்ற கேள்வியைப் பல வகையாக ஆராய்ந்தால் அன்றி, நேரான விடையறுக்க இயலாது. முதன் முதல் நமக்கு எத்தகைய பல்கலைக் கழகம் தேவை என்பதை ஆராய்ந்த பிறகே, எவ்வூரில் நிறுவப்படல் வேண்டும் என்பதைப் பற்றியும், அதற்காக வேண்டியிருக்கும் பொருளை எவ்வாறு சேர்க்க வேண்டும் என்பதைப் பற்றியும் ஆராய்வது பொருத்தமாகும். நமது வருங்கால நிலையை நோக்குமிடத்து, இப்பொழுது நாம் கையாண்டு வரும் கல்வி முறைகள் அறவே மாற்றப்பட வேண்டும் என்பதை எவரும் ஒப்ப வேண்டும். நாம் எதிர்பார்த்து ஏங்கியிருப்பது தன்னரசுக்காக. தன்னரசாலேதான் எவ்வித நன்மையையும் பெற இருக்கிறோம். ஆகவே நமது மக்களை விரைவில் தன்னரசுக்குத் தகுதியுள்ளவர்களாக்க தாய் மொழிகளே தகுந்த வழிகளாகும்.

     உண்மையான தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், தமிழே கல்வி புகட்டும் கருவியாக இருத்தல் வேண்டும். பிற நாடுகளில் அவரவர் மொழிகள், எவ்வாறு போற்றப்பட்டு முற்றும் பயனுள்ளவையாக ஆக்கப்பட்டுள்ளனவோ, அவ்வாறே தமிழும், தமிழகத்தில் ஒரு மொழியாக நிலவ வேண்டும். எவ்வகை அறிவு நூல்களையும், விரைவில் தமிழ் மொழியில் பெயர்த்துக் கொள்ளலாம். எவ்வளவு வளப்பமில்லாத மொழியையுங்கூட, நாம் மனம் வைத்தால், சிறந்த மொழியாக விரைவில் வளர்த்து விடலாம். அவ்வாறு செய்யாவிட்டால் நமக்கு வாழ்வில்லை, சிறப்பில்லை.

     ஆகையால் தனித் தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் தவிர, வேறொன்றும் நமக்கு இப்பொழுது வேண்டுவதில்லை என்று கூறி இக்கட்டுரையை முடிப்பதற்கு முன், ஸ்பானிய, போர்த்துக்கல், சுவிட்ரசர்லாந்து போன்ற சிறு சிறு நாடுகளும், தம்தம் மொழிகளிலேயே பெருவாழ்வு வாழ்ந்து வருவதெனப் படிப்போர்க்கு நினைவுறுத்துகின்றேன் என்று 1926 ஆம் ஆண்டிலேயே சி. வேதாசலம் அவர்கள் தமிழ்ப் பொழில் இதழில் எழுதியுள்ளார்.

     இந்நிலையில், இராசா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள், சிதம்பரத்தில் நிறுவி நடத்தி வந்த மீனாட்சிக் கல்லூரியினையும், அதன் உறுப்புகளாக உள்ள, கீழ் நாட்டு மொழிப் பண்டிதர் பயிற்சிக் கல்லூரியையும், கீழ்நாட்டு மொழிக் கல்லூரியையும் ஒன்று சேர்த்து ஓர் பல்கலைக் கழகமாக மாற்றிட முயற்சி மேற்கொண்டார். மேலும் இப் பல்கலைக் கழகத்திற்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகம் என்று, தனது பெயரினையே சூட்டவும் விரும்பினார். ஆனால் அன்றைய ஆங்கிலேய அரசின் விதிமுறைகள், தனி நபரின் பெயரில் பல்கலைக் கழகம் தொடங்குவதை அனுமதிக்கவில்லை.


      சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள், நீதிக் கட்சியின் முக்கியமானத் தலைவர்களுள் ஒருவரும், சிறந்த வழக்கறிஞருமான உமாமகேசுவரனாரை அணுகி ஆலோசனைக் கேட்டார். உமாமகேசுவரனார் அவர்கள், இன்றைய சட்ட விதிகளின் படி, தனி நபரின் பெயரில் பல்கலைக் கழகம் நிறுவிட இயலாது. ஆனால் ஒரு ஊரின் பெயரால், நகரின் பெயரால் பல்கலைக் கழகம் தொடங்கிட, சட்ட விதிகளின் இடமிருக்கின்றது. எனவே தாங்கள், முதலில் தங்கள் பெயரில், அண்ணாமலை நகர் என்னும் ஒரு நகரை உருவாக்குங்கள். பின்னர் அண்ணாமலை நகரில் தொடங்கப்பட இருப்பதால், இப்பல்கலைக் கழகத்திற்கு, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் என்று பெயரிட விரும்புவதாகக் கூறி விண்ணப்பம் செய்யுங்கள் என்று சீரிய ஆலோசனையினை வழங்கினார். உமாமகேசுவரனாரின் ஆலோசனையின் படியே, அண்ணாமலைப் பல்கலைக் கழகமானது, 1929 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்றது.

     சிறந்ததொரு ஆலோசனையினை வழங்கி உதவிய உமாமகேசுவரனாருக்கு, நன்றி தெரிவிக்கும் வகையிலும், உமாமகேசுவரனாரின் சீரிய தலைமையில், கரந்தைத் தமிழ்ச் சங்கம் ஆற்றிவரும் அரும் பணிகளைப் பாராட்டும் வகையிலும், சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள், அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு என்று ஓர் இடத்தினை நிரந்தரமாக வழங்கினார்.

     தமிழுக்குத் தனியே ஓர் பல்கலைக் கழகம் வேண்டும் எனும் கோரிக்கையானது, அண்ணாமலைப் பல்லைக் கழகத்தின் வரவால் சிறிது தளர்ச்சியுற்றது. காரணம், அண்ணாமலைப் பல்கலைக் கழகமானது, முழுமையாக தமிழ் வளர்க்கும் பல்கலைக் கழகமாகச் செயல்படும் என்று பலரும் நம்பினர். இதனால் தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட வேண்டும் என்னும் முயற்சி நெகிழ்வுற்றது.

     அறிவியல் கலைகளை எல்லாம் தமிழில் கற்பிக்க வேண்டும் என்பதற்காகத்தான், தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப் பெற வேண்டுமென்று, சான்றோர் விரும்பினர். ஆனால் அண்ணாமலைப் பல்கலைக் கழகமானது, இந்நோக்கத்தினை நிறைவேற்றவில்லை எனலாம்.


     பின்னாளில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், அண்ணாமலைப் பல்கலைக் கழகக் கூட்டத்தில் கலந்து கொண்ட திரு சி.வேதாசலம் அவர்கள், இது குறித்துக் கண்டனம் தெரிவித்துப் பேசியபோது, பல்கலைக் கழகத்தின் சார்பில் விடை கூறியவர்,

நம் பல்கலைக் கழகம் தமிழ் பல்கலைக் கழகம் அன்று,
தமிழ் (பேசும்) மாவட்டங்களுக்கு உரிய பல்கலைக் கழகம் அவ்வளவுதான்

( Our University is not a Tamil University,
It is a University for Tamil Districts. That’s all)  

என்று தெரிவித்தாராம்.

..... வருகைக்கு நன்றி நண்பர்களே மீண்டும் சந்திப்போமா