அத்தியாயம் 14
------------------------
இராமானுஜன் எங்கிருக்கிறார் என்று யாருக்குமே தெரியவில்லை.
இராமானுஜனைக்
காணவில்லை.
------------------
கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பட்டம்
பெற்றதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தன் நண்பர்களுக்கும், தனது தாயாருக்கும்
எழுதிய கடிதத்தில், இலண்டனில் தொடர்ந்து மேலும் இரண்டாண்டுகள்
தங்கியிருப்பதுதான் என் ஆய்விற்கு உதவும் என நம்புகிறேன் என எழுதியிருந்தார்.
கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஒவ்வொரு
மாணவருக்கும் ஒரு பயிற்றுநர் நியமிக்கப்படுவது வழக்கம். அவ்வாறு இராமானுஜனுக்குப்
பயிற்றுநராக, வழிகாட்டியாக நியமிக்கப்பட்டவர் இ.டபிள்யூ. பேர்னஸ்.
இ.டபிள்யூ
பேர்னஸ் 1915 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில், சென்னைப் பல்கல்க் கழகப் பதிவாளர்
பிரான்சிஸ் டௌஸ்பெரி அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், இராமானுஜன் தன் ஆய்வுப்
பணிகளை மிகவும் சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறார். எதிர்வரும் 1917, அக்டோபர்
மாதத்தில் இராமானுஜன் ட்ரினிட்டி கல்லூரியின் பெலோசிப்பிற்குத்
தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி. மேலும் இராமானுஜனுக்குச் சென்னைப் பல்கலைக் கழகம்,
கல்வி உதவித் தொகையினை இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே அனுமதித்துள்ளது. இக்காலக்கெடு
நிறைவடையும் தருவாயில் இருப்பதால், இக்காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுகிறேன் என
வேண்டுகோள் விடுத்தார்.
சென்னையில் இருந்து சர் பிரான்சிஸ்
ஸ்பிரிங்கும் இதே கோரிக்கையினைச் சென்னைப்
பல்கலைக் கழகத்தார் முன் வைத்தார். சென்னைப் பல்கலைக் கழகமும் ஓராண்டிற்கும்,
தேவைப்படின் மேலும் ஓராண்டிற்கும், கல்வி உதவித் தொகையினை நீட்டித்து வழங்குவதாக
அறிவித்தது.
இராமானுஜனின் மனத் தளர்ச்சி
ஒரு ஆசாரமான குடும்பத்தில் பிறந்து, சைவ
உணவுகளை மட்டுமே உண்டு, வாழ்வின் பெரும் பகுதியினை, தலையில் குடுமியுடனும், வேட்டி
சட்டையுடனும், காலில் செறுப்புடனும் கழித்த இராமானுஜன், இலண்டன் பயணத்திற்காகத்
தன் முடி அமைப்பை, உடையின் வகைகளை மாற்றிக் கொண்டு, இலண்டனின் தட்ப வெட்ப
நிலையையும், குளிரையும் பொருட்படுத்தாது வாழ்ந்தாரே தவிர, தனது சைவ உணவையும், தனது
மன இறுக்கத்தையும் மாற்றியமைத்துக் கொள்ள இயலாதவராகவே இருந்தார்.
இலண்டன்
வந்து சேரும் வரை, வீட்டின் சமையலறை பக்கமே சென்று அறியாத இராமானுஜன், இலண்டனில்
தனக்கு வேண்டிய உணவைத் தானே தயாரித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
சில சமயங்களில் விடுமுறை நாட்களிலும்,
ஞாயிற்றுக் கிழமைகளிலும், கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயிலும் இந்திய
மாணவர்களை அழைத்து, சாம்பார், ரசம் எனத் தயார் செய்து விருந்தளிப்பார். ஒரு சமயம்
இந்து நாளிதழின் நிறுவனரும், ஆசிரியருமான கஸ்தூரி ரங்கன் அவர்கள்,
கேம்ப்பிரிட்ஜ் சென்று இராமானுஜனைச் சந்தித்தபோது, அவருக்காகப் பொங்கல் தயாரித்து
விருந்தளித்து அசத்தினார்.
கேம்ப்பிரிட்ஜ்
பல்கலைக் கழகத்தில் பயின்று வந்த, பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த சந்திர சட்டர்ஜி
என்பாருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது. இந்நிகழ்வினைக் கொண்டாட
விரும்பிய இராமானுஜன், சந்திர சட்டர்ஜியை விருந்திற்கு அழைததார்.
இராமானுஜன்
வழங்க இருக்கும் விருந்தில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் வகையில், சந்திர
சட்டர்ஜி, தன் வருங்கால மனைவியான, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிலும் இள
ருத்ராவுடன் இராமானுஜன் இல்லத்திற்கு வருகை தந்தார். கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக்
கழகத்தைச் சார்ந்த நியூஹாம் கல்லூரியில் பயிலும், ஹைதராபாத்தைச் சார்ந்த மிருளானி
சட்டோபாத்யாயாவையும் உடன் அழைத்து வந்தார். பின்னாளில் இந்தியத் தொழிலாளர்
கழகத்தின் முன்னேற்றத்திற்காகத் தீவிரமாகப் பணியாற்றியவரும், தாழ்த்தப்பட்ட
மக்களுக்காகத் த்னியொரு பள்ளியைத் தொடங்கியவருமான மிருளானி சட்டோபாத்யாயா இவர்தான்.
விருந்தினர்
மூவரையும் தன் இல்லத்தில் வரவேற்ற இராமானுஜன், மூவரையும் அமரச் செய்து, தானே
தயாரித்த சூப்பை வழங்கினார். மூவரும் அருந்திய பின், மீண்டும் தேவையா எனக் கேட்டு
இரண்டாம் முறையும் சூப்பை வழங்கினார். மூன்றாம் முறை, மீண்டும் சூப் அருந்துகிறீர்களா
என இராமானுஜன் வினவ, சந்திர சட்டர்ஜி தனக்கு வேண்டும் எனப் பெற்றுக் கொள்ள,
பெண்கள் இருவரும் போதும் எனக் கூறினர்.
உணவிற்கு
இடையில் தங்கள் பேச்சினைத் தொடர்ந்த மூவரும், சிறிது நேரத்தில், அந்த இல்லத்தில்
தாங்கள் மூவர் மட்டுமே இருப்பதையும், இராமானுஜன் அங்கு இல்லாததையும் உணர்ந்தனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் மூவரும்
காத்திருந்தனர். இராமானுஜன் வரவேயில்லை. வீடு முழுக்கத் தேடினர். பின்னர் சட்டர்ஜி
கட்டிடத்தின் அடித்தளத்திற்குச் சென்று விசாரித்தார். இராமானுஜன் அவசர, அவசரமாகக் கீழிறங்கி
வந்து, ஒரு டாக்ஸியில் கிளம்பிச் சென்றதை அறிந்து
திடுக்கிட்டார். இரவு பத்து மணி வரை மூவரும் காத்திருந்தனர். இராமானுஜன்
வரவேயில்லை.
அன்று மட்டுமல்ல, அடுத்த நான்கு நாட்களும்
இராமானுஜன் எங்கிருக்கிறார் என்று யாருக்குமே தெரியவில்லை. இராமானுஜனைக்
காணவில்லை.
.... வருகைக்கு நன்றி நண்பர்களே,
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா.
--------------
வாலையானந்தா சுவாமிகள்
ஞாயிற்றுக் கிழமை (6.01.13) காலை 7.00 மணி.
என் அலைபேசி உயிர் பெற்று ஒலித்தது. மறுமுனையில் நண்பர் சரவணன்.
இன்று ஏதேனும் முக்கிய வேலை இருக்கிறதா?
கொரடாசேரிக்கும், திருவாரூருக்கும் சென்று வருவோமா? என்றார். சற்றும்
தாமதியாமல், சென்று வருவோம் என்றேன்.
நண்பர் சரவணன் |
பதினைந்து நாட்களுக்கு முன், நண்பர்
சரவணனுடன் கொரடாசேரி சென்ற பொழுது, சென்றே தீரவேண்டும் என்று எண்ணியிருந்த ஓர்
இடத்திற்கு, நேரமின்மைக் காரணமாகச் செல்ல இயலாமல் போய்விட்டது. மறுமுறை கொரடாசேரி
செல்வதற்கான வாய்ப்பு கிடைக்காதா என்று எண்ணி ஏங்கிக் காத்திருந்த வேலையில்தான்
நண்பர் சரவணன் அழைத்தார்.
நான் ஆசிரியராகப் பணியாற்றும், உமாமகேசுவர
மேனிலைப் பள்ளியில், வேதியியல் முதுகலை ஆசிரியராகப் பணியாற்றிவரும், எனது நண்பர்
வெ.சரவணன் அவர்கள், கல்வியியலில்,
மனவெழுச்சி
நுண்ணறிவு, அறிவியல் படைப்பாக்கம்,
பிரச்சினைகளைத்
தீர்க்கும் திறனில்
நகர் புற
மாணவர்களுக்கும், கிராமப் புற மாணவர்களுக்கும்
இடையேயான
ஒப்பீடு – ஓர் ஆய்வு
என்னும் தலைப்பில் முனைவர்
பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டு வருகின்றார்.
இந்த ஆய்விற்காக மாணவர்களின், மனவெழுச்சி
நுண்ணறிவு, அறிவியல் படைப்பாக்கம் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன்களை
மதிப்பீடு செய்யும் வகையில், மூன்று வகையான வினாத் தாட்களைத் தயாரித்துள்ளார். இம்
மூன்று தேர்வுகளையும், மாணவர்கள், நாளொன்றுக்கு ஒரு தேர்வு வீதம் எழுத வேண்டும்.
இத்தேர்வுகளை இரண்டு மாவட்டங்களில் உள்ள எட்டு பள்ளிகளில் நடத்தியாக வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள, நகரப் பகுதியில் அமைந்திருக்கும் அரசு மேனிலைப்
பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளி, மேலும் அதே மாவட்டத்தின் கிராமப்
புறத்தில் அமைந்துள்ள அரசு மேனிலைப் பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளி
என மாவட்டத்திற்கு நான்கு பள்ளிகளில் இத்தேர்வினை நடத்தியாக வேண்டும்.
அப்பொழுதுதான் நகர்புற மாணவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்குமான திறமைகளை ஓப்பீடு
செய்ய இயலும்.
நணபர் சரவணன் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தினையும்,
திருவாரூர் மாவட்டத்தினையும், தனது ஆய்வுக் களமாகத்
தேர்ந்தெடுத்திருந்தார்..
திருவாரூர் மாவட்டத்தில், திருவாரூரிலேயே
இரு பள்ளிகளையும், திருவாரூர் மாவட்டத்தின் கிராமப் பகுதியான கொரடாசேரியில் இரு
பள்ளிகளையும் தேர்ந்தெடுத்திருந்தார். பதினைந்து நாட்களுக்கு முன், இருவரும்
கொரடாசேரி சென்றோம். இரு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுமே, சரவணனின் நண்பர்கள்.
மேலும் கொரடாசேரி அரசு பெண்கள் மேலைப் பள்ளியில், எனது நண்பர்களான திரு இராசாராம்
அவர்களும், திரு பொன்மணி அவர்களும் முதுகலை ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அந்நண்பர்களையும் சந்திக்கலாமே என்ற ஆவல்.
இதுமட்டுமல்ல, மேலும் ஓர் ஆர்வம் என்னுள்ளே
நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது. அதுதான் கொரடாசேரி வாலையானந்த சுவாமிகள்
மடத்திற்குச் செல்ல வேண்டும் என்ற தணியாத தாகமாகும்.
எனவே இருவரும் சென்றோம். நண்பர்களைச்
சந்தித்தோம். வினாத் தாட்களை வழங்கினோம். ஆனால் இரு பள்ளிகளிலும் உள்ள நண்பர்களை
நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்ததால், உடனே விடைபெற இயலாத நிலை. நேரம் பிற்பகலானது.
எனவே வாலையானந்த சுவாமிகளின் மடத்திற்குச் செல்ல இயலாமல் திரும்பினோம். மனதில்
இந்த ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது.
எனவே மீண்டும் நண்பர் சரவணன் அழைத்ததும்,
தாமதியாமல் உடனே கிளம்பினேன். இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டோம். கொரடாசேரியை
அடைந்தோம்.
கொரடாசேரி அரசு பள்ளியில், தற்காலிகப் பணியிடத்தில், முதுகலை ஆசிரியராகப்
பணியாற்றி வரும் திரு வேலவன் அவர்கள் எங்களுக்காகக் காத்திருந்தார். இவர்
கொரடாசேரியில் தனிப் பயிற்சி மையம் நடத்தி வருபவர்.
விடுமுறை நாளில் விடைத்தாட்களைப் பெற்றுக்
கொள்வதாக, ஏற்கனவே கூறியிருந்ததால், ஞாயிற்றுக் கிழமையன்று, தனது தனிப் பயிற்சி
மையத்தில் எங்களுக்காகக் காத்திருந்தார். நன்றி கூறி விடைத்தாட்களைப் பெற்றுக்
கொண்டோம்.
திரு வேலவன் அவர்கள், தான் அரசுப் பள்ளியில
பணியாற்றிய தற்காலிகப் பணியிடமானது, கடந்த வாரம் நிரப்பப் பட்டு விட்டமையால்,
பள்ளியிலிருந்து விலகி விட்டதாகவும், தற்பொழுது, ஆசிரியர் தகுதித் தேர்வு
எழுதுவதற்காக முழு மூச்சுடன் தயாராகி வருவதாகவும் கூறினார்.
தற்காலிகப் பணியினை வேலவன் தொடராதது,
எங்களுக்கு வருத்தமளித்தாலும், கவலைப் படாதீர்கள், இதுவும் நன்மைக்கே, தற்பொழுது
கிடைத்துள்ள கூடுதல் நேரத்தையும் ஆசிரியர் தகுதித் தேர்விற்குப் படிக்க,
முழுமையாகப் பயன் படுத்திக் கொள்ளுங்கள். நிரந்தர அரசுப் பணியொன்று தங்களுக்காகக்
காத்திருக்கின்றது என வாழ்த்தி விடை பெற்றோம்.
கடந்த வருடத்தில் ஒருநாள், உமாமகேசுவர
மேனிலைப் பள்ளியில், என்னுடன் பணியாற்றும், எனது பால்ய நண்பர் எஸ்.மோகன்,
வாலையானந்தா மடத்திற்குச் சென்று வந்ததைப் பற்றிக் கூறியிருந்தார். அன்றிலிருந்தே,
கொரடாசேரி செல்ல வேண்டும், வாலையானந்தா மடத்தைக் காண வேண்டும் என்று மனதில்
குடிகொண்டிருந்த ஆசை, இதோ இன்று நிறைவேறப் போகின்றது.
இதோ வெண்ணவாசல். இதோ இதுதான் பாண்டவை ஆறு. இடது புறம் திரும்பி, பாண்டவை ஆற்றின் வடகரையின் வழியே சென்றோம். ஒரு திருப்பத்தில், இடதுபுறமாக, அதோ அந்த தென்னந் தோப்பிற்குள் இருக்கின்றதே, அதுதான் வாலையானந்த சுவாமிகள் மடம்.
இதுதான் தமிழவேள் உமாமகேசுவரனார்
சித்தாந்தம் கற்ற இடம், தீட்சிதை பெற்று துறவியாய் உருமாறிய இடம்.
உணவெலாந் தமிழ்ச்சுவையே
உறவெலாந்
தமிழ்ப்புலவ ருவக்கும்
அன்பிற்
றணவிலா நன்மக்கள்
தமிழ்பயிலும்
மாணவரே
தமிழ்த்தாய்க் கேற்ற
குணநிலா வியமகனே
உமாமகேச்
சுரப் பெயர்கொள் கோவே
தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்கள், கரந்தைத்
தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவராய் அமர்ந்து, முப்பதாண்டுகள் ஒப்பிலாப்
பணியாற்றிய மாமனிதர். ஒழுக்கத்தின் பிறப்பிடம், உயர் குணங்களின் உறைவிடம்.
மாண்ட தமிழை மீட்டெடுத்து, தூய தமிழ் நடையாம்
கரந்தை நடை கண்ட கவின் மிகு தமிழ்க் காதலர்.
திரு, திருவாளர், திருமண அழைப்பிதழ்
முதலான தூய தமிழ்ச் சொற்களைத் தமிழுலகிற்கு அறிமுகப் படுத்தியவர்.
தமிழ் ஓர் உயர் தனிச் செம்மொழியே என
1919 லேயே உரத்த குரல் கொடுத்தவர்.
தமிழுக்குத் தேவை தனியே ஓர் பல்கலைக்
கழகம் என 1925 ஆம் ஆண்டிலேயே முழங்கியவர்.
கட்டாய இந்தியை எதிர்த்து 1934
லிலேயே, சிங்கமாய் கர்ஜித்த தமிழ்ச் செம்மல். அச்சம் என்பதை அறியா தமிழ் மறவர்.
இத்தகு பெருமை வாய்ந்த தமிழவேள் அவர்கள்,
தனது குருவாய் போற்றி வணங்கியவர்தர்ன் வாலையானந்த சுவாமிகள். தமிழவேள் பல காலம்
தங்கி சித்தாந்தம் கற்றதும், சைவம் உணர்ந்ததும் வாலையானந்தா சுவாமிகளிடம்தான்.
வாலையானந்தா சுவாமிகள் அவர்கள் 1879 ஆம்
ஆண்டில், காரைக்காலை அடுத்த பொன்பற்றி என்னும் சிற்றூரில் பிறந்தவர். சிறுவயதிலேயே
ஆன்மீக நாட்டம் கொண்டு, சமய தீட்சையும், நிர்வாண தீர்சையும் பெற்றவர்.
சச்சிதானந்தன் என்னும் தீட்சா நாமம் பெற்றவர்.
தனக்கெனத் தனியிடம் தேடி, திருவாரூர்
மாவட்டம், வெண்ணவாசல் சிற்றூரின், பாண்டவை ஆற்றின் வடகரையில், பஞ்சாட்ச புரம்
என்னும் பெயரில் மடம் அமைத்தவர்.
சித்தாந்த நிலையம்
என்னும் குடில் அமைத்து, சித்தாந்தம் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டவர். சித்த
மருத்துவத்தில் சீரிய புலமை பெற்று, தனக்கென தனியொரு வழியை அமைத்துக் கொண்டு,
குட்டரோகம் போன்ற கடும் நோய்களையும், எளிதில் குணப்படுத்தியவர்.
சித்தாந்தப்
பட விளக்கம் என்னும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட நூலை 1917 இல் எழுதி
வெளியிட்டவர். மேலும், சித்தாந்த விளக்க பால பாடம், துகளறு போதம், குண்ட வீதி,
சிவனடியார் திருக் கூடம், அனுட்டான வீதி, பிரசாத படம், தத்துவ விளக்கச் சுருக்கம்,
சிவஞான போத சூரணிக் கொத்து, சிவஞான போதவுரை, தமிழ் மறை படம், திரிபதார்த்த
சிந்தனை, சிவாலயமும் கும்பாபிடேகமும் முதலான நூல்களை எழுதியும், ஏராளமான
நூல்களைப் பதிப்பித்தும், அயராத தமிழ்ப் பணியாற்றியவர்.
தமிழவேள்
உமாமகேசுவரனார் மட்டுமல்ல, நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஔவை துரைசாமி
பிள்ளை, முதத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் போன்றத் தமிழ்ப் பெரியார்கள்
பலரும், இவரிடத்து சித்தாந்தம் பயின்று சைவப் புலமைப் பெற்றவர்களாவர்.
தமிழவேள்
அவர்கள், தனது முப்பதாம் அகவையிலேயே, தம் இனிய வாழ்க்கைத் துணை நலத்தை இழந்தார்.
சில ஆண்டுகளிலேயே, தனது தமயன், சங்கம் நிறுவிய துங்கன் இராதாகிருட்டினனையும்
இழந்தார். அருமை மகன் பஞ்சாபகேசன்தனையும் இழந்தார்.
துன்பங்கள் தொடர்ந்து வந்தபோதும், தமிழ்
நினைவோடு வாழ்ந்தவர் உமாமகேசுவரனார். உறவினர்களும், நண்பர்களும், எதிர்கால நலன்
கருதியாவது, இரண்டாவது மணம் புரிய வற்புறுத்திய போது, நான் என் மனைவியின்
நினைவுகளோடு வாழவே விரும்புகின்றேன். புது உறவினை என்றும் நினையேன், நான் மீண்டும்
ஒரு வீட்டிற்கு மருமகனாய் செல்ல விரும்பவில்லை என மறுத்த உயரிய பண்பாளர்.
ஒருத்திக்கு ஒருவன் என்றால்,
ஒருவனுக்கும் ஒருத்திதான் என உறுதிபடக் கூறி வாழ்ந்த உன்னதர்
உமாமகேசுவரனார்.
எழிலார்ந்த
தனது தோற்றத்தினைக் கண்டு மகிழும் உரிமை, என் மனைவிக்கு மட்டுமே உரிமையானது என்று
கூறி, வாழ்க்கைத் துணையினை இழந்த, அந்நாளில் இருந்து, ஒப்பனைகளைத் துறந்தவர்.
நிலைக் கண்ணாடியின் முன் நின்று, தன் முகம் பார்க்கும், பழக்கத்தினையே அடியோடு
விட்டொழித்த ஒழுக்கத்தின் உறைவிடம் உமாமகேசுவரனார்.
அக்காலச் செல்வந்தர்களும், மெத்தப்
படித்தவர்களும், தங்களின் தனி அடையாளமாய், தலைப் பாகை அணிவது வழக்கம். ஆனால்
உமாமகேசுவரனார் தலைப் பாகை அணிவதற்காகக் கூட, நிலைக் கண்ணாடியின் முன் நிற்கும்
பழக்கத்தைத் துறந்தார், மறந்தார். அதனால்தான் இன்று கிடைக்கும், ஒன்றிரண்டு
உமாமகேசுவரனாரின் படங்களில் கூட, தலைப்பாகை ஒழுங்கின்றி இருக்கும் பாங்கைக்
காணலாம்.
மறுமணம்
குறித்த உறவினர்களின் வற்புறுத்தல்கள் தொடரவே, அதிலிருந்த மீள, வாலையானந்தா
சுவாமிகளின் மடம் நோக்கிச் சென்றார்.
தனது குரு வாலையானந்தா
சுவாமிகளைக் கண்டு பணிந்து, வணங்கி, தீட்சதை பெற்று, வீரத் துறவியானார், தமிழ்
மறவரானார்.
ஆம்.
உமாமகேசுவரனார் இல்லற பந்தம் அறித்தெறிந்து, தமிழ் வாழ, தமிழன்னையோடு சங்கமித்து,
தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும், அன்னைத் தமிழுக்கு அர்ப்பணித்த உன்னத இடம்,
இவ் வாலையானந்தா சுவாமிகள் மடமாகும்.
வண்டியை
நிறுத்தி, நானும் நண்பர் சரவணனும் கீழே இறங்கினோம். தென்னந் தோப்பைச் சுற்றிலும்,
மூங்கில் பட்டைகளால் ஆன வேலி. முன்புறத்தில் ஒரு பெரிய கீற்றுக் கொட்டகை.
மூங்கில்
பட்டைகளால் ஆன சிறிய கதவினைத் திறந்து கொண்டு, உள்ளே காலடி எடுத்து வைத்தோம். உடல்
சிலிர்த்தது. சொர்க்க வாசல் கதவினைத் திறந்தாற் போல், உள்ளத்தில் உணர்வலைகள்.
மெல்ல உள்ளே சென்றோம்.
கீற்றுக்
கொட்டகையில் முதியவர் ஒருவர் நின்றிருக்க, கைக் கூப்பி வணங்கியவாறு, அறிமுகப்
படுத்திக் கொண்டோம். கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்றப் பெயரினைக் கேட்டவுடன்,
அப்பெரியவரின் முகம் மலர்ந்தது. வாருங்கள், வாருங்கள் என இருகரம் கூப்பி
வரவேற்றார்.
கீற்றுக்
கொட்டகையினைத் தாண்டி ஒரு பெரும் தோப்பு. தென்னை மரங்களும், பாக்கு மரங்களும்,
வேப்ப மரங்களும் நிறைந்திருந்தன. தொலைவில் ஒரு சிறிய கோயில். அப்பெரியவர் அங்கு,
எங்களை அழைத்துச் சென்றார். அருகில் சென்றதும்தான் தெரிந்தது, அது கோயில்தான்,
வாலையானந்தா சுவாமிகள் மீளாத் துயில் கொள்ளும், தமிழ்த் தாயின் கருவறை என்பது
புரிந்தது. கருவறையின் நடுவினில் சிறிய லிங்கமும், அதன் அருகினில், வாலையானந்தா
சுவாமிகளின் பாதரட்சையும்.
இருவரும் கண் மூடி, கைக்கூப்பி வணங்கினோம்.
உமாமகேசுவரனாரின் குரு உறங்கும் இடமல்லவா? உமாமகேசுவரனாருடன் பேசியபடியே,
வாலையானந்தா சுவாமிகள் நடமாடிய காட்சி, அகக் கண்ணில் விரிந்தது. உமாமகேசுவரனார்
எத்துனை முறை இங்கு வந்திருப்பார். எவ்வளவு காலம் இங்கு தங்கியிருப்பார். எண்ணிப்
பார்க்கிறேன்.
விசாலமான இத்தேர்ட்டத்தில்,
உமாமகேசுவரனாரின் மூச்சுக் காற்றும் கலந்திருக்குமல்லவா? உமாமகேசுவரனாரின் தமிழ்ப்
பேச்சை இங்கிருக்கும் மரங்கள் கேட்டிருக்குமல்லவா? உமாமகேசுவரனாரின் தமிழ் மூச்சை,
இங்கிருக்கும் மரங்களும் சுவாசித்திருக்குமல்லவா? ஏதேதோ எண்ணங்கள் மனதினில்
சுழல்காற்றாய் சுழன்றடிக்க, சிறிது நேரம் அங்கேயே நின்றோம்.
வாலையானந்தா சுவாமிகள்
நடந்துவரும் பொழுது எழும் பாதரட்சை ஒலி கேட்கிறது. திடுக்குற்ற நாற்புறமும்
நோக்குகிறோம். தென்னை மட்டைகள் காற்றில் ஒன்றோடு ஒன்று மோதி எழுப்பும் ஓசை என்பது
புரிந்தது.
பின்னர் மூவரும் பேசியபடியே, கீற்றுக்
கொட்டகைக்கு வந்தோம். கீற்றுக் கொட்டகையினை ஒட்டி, ஒரு ஓட்டுக் கட்டிடம். ஒரு
புறம் வீடு, அதனை ஒட்டி ஒரு சிறு கோயில். கோயிலின் கருவறையில் அமர்ந்து
அருள்பாலிக்கும் தெய்வத்தைக் கண்டோம்.
அங்கு எங்களுக்கு காட்சி தந்தது, ஸ்ரீ சக்ர மகாமேரு.
உலகில்
வேறு எங்கனுமே இல்லாத வகையில், வாலையானந்தா சுவாமிகளால் உருவாக்கப் பெற்ற ஸ்ரீசக்ர
மகா மேரு சுடர் வெளிச்சத்தில் பிரகாசித்தது.
1958 ஆம் ஆண்டில் வாலையானந்த சுவாமிகள்
இறைவனடி இணைந்த பிறகு, நாற்பதாண்டுகள், ஸ்ரீசக்ர மேருவினைத் தரிசிக்கப்
பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டது. 2004 ஆம் ஆண்டு முதல் மகா மேருவைத்
தரிசிக்க மக்கள் அனுமதிக்கப் படுகின்றார்கள். உமாமகேசுவரனாரையும், வாலையானந்தா
சுவாமிகளையும் மனதில் பூசித்தபடியே, மகா மேருவை வணங்கினோம்.
ஆழ்மனது அழுக்ககற்று
ஆதிகுருவே போற்றி
ஊழ்நீங்க உதவிடுவாய்
உத்தமனே போற்றி
சூழ்வினை சுட்டெரிக்கும் செஞ்சுடரே
போற்றி
வாழ்வாங்கு வாழ்விப்பாய் வாலையடி போற்றி போற்றி
வாலையானந்தா
சுவாமிகள் வாழ்ந்த, உமாமகேசுவரனார் உலாவிய மண்ணை மனதார வணங்கி விடைபெற்றோம்.