அவனுக்குப் பின்னால் வெளிர்நிறக் கடல்
அவனுக்கு முன்னால் கரையற்ற கடல்.
நல்ல நண்பன் கூறினான், நாம்
பிரார்த்திக்கலாமா இப்போது?
ஐயோ நட்சத்திரங்களைக் கூட காணவில்லை
வீரனே .... தலைவனே, பேசு. நான் என்ன
சொல்லட்டும்
ஏன் பேசுகிறாய்? பயணம் செல், தொடர்ந்து பயணம் செல்.
காற்று தொடர்ந்து வீச அவர்கள் பயணம்
தொடர்ந்தது
இறுதியில் களைத்த நண்பன் கூறினான்,
ஏன், நானும் என் மாலுமிகளும் இறக்கத்தான்
வேண்டுமா?
இந்தக் காற்று தன் வழியை மறந்துவிட்டது,
ஏனெனில்
பயங்கரமான இக்கடலில் இருந்து கடவுள்
விலகிவிட்டார்
வீரனே, தலைவனே, பேசு இப்போது பேசு
அவன் கூறினான் பயணம் செல், தொடர்ந்து பயணம் செல்
வீரனே தலைவனே ஒரு நல்ல வார்த்தை சொல்
நம் நம்பிக்கை போனால் நாம் என்ன செய்வது?
பாயும் கத்திபோல வார்த்தைகள் பாய்ந்து
வந்தன
பயணம் செல், பயணம் செல், தொடர்ந்து பயணம் செல்
வெளுத்து சோர்ந்த அவன் தன் மேடை ஏறினான்
இருளின் ஊடே பார்த்தான். ஆ... அந்த இரவு
இரவுகளில் எல்லாம் இருண்டது. பிறகு ஓர் ஒளி
வெளிச்சம், வெளிச்சம் இறுதியில் ஒளி
தோன்றியது
அது வளர்ந்து நட்சத்திர ஒளியில் கொடி
விரிந்தது
அது வளர்ந்து காலத்தின் விடியலாக வெடித்தது
அவன் ஓர் உலகை வென்றான். அவன் உலகிற்கு
மாபெரும் பாடம் சொன்னான்
பயணம் செல். தொடர்ந்து பயணம் செல்.
-
ஜோரூன் மில்லர்
நண்பர்களே, வாழ்க்கை என்பதே ஒரு பயணம்தானே.
மேடு, பள்ளங்கள், சோதனைகள், சாதனைகள், குறுக்கீடுகள், பந்த பாசங்கள், உறவுகள்,
பிரிவுகள், நட்புகள், நம்பிக்கைத் துரோகங்கள் என அனைத்தையும் கடந்துதானே, வெற்றி
கண்டுதானே, நிலை குலையாமல் நாம் பயணிக்கிறோம்.
பிறப்புண்டேல் இறப்புண்டு என்றனர் நம் முன்னோர். பிறப்பிற்கும்
இறப்பிற்கும் இடைப்பட்ட வாழ்வினில்தான் எத்தனை எத்தனைப் பயணங்கள், எத்தனை எத்தனை
சோதனைகள்.
நண்பர்களே, நாமும் பல சோதனைகளைச்
சந்தித்தவர்கள்தான். சோதனைகளை எதிர்கொண்டு போராடி வென்றவர்கள்தான். ஆனால் வாழ்வே
போராட்டமானால்?
வாழ்வு
முழுவதும் சோகம் என்றாலும் கலங்காதே
உன்
துக்கத்தினால் காலை உதயம் தன் அழகை இழந்துவிடாது
ஓடைநீர் தனது
பளபளப்பான நிலையான அழகை
அசோக மர
இலைக்கோ தாமரை மலருக்கோ தராமல் போகாது.
வாழ்க்கை
இருண்டது , சிக்கலானது என்றாலும் கலங்காதே
நேரம்
நிற்காது. உன் துக்கத்திற்காக தாமதிக்காது.
-
சரோஜினி நாயுடு
சோதனையினையே மூச்சுக் காற்றாய்
சுவாசித்தபோதும், சற்றும் தளராமல் போராடி, வாழ்வில் இணைந்த இரு இதயங்களை, திருமணம்
என்னும் உன்னத உறவில் ஒன்றிணைந்த இரு நல் உள்ளங்களை, அவர்களின் திருமண
விழாவின்போது, சில நாட்களுக்கு முன்னர் சந்தித்தேன் நண்பர்களே.
நண்பர்களே, இவர்கள் இருவரும் காதலுக்காகப்
போராடியவர்கள் அல்ல. பிறந்தது முதல் வாழ்வதற்காகப் போராடி வருபவர்கள். வாழ்வின்
ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு நொடியினையும் போராடிப் போராடியே கடந்து வருபவர்கள்.
நண்பர்களே இன்னும் விளங்கவில்லையா?
மனதினைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள் நண்பர்களே, மனதினைத் திடப்படுத்திக்
கொள்ளுங்கள். திருமண விழாவின் மூலம் இணைந்த இவ்விருவரும், பிறப்பு முதலே கண்
பார்வை அற்றவர்கள்.
நண்பர் துரை.நடராசன் அவர்கள், நான் ஆசிரியராகப் பணியாற்றும்
உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், உடற் கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர். இவர்
தஞ்சையை அடுத்த இரும்புத் தலை என்னும் சிற்றூரைச் சார்ந்தவர்.
நண்பர்களே, நண்பர் துரை.நடராசன் அவர்கள், இரும்புத்
தலை என்னும் எழிலார்ந்த பூமியின் வளர்ச்சிக்காக, அல்லும் பகலும் அயராது பாடுபட்டு
வருபவர். இரும்புத் தலையில் மட்டுமல்ல, அதன் சுற்றுவட்ட கிராமங்களிலும், எதாவது
ஒரு வீட்டில் மங்கல நிகழ்ச்சி என்றால் அவர்கள் அழைக்கும் முதல் நபரும்,, ஏதாவது
ஒரு சிறு பிரச்சினை என்றால் அதனைத் தீர்க்க அவர்கள் அணுகும் முதல் நபரும் துரை
நடராசன் அவர்கள்தான். பள்ளி நேரம் போக, இவர் செலவிடும் நேரம் முழுவதும்
ஊருக்காகத்தான்.
நண்பர் துரை நடராசன் அவர்களுடன், ஆசிரியர்
அறையில் பேசிக் கொண்டிருந்த பொழுது, இத்திருமணம் பற்றிக் கூறினார். மணமகள் இவரது
மைத்துணரின் மகள். இவர் ஏற்பாடு செய்து, முன்னின்று நடத்தும் திருமணம் இது.
மணமக்கள் பற்றி இவர் பேசப் பேச, மனதில்
இனம் புரியாத ஓர் உணர்வு. அதனை எவ்வாறு மொழிப்படுத்துவது என்று தெரியவில்லை.
மணமக்களைக் காண வேண்டும், நானும் இத்திருமணத்திற்கு வருகிறேன் என்றேன்.
கடந்த வியாழக்கிழமை 14.11.2013 அன்று காலை,
கும்பகோணம், சுவாமி மலையில், அம்பாள் சன்னதியில் இவர்கள் திருமணம் எளிமையாய் அரங்கேறியது.
நண்பர்களே,
மணமக்களைப்
பார்த்தேன். அமைதி தவழும் மலர்ந்த முகங்கள். குழந்தைபோல் இருவரும் சிரித்த
சிரிப்பினைக் காண கண் கோடி வேண்டும்.
போற்றி போற்றி
ஓர் ஆயிரம் போற்றி நின்
பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றிகாண்
சேற்றி
லேபுதி தாக முளைத்த தோர்
செய்ய
தாமரைத் தேமலர் போலாளி
தோற்றி நின்றனை
பாரத நாட்டிலே
துன்பம்
நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை, மாதரசே எங்கள்
சாதி செய்த
தவப்பயன் வாழி நீ
என புதுமைப்
பெண்ணை வாழ்த்துவாரே மகாகவி பாரதியார், அந்த மகாகவி கண்ட புதுமைப் பெண்ணாகவே மணமகள் நித்யா எனக்குத் தோன்றினார். தனக்குப் பார்வையில்லையே
என நித்யா வீட்டின் ஓர் மூலையில் முடங்கிவிடவில்லை. பார்வையற்றவர்களுக்கானப்
பள்ளிக்குச் சென்றார். படித்தார். நண்பர்களே ஒரு செய்தி சொல்லட்டுமா?. நித்யா
எம்.ஏ., பி.எட்., பட்டம் பயின்ற பட்டதாரி. இப்பொழுது சொல்லுங்கள் நண்பர்களே,
நித்யா அவர்கள் பாரதி கண்ட புதுமைப் பெண்தானே.
கண்உடையார் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண்உடையார் கல்லா தவர்
கல்வி கற்காதவரின் கண்கள், கண்களே அல்ல
புண்கள் என்பார் திருவள்ளுவர். திருவள்ளுவர் வழி நின்று சொல்வதானால், மணமகன் வெற்றிவேல்
முருகன் அவர்களும் கண்ணுடையாரே ஆவார். ஆம் நண்பர்களே, கண் இல்லையே என்று
கலங்காமல் கல்வி கற்றார். இவர் படித்த படிப்பு என்ன தெரியுமா? எம்.ஏ.,
எம்.ஃ.பில்., பிஎச்.டி.,. ஆம் நண்பர்களே, ஆம் முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்றவர்
வெற்றிவேல் முருகன். இவர் டாக்டர் பட்டத்திற்கான ஆராய்ச்சியினை மேற்கொண்டது எங்கு
தெரியுமா? நண்பர்களே, இங்கல்ல, இந்தியாவிலேயே அல்ல, அமெரிக்காவில்,
நியூயார்க்கில். நம்பமுடியவில்லையா நண்பர்களே, உண்மை. இத்தனைக்கும் இவர் ஒன்றும்
வசதிபடைத்த வீட்டில் பிறந்தவர் அல்ல. நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். பிறகு
எப்படி அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்தார் என்று தோன்றுகிறதா? உழைப்பு நண்பர்களே
உழைப்பு. ஆர்வத்துடன் படித்து, ஒவ்வொரு நிலையிலும், கல்வி உதவித் தொகையினைப்
பெற்றே, நியூயார்க் வரை சென்று வந்துள்ளார். தற்பொழுது, பாட்னா மத்திய பல்கலைக்
கழகத்தில், பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். இவர்களின் தன்னம்பிக்கை
எத்தகையது என்பது இப்பொழுது புரிகிறதா நண்பர்களே.
வெற்றிவேல் முருகனின் தங்கையின் பெயர் செந்தமிழ்ச்
செல்வி. இவர் ஒரு பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார்.
நண்பர்களே, விதி, விதி என்று சொல்கிறார்களே, அந்த விதி இவர்கள் குடும்பத்தில்
எப்படி முழுமையாக விளையாடியிருக்கிறது தெரியுமா? ஆம் நண்பர்களே செந்தமிழ்ச்
செல்வியும் கண் பார்வை அற்றவர். மனந்தளராமல் படித்து ஆசிரியையாகப் பணியாற்றி
வருகிறார். நல் மனதுக்குச் சொந்தக்காரர் ஒருவரை மணந்து கொண்டு, நல்லறமே இல்லறமாய்
வாழ்ந்து வருகிறார்.
நண்பர்களே, அம்பாள் சன்னதியில், திருமணம்
முடிந்து, மணமக்கள் இயல்பாய், சிரித்தபடியே பேச, பேச மனதில் ஓர் ஆயிரம் கேள்விகள்
வலம் வந்தபடியே இருந்தன.
என்ன பாவம் செய்தார்கள் இவர்கள். இயற்கை
ஏன் இவர்களிடம், தனது திருவிளையாடலை, தனது கொடூர குணத்தினைக் காட்டியுள்ளது.
கருப்பு சிகப்பு என்ற வார்த்தைகளின் வித்தியாசத்தினைக் கூட அறியாதவர்கள் அல்லவா
இவர்கள். தாங்கள் என்ன நிறம் என்பது கூட தெரியாதவர்கள் அல்லவா இவர்கள். நிறம் என்ன
நிறம், நாம் எப்படியிருக்கிறோம், மனிதன் என்றால் எப்படி இருப்பான், கால்
எப்படியிருக்கும், கை எப்படியிருக்கும், முகம் என்றால் என்ன, அது எப்படி
இருக்கும், உண்ணுகின்றோமே உணவு, அது எப்படி இருக்கும், சட்டை என்கிறார்களே,
வேட்டி, சேலை என்கிறார்களே அவையெல்லாம் எப்படி இருக்கும், என்பதையே அறியாதவர்கள்
அல்லவா இவர்கள்.
நாம் வாழும் உலகில் எத்தனை எத்தனை மதங்கள்.
அவை அனைத்தும் போதிப்பது அன்பு என்ற ஒன்றைத்தானே. மதங்கள் போதிப்பதைப் படித்து
அறிந்த பிறகும், அதனைப் பின்பற்றாது, கண்ணிருந்தும் குருடர்களாய் துப்பாக்கியையும்,
வெடிகுண்டுகளையும் சுமந்து, பேரழிவை உண்டாக்கி வாழும் மக்கள் பலரிருக்க, அவர்களைத்
தண்டிக்காது, இவர்களை மட்டும் ஒளியற்றவர்களாய் பிறக்க வைத்து, ஏன் தண்டிக்க
வேண்டும்?. கண்ணற்ற மனிதர்களைப் படைப்பதற்கும் ஒரு கடவுளா?. இக்கடவுள் முற்றும்
உணர்ந்தவரா? அனைத்தும் அறிந்தவரா? மனதில் கேள்விகள் தோன்றுகின்றனவே தவிர, பதில்தான்
கண்ணா மூச்சு ஆடிக்கொண்டேயிருக்கிறது.
நண்பர்களே, சொன்னால் நம்ப மாட்டீர்கள்,
திருமணம் முடிந்த பிறகு, சுவாமிமலை தேவஸ்தான அலுவலகத்திலே, திருமணப் பதிவேட்டில்,
மாப்பிள்ளை தன் கையெழுத்தினைப் பதிவு செய்தார் என்று கூறினால் நம்புவீர்களா? எனது
இரண்டு கண்களாலும் பார்த்தேன்.
படிவத்தைக் கொடுத்ததும், தனது வலது கையால்,
போனாவினைப் பெற்றுக் கொண்டு, கையெழுத்துப் போட வேண்டிய இடத்தில், கைபிடித்து
போனாவின் முனையினை வைக்கச் சொன்னார். பேனாவை குறித்த இடத்தில் வைத்ததும், தனது
இடது கை, ஆள் காட்டி விரலையும், நடு விரலையும், அகல விரித்து, பேனாவின் முனையில்
சொருகினார்.
நண்பர்களே, நாமெல்லாம் சிறு வயதில், இரண்டு
கோடு நோட்டில் எழுதியிருப்போமே நினைவில் இருக்கிறதா? பக்கம் முழுவதும் இரண்டிரண்டு
கோடுகளாக அச்சிடப் பெற்றிருக்கும். நாம் அதன் இரண்டு கோடுகளுக்கும் இடையில்,
குண்டு குண்டாக எழுதிப் பழகினோமே ஞாபகத்திற்கு வருகிறதா?
நண்பர்களே, இவரும் அப்படித்தான்
கையொப்பமிட்டார். இவரைப் பொறுத்தவரை, நடு விரல் மேல் கோடு, ஆள் காட்டி விரல்
கீழுள்ள கோடு. கையெழுத்திட வேண்டிய இடத்தின் எல்லைகளாக, மேலும் கீழும் விரல்கள்.
விரல்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தெளிவாகக் கையெழுத்திட்டார். மலைத்துப்
போய்விட்டேன் நண்பர்களே, மலைத்துப் போய்விட்டேன்.
வாழ்வின் எக்காலத்தும் மறக்க இயலா திருமணம்
இத் திருமணம்.
நண்பர்களே, கண்பார்வை அற்றவர்கள் இருவர் இணைந்து,
ஒரு புதுவாழ்வினைத் துவக்கியிருக்கிறார்கள். இருவரின் தன்னம்பிக்கையும்,
தைரியமும், நெஞ்சுரமும் போற்றப்பட வேண்டியவை.
இருளிலேயே இருந்து வாழப் பழகிவிட்ட,
இவ்விருவரின் எதிர்கால வாழ்வு ஒளிமயமானதாக அமைய, மனதார வாழ்த்துவோமா நண்பர்களே.
இவர்களது இல்லறத்தின் பயனாய், நாளை
இவ்வுலகில் தோன்றவிருக்கும் மழலை ஒளிவீசும் கண்களோடு தோன்றி, இவ்விருவரையும் கண்ணே
போல் போற்றிப் புரக்க, நெஞ்சார வாழ்த்துவோமா நண்பர்களே.
மணமக்கள்
நல்வாழ்வு வாழட்டும்
நாளை
வரும் மழலை
இவ்வுலகைக்
கண்ணாரக் காணட்டும்.