10 டிசம்பர் 2014

வேலு நாச்சியார் 2


அத்தியாயம் 2 கவுரி நாச்சியார்

    

வேலு நாச்சியார்.

     இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதியின் ஒரே மகள். செல்ல மகள். வீர மகள். பன்மொழிப் புலமை வாய்ந்தவர். நிர்வாகத் திறன் மிக்க மாட்சியர். குதிரையேற்றம், யானையேற்றம், சிலம்பம், வாள் வீச்சு அனைத்திலும் வித்தகர்.

      இராமநாதபுரம் அரண்மனையிலே பிறந்தவர், வளர்ந்தவர். மருமகளாய் குடியேறியது சிவகங்கைச் சீமையில். சிவகங்கைச் சிமையின் மன்னர் சசி வர்ணத்தேவரின் திருமகன், இளவரசர் முத்து வடுக நாதரின் கரம் பற்றியவர்.
  
      



மன்னர் சசி வர்ணத் தேவரின் மறைவிற்குப் பிறகு, இளவரசர் முத்து வடுக நாதர் மன்னராய் அமர்ந்தாலும், ஆட்சியைத் திறம்பட நடத்தியவர் வேலு நாச்சியார்தான்.

       சிவகங்கை அரண்மனை, சிறுவயல் அரண்மனை, திருப்பத்தூர் அரண்மனை, திப்பூவனம் அரண்மனை, கமுதி அரண்மனை, காளையார் கோயில் அரண்மனை, உறுதிக் கோட்டை அரண்மனை, பிரான்மலை அரண்மனை, கொல்லங்குடி அரண்மனை. இந்த அரண்மனைகள் எல்லாம் சிவகங்கைச் சீமையின் அரண்மனைகள்.

     ஒரு நாள் கொல்லங்குடி அரண்மனையில் இருந்து, சாரட் வண்டியில், சிவகங்கைச் சீமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார் வேலு நாச்சியார்.

     வரும் வழியில், காட்டுப் பகுதியில், தனித்து நிற்கும் குதிரை ஒன்றினைக் கண்டார்.

மன்னரின் குதிரையல்லவா இது? இங்கே எப்படி?

     சாரட் வண்டியில் இருந்து இறங்கி, தனித்து நடந்தார். தூரத்தே அவர் கண்ட காட்சி அவரை நிலை குலையச் செய்த்து. மரத்தடியில் ஒரு அழகிய பெண்ணின் மடியில் முத்து வடுகநாதர்.

---
    

சிவகங்கை இராஜராஜேசுவரி ஆலயம். வேலு நாச்சியார், முத்து வடுகநாதர், அந்த அழகிய பெண், அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை மற்றும் பலர் குழுமியிருக்கின்றனர்.

     வேலு நாச்சியார், இராஜராஜேசுவரி அம்மன் கழுத்தில் இருந்த, தாலிக் கயிற்றை எடுத்துத் தன் கணவரிடம் தருகிறார்.

கட்டுங்கள் தாலியை.

தாயே

     கதறியபடியே, வேலு நாச்சியாரின் காலடியில் விழுகிறார் அந்த இளம் பெண். வேலு நாச்சியார் குனிந்து, தோளைத் தொட்டு, அப்பெண்ணைத் தூக்குகிறார்.

இனி நான் உன் தாயல்ல. உன் சகோதரி

தன் கணவரைப் பார்க்கிறார்.

கட்டுங்கள் தாலியை.
---

     மறு நாள், வேலு நாச்சியாரைச் சந்திக்கிறார், அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை.

தாயே, மன்னர்கள், தங்கள் மனைவியிருக்க, மற்றொரு பெண்ணின் மீது மோகம் கொள்வது ஒன்றும் புதிதல்ல. ஆசைப்பட்ட பெண்களை, தங்களின் அந்தரங்க நாயகிகளாக, தனியொரு அரண்மனையில் வைத்து, அழகு பார்ப்பதும் புதிதல்ல.

நம் மன்னர் ஒரு பெண்ணின் அழகில் மயங்கியிருக்கிறார். அவரோடு பொழுதையும் கழித்திருக்கிறார் உண்மை.

அதற்காகத் தாங்களே, மாங்கல்யத்தைக் கையில் எடுத்து, மன்னரிடம் கொடுத்து, அப்பெண்ணின் கழுத்தில் கட்டச் சொன்னது, மிகுந்த வேதனையளிக்கிறது தாயே.

அப்பெண் இசைவேளாளர் வகுப்பைச் சார்ந்தவர் என்பதைக் கூட அறியாமல், அவசரப்பட்டுவிட்டீர்கயே தாயே.

     ஒரு நிமிடம் அமைதிகாத்த வேலு நாச்சியார், நிதானமாகத் தெளிவாகப் பேசினார்.

ஒரு பெண்ணை அனுபவிப்பதும், பின்னர் கைவிடுவதும், ஆண்களுக்கும், மன்னர்களுக்கும் வேண்டுமானால் வாடிக்கையாக இருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணின் நிலையில் இருந்து, இப்பிரச்சினையினை எண்ணிப் பாருங்கள் அமைச்சரே, அப்பொழுதுதான் இதன் வலியும், வேதனையும் தங்களுக்குப் புரியும்.

ஆண்களின் ஆதிக்கத்திற்கும், ஆண்களின் இச்சைகளுக்கும், போதைப் பொருளாக, பெண்கள் பயன்படுத்தப் படுவதை எதிர்ப்பவள் நான்.

என் கணவர், அந்தப் பெண்ணின் அழகில் மயங்கியபோது சாதி தெரியவில்லை.

அப்பெண்ணின் நினைவாகவே, இரவெல்லாம் விழித்திருந்து, தவித்தபோதும் சாதி தெரியவில்லை.

காதலால், கசிந்துருகி, காதல் மொழிகளைப் பேசியபோதும் சாதி தெரியவில்லை.

அப்பெண்ணின் மடியில் தலைவைத்து, இவ்வுலகினையே மறந்து இருந்தபோதும் சாதி தெரியவில்லை.

நான் தாலி எடுத்துக் கொடுத்தவுடன், சாதி தலை தூக்குகிறதா அமைச்சரே?

இரண்டு இதயங்கள் இணையும்போது, சாதிக்கு சமாதி கட்டுவதுதான், நமது வரலாறு அமைச்சரே.

இனி மன்னரின் கவனம், நாட்டின் மீது மீண்டும்  திரும்பும். என் கவனமும், இனி நாட்டின் மீதுதான்.

    பதிலுரைக்க வார்த்தைகள் இன்றி, கண்களில் இருந்து கண்ணீர் வடிய, அமைச்சர், தன் இரு கரம் கூப்பி, அரசி வேலு நாச்சியாரை வணங்கினார்.

தாயே, தங்களின் உள்ளம் பெரிது, தங்களின் எண்ணம் பெரிது, தங்களின் செயல் பெரிது, வணங்குகிறேன் தாயே.

---

     திருமணமாகி சில மாதங்களே கடந்த நிலையில், இதோ, காளையார் கோயிலின் வாசலின் முன், இருவரும், ஒருவரை ஒருவர் அணைத்தபடி, இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றனர்.

     ஊரெங்கும் பிண வாடை. வானில் கழுகுகளின் பெருங் கூட்டம்.

மன்னர் முத்து வடுகநாதர்
இளைய ராணி கவுரி நாச்சியார்
இருவரின் கண்களும், ஒரே திசையை நோக்கியவாறு, குத்திட்டு நிற்கின்றன.

     அத்திசையில் இருந்து பாய்ந்து வருகிறது ஒரு குதிரை. குதிரையின் மேல் வேலு நாச்சியார்.

                                                       தொடரும்