01 டிசம்பர் 2011

பசிப்பிணி மருத்துவர்


  
தென்னங்குடி நாட்டார்
  தஞ்சாவூரில் இருந்து பூதலூர் செல்லும் வழியில் அமைந்துள்ள அழகிய கிராமம் தென்னங்குடி ஆகும். தமிழகத்தின் தென்னாட்டை ஆண்ட பாண்டிய மன்னர்க்குத் தென்னவன், மாறன், செழியன் முதலான சிறப்புப் பெயர்கள் உண்டு. தென்னன்குடி, தென்னன்பட்டி, தென்னவ நல்லூர், தென்னவ நாடு முதலிய ஊர்கள் பாண்டிய மன்னர் தென்னவனோடு தொடர்புடைய பெயர்களாகும். தென்னன் குடி என்பது காலப் போக்கில் மருவி தென்னங்குடி என அழைக்கப்படலாயிற்று.

     இத்தகு வரலாற்றுப் பெருமை வாய்ந்த தென்னங்குடி கிராமத்தில் வாழ்ந்து வந்த பெருநிலக்கிழார் நாராயணசாமி நாட்டார், துளசியம்மாள் தம்பதியினரின் ஒரே மகனாய், அருந்தவப் புதல்வராய் சுந்தரராச நாட்டார் தோன்றினார்.
     தனது தந்தையாரைப் போலவே, விவசாயப் பணியினை மேற்கொண்டு அயராது உழைத்து, தனது விளை நிலங்களின் எல்லையை விரிவு படுத்தினார்.
     இளமை முதலே தமிழின் சுவையறிந்து, தாய்மொழியாம் தமிழ் மீது தீராக் காதல் கொண்டவர் சுந்தரராச நாட்டார். சுந்தரராச நாட்டாருக்கு சிட்டியம்மாள், மங்கை நல்லாள் என மனைவியர் இருவர். எனினும் குழ்ந்தைகள் இல்லை.
                       ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)
                       ஊதியம் இல்லை உயிர்க்கு
என்னும் குறளிள் மூலம் ஈதலின் பெருமையினை விளக்குவார் திருவள்ளுவர்.
     இயற்கையாகவே ஈகை குணமுடைய சுந்தரராச நாட்டார் அவர்கள், பொருள் இல்லாமையால், கல்வி கற்க இயலாது தவிக்கும் சிறார்களை எல்லாம், தனது மக்களாகவே கருதினார். திக்கற்ற மற்றும்  ஏழை மாணவர்களுக்கு உதவுதலையே தனது வாழ்வின் நோக்கமாகக் கொண்டார்.
     ஏழை மாணவர்களுக்கு எவ்வகையில் உதவிடலாம் என எண்ணி சிந்தனையில் ஆழ்ந்த சுந்தரராச நாட்டாரின் மனக் கண்ணில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் முன் வந்து நின்றது.
கரந்தைத் தமிழ்ச் சங்கம்
     தமிழ் நாட்டின் தெருக்களில் தமிழ்தானில்லை என்ற அவல நிலையினைப் போக்கிடவும், தமிழின் பெருமைகளை மீட்டெடுக்கவும், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்னுமோர் உன்னத நிலையினை உருவாக்கிடவும், வீறு கொண்டு தோன்றிய அமைப்பு கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.
நாட்டார் அறநிலையக் கட்டிடம
     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவராய் அமர்ந்து முப்பதாண்டுகள் ஒப்பிலாப் பணியாற்றியவர் செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் அவர்களாவார்.
     தமிழ் மொழியினை வளர்க்க தனித் தமிழ் கலாசாலைகள் ஏற்படுத்துவதால் மட்டுமே பெரிதும் பயன் விளையப் போவதில்லை என்று எண்ணிய உமாமகேசுவரனார், தமிழோடு கைத் தொழிலகளையும் கற்றுக் கொடுக்கும்படியான காலசாலை ஒன்றினை எற்படுத்தத் தீர்மானித்தார்.
     உமாமகேசுவரனாரின் அயரா முயற்சியின் பயனாக 1916 ஆம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச் சங்க செந்தமிழ்க் கைத்தொழில் கல்லூரி தொடங்கப் பெற்றது.இக்கல்லூரியில் தமிழோடு நெசவுத் தொழில், நூல் நூற்றல், பாய் நெசவுத் தொழில்,மர வேலைகள், நூற் கட்டு முதலியனவும் கற்பிக்கப் பட்டன.
திக்கற்ற மாணவர் இல்லம்
     கரந்தைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்க் கைத்தொழில் கல்லூரியின் சார்பில் 1930 ஆம் ஆண்டு திக்கற்ற மாணவர் இல்லம் ஒன்றும் தொடங்கப் பெற்றது. தாயை இழந்தோ.தந்தையை இழந்தோ,இருவரையும் இழந்தோ, பாதுகாவலர் ஒருவருமின்றி வாடும் ஆறு வயது முதல் பதிமூன்று வயது வரையுள்ள மாணவர்கள் இத்திக்கற்ற மாணவலிரில்லத்தில் சேர்க்கப் பெற்றனர். இவ்வில்லத்தில் சேர்ந்த நாள் முதல் இவர்கள் தம் துன்பம் நீங்கி, இன்பமெய்தி, எழில் தரு முகத்தோடு உடல் நலம் பெறு கல்வி பயிலத் தொடங்கினர்.
     கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு என்று நிலையான வருவாய் ஏதுமில்லாத காரணத்தால் பொருளாதார நெருக்கடிகளைத் தொடர்ந்து சந்தித்து வந்தபோதும், மாணவர்களிடமிருந்து கட்டணம் பெற்றிடாமல் இலவசமாகவே கல்வி பயிற்றுவிக்கப்பெற்றது.திக்கற்ற மாணவரில்லத்திலும் மாணவர்கள் இலவசமாகவே சேர்க்கப்பெற்றனர்.

     அன்பர்காள், இவ்வரிய காரியங்களை எல்லாம், என்றும் இடையறாது நடைபெற்றுவருதல் வேண்டாமா? இந்நகர மக்கள் தத்தம் வீடுகளில் பிடியரிசிக் கலயம் வைத்து, ஒரு கையளித்து உதவிவருதல் வேண்டும். இந்நகர வணிகர்கள், கடைகட்கு மாலையில் வந்து நிற்கும் சங்க அலுவலர்க்கு ஒரு காசேனும் அளித்து உதவிவருதல் வேண்டும். வெளியூர் அன்பர்கள் அறுவடைக் காலங்களில் இயன்ற அளவு நெல் உதவிகளைச் செய்து வருதல் வேண்டும். ஒவ்வொரு நாளும் இன்னனைய செலவுகள் எத்துனையோ செய்து வரும் நம் தமிழ் மக்க்ள் மேற்கூறிய வருவாய்களால் ஆயிரக் கணக்கான எழைச் சிறுவர்கள் கல்வி பயிற்சியுறுதலை உள்ளத்தில் கொள்ளுதில் வேண்டும். தமிழ்த் தாயின் திருமக்காள் உள்ளங்கனிமின், ஏழைச்சிறார்கட்கு இரங்குமின், புகுழும் பேரும் போற்றுமின், போற்றுமின்.
         நிதி மிகுந்தேர்ர் பொற்குவை தாரீர் நிதிகுறைந்தோர் காசுகள் தாரீர் 
         அதுவுமற்றோர் இன்சொல அருளுவீர்
என பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, கல்வி பயிற்றுவித்தலையும், திக்கற்ற மாணவரில்லத்தையும் தொடர்ந்து இலவசமாகவே நடத்திட, தஞ்சைப் பகுதி மக்களுக்கு உமாமகேசுவரனார் அவர்கள் உருக்கமான வேண்டுகோளினை விடுத்ததோடு, தானும் தனது சொந்த வருவாயில் இருந்து ஒரு தொகையினை மாதா மாதம் வழங்கி வந்தார்.

திறப்பு விழாக் கட்வெட்டு
   அக்காலத்தில் கரந்தை,கூடலூர், குளமங்கலம், அரசூர், அம்மன் பேட்டை, பள்ளியக்கிரகாரம்,சுங்கான் திடல், ஆலங்குடி,ஆத்தூர் போன்ற இடங்களில் பல,சிறு சிறு அரிசி அரைக்கும் ஆலைகள் இயங்கி வந்தன.அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், தத்தமது தேவைக்கேற்ப நெல் மணிகளைக் கொண்டு வந்து, அரைத்து அரிசியாக்கிக் கொண்டு செல்வார்கள் இவ்வகை அரிசி ஆலைகள் அனைத்திலும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்று பெயர் எழுதப்பட்ட சாக்குப் பைகள் வைக்கப் பட்டிருக்கும். நெல் மணிகளை அரிசியாக்கிக் கொண்டு செல்லும் பொதுமக்கள்,அங்கு வைக்கப்பெற்றிருக்கும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சாக்குப் பைகளில், தங்களது அசிரியின் ஒரு பகுதியை அன்பளிப்பாக செலுத்திவிட்டுச்  செல்வார்கள்.
     கரந்தைத் தமிழ்ச் சங்கத் திக்கற்ற மாணவரில்லத்தின் ஈடு இணையற்ற, அப்பகுக்கற்ற சேவைக்கு, தஞ்சைப் பகுதி மக்கள் நேசப் பார்வையோடு, ஆதரவுக் கரம் நீட்டி, தங்களால் இயன்ற சிறு சிறு உதவிகளைச் செய்வதைப் பெருமையாய் கருதினர்.
சுந்தரராச நாட்டார் தமிழ்க் கல்வி அபிவிருத்தி தர்மம்
     சிறு வயது முதலே கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ் வளர்ச்சிப் பணிகளையும், திக்கற்ற மாணவரில்லத்தின் சீரிய தொண்டினையும் நேரில் கண்டு மகிழ்ந்திருந்த சுந்தரராச நாட்டார் அவர்கள், தனது செல்வமும், சேவையும் சென்றடைய வேண்டிய இடம் கரந்தைத் தமிழ்ச் சங்கமே என்று முடிவு செய்தார்.
     1959 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் நாள், சுந்தரராச நாட்டார் தமிழ்க் கல்வி அபிவிருத்தி தருமம் எனும் பெயரில் அறக்கட்டளை ஒன்றினை நிறுவினார். தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்கம் நடத்திவரும் புலவர் கல்லூரியில் பயிலும் ஏழை மாணவர்கட்கு இலவச உணவு அளிப்பதே இவ்வறக்கட்டளையின் நோக்கமாகும்.

      சுந்தரராச நாட்டார் அவர்கள், தாமே இந்த அறக்கட்டளையின் அறங்காவலராக இருந்து செயல்படுவது என்று முடிவு செய்தார். 22 ஏக்கர் 50 செண்ட் பரப்பளவு கொண்ட விளை நிலங்களை, அறக்கட்டளைக்காக எழுதி வைத்தார். இன்றைய தேதியில் இந்த சொத்துக்களின் மதிப்பு ரூபாய் நாற்பது இலட்சத்தினையும் தாண்டும். சுந்தரராச நாட்டார் அவர்களுக்கு எத்துனை பரந்து பட்ட மனமும், ஈகை குணமும், சேவை மனப்பான்மையும் இருந்திருக்கும் என்பதை ஒரு கணம் எண்ணினால் வியப்பே மிஞ்சும்.
     9.4.1961 முதல் பல்லாண்டுகள் கரந்தைத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினராக்வும் சுந்தரராச நாட்டார் அவர்கள் திறம்படப் பணியாற்றினார்.
     1970 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 21 ஆம் நாள் மேலும் 92 செண்ட் நிலத்தினை தனது அறக்கட்டளையில் சேர்த்து, கரந்தைத் தமிழ்ச் சங்கம் நடத்திவரும் திக்கற்ற மாணவர் இல்லத்தில் பயிலும் மாணவர்களுக்கு இலவச உணவு அளிப்பதற்காக வழங்கினார்.
    காட்சிக்கு எளியராய், பழகுதற்கு இனியராய் விளங்கிய சுந்தரராச நாட்டார் அவர்கள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு மேலும் ஏதாகினும் செய்திட வேண்டும் என்று எண்ணினார். கரந்தைத் தமிழ்ச் சங்கம் நடத்திவரும் திக்கற்ற மாணவர் இல்லத்திற்கு, நல்லதொரு கட்டிடத்தினைத் தனது வருவாயிலிருந்து, தானே முன்னின்று கட்டித் தருவது என்று தீர்மாணித்து செயலில் இறங்கினார்.
     கரந்தைத் தமிழ்ச் சங்க நுழைவு வாயிலின் இடது புறம்,ஏ.கே.வேலன் அவர்கள் தனது முதல் வருவாயிலிருந்து கட்டி அன்பளிப்பாக வழங்கிய அருணாசல நிலையக்கட்டிடத்திற்கும்,சங்க அலுவலகத்திற்கும் இடையே உள்ள இடத்தினைத் திக்கற்ற மாணவரில்லத்திற்காகத் தேர்வு செய்து, கட்டிடப் பணியினைத் துவக்கினார்.
     கட்டிடப் பணிக்குத் தக்க, கட்டுமானப் பணியாளர்களை நியமித்து, தானே மேற்பார்வைப் பணியினை மேற்கொண்டு, திக்கற்ற மாணவர்களுக்காக ஒரு புதிய கட்டிடத்தினைக் கட்டினார். சுட்டெரிக்கும் வெயிலினைப் பொருட்படுத்தாமல், இடையில் வேட்டியுடனும், தோளில் துண்டுடனும், மேற்சட்டையின்றி, கட்டிடப் பணியாளராகவே மாறி,கட்டிடத்தினை அங்கலம், அங்குலமாக பார்த்துப் பார்த்து உருவாக்கினார். ஓய்வு நேரங்களில், தமிழ்ப் பெரு மன்றத்தில், தலைக்கு இரு செங்கல் கற்களையேத் தலையணையாக்கி ஓய்வெடுப்பார்.
     எளிமை, எளிமை பழகுவதில் இனிமை,  இனிமை இவைகளையே தனது குணநலன்களாகப் பெற்றிருந்த சுந்தரராச நாட்டார் அவர்களால் ரூபாய் நாற்பது ஆயிரம் பொருட் செலவில் கட்டி முடிக்கப் பெற்ற கட்டிடத்திற்கு.
தென்னங்குடி நா.சுந்தரராச நாட்டார் அறநிலையக் கட்டிடம்
திக்கற்ற மாணவர் இல்லம்
எனப் பெயர் சூட்டப்பெற்றது.
அறநிலையக் கட்டிடத் திறப்பு விழாவில் நாவலர்
     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மணி விழாவானது, 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பெரு விழாவாகக் கொண்டாடப் பெற்றது. விழாவின் இரண்டாம் நாளான 14.4.1973 சனிக்கிழமை மாலை முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் தலைமையில், அன்றைய தமிழக அரசின் கல்வி அமைச்சர் மாண்புமிகு டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தென்னங்குடி நா.சுந்தரராச நாட்டார் அறநிலையக் கட்டிடத்தினைத் திறந்து வைத்து, தமிழ்ப் பெரு மன்ற மேடையேற, விழா தொடங்கிற்று.
     அன்றைய கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செ.தனக்கோடி பிள்ளை அவர்கள், விழாத் தலைவரையும், மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களையும், சொற்பொழிவாளர்களையும் வரவேற்றுப் பேசினார்.
     சங்கத் தலைவரின் உதடுகள், வரவேற்பிற்குரிய வார்த்தைகளை உதிர்த்தாலும், அவரது கண்ணும், மனமும் தமிழ்ப் பெருமன்ற  வாயிலையே நோட்டமிட்ட வண்ணம் இருந்தன. கரந்தைத் தமிழ்ச் சங்க மாணவர்களுக்காக தனது நிலங்களை அறக்கட்டளையாக எழுதிவைத்தவரும்,பெரும் பொருட்செலவில் திக்கற்ற மாணவரில்லத்திற்கானக் கட்டிடத்தினைத் தானே முன்னின்று கட்டி வழங்கியவரும், அன்றைய விழாவின் நாயகருமான சுந்தரராச நாட்டார் அவர்கள், அந்நேரம் வரை விழா அரங்கிற்கு வராததே காணரம் ஆகும். விழா முடியும் வரை சுந்தரராச நாட்டார் அவர்கள் வரவேயில்லை.
     எனது செல்வமும், எனது உழைப்பும் தமிழ் கற்கும் திக்கற்ற மாணவர்களின் வாழ்வை வளமாக்கப் பயன்படவேண்டும் என்பதே, எனது பிறப்பின் நோக்கமும், எனது கடமையுமாகும். கடமையைச் செயததற்காக, மேடையேறி பொன்னாடைபோர்த்திக் கொள்வதும், அதன் மூலம் விளம்பரம் தேடுவதும் எனக்குப் பிடிக்காதவை ஆகும். வலது கை கொடுப்பது, இடது கைக்குத் தெரியக்கூடாது என்று எண்ணுபவன் நான். எனக்கு ஏன் இந்தப் பாராட்டு? என்று கூறி கேள்வி கேட்டவரை வியப்பில் ஆழ்த்தினார்.
    
    உலக வரலாற்றிலேயே பாராட்டப் படுபவர் இல்லாமல் நடைபெற்ற பாராட்டு விழா இதுவாகத்தான் இருக்கும்.
      சுந்தரராச நாட்டார் அவர்கள் தனது அறக்கட்டளையின் அறங்காவலராக 24 ஆண்டுகள் பணியாற்றினார். முதுமை காரணமாக உடல் நிலை தளர்வுற்ற வேளையில், 1982 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் நாள், எனக்கு வயதாகிவிட்ட படியாலும், எனக்குப் பிறகு இந்த தர்ம சொத்துக்களைப் பராமரித்து வர டிரஸ்டிகளை நியமிக்க முடிவு செய்திருக்கிறேன் என தனது உயில் சாசனத்தில் பதிவு செய்து,
  1. வழக்கறிஞர் ஆர். கண்ணுசாமி ராசாளியார்
  2. திரு தி. கண்ணப்ப நாட்டார்
  3. திரு க.சண்முகசுந்தர நாட்டார்
  4. திரு மு. சாமிநாத புண்ணாக்கர்
  5. திரு தி. சரவணவேல் நாட்டார்
ஆகிய ஐவரையும் அறங்காலவர்களாக நியமித்தார். மேலும் மாணவர்களுக்குக் கட்டிடம் கட்டவும், புத்தக நிலையங்களை அபிவிருத்தி செய்யவும், மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கவும், ஆண்டு விழாக்களுக்கு நன்கொடை வழங்கவும், பள்ளிக்கு விஞ்ஞான அபிவிருத்திக்கு சாமான்கள் வாங்க உதவித் தொகை கொடுக்கவும் அறக்கட்டளை நிதியினைப் பயன்படுத்தலாம் என நெறிமுறைகளை வகுத்து வழிகாட்டினார்.

                மெய்வருத்தம்  பாரார்  பசி நோக்கார்  கண்துஞ்சார்
                எவ்வெவர்  தீமையும்  மேற்கொள்ளார் செவ்வி
                அருமையும்  பாரார்  அவமதிப்பும்  கொள்ளார்
                கருமமே  கண்ணாயி  னார்

எனும் பாடல் வரிகளுக்கேற்ப களைப்பு, அயர்ச்சி, தளர்ச்சி என எதனையும் பொருட்படுத்தாமல் ஓயாது, உறங்காது உழைத்தவர் தென்னங்குடி சுந்தரராச நாட்டார் அவர்களாவார்.

     ஏழை எளியவர்க்கு உணவிடும் உன்னதத் தொண்டினைச் செய்து வந்த பண்ணன் என்னும் குறுநில மன்னனை,

            பசிப்பிணி  மருத்துவன் இல்லம்
            அணித்தோ  சேய்த்தோ  கூறுமின் எனக்கே

என மூவேந்தருள் ஒருவனான கிள்ளிவளவன், பசிப்பிணி மருத்துவன் என்றழைத்துப் புகழ்ந்து பாடுவான். இந்தப் பண்ணனைப் போலவே, வாழ் நாளெல்லாம் ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும், திக்கற்ற மாணவர்களுக்கும், உணவு வழங்கிடும் உயர் சேவையினை இனிதே செய்து வந்த பெருவள்ளல் தென்னங்குடி நா. சுந்தரராச நாட்டார் அவர்கள், தொண்ணூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து, 1983 ஆம் வருடம் ஆகஸ்ட்டு மாதம் 19 ஆம் நாள் வெள்ளிக் கிழமை பொன்னுடம்பு துறந்து புகழுடம்பு பெற்றுத் தமிழோடு கலந்தார்.
                                                                  
                                                                                    என் வாழ்வும் 
                            என்  வளமும்
                            மங்காத  தமிழே  
                            என்றுரைத்து,
                            தமிழ்  தேடி  
                            கரந்தை  நாடிவரும்
                            திக்கற்ற மாணவர்க்கு 
                            பசிப்பிணி மருத்துவராய் 
                            வயிறார அன்னமிட்டு 
                            உயிர்காத்து
                            தமிழ் வளர்த்த 
                            வள்ளால் சுந்தரராச
                            வாழி நின்புகழ்
                            வாழிய  வாழியவே



தென்னங்குடி நா. சுந்தரராச நாட்டார்

புகழ் ஓங்குக...

 ---------------------------------------------------------


நன்றி  
திரு க.சண்முகசுந்தர நாட்டார்,   
              அறங்காவலர்,
சுந்தரராச நாட்டார் தமிழ்க் கல்வி அபிவிருத்தி தர்மம்




01 நவம்பர் 2011

இராமானுஜனை உயர்த்திய ஆங்கிலேயர்கள்


இராமானுஜன்
     இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கணித மேதையான சீனிவாச இராமானுஜன், தனது புதியத் தேற்றங்களை, தனது புதிய கண்டுபிடிப்புகளை, இவ்வுலகம் இனங்கண்டு தன்னை ஏற்காதா? அங்கீகரிக்காதா? பாராட்டாதா? என்று எண்ணி எண்ணி, ஏங்கி ஏங்கி ஆண்டுகள் பலவற்றைக் கழித்தவர் என்ற செய்தி பலருக்கு வியப்பைத் தரலாம்.

     தனது கணித நோட்டுக்களை எடுத்துக் கொண்டு, சென்னையில் இருந்த பல கணிதப் பேராசிரியர்களைச் சந்தித்தார். தனது கணித ஆர்வத்தினை, தனது புதிய கண்டுபிடிப்புகளை விளக்கினார். ஆனாலும் இவர்கள் இராமானுஜனின் ஆராய்ச்சியின் பெருமையினையும்,  திறமையின் அருமையினையும் உணராதவர்களாயிருந்தனர்.

நாராயண அய்யர்
    குடும்பத்திற்ககாகவும், தனது வயிற்றிற்காகவும் சென்னைத் துறைமுகக் கழகத்தில் சாதாரண எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். மாத ஊதியம் ரூபாய் முப்பது. சென்னைத் துறைமுகக் கழகத்தின் தலைவராக இருந்தவர் சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் என்பவராவார். துறைமுகக் கழகத்தில் தலைமைக் கணக்கராகவும், ஸ்பிரிங் அவர்களின் முழு நம்பிக்கையைப் பெற்றவருமாகப் பணியாற்றி வந்தவர் எஸ். நாராயண அய்யர் என்பவராவார்.

     நாராயண அய்யர் இராமானுஜனுக்கு மேலதிகாரி மட்டுமல்ல. இந்தியக் கணிதவியல் கழகம் என்ற கணித அமைப்பின் பொருளாளராகவும் பணியாற்றி வருபவர். கணிதவியல் ஆர்வலர்.இராமானுஜனின் கணிதத் திறமையைக் கண்டு வியந்த நாராயண அய்யர் சிறிது காலத்திலேயே, இராமானுஜனின் மேலதிகாரி, உடன் பணியாற்றுபவர் என்ற நிலையிலிருந்து மாறி, இராமானுஜனின் நண்பராகவும் ஆலோசகராகவும் மாறிப்போனார். துறை முகக் கழகத் தலைவரான சர் பிரான்சிஸ் ஸ்பிரிங்கிடம் இராமானுஜன் பற்றியும் அவரது கணிதத் திறமைகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.பிரான்சிஸ் அவர்களும் இராமானுஜனை சென்னையில் உள்ள அறிஞர்கள் சிலரிடம் அனுப்பி , இராமானுஜனின் கணிதத் திறமைகள் குறித்து கருத்துக்களைக் கேட்டார். ஆனால் இவர்களால் இராமானுஜன் திறமையானவனா? இல்லையா? என்ற முடிவிற்கு வரமுடியவில்லை.
நடுவில் அமர்ந்திருப்பவர் சர் பிரான்சிஸ் ஸ்பிரிங்
     சென்னையில் இருப்பவர்களால் இராமானுஜன் பற்றியோ அவரது திறமைகள் பற்றியோ கருத்துக்களைத் தெளிவாக கூற இயலாததால், சர் பிரான்சிஸ் ஸ்பிரிங், நாராயண அய்யர் ஆகியோரின் ஆலோசனையின் பேரிலும், உதவியுடனும், இராமானுஜன் 1912 ஆம் ஆண்டின் இறுதியிலும் 1913 ஆம் ஆண்டின் துவக்கத்திலும், இலண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகக் கணித மேதைகளுக்கு  தனது கணிதக் குறிப்புகள் அடங்கிய கடிததை அனுப்பினார்.
     ஹென்றி ஃபிரட்ரிக் பேக்கர் என்பவருக்கு தனது முதல் கடிதத்தை அனுப்பினார். இ.டபிள்யூ.ஹப்சன் என்பவருக்கு  தனது இரண்டாவது கடிதத்தை  அனுப்பினார். இருவரிடமிருந்தும் பதிலில்லை. எனவே தனது மூன்றாவது கடிதத்தை ஜி.எச்.ஹார்டி என்பாருக்கு அனுப்பினார்.

      இராமானுஜனின் கடிதத்தைப் படித்த ஹார்டி தன் பல்வேறு அலுவல்களால் அக்கடிதத்தை மறந்து போனார். ஆனால் அக்கடிதத்தில் கண்ட கணக்குகள் அவ்வப்போது ஹார்டியின் மனக்கன் முன்னே வந்து சென்றது. எனவே இராமானுஜனின் கடிதத்தை மீண்டும் படித்த ஹார்டி, தனது நண்பரும் கணிதப் பேராசிரியருமான ஜான் ஏடன்சர் லிட்டில் வுட் என்பவரைச் சந்தித்தார். இருவரும் இராமானுஜனின் கணிதக் குறிப்புகளை ஆராய்ந்தனர்.மூன்று மணி நேரத்திற்குமேல் பரிசீலித்த இருவரும், தாங்கள் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு கணித மேதையின் குறிப்புகள் தான் என்ற முடிவிற்கு வந்தனர்.

இ.எச்.நெவில்
          பிப்ரவரி மாதம் 8 ஆம் நாள் இராமானுஜனுக்குப் பதில் கடிதம் எழுதிய ஹார்டி,இராமானுஜன் உடனடியாக இலண்டன் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு வந்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டுமாய் அழைப்பு விடுத்தார்.

           அய்யங்கார் வகுப்பைச் சார்ந்தவரான இராமானுஜன், தங்கள் சமூக விதிகளின் படி, கடல் கடந்து செல்லக் கூடாது என்பதால்,தான் இலண்டனுக்கு வர இயலாத நிலையில் இருப்பதை தெரிவித்தவர் ஒரு வேண்டுகோளினையும் முன்வைத்தார்.நான் தற்சமயம் தங்களிடம் வேண்டுகோளாக முன்வைப்பதெல்லாம் ஒன்றுதான். நான் உண்ண  உணவின்றி அரைப் பட்டினியாக இருக்கும் ஒரு மனிதன். எனது மூளையைப் பாதுகாக்க, எனது வயிற்றிற்கு உணவு தேவையாக உள்ளது. இதுவே எனது முதல் தேவையாகும், தாங்கள் கருணையோடு எழுதும் கடிதம் எனக்குப் பல்கலைக் கழகத்தில் இருந்தோ அல்லது  அரசாங்கத்திடம் இருந்தோ , கல்வி உதவித் தொகையினைப் பெற்றுத் தருமாயின், அதுவே தாங்கள் எனக்குச் செய்யும் பேருதவியாக அமையும் என்று எழுதினார்.

ஜி.எச்.ஹார்டி
     இதற்கிடையில் ஸ்பிரிங் அவர்களால் இராமானுஜனின் கணிதக் குறிப்புகள் கில்பர்ட் வாக்கர் என்பவரிடம் காட்டப்பெற்றன. கில்பர்ட் வாக்கர் ட்ரினிட்டி கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றியவர். சிம்லாவில் இந்திய மெட்ரோலாஜிகல் துறைத் தலைவராகப் பணியாற்றி வருபவர். அலுவல் தொடர்பாக சென்னை வந்த கில்பர்ட் வாக்கரைத் தொடர்பு கொண்ட சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் இராமானுஜன் தொடர்பான செய்திகளைக் கூறி கணிதக் குறிப்புகளைக் காட்டினார்.அடுத்த நாளே கில்பர்ட் வாக்கர் சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளருக்குக் கடிதம் எழுதி, கணித ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் இராமானுஜன், பொருளாதார தட்டுப்பாடின்றி ஆய்வினைத் தொடருவதற்கு உதவித் தொகை வழங்கி உதவிட வேண்டுமாய் வேண்டுகோள் விடுத்தார்.

     கில்பர்ட் அவர்களின் வேண்டுகோளின்படி, சென்னைப் பல்கலைக் கழகம், கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.75 வழங்கத் தொடங்கியது.சென்னைத் துறைமுகக் கழகத் தலைவர் சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் அவர்களும், இராமானுஜனுக்கு ஊதியத்துடன் கூடிய நீண்ட விடுமுறையை வழங்கினார்.

    இந்நிலையில் டிசம்பர் மாத இறுதியில் ஹார்டி மீண்டும் இராமானுஜனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் கேம்ப்பிரிட்ஜ்  பல்கலைக்  கழகத்தைச் சார்ந்த கணிதப் பேராசிரியர் இ.எச்.நெவில் என்பவர் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள சென்னை வருவதாகவும், அவரை இராமானுஜன் அவசியம் சந்திக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார்.அதே சமயம் ஹார்டி நெவிலிடம் ஒரு முக்கியப் பணியை ஒப்படைத்திருந்தார். இராமானுஜனை சந்தித்து அவரை இலண்டன் வருவதற்கு எப்படியாவது சம்மதிக்க வைக்க  வேண்டும் என்ற பொறுப்பை அளித்திருந்தார்.

லிட்டில் வுட்
     நெவிலும் இராமானுஜனும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் சந்தித்தனர்.அப்பொழுது நெவில் தாங்கள் தொடர்ந்து சென்னையிலேயே இருப்பீர்களேயானால், இலண்டனில் இருக்கும் என்னாலோ, தங்களின் அபாரதத் திறமையை நன்கு உணர்ந்து வைத்திருக்கும் ஹார்டியாலோ, தங்களுக்குப் பெரிய அளவில் உதவி செய்ய இயலாது. தாங்கள் இலண்டன் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு வர இசைவு தெரிவிப்பீர்களேயானால், ஹார்டி உடனிருந்து உதவவும், தங்கள் ஆராய்ச்சி முடிவுகளை கணித இதழ்களில் வெளியிட்டு, தங்கள் திறமையை வெளி உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டவும் தயாராக உள்ளார். ஆகவே தாங்கள் எங்களது அழைப்பை ஏற்று இலண்டனுக்கு வர ஒப்புதல் வழங்க வேண்டும் எனக் கோரினார்.

     முதல் முறை அழைப்பு விடுத்த போது மறுத்த இராமானுஜன் இம்முறை இலண்டனுக்கு வருவதற்கு தன்னுடைய சம்மதத்தினைச் தெரிவித்தார்.

     இதனைத் தொடர்ந்து 1914 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 28 ஆம் நாள் பேராசிரியர் நெவில் அவர்கள், சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் பிரான்சிஸ் டௌபரி என்பாருக்கு ஒரு கடிதம் எழுதினார்.அக்கடிதத்தில்,
கில்பர்ட் வாக்கர் 
இராமானுஜன் என்னும் கணித மாமேதை சென்னையில் இருக்கிறார் என்பதை கண்டு பிடித்த நிகழ்வானது, கணித உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய செய்தியாகும்.உலக வரலாற்றில் இராமானுஜன் பெயர் உன்னத இடத்தைப் பெறும் அதே நேரத்தில், இராமானுஜன் இலண்டன் சென்றுவர அவருக்கு உதவிய வகையில் சென்னையும், சென்னைப் பல்கலைக் கழகமும் பெருமைப் படலாம் என்று எழுதி நிதி உதவி கோரினார்.

     சென்னைப் பல்கலைக் கழகமும் இராமானுஜன் இலண்டன் சென்று ஆராய்ச்சியில் ஈடுபட ஆண்டுக்கு 300 பவுண்ட உதவித் தொகையினை வழங்கியது.

இராமானுஜனின் கடிதம்
    
     1914 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் இலண்டனில் இராமானுஜன் கால்பதித்தார். ஐந்தாண்டுகள் இலண்டனில் தங்கி, இதுவரை எந்த இந்தியரும் தொடாத சிகரத்தைத் தாண்டியவர் என்ற சாதனையுடன் இராமானுஜன் 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் நாள் இலண்டனிலிருந்து புறப்பட்டு கப்பலில் தாயகம் திரும்பினார்.

     ஆங்கிலேயர்களின் ஆர்வமும் உதவியுமே,  இராமானுஜன் என்ற மிகப் பெரிய கணித மாமேதையினை இவ்வுலகிற்கு  வெளிச்சமிட்டுக் காட்டியது.

வாழ்க இராமானுஜன் புகழ்
.......................................

கணித மேதை சீனிவாசஇராமானுஜன் பற்றி ஹாலிவுட் திரைப்படம் 

 ரோஜர் ஸ்பாட்டிஸ் வூட்
           ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட திரைப்படமான Tomorrow Never Dies  எனும் திரைப்படத்தினை இயக்கியவர் ரோஜர் ஸ்பாட்டிஸ் வூட் என்பவராவார். இவர் தற்சமயம் சீனிவாச இராமானுஜன் பற்றிய திரைப்படம் ஒன்றினை இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். படத்தின் பெயர் The First Class Man என்பதாகும். இத்திரைப்படம் இராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமல்ல.
       இராமானுஜனின் திறமைகளை முதன் முதலில் கண்டடுபிடித்து, பல்வேறு தடைகளைத் தகர்த்தெறிந்து, இராமானுஜனை இலண்டனுக்கு வரவழைத்த பெருமைக்குரியவர் பேராசிரியர் ஜி.ச்.ஹார்டி அவர்களாவார். ஐந்து ஆண்டுகள் இராமானுஜனின் உடனிருந்து, இராமானுஜனின் ஆய்வுத் தாட்களை, கண்டுபிடிப்புகளை உலகின் பார்வைக்குக் கொண்டு சென்று, இராமானுஜன் உலகப் புகழ் பெறக் காரணமாக விளங்கியவர் ஜி.எச்.ஹார்டி. இராமானுஜன் மற்றும் ஹார்டி இருவரின் நட்பை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளது.
     கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகதில் நடைபெற்ற விழா ஒன்றில், இராமானுஜனை அறிமுகப்படுத்தும் பொழுது ஹார்டி உச்சரித்த வார்த்தைகளே The First Class Man என்பதாகும். இதே தலைப்பில் திரைப்படம் தயாராகவிருக்கின்றது.
                                                                                                                                                                                                                                    .................நன்றி The Hindu 16.10.2011
 


                                                                                                                                           .......நன்றி  The Hindu, Sunday,6.11.2011

02 அக்டோபர் 2011

பள்ளிக்காக...

                                முன்னும்  கொடுத்தார்  கரந்தைக்கல்லூரிதான்  முன்னுறவே 
                                 பின்னும்  கொடுத்தார்  புலவர்குழு  நலம் பெற்றிடவே
                                 மன்னும் தமிழ்க்கென்று  வாய்மூடு  முன்நிதி  வைத்து விட்டேன்
                                 என்னும்  ஏ.கே.வேலனார்  வாழ்க  செந்தமிழ்க்  கீந்து  வந்தே
                                                                                                                                     ...பாரதிதாசன்

     எலி ஏறி இறங்கலாம், பெருச்சாளி  சுரண்டலாம், கரப்பான், வண்டு மொய்க்கலாம், பூச்சி, புழு நெளியலாம்,வௌவால்  புழுக்கைப் போடலாம்..... ஆறறிவு படைத்த மனிதன் வந்தால் ஆகாதோ? அதிலும் பக்தியால் வந்தால் பாதகமா?
இந்த பகுத்தறிவுக் கனல் பறக்கும் வசனங்களைத் தனது நாடகத்தில் எழுதியவர் யார் தெரியுமா?
நான்கு சுவர்களுக்கிடையே நாற்பது மாணவர்களுக்கு ஆசிரியனாக, உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18 என்று அரைத்த மாவையே ஏன் அரைத்துக் கொண்டிருக்கிறாய்? நாலரைக் கோடித் தமிழர்களுக்குப் பாடம் சொல்ல அழைக்கிறேன் வெளியே வா
ஏ.கே.வேலன்
என பகுத்தறிவுப் பகலவனாம் தந்தைப் பெரியார் அவர்கள் வெளிப்படையாய்,  ஆசிரியப் பணியைத் துறந்து, சமூகப் பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்தது யாரைத் தெரியுமா? 
தமிழார்வமும் இயக்கப் பற்றும் நற்பண்புகளும் கொண்ட இவர், நமது இயக்கத்திற்குக் கிடைத்திருக்கும் அறப்போர் வீரர்களிலே ஒருவர், முக்கியமானவர். இலக்கியச் செறிவும், சரிதச் சான்றும் நிரம்பிய அரும்பிய அரிய கட்டுரைகளைத் தீட்டியவர். இவைகள் யாவற்றையும் விட அவருடைய குணம் என்னை மகிழ்விக்கிறது. இயக்கம் அவரால் வளமாகும் என நம்புகிறேன்
என அறிஞர் அண்ணாதுரை அவர்களால் பாராட்டப்பெற்றவர் யார் தெரியுமா?
அவர்தான் ஏ.கே.வேலன்.
     முல்லைக்குத் தேர் ஈந்தப் பாரியைப் பற்றிப் படித்திருக்கின்றோம். பார்த்ததில்லை. ஆனால் பாரியின் மறு உருவாய் தோன்றிய அ.கு.வேலன் நமது காலத்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 1921 இல் தஞ்சாவூர், ஆலங்குடி எனும் சிற்றூரில் பிறந்தவர். பாபநாசத்திலும், அய்யம்பேட்டையிலும் கல்வி பயின்றவர்.தொடர்ந்து தஞ்சாவூரில் ஆசிரியர் பயிற்சிப் படிப்பையும் நிறைவு செய்தவர்.
சி.அருணாசலனார்
     தஞ்சைக் கரந்தையிலே மாபெரும் தமிழ்ப் பணியாற்றிவந்த, இன்றும் தளராத் தமிழ்ப் பணியாற்றிவரும், கரந்தைத் தமிழ்ச் சங்கம், வேலனின் சிந்தனையை, தமிழ் மனத்தைக் கவர்ந்தது. 
     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவின்போது, 1938 இல் தோற்றம் கண்டது கரந்தைப் புலவர் கல்லூரியாகும். சென்னைப் பல்கலைக் கழகத்தாரின் அனுமதியைப் பெற இயலாமல். இக் கல்லூரி தத்தளித்த காலத்திலே. மாலை நேர வகுப்புகள் மட்டுமே நடத்தப் பெற்றன. பகற் பொழுதில் ஆசிரியர் பயிற்சி வகுப்பு பயின்ற வேலன், மாலை வேலையில், கரந்தைப் புலவர் கல்லூரியின் மாலை நேர வகுப்பில் சேர்ந்து பயிலத் தொடங்கினார்.
     நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு, வித்துவான் மு.சடகோப ராமானுஜன், நீ.கந்தசாமி போன்றோரிடம் தமிழ் பயின்றார்.
     வேலன் அவர்களின் ஆசிரியர் பயிற்சிப் படிப்பு நிறைவுற்றதும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பெத்தாச்சி புகழ் நிலையம் என்னும் நூலகத்தில் மதிப்பியல் காப்பாளராக சில காலம் பணியாற்றினார். அறிவுப் பசியால் தவித்துக் கொண்டிருந்த வேலனுக்கு இப்பணி பெருவிருந்தாய் அமைந்தது. தமிழ் இலக்கியம் எனும் மாபெரும் கடலில் மூழ்கி முத்தெடுக்கத் தொடங்கினார்.
அண்ணாவின்வாழ்த்து
     தொடர்ந்து சிலகாலம் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டினத் தொடக்கப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். ஆசிரியராகப் பணியாற்றிய காலத்திலேயே, தமிழ் மொழிக்குக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய, ஆற்றிவரும் பணிகளை எண்ணி, எண்ணி வியந்தார். தமிழில் செல்வாக்கோடு விளங்கும் இச்சங்கத்தின் தொடக்கப் பள்ளியோ, பொருட்செல்வம் இல்லாததால் கீற்றுக் கொட்டகையில் செயலாற்றிவரும் அவல நிலையைக் கண்டு மனம் வருந்தினார்.
      பின்னாளில் தந்தைப் பெரியாரின் அழைப்பினை ஏற்று, தமிழாசிரியர் பணியினைத் துறந்து சென்னை சென்றார்.
     நாடக ஆசிரியராக, கதாசிரியராக,வசனகர்த்தாவாக, சினிமா தயாரிப்பாளராக,இயக்குநராக என பன்முகப் பரிமானங்களை உடையவராய் உயர்ந்தார். புகழின் உச்சிக்கே சென்றார்.
     வேலன் அவர்கள் கதை, வசனம்,எழுதி இயக்கித் தயாரித்த முதல் படம் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதாகும். இப்படம்  நூறு நாட்களையும் தாண்டி ஓடி நல்ல வெற்றியை, நல்ல செல்வத்தை வாரி வழங்கியது. வேலன் வாழ்விலும்  வழி பிறந்தது,வசந்தம்  மலர்ந்தது.

காமராசருடன் ஏகேவி
        தனது முதல் வருவாயைக் கொண்டு செய்ய வேண்டிய செயல்,தனது பள்ளிக்கு நல்ல உறுதிவாய்ந்த ஒரு பெரிய கட்டிடத்தைக் கட்டிக் கொடுப்பதே என எண்ணிச் செயலில் இறங்கினார். தனது தந்தையின் பெயரால் அருணாசல நிலையம் எனும் பெயரில் ஒரு மாபெரும் கட்டிடத்தைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குக் கட்டி அர்ப்பணித்தார்.
 தங்கமே  தென்பொதிகைச்  சாரலே  தண்ணிலவே
 சிங்கமே  என்றழைத்துச்  சீராட்டும்  தாய் தவிர
 சொந்தமென்று  ஏதுமில்லை,  துணையிருக்க  மங்கையில்லை
 தூய  மணி  மண்டபங்கள்  தோட்டங்கள்  ஏதுமில்லை
 ஆண்டி  கையில்  ஓடிருக்கும்,  அதுவும்  உனக்கில்லையே
என்று கவியரசு கண்ணதாசன் அவர்களால் வியந்து பாராட்டப்பெற்றவரும், அன்றைய சென்னை மாகான முதலமைச்சருமான கர்மவீரர் காமராசர் அவர்கள், 1959 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 20 ஆம் நாள் அருணாசல நிலையத்தைத் திறந்து வைத்தார்.

      அருணாசல நிலையத்தினைத் திறந்து வைத்து, கர்மவீரர் காமராசர் அவர்கள் ஆற்றிய உரை, ஏ.கே.வேலன் அவர்களின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட வேண்டிய உரையாகும்.
அருணாசல நிலையம் திறப்பு விழா
   
      உங்களுடைய விழாவிலே கலந்து கொண்டு, புதிய கட்டிடத்தைத் திறந்து வைப்பதற்கு நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். பல திறப்பு விழாக்களை நடத்தி இருக்கிறேன், நடத்திக் கொண்டே இருக்கிறேன். நான் மந்திரியாக இருக்கும்வரை நடந்து கொண்டே இருக்கும். அப்புறம் கூட்பிடுவார்களோ மாட்டார்களோ எனக்குத் தெரியாது. அப்புறம் பார்த்துக் கொள்வோம். இங்கு திறந்து வைக்கும் விழாவிலே விசேசம் என்னவென்றால், நன்றி மறவாமல் தான் பயின்ற பள்ளிக்கூடத்திற்கு. தன்னுடைய தந்தையின் பெயரால் கட்டிடம் கட்டிக் கொடுத்திருக்கிறாரே அதுதான். நன்றியை மறவாதிருக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தை வள்ளுவர் எடுத்துச் சொன்னார். உலகத்தில் உள்ள எல்லோரும் சொல்லுகிறார்கள். எண்ணிப் பார்த்தால் நன்றி மறவாமல் இருப்பவர்கள் எத்தனைபேர் இருப்பார்கள்? மிக அரிதாக இருக்கின்றார்கள். அப்படி அரிதாக இருப்பதினால்தான் உயர்வாகப் பேசுகிறோம். நன்றியை மறவாமல் இருப்பது பெரிய காரியம், சின்ன காரியம் அல்ல. அதனால்தான், நன்றியை மறவாமல் யாராவது ஒருவர் செயல் செய்தால் அவரைப் போற்றிப் புகழ்கின்றோம். 

     முதலில் சம்பாதித்த பணம் எனறும் கேள்விப் பட்டேன்.எல்லோரும் சம்பாதித்துச் சேர்த்த பிறகு செய்வார்கள். வேறு வழியில்லை சம்பாதித்துச் சேர்த்தாயிற்றே என்று. தண்ணீரைத் தேக்கி வைத்தாயிற்று, எங்கேயாவது உடைத்து விட வேண்டும் அல்லவா? அதைப் போல செலவழிக்கிறவர்களும் உண்டு. இவர் அதைப் போலவும்  செய்யவில்லை. ஏதோ ஒரு படத்திலே பணம் சம்பாதித்தார். முதல் கைங்கர்யம் என்னவென்றால் அவர் இதற்குக் கொடுத்ததுதான். அப்படி என்றால் அவர் உள்ளத்திலே இந்த எண்ணம் எவ்வளளவு நாளாக இருந்திருக்கும்? திடீரென்று ஏற்பட்டது என்று நினைக்கிறீர்களா? நமது தமிழ்ச் சங்கம் அது கூரையாக இருக்கிறது, இடமில்லை, அவத்தைப் படுகிறார்கள், யாரும் உதவி செய்யவில்லையே, என்றைக்காவது ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் அவரது உள்ளத்திலே இருந்து கொண்டே இருந்திருக்கிறது. கிடைத்தவுடன் பணத்தைக் கொண்டு வந்து போட்டுவிட்டார். அதனால்தான் திடீரென்று முதலில் வருவாய் வந்தவுடனே முதல் காரியமாகச் செய்து விட்டார். காரணம் அதுதான். அப்படியில்லாவிட்டால் யாரும் முதலில் சம்பாதித்தவுடனே போடமாட்டார்கள்.

     வேலன் நல்ல புகழோடு பணத்தைச் சம்பாதித்தார், நல்ல காரியத்துக்குக் கொடுத்தார், பிச்சைப் போட்டால் கூட பாத்திரமறிந்து பிச்சை போட வேண்டும் என்று சொல்வார்கள். அதைபோல எதற்குச் செய்ய வேண்டுமோ அதற்குச செய்திருக்கிறார் வேலன். வேலன் அவர்கள் ஏராளமாக சம்பாதிக்க வேண்டும்.ஏராளமாகத் தருமம் செய்ய வேண்டும் என்பது என் ஆசை. அதற்கான மனம் அவரிடம் இருக்கிறது. அவரைப் போலவே இது போன்ற காரியங்களை மற்றவர்களும் செய்ய முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டு, இந்தக் கட்டிடத்தையும், வேலன் அவர்களின் தந்தையாரின் படத்தையும், வேலன் அவர்களின் படத்தையும் திறநது வைக்கிறேன்.
அருணாசல நிலையம்
படிக்காத மேதை காமராசரின் பண்பட்ட இவ்வுரை, பல்கலைக் கழகங்களில் வைத்துப் பயிலப்பட வேண்டிய, பயிற்றுவிக்கப் பட வேண்டிய பாடமாகும். படித்தவர்களும், செல்வந்தர்களும் தங்கள் வாழ்நாளெல்லாம் பின்பற்ற வேண்டிய ஒரு செயலாகும்.
       ஏ.கே.வேலன் அவர்களின் நன்றியுரையோ, நாமெல்லாம் வாழ்நாள் முழுதும் நினைத்து நினைத்து, மகிழ்ந்து மகிழ்ந்து போற்றவேண்டிய, நம் வாழ்நாளில் ஒரு முறையேனும் பின்பற்ற வேண்டிய ஒரு செயலாகும்.

       ஒரு பழைய கதை உண்டு. கள்வன் ஒருவன் களவாடச் சென்றானாம். சென்ற இடத்தில் உறிக்கலயங்களைத் தேடிக் கொண்டு வருகின்ற பொழுது ஒரு கலயம் உருண்டு அவன் தலையிலே விழுந்து விட்டதாம். விழுந்தபொழுது அவன் உடல் முழுவதும் திருநீறு விழுந்து விட்டது. கலயம் விழுந்த அரவம் கேட்டு வீட்டுக்காரர்கள் விழித்துக் கொண்டு வந்து பார்த்தார்கள். அவனைத் திருடன் என்று பிடித்து அடிக்காமல், பெரிய அடியார் என்று காலிலே விழுந்து வணங்கி மரியாதை செய்தார்களாம். சாதாரணமாகத் திருட வந்த இடத்தில், திருநீற்றுக்கு இவ்வளவு மரியாதை அளித்து நம்மைப் பெரியவராக, அடியாராக மதிக்கின்றார்கள், எப்பொழுதுமே அடியாராக இருந்துவிட்டால் நாடெல்லாம் மதிக்கும், புகழும் என் நினைத்து அன்று முதல் துறவியானானாம். இப்படிக் கள்வன் துறவியானான் என்று கதை சொல்வார்கள். இன்று நீங்கள் தந்திருக்கின்ற இந்தப் பெருமையினைப் பார்க்கும் பொழுது நிரந்தரமாக என்றென்றும் இது போல பல நல்லறங்களைச் செய்ய என் மனம் விழைகின்றது.அதற்கான ஊக்கத்தையும், உழைக்கும் வன்மையையும், நல்ல மனத்தையும் நான் என்றென்றும் பெற்றிருக்க வேண்டும் என்று உங்களுடைய வாழ்த்தினை நான் விரும்புகின்றேன்.அதனைக் கேட்டுக் கொண்டு என்னுடைய உரையை முடித்துக் கொள்கிறேன்.
    ஏ.கே.வேலன் இன்று நம்மோடில்லை. இருப்பினும் வேலன் அவர்களால் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு அளிக்கப்பெற்ற அருணாசல நிலையத்தின் ஒவ்வொரு செங்கல்லும், வேலனின் பெயரை இவ்வுலகு உள்ளவரை ஓங்கி ஒலித்து, வாழ்த்திக் கொண்டே இருக்கும்.
      பாரிவேள் ஏ.கே.வேலன் அவர்களைப் பின்பற்றி, நாமும் நாம் பயின்ற பள்ளிக்கு ஏதேனும் ஓர் சிறு உதவியினைச் செய்வோமானால்,அதுவே  நாம் வேலன் அவர்களின் வாழ்வினை அறிந்தவர்கள், உணர்ந்தவர்கள் என்பற்கான எடுத்துக் காட்டாக அமையும்.

 இம்மாதம் அக்டோபர்  24 ஆம் நாள் 
பாரிவேள் ஏ.கே.வேலனின் 
90வது பிறந்த நாளாகும். 
இந்நன்னாளில் ஏ.கே.வேலன் அவர்களின்
நினைவினை, தொண்டினைப், புகழினை 
மனதில் ஏந்திப் போற்றுவோம்.



கலைமாமணி பாரிவேள் ஏ.கே.வேலனின் புகழ் வாழ்க வாழ்க என வாழ்த்துவோம்.


••••••••••••


கரந்தைத் தமிழ்ச் சங்கச் செயலாளர்  
செம்மொழி வேளிர் திரு ச.இராமாநாதன் அவர்களின் 
பெருமுயற்சியின் விளைவாக, கடந்த 26.7.2007 திங்கட்கிழமையன்று 
பாரிவேள்  ஏ.கே.வேலன் அவர்களின் 
படத்திறப்பும்
கலைமாமணி ஏ.கே.வேலனின் வாழ்வும் பணிகளும் 
எனும் நூல் வெளியீட்டு விழாவும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
 இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராசேந்திரன் அவர்கள்
பாரிவேள் ஏ.கே.வேலன் அவர்களின் 
திருஉருவப் படத்தினைத் திறந்து வைத்து நூலினை வெளியிட,
ஏ.கே.வேலன் அவர்களின் மூத்த மகனார்
கவிஞர் ஏ.கே.வி. விஞ்ஞானி அவர்கள்
முதற்படியினைப் பெற்றுக் கொண்டார்,

படத்திறப்பு
கலைமாமணி ஏ.கே.வேலனின் வாழ்வும் பணிகளும் நுல் வெளியீட்டு விழா

                                அசைவிலா   துழைத்திங்   கோங்கும்   அண்ணலே    அ.கு.வேல
                                திசையெலாம்   தமிழின்   மேன்மை   திகழ்தரச்   செய்யுங்க   ரந்தை
                                மிசைவளர்   தமிழ்ச்சங்   கத்தார்   விரும்பிநல்   வாழ்த்துக்   கூற
                                இசைமிகு   தந்தை   பேரால்   எழுப்பினை   நிலையம்,   வாழி
                                                                                               
                                                                                                                .... கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார்











01 செப்டம்பர் 2011

கணிதமேதை சீனிவாச இராமானுஜனும் வறுமையும்

        சீனிவாச இராமானுஜன் அவர்கள் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் நாள் ஈரோட்டில், சீனிவாச அய்யங்கார் கோமளத்தம்மாள் தம்பதியினருக்கு மகனாய்ப் பிறந்தவர்.  33 ஆண்டுகளே வாழ்ந்த போதிலும், தனது கணிதத் திறமையால் உலகையே வியப்பில் ஆழ்த்தியவர், தூய கணிதத்தின் கருவூலம்.
     இராமானுஜன் தன் குறுகிய வாழ்க்கைக் காலத்திலேயே 3900 க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தவர். சிறு வயதிலேயே யாருடைய உதவியும், வழி காட்டுதலும் இன்றி வியப்பூட்டும் வகையில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுபிடித்தவர்.
     இராமானுஜன் பிறந்தது முதல். இராமானுஜனின் நிழல் போல், ஒட்டி உறவாடி வாட்டி வதைத்தது வறுமையே ஆகும்.  வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த இராமானுஜனின் உண்மை நிலையை உணர்த்துவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
     இராமானுஜனின் தந்தை சீனிவாச அய்யங்கார், கும்பகோணத்தில் உள்ள ஜவுளிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரது மாத ஊதியம் ரு.20 ஆகும். இராமானுஜனின் தாயார்
கோயில்களில் பஜனைப் பாடல்களைப் பாடுவதன் வாயிலாக மாதம் ருபாய் 10 சம்பாதித்து வந்தார்.குடும்பமே போதிய வருமானமின்றித் தவித்தது. பல நாட்கள் உண்ண உணவின்றித் தண்ணீரை மட்டுமே குடித்து வளர்ந்தவர் இராமானுஜன்,
     ஒரு நாள் இராமானுஜன் பள்ளிக்குச் செல்வதற்கு முன் உணவுத் தட்டுடன் சாப்பிடத் தயாரானான். ஆனால் தாய் கோமளத்தம்மாளோ, அய்யா சின்னசாமி அம்மா எப்படியும் மாலைக்குள் அரிசி வாங்கி சமைத்து வைக்கிறேன் இரவு சாப்பிடலாம். அதுவரை பொறுத்துக் கொள் என வேண்டினாள். இராமானஜனோமறு வார்த்தை பேசாமல் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு. அம்மா நான் பள்ளிக்குச் சென்று வருகிறேன் என்று கூறி பள்ளிக்குச் சென்று விட்டான்,
     ஆனால் அன்று மாலை பள்ளியில் இருந்து இராமானுஜன் வீடு திரும்ப வில்லை, கவலையில் கண்ணீர் விழிகளுடன் கோமளத்தம்மாள் இராமானுஜனைத் தேட ஆரம்பித்தாள், எங்கு தேடியும் காணவில்லை. அச்சமயம் இராமானுஜனின் நண்பன் அனந்தராமனின் தாயார் அங்கு வந்து விசாரிக்க, இராமானுஜனைக் காணவில்லை எனக் கூறி, தன் மகன் காலையும் சாப்பிடவில்லை, மதியமும் சாப்பிடவில்லை, மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை எனக் கூறி அழத் தொடங்கினாள், கோமளத்தம்மாளை சமாதானம் கூறி வீட்டில் அமரவைத்து விட்டுத் தானும், அனந்தராமனும் ஆளுக்கொரு பக்கமாக இராமானஜனைத் தேடத் தொடங்கினர்.
     அனந்தராமன் பல இடங்களில் தேடி அலைந்தான். எங்கும் இராமானுஜனைக் காணவில்லை, திடீரென்று அனந்தராமனுக்கு ஒரு சந்தேகம். ஒரு வேளை சாரங்கபாணிக் கோயிலுக்குச் சென்றிருப்பானோ? என்று. உடனடியாக கோயிலுக்குச் சென்று தேடினான், கோயிலின் ஒரு மண்டபத்தில் கணக்குப் புத்தகங்களைத் தலைக்கு வைத்துக் கொண்டு இராமானுஜன் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் படுத்திருந்த தரை முழுவதும் சாக்கட்டியால் கணக்குகள் போடப்பட்டிருந்தன, அனந்தராமன் அவனைத் தட்டி எழுப்பினான், திடுக்கிட்டு எழுந்த இராமானுஜன், என்ன அனந்தராமா அதற்குள் எழுப்பிவிட்டாயே, நேற்று நமது கணக்கு வாத்தியாருக்கே விடை கண்டுபிடிக்கத் தெரியாத. அந்தக் கணக்கை நான் மனதிலேயே போட்டுப் பார்த்தேன். போட்டு முடிப்பதற்குள் எழுப்பிவிட்டாயே, என்றவன், இரு கனவில் நான் போட்ட பாதிக் கணக்கையாவது இந்த நோட்டில் எழுதிவைத்துவிட்டு வருகின்றேன் என்று கூறி எழுதத் தொடங்கினான்,
     எழுதி முடித்தவுடன் அனந்தராமன், இராமானுஜனைத் தன்வீட்டிற்கே அழைத்துச் சென்றான், இராமானுஜனைக் காணாமல் அனந்தராமனும் சாப்பிடாமல் இருக்கின்றான் என்ற செய்தியைக் கூறி, அனந்தராமனின் தாயார் தன் வீட்டிலேயே இராமானுஜனுக்கும் உணவிட்டாள்,
     இராமானுஜன் கணிதத்தில் மட்டுமே கவனம் செலுத்தியதால் கும்பகோணம் அரசு கல்லூரியிலும், தொடர்ந்து சென்னை பச்சையப்பா கல்லூரியிலும் கணிதத்தைத் தவிர மற்ற பாடங்களில் தோல்வியையே சந்தித்தார்,
இராமானுஜனின் இல்லம்
     1910 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியக் கணிதவியல் கழகத்தின் செயலாளர் இராமச்சந்திர ராவ் அவர்களை இராமானுஜன் சந்தித்தார். இராமானுஜனின் கணிதத் திறமையினைக் கண்டு வியந்த இராமச்சந்திரராவ் அவர்கள் இராமானுஜனைப் பார்த்து தற்சமயம் உமது தேவை என்ன? என்று கேட்க, இராமானுஜன் ஓய்வு தேவை என்று பதிலளித்தார், அதாவது உணவு பற்றிய கவலையின்றி கணிதம் பற்றிய கனவு கான ஓய்வு தேவை என்றார். யாருக்குமே விளங்காத கணக்குகள் எல்லாம் இராமானுஜனிடம் கைக்கட்டி சேவகம் செய்தாலும், உணவு மட்டுமே அவர் இருக்குமிடத்தை அனுகாதிருந்தது.
     1913 ஆம் ஆண்டு சனவரி மாதம் 16 ஆம் தேதி, இராமானுஜன் அவர்கள், இலண்டன் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜி.எச்.ஹார்டி என்பாருக்கு ஒரு கடிதம் எழுதினார், தான் கண்டுபிடித்த தேற்றங்கள் சிலவற்றையும் இணைத்து அனுப்பினார். இராமானுஜனின் தேற்றங்களால் கவரப் பட்ட ஹார்டி, இராமானுஜனை இலண்டன் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு வருமாறு அழைத்தார், பிப்ரவரி 27 இல் ஹார்டிக்கு இராமானுஜன் எழுதிய கடிதம், படிப்போரை நெகிழச் செய்வதாகும். நான் தற்சமயம் தங்களிடம் வேண்டுகோளாக வைப்பதெல்லாம் ஒன்றுதான், நான் உண்ண உணவின்றி அரைப் பட்டினியாக இருக்கும் ஒரு மனிதன். எனது மூளையைப் பாதுகாக்க . எனது வயிற்றிற்கு உணவு தேவையாக உள்ளது. இதுவே எனது முதல் தேவையாகும் என்று எழுதினார், இராமானுஜனின் உண்மை நிலையை, வறுமையில் உழன்ற அவல நிலையை விளக்க இக்கடிதம் ஒன்றே போதுமானதாகும்,
     இராமானுஜன் இளமைக் காலம் முதல் தான் கண்டுபிடித்த கணக்குகளை நான்கு நோட்டுகளில் பதிவு செய்துள்ளார். ஊதா நிற மையினால் கணக்குகளை தாளில் எழுதிவரும் இராமானுஜன், ஒரு பக்கம் முடிந்ததும், அடுத்த பக்கத்தில் எழுதாமல், அதே பக்கத்திலேயே, மேலிருந்து கீழாக, ஊதா நிற வரிகளுக்கு இடையே சிகப்பு நிற மையினால் எழுதுவார், நோட்டு வாங்கக் கூட காசில்லாத நிலையில் இராமானுஜன் இருந்தமைக்கு இந்த நோட்டுகளே சாட்சிகளாய் இருக்கின்றன,
     ஐந்து வருடம் இலண்டனில் தங்கி உலகையேத் தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தப் பெருமையுடன் தாயகம் திரும்பினார் இராமானுஜன். அவருடன் இரண்டறக் கலந்து காசநோயும் வந்தது. காச நோயால் பாதிக்கப் பட்டு எழும்பும் தோலுமே உள்ள உருவமாய் இளைத்த இராமானுஜன், அந்நிலையில் கூட தனது கணித ஆய்வை நிறுத்தவில்லை. 1920 ஆம் ஆண்டு சனவரி 12 ஆம் நாள் ஹார்டிக்குத் தனது இறுதிக் கடிதத்தை எழுதினார்.
         இந்தியாவிற்குத் திரும்பியபின் இதுநாள் வரை தங்களுக்குக் கடிதம் எழுதாததற்கு மன்னிக்கவும். நான் ஆச்சரியப்படும் வகையில் ஒரு சார்பினைக் கண்டுபிடித்துள்ளேன். அதற்கு மாக் தீட்டா சார்பு எனப் பெயரிட்டுள்ளேன். இக்கடிதத்துடன் சில சார்புகளை அனுப்பியுள்ளேன் என்று எழுதினார்,
     தனது கடைசி மூச்சு உள்ளவரை கணிதத்தை மட்டுமே நேசித்த, சுவாசித்த மாபெரும் கணித மேதை சீனிவாச இராமானுஜன். இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் 1946 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட  Discovery Of India எனும் நூலில் இராமானுஜன் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்,
     இராமானுஜனின் குறுகிய கால வாழ்வும் மரணமும் இந்தியாவின் நிலையினைத் தெளிவாகக் காட்டுகிறது. கோடிக் கணக்காண இந்தியர்களுள் சிலருக்கே கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. வறுமையின் பிடியில் சிக்கி உண்ண உணவின்றி, பசியால் தவிக்கும் ஏழைகளுக்கு உண்ண உணவும், கற்க கல்வி வசதியும் ஏற்படுத்தப் படுமேயானால், இந்தியாவில் இருந்து விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் இலட்சக் கணக்கில் தோன்றிப் புதிய பாரதத்தைப் படைப்பார்கள் என்பது உறுதி.
     உணவிற்கே வழியின்றி வாழ்வில் வறுமையை மட்டுமே சந்தித்த போதும், கணிதத்தையே சிந்தித்து, சுவாசித்து, சாதித்துக் காட்டிய கணித மேதை சீனிவாச இராமானுஜனின் நினைவினைப் போற்றுவோம்.
                                                                          வாழ்க இராமானுஜன் புகழ்